Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஆசிரியர் பதில்கள்

ஆர்.எஸ்.எஸ் ஆக்டோயஸ் கொடுங்கரங்கள்!

கே:       இலங்கையில் நடைபெற்ற இறுதிகட்டப் போரின்போது விடுதலைப் புலிகளை வீழ்த்த இந்தியா உதவியதாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் ராஜபக்சே கூறியிருப்பது பற்றித் தங்கள் கருத்து?

                – பவிநிதா, திருவள்ளூர்

ப:           ராஜபக்சே அப்போது கூறிய ஒரு பொய் -_ எந்தக் கனரக ஆயுதங்களும் பயன்படுத்தவில்லை; அது நிறுத்தப்பட்டு, உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தாத மென்மையான ஆயுதங்களை மட்டுமே பயன்படுத்தினோம் என்று. இந்திய அரசு _ கலைஞர் உண்ணாவிரதம் துவங்கிய சில மணி நேரத்தில் அச்செய்தியை அனுப்பி நம்ப வைத்தது இந்திய அரசு ஒத்துழைப்பே. எப்படியாயினும், அதன் காரணமாகத்தானே அந்த அமைச்சரவையிலிருந்து தி.மு.க. வெளியேறியது. அது ஏன் பலருக்கு மறந்துவிட்டதோ தெரியவில்லை!

கே:       பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் மற்றவர்கள் ஆட்சேபனை தெரிவிப்பது சரியா? தீர்ப்பு வந்தபின் முறையீடு சட்டப்படியானதா?

                – சங்கர், ஆவடி

ப:           அது சுயபுத்தியும் அல்ல; மனிதாபிமானமும் அல்ல; தூண்டுதலுக்கு இரையான தூண்டில் மீன்கள் இவை!

கே:       வினாயகர் சிலை ஊர்வலத்தில் ஆண்டுதோறும் கல் வீச்சு, தடியடி நடைபெறும் நிலையில்  அரசு உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்?

                – வெற்றி, ஈரோடு

ப:           அதைவிட 2500 பிள்ளையார் சிலைகளைக் கரைக்க ஒரு லட்சம் காவல்துறை காவலர்கள். எவ்வளவு பணச்செலவு _ மக்கள் வரிப் பணத்தில். அது மட்டுமா? கலவரம்; காலித்தனம் செய்வது வாடிக்கையாகிவிடலாமா?

கே:       பிரதமர் மோடிக்கு சொந்தமாக ஒரு கார் கூட இல்லை என்பது திட்டமிட்ட ஏற்பாடா?

– தமிழ் செல்வி, தர்மபுரி

ப:           அவ்வளவு ஏழையா அவர்? அய்யோ பாவம்! நாடு இந்தத் ‘தரித்திர நாராயணர்’ பற்றிய இத்தகவலை இதுவரை தெரிந்துகொள்ளாமல் இருந்ததே பெரிய தேசிய குற்றம் அல்லவா!

கே:       எச்.ராஜாவை கைது செய்யத் தேவையில்லை என்று அமைச்சர் பண்டியராஜன் கூறியிருப்பது பழைய ஆர்.எஸ்.எஸ். பற்றா? அல்லது அடிமைத்தனமா?

– சீ. லட்சுமிபதி, தாம்பரம்

ப:           சட்டம் தெரியாத புண்ணாக்குப் போல அவர் பேசலாமா? வெட்கம்! வெட்கம்!

கே:       கலப்புத் திருமணத்துக்கு ஆர்.எஸ்.எஸ். எதிரி அல்ல என்று அதன் தலைவர் மோகன் பகவத் கூறுகிறாரே? உண்மையா?

– செந்துரைபாண்டி, தஞ்சை

ப:           தலைகீழ் கொள்கை சிரசாசனம்! எல்லாம் 2019 தேர்தல் கண்ணோட்ட ஏமாற்றுப் பேச்சு! பின் ஏன் ‘லவ் ஜிகாத்’ என்று பெயரிட்டு அழைத்து காதல் கலப்புத் திருமணங்களைக் கொச்சைப்படுத்துகின்றனர் அவர்கள்!

கே:       மருத்துவப் படிப்பைத் தொடர்ந்து, ‘நீட்’ தேர்வு அடிப்படையில் பி.எஸ்.சி நர்சிங் மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருப்பது ஏழை – எளிய கிராமப்புற மாணவர்களை ஒடுக்கும் சதியல்லவா?

– கவின், சிவகங்கை

ப:           அதன் ஆக்டோபஸ் கொடுங்கரங்கள் கார்ப்பரேட் முதலாளிகளுக்காகவும், சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைப்பதற்காகவும் வேகமாகப் பரவுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு. ஒரே தீர்வு _ ஆட்சிகள் மாற்றம்தான்.

கே:       தமிழ்நாட்டில் தற்போதுள்ள 69% ஒதுக்கீடு தொடர்பான வழக்கு தமிழக அரசால் சரியாக நடத்தப்படுகிறதா?

– தமிழ்மைந்தன், சைதாப்பேட்டை

ப:           நடத்தப்படல் வேண்டும். இது அவசர அவசியம்!

கே:       சிறைக் கைதிகளின் சொகுசு வாழ்க்கை எதைக் காட்டுகிறது?

புவனா, காஞ்சிபுரம்

ப:           பணம் நீதியை சில நேரங்களில் வாங்கி விடுகிறது; அதன்பின் சிறைச்சாலைகளையும்கூட ‘நல்ல விலைக்கு வாங்கி விடுகிறது என்பதைக் காட்டுகிறது!