போரூர், 4.1.2018
மதிப்புமிகு ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம்! ‘உண்மை’ செப்டம்பர் இதழைப் படித்தேன். மஞ்சை வசந்தனின் கட்டுரை என்னை நெகிழச் செய்தது. நான் ஓய்வு பெற்ற பின்னரே பெரியாரைப் படிக்கத் துவங்கினேன். ஆனால் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற சிறு நூலை நான் பள்ளிக் கூடத்தில் படிக்கும்போது படித்தேன். இன்றும் என்னிடம் 2015 வெள்ளத்தில் தப்பிய நூல் அது. பெரியாரின் ஈரமான மனசு, அறிஞர் அண்ணாவை விமான நிலையத்தில் போய்ச் சந்தித்தது, என்னை உலுக்கிவிட்டது. நான் தற்சமயம் பெரியாரின் அன்பு, அந்த இரக்கம், மனிதநேயம் இல்லாவிட்டால், நாளெல்லாம் கருகிக் காணாமல் போயிருப்பேன். தமிழ்நாடு இன்று இந்தளவு உயர்ந்ததற்கு பெரியாரே, அவரின் கொள்கைகளே காரணம். இடஒதுக்கீடு இல்லை என்றதும், துண்டைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு வேகமாக வெளியேறினார் பெரியார் காங்கிரசிலிருந்து. ராஜாஜி இறந்தபோது கத்திக் கத்தி அழுததும், அந்த சுடுகாட்டு நிகழ்வும் என்னை மிகவும் பாதித்தது. பெரியாரைப் பற்றி 100 புத்தகங்களையாவது படித்து விட்டுத்தான் என் புத்தகத்தை வெளியிடுவேன். தலைமைச் செயலக நூலகத்தில் பெரியாரின் புத்தகங்கள் நிறைய உண்டு. இன்று, அதைப் படிப்பவர்களும் அதிகரித்து விட்டனர்! அசுத்த ‘ஆவி’ பிடித்தவர்கள் போல் பேசும் இந்நாட்டில் சுத்தக் காற்று பெரியாரை வாசிக்க அல்ல சுவாசிக்க நினைக்கின்றனர். ஒவ்வொரு கட்டுரையும் அருமை. ‘மல்லிகைப்பூ’ சிறுகதை தொகுப்பிற்கு மதிப்புரை (முற்றம்) வழங்கியமைக்கு மிக்க நன்றி!
என்றென்றும் நன்றியுடன்,
– ஞா.சிவகாமி, போரூர், சென்னை – 116