காந்தியார் மறைவு திராவிட நாட்டுக்கும், திராவிட மக்களுக்கும் மகத்தான நட்டமும், மாபெரும் ஏமாற்றமடையத்தக்க வாய்ப்புமாகும். காந்தியார் கொலை திராவிட மக்களின் எல்லையற்ற ஆத்திரமும், இரத்தக் கொதிப்பும், திடுக்கிடும் படியான விறுவிறுப்பையும் கொள்ளத்தக்க காரியமாகும். இதைச் சொல்லுகிறபோது என் மனம் பதைக்கிறது, கைநடுங்குகிறது, நாவறட்சியடைகிறது, இதயம் துடிக்கிறது.
அப்படிப்பட்ட ஒரு மனிதரை எப்படித்தான் கொல்ல, இப்படிப்பட்ட ஒரு பார்ப்பனனுக்கு எண்ணம் வந்தது, கைவந்தது என்பதை நினைத்தால், இராமாயணக் கதையில் வரும் ஒரு இடம் தான் சற்று அதை விளக்குகிறது. அதாவது, சம்பூகன் என்ற ஒரு சூத்திரன் பிரார்த்தனை (தபசு) செய்ததற்காகச் சூத்திரனுக்குத் தபசு செய்ய உரிமை இல்லை என்கின்ற காரணங்கற்பித்து பார்ப்பனர்களின் தூண்டுதலின் மேல் ராமன் என்கின்ற ஒரு ஆரியனால் கண்டதுண்டமாக்கப்பட்டான் என்கிற இடம்தான் இக்கொலையின் காரணத்துக்குச் சிறிது விளக்கத்துக்கு உரியதாகிறது. ஆகவே, காந்தியார் கொலையானது ஒரு தனிப்பட்ட அல்லது ஒரு புதிய சம்பவமல்ல என்பதும், இது ஆரியர் – சூத்திரர்(திராவிடர்) அல்லது ஆரியர் – ஆரியரல்லாதவர் என்கின்ற இனப் போராட்டமுறை என்றும், அதுவும் இந்து மதப்புராணத் தத்துவங்களைப் பின்பற்றியதுதான் என்றும் நிச்சயிக்க வேண்டியதாகிறது.
‘குடிஅரசு’ – சொற்பொழிவு – 15.5.1948