தமிழர்களின் தொன்மையை பல்வேறு சான்றுகளைக் கொண்டு ஆராய்கின்றபோது அவர்களின் தொன்மை வாழ்வில் _ ஆரியர் வந்து கலப்பதற்கு முன் _ ஜாதியில்லை, கடவுள் இல்லை, மூடப் பண்டிகைகளோ, மூடநம்பிக்கைகளோ இல்லை என்பதை உறுதி செய்துள்ளனர்.
பிற்கால சங்க காலத்தில் பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பு ஊடுருவியது. பிழைக்க வந்த ஆரியச் சிறுபான்மையினர் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவும், பாதுகாத்துக் கொள்ளவும், மெல்ல மெல்ல ஆதிக்கம் செலுத்தவும் கடவுள், ஜாதி, சடங்குகள், பண்டிகைகள் என்று பலவற்றை உருவாக்கி தமிழர்கள் மீது திணித்தனர்.
தமிழர்கள் நன்றியின்பாற்பட்ட வணக்கத்தை மட்டுமே கொண்டிருந்தனர். நிலத் தலைவர், பத்தினிப் பெண்டிர், வீரர்கள், பயன்பாடுடையவை என்றே மதித்து நன்றி செலுத்தினர். மற்றபடி எந்த மூடநம்பிக்கைகளோ, சடங்குகளோ அவர்களின் வாழ்வில் இல்லை.
அறுவடை விழாவான பொங்கல் விழா மட்டுமே தமிழர் விழாவாகும். உற்பத்திக் காரியங்களான மழை, சூரியன், மாடு, வேலையாட்கள் ஆகிய நான்கிற்கும் நன்றி சொல்லும் பண்டிகையாகப் பொங்கல் விழாவைக் கொண்டாடுகின்றனர்.
அப்படிப்பட்ட பகுத்தறிவுடன் கூடிய பண்பாட்டு வாழ்விற்குரிய தமிழர்களிடையே, பின்னாளில் வந்த ஆரியர்கள் தங்கள் ஆதாயத்திற்கும் ஆதிக்கத்திற்கும் கடவுள், சடங்கு, பண்டிகைகளை உருவாக்கி தமிழர்கள் கொண்டாடும்படிச் செய்தனர்.
பண்பாட்டை அழித்த பண்டிகைகள்
மருத்துவம், வானியல், கடல் பயணம், கணிதம், அறிவியல், கட்டுமானம், கலை, இசை என்று எல்லாத் துறைகளிலும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகவே அறிவும், நுட்பமும், வளர்ச்சியும் பெற்று உலகிற்கு வழிகாட்டியாய் விளங்கிய தமிழர்கள், கடவுள், மதம், சடங்கு, பண்டிகை, புராணம், இதிகாசம் போன்ற மடமைக்குப் பலியாகி தங்கள் ஆளுமை, திறமை, வீரம் என்று எல்லாவற்றையும் இழந்து ஜாதிப் பிரிவாகச் சிதறுண்டு, சாஸ்தர சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு அடிமைகளாயினர் _ சூத்திரர்களாயினர்.
இந்த இழிநிலை திராவிடர் இயக்கம் உருவாகும்வரைத் தொடர்ந்தது. தந்தை பெரியாரின் பண்பாட்டுப் படையெடுப்புக்கு எதிரான பெரும் முயற்சியால், பிரச்சாரத்தால், போராட்டங்களால், வழிகாட்டலால், விழிப்புப் பெற்று, ஓரளவிற்கு இழிவகற்றி, கல்வி, வேலைவாய்ப்புகளில் உயர்ந்தனர். திராவிட இயக்கத்தின் ஆட்சிக்குப் பின் இன்னும் நிலை மேம்பட, ஆரிய பார்ப்பனர்களையே கல்வி, நிர்வாகம், அறிவாற்றல் போன்றவற்றில் வென்றும் சாதித்தும் காட்டினர்.
இதனால் ஆத்திரமுற்ற ஆரிய பார்ப்பனர்கள் பல வகையாலும் முயன்று தோற்றனர். ஆரியர் அல்லாதார் பல வகையில் விழிப்புற்று உயர்ந்தாலும், கடவுள், பக்தி, சடங்கு, விழா போன்றவற்றிலிருந்து விடுபட முடியாமலே வாழ்ந்தனர்.
இராமாயணம், மகாபாரதம், தீபாவளி, நவராத்திரி என்று பண்டிகைகளை விடாமல் கொண்டாடச் செய்வதன்மூலம் ஆரியர் அல்லாதாரை தங்கள் கட்டுக்குள் வைத்து, பின் ஆதிக்கத்திற்குள் கொண்டுவர முடியும் என்ற சூழ்ச்சியோடு வானொலி, தொலைக்காட்சி நாடகங்கள் ஊடகங்கள் வழியாக மதப் பண்டிகைகளை தொடர்ந்து கொண்டாடும்படிச் செய்தனர்.
பண்டிகைகளை அரசியலாக்கும் முயற்சி
காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மையோடு இருக்கும்வரை பண்டிகைகள் பக்தியின்பாற்பட்டதாகவே இருந்தது. மோடி என்ற ஒருவரை பிரச்சாரத்தின் மூலம் பெரிதாகக் காட்டி, இளைய சமுதாயத்தை வளர்ச்சி என்ற வார்த்தை ஜாலத்தால் ஏமாற்றி, தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்து அதிகாரத்தைக் கைபற்றிய பின், தாங்கள் செய்ய நினைத்த அனைத்தையும் ஒவ்வொன்றாக செய்து வருகின்றனர்.
சமஸ்கிருத திணிப்பு, ஒற்றைக் கலாச்சாரத் திணிப்பு என்று பலவற்றைத் திணிப்பதோடு, புதிய புதிய பண்டிகைகளை உருவாக்கி, விரிவாக்கி, மத விழாக்களை வைத்து அரசியல் செய்ய தற்போது தீவிரமாய் களம் இறங்கி காரியம் ஆற்றுகின்றனர்.
அனுமன் ஜெயந்தி, நாரதர் ஜெயந்தி, புஷ்கரணி, விநாயகர் சதுர்த்தி என்று பலவற்றை புதிய வடிவில், முறையில் உருவாக்கி வீட்டிற்குள் இருந்த பக்தியை வீதிக்குக் கொண்டுவந்து விபரீதங்களை அன்றாடம் நிகழ்த்தி வருகின்றனர்.
சாஸ்திர விரோதமாய் பண்டிகைகள்
எதற்கெடுத்தாலும் சாஸ்திரம், சம்பிரதாயம், ஆகமம், ஆச்சாரம், தெய்வீகம், புனிதம் என்று கூப்பாடு போடும் ஆரிய பார்ப்பனர்கள், எந்த சாஸ்திர சம்பிரதாய அடிப்படையும் இல்லாமல் விழாக்களை இவர்கள் விருப்பம் போல் அரசியல் ஆதாயத்திற்கும், மதவெறியைத் தூண்டவும், வருவாய் ஈட்டவும், சுரண்டவும் கொண்டாடுகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி
அவர்கள் சொல்லிக் கொள்கின்ற சாஸ்திர சம்பிரதாயப்படி விநாயகர் சதுர்த்தி என்பது, ஆவணி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்தசியில் விரதம் இருப்பதே ஆகும்.
விரதம் என்பது வீட்டிற்குள் இருப்பது. விநாயகர் உருவத்தை களிமண்ணால் செய்து விரதம் இருந்து, முடிந்தபின் நீரில் கரைப்பது.
ஆனால், இன்று இந்த விநாயகர் சதுர்த்தி விழாவின் நிலை என்ன? அவலம், அடாவடிச் செயல், அவர்கள் வணங்கும் கடவுளுக்கே அடுக்காத அக்கிரமங்கள்!
ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு பத்து அடி, இருபது அடி உயரத்திற்கு சிலைகளை வைத்து, ஆர்ப்பாட்டம் செய்து, இறுதியில் அதை கரைக்கிறேன் என்று சொல்லி ஊர்வலமாக எடுத்துச் சென்று, செல்லும் வழியில் கலவரம், அடிதடி, குத்துவெட்டு, ஆயிரக்கணக்கான காவலர்கள் பாதுகாப்பு என்று சட்டம், ஒழுங்கிற்கு சவால் விட்டு, பின் கடலில் கரைப்பதாகச் சொல்லி, அதுவரை வணங்கிய விநாயகர் சிலையை கட்டையால் அடித்து நொறுக்கி கை வேறு, கால் வேறு, வயிறு வேறு, தலை வேறு என்று சிதைந்து கடலை மாசுபடுத்தி, கடல்வாழ் உயிரினங்களுக்குக் கேடு உருவாக்கிவிட்டு வீடு திரும்புகின்றனர்.
இப்படி விழாக் கொண்டாட அவர்கள் சொல்லும் சாஸ்திரம் அனுமதிக்கிறதா? வணங்கிய கடவுளை கட்டையால் அடித்து நொறுக்குவதுதான் பக்தியா?
ஆக, விசுவ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. போன்ற மதவெறி அமைப்புகளுக்கு பக்தி நோக்கமல்ல, ஆர்ப்பாட்டமும், பிரச்சாரமுமே. தங்கள் அரசியல் செல்வாக்கை இதன்வழி நிலைநிறுத்தவும், வளர்க்கவும், இப்பண்டிகையை இவர்கள் விருப்பத்திற்கு மாற்றி அமைத்து கொண்டாடுகின்றனர்.
விநாயகரிலே கம்யூட்டர் விநாயகர், ராக்கட் விநாயகர் வரை எல்லாம் உண்டு. இதுவெல்லாம் சாஸ்திரத்தில் உண்டா? புராணத்தில் உண்டா?
கிருஷ்ண ஜெயந்தி
இவர்கள் கூறும் சாஸ்திரப்படி கிருஷ்ணபட்சம் ரோகினி நட்சத்திரத்தில் கிருஷ்ணன் பிறந்ததை எண்ணி குழந்தைகளுக்காக விரதம் இருப்பது என்பதேயாகும். ஆனால், நடப்பது என்ன? கொண்டாடப்படும் முறை என்ன?
உறியடி கொண்டாட்டம் என்ற பெயரில் ஊரில் பொதுவெளியில் ஆர்ப்பாட்டம், அடாவடிச் செயல்கள்.
உறியடியின் தத்துவம் என்ன? கண்ணன் வீடுவீடாய் வெண்ணைத் திருடித் தின்றான் என்பதுதானே? திருட்டுத்தனத்திற்கு ஒரு விழாவா?
அதன்பின் கிருஷ்ணனின் லீலைகள். கிருஷ்ணன் எத்தனைப் பெண்களோடு உறவு கொண்டான், என்னென்ன லீலைகள் செய்தான். இதுபற்றி கூத்து, நாடகம், கொண்டாட்டம்!
பெண்கள் சிலர் குளக்கரையில் தங்கள் சேலைகளை அவிழ்த்து வைத்துவிட்டுக் குளித்துக் கொண்டிருந்தார்கள். இந்தக் ‘கடவுள்’ கண்ணன் என்ன செய்தான் தெரியுமா?
பெண்களின் சேலைகள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டுவந்து மரத்தின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டான்.
பெண்கள் குளித்து முடித்துவிட்டுச் சேலைகளைப் பார்த்தார்கள். சேலைகளைக் காணவில்லை. திகைத்தார்கள். சுற்றுமுற்றும் பார்த்தார்கள்.
கண்ணன் மரத்திலிருந்தபடி கலகலவென்று சிரித்தான். பெண்கள் அனைவரும் மரத்தை நோக்கினார்கள்.
“கண்ணா! எங்கள் சேலைகளைக் கொடுத்து விடு கண்ணா!’’ என்றார்கள்.
“கரையேறி வந்து கேட்டால்தான் தருவேன்’’ என்றான் கண்ணன்.
“நாங்கள் நிர்வாணமாக எப்படிக் கண்ணா கரையேறி வருவது!’’ என்றார்கள்.
“சேலை வேண்டுமானால் அப்படித்தான் செய்ய வேண்டும்’’ என்றான் கண்ணன்.
பெண்கள் வேறு வழியின்றித் தங்கள் பெண் உறுப்புகளை இரு கைகளாலும் மறைத்துக் கொண்டே கரையேறி வந்து துணியைக் கேட்டார்கள்.
“நீங்கள் இரு கைகளையும் நீட்டித் துணியைக் கேட்டால் நான் தருவேன்’’ என்றான் கண்ணன்.
பெண்கள் மானத்திற்கு அஞ்சித் திகைத்தனர்
“கண்ணா! அப்படி நாங்கள் எவ்வாறு செய்ய முடியும் கண்ணா? துணிகளைக் கொடு கண்ணா!’’ என்று கெஞ்சினர்.
கண்ணன் கலகலவென்று சிரித்தான்.
மங்கையர்கள் மானத்திற்குப் போராடுவது, கடவுளுக்குக் களிப்பைத் தருகிறது!
கடவுள் வழியே சிறந்த வழியென்று, ஒவ்வொரு பக்தனும் குளக்கரைக்குச் சென்று சேலை பொறுக்க ஆரம்பித்துவிட்டானே யானால் நிலைமை என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள்.
“கண்ணா! சிரிக்காதே கண்ணா! சேலையைக் கொடு கண்ணா!’’ என்று கெஞ்சினார்கள் பெண்கள்.
“இரு கைகளையும் நீட்டினால்தான் சேலை கிடைக்கும்’’ என்று இறுதியாகவும் உறுதியாகவும் கூறிவிட்டான் கண்ணன்.
வேறு வழியறியாத பெண்கள், வெட்கத்தை அடக்கிக் கொண்டு, இரு கைகளையும் தயங்கித் தயங்கி உயரே தூக்கிச் சேலையைக் கேட்டனர்! காட்சியை கண்டுவிட்ட கண்ணன், களிப்போடு சேலைகளை விட்டெறிந்தான்.ஆவலோடு சேலைகளைப் பொறுக்கி, உடலை மறைத்துக் கொண்டு அயோக்கியக் கண்ணனை விட்டு அகன்றால் போதும் என்று ஓட்டம் பிடித்தார்கள் பெண்கள்.
இந்தக் காலித்தனத்திற்கும் திருட்டுத்தனத்திற்கும் விழா என்றால் இதைவிட வேடிக்கையுண்டா?
அதுவும் கிருஷ்ண ஜெயந்தி என்பது, சிறுவர்களுக்கான விரதம் என்று சொல்லிக் கொண்டு இப்படிக் கூத்தடிப்பதுதான் பக்தியா?
கிருஷ்ணன், இராமன் என்று சொல்லி மதத்தைப் பரப்பி, மதத்தை வைத்து அரசியல் செய்து தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான சூழ்ச்சியைத் தவிர இதில் வேறென்ன நோக்கம் இருக்க முடியும்?
அனுமன் ஜெயந்தி
அனுமன் பிறப்பைக் கொண்டாட ஒரு விழா! இப்போது இந்து மதத்தின் மூலம் அரசியல் பண்ண முற்படும் இந்த பரிவார் அமைப்புகள் இதை பரப்ப முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
அனுமன் பிறப்பு என்ன?
அறிவுக்கும், மாண்புக்கும் அதில் கொஞ்சமாவது இடம் உண்டா? மிகக் கேவலமான ஒரு பிறப்பை கொண்டாடுவதை விட கேடு வேறு இருக்க முடியுமா?
அஞ்சனை என்னும் பெண் கேசரி என்பவனை மணந்து வாழ்ந்தாள். அப்போது ஒருநாள் வாயு இவளது அழகில் மயங்கி அவளுடன் உடலுறவு கொள்ள அதில் பிறந்தவன் அனுமன் என்கிறது இந்துமத புராணம்.
ஆக, வேறு ஒருவன் பெண்டாட்டி அழகாய் இருந்தாள் என்பதற்காக வாயு அவளை புணருகிறான். இதுவே அயோக்கியத்தனம். அடுத்தவன் பெண்டாட்டியை புணர்வதுதான் வாயு பகவானுக்கு அழகா? அது மட்டுமல்ல. வாயு என்றால் காற்று. காற்று ஒரு பெண்ணோடு உடலுறவு கொண்டு பிள்ளை பிறக்கிறது என்பது எவ்வளவு பெரிய மடமை. இந்த ஒழுக்கக் கேட்டிற்கும், மானக் கேட்டிற்கும், அறிவுக் கேட்டிற்கும் ஒரு விழா வேண்டுமா?
இந்த விழாவைக் கொண்டாடி இந்த சீர்கேடுகளையெல்லாம் பரப்பப் போகிறார்களா?
இப்படிப்பட்ட கேவலத்தைக் கூட பாராமல் அவர்கள் விழா கொண்டாடுவதன் நோக்கம் என்ன? 100அடி, 150 அடியில் அனுமன் சிலை வைத்து, அதை வைத்து மக்களைக் கவர்ந்து அரசியல் செய்வதற்குத்தானே!
நாரதர் ஜெயந்தி, வால்மீகி ஜெயந்தி
பிரம்மாவுக்குப் பிறந்தவன் நாரதன் என்று மட்டுமே புராணக் குறிப்புகள் உள்ளனவே தவிர நாரதர் என்றைக்குப் பிறந்தார் என்ற குறிப்புகள் இல்லை. அதேபோல் வால்மீகியின் பிறந்த நாள் பற்றிய குறிப்பும் இல்லை. பிறந்த நாளே தெரியாத போது பிறந்த நாள் கொண்டாடுவது எந்த அடிப்படையில்? நாரதர் ஜெயந்தி வான்மீகி ஜெயந்தியெல்லாம் இதற்கு முன் இல்லை. எல்லாம் இவர்கள் திட்டமிட்டு உருவாக்குபவையே.
மகாமகத்தை மாற்றினார்கள்!
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமகம் வரும். கும்பகோணம் குளத்தில் மூழ்கி எழுந்தால் புண்ணியம் என்ற பிரச்சாரத்தை நம்பி மக்கள் அதில் முண்டியடித்து மூழ்குவார்கள்.
செத்துப் போன ஜெயேந்திர சங்கராச்சாரி அதையும் அவர் விருப்பப்படி மாற்றினார். ஒரு நாள் அல்ல மேலும் சில நாள்கள் குளத்தில் மூழ்கலாம் என்று அனுமதியளித்தார். இதற்கு எந்த சாஸ்திரத்தில் இடம் உள்ளது? மக்கள் கூடுகிறார்கள் என்றதும் அதை வைத்து இவர்கள் ஆதாயம் அடைய விழா நாளை நீட்டித்துக் கொள்கிறார்கள்!
அது மட்டுமல்ல; அப்படி மூழ்கும் அந்தக் குளத்தில் மலமும் மூத்திரமும் அதிக அளவில் கலந்துள்ளதை சுகாதாரத்துறையே அறிக்கையில் கூறியிருந்தது. இப்படி மலம் கலந்த மூத்திரச் சேற்றில் மூழ்குவதுதான் புண்ணியமா?
புஷ்கர விழாவாம்! புதிய இறக்குமதிகள்!!
காவிரியில் மூழ்கினால் புண்ணியம்; தாமிரபரணியில் மூழ்கினால் புண்ணியம் என்று ஒரு புது கதையை புஷ்கர விழா என்ற பெயரில் உருவாக்கி அண்மைக்காலமாக ஆதாயம் அடைகின்றனர்.
காவிரியில் புஷ்கர விழா நடத்தியவர்கள் அடுத்து தாமிரபரணியில் பெரிய கூட்டத்தைக் கூட்ட பிரச்சாரத்தைக் தொடங்கி விட்டார்கள்.
ஆற்றிலே தண்ணீர் வர வழிசெய்ய முடியாத இந்த காவி ஆட்சியில், புஷ்கர விழா நடத்தி மக்களை மடையராக்கி ‘இந்து மதம்’ என்ற போர்வையில் வாக்கு வங்கியை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.
அனைத்தும் அரசியல் ஆதாயத்திற்காகவே!
அரசியல் ஆதாயத்திற்காக பண்டிகைகளை உருவாக்குவது மட்டுமல்ல. ஆர்.எஸ்.எஸ்.இன் அடிப்படைச் சித்தாந்தத்தையே அண்மையில் அரசியல் ஆதாயத்திற்காக மாற்றி பேசியுள்ளார் மோகன்பாகவத். இதை ‘தமிழ் இந்து’ நாளிதழில் ஸ்மிதா குப்தா தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
“மோகன் பாகவத் தன் வரலாற்றிலேயே இருந்திராத வகையில் காங்கிரசிடமிருந்து அதன் தலைவர் மூலம் ஏற்பட்டிருக்கும் தீவிரமான – கூர்மையான தாக்குதல்களால்.
ஆர்.எஸ்.எஸ். பற்றிய தோற்றத்தை மாற்ற முயல்கிறார் பாகவத்.
“முஸ்லிம்களும் இதர சிறுபான்மையினரும் பிரிக்க முடியாத ஒரே சமூகத்தின் உறுப்பினர்களே, இந்துத்துவம் அவர்களையும் உள்ளடக்கியது’’ என்று பேசியிருக்கிறார்.
சிறுபான்மை சமூகத்தவரை, பட்டியல் இனத்தவரையும் கும்பல்கள் கொலை செய்வதால் மனம் வருந்தும் மிதவாத இந்துக்கள், தங்களை விட்டு விலகி காங்கிரஸை ஆதரித்துவிடக் கூடாது என்ற நோக்கில் பேசியிருக்கிறார். இது மன மாற்றமல்ல. அரசியல் ஆதாயங்களுக்காகவே இப்படிப் பேசியிருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது” என்று எழுதியுள்ளார்.
ஆக, பண்டிகையானாலும், இந்து மதம் இந்துக்கள் என்ற பற்றானாலும் எல்லாம் அரசியல் ஆதாயத்துக்காகவே அவர்கள் கையாளுகிறார்கள். மற்றபடி அவர்களுக்கு பக்தியோ, மதப் பற்றோ இருப்பதாகக் கொள்ள முடியாது. எல்லாம் ஆரிய சனாதனத்தை நிலைநிறுத்தி, ஆதிக்கம் செலுத்தவதற்கான யுக்திகளே! ஆரியர் அல்லாதார் விழிப்போடும் எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும்!
– மஞ்சை வசந்தன்