தளிர்
குழந்தை இல்லாத இளம் தம்பதியர், ஒரு குழந்தையைத் தத்தெடுக்க விரும்புகின்றனர். வழக்கமான பிரச்சனைகள் இன்றி, எந்தக் குழந்தையைத் தத்தெடுப்பது என்பதில் பிரச்சனை தொடங்குகிறது.
“பெண் குழந்தை என்றாலே செலவுதான். பெண்கள் படித்துப் பட்டம் பெறுவது கல்யாணம் செய்து கொள்ளத்தானே’’ _ என்று பிற்போக்குத்தனமாக கூறிவிடுகிறான் கணவன். மனைவி அதிர்ந்து போகிறாள்.
ஏனென்றால் அவளும் படித்துப் பட்டம் பெற்றாலும் Home Maker- ஆகத்தான் இருக்கிறாள். விவாதத்தின் இறுதியில் எந்தக் குழந்தையாக இருந்தாலும் சரிதான் என்று இருவரும் தூங்கிவிடுகின்றனர்.
காலையில் எழுந்ததும் கணவனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. மனைவி வேலை தேடத் தயாராகிக் கொண்டிருக்கிறாள். அதே அதிர்ச்சியுடன் கேட்கிறான். அந்த உரையாடல் சாட்டையால் விளாசியதைப் போல பார்வையாளர்களையும் தாக்குகிறது. அங்கே பெண்ணியம் கொடிகட்டிப் பறக்கிறது. 9:41 நிமிடம் ஓடக்கூடிய இந்த குறும்படத்தை பொன்வாணி இயக்கியுள்ளார். அனைவரும் காண வேண்டிய குறும்படம்.
– உடுமலை