மேற்குத் தொடர்ச்சி மலை

செப்டம்பர் 16-30

படம் நன்றாக இருக்கிறது என்று கேள்விப்பட்டு சரி பார்த்துவிடலாம் என்று முடிவெடுத்தேன். சனிக்கிழமை இரவு. நீண்ட வரிசையில் டிக்கெட் வாங்கி உள்ளே செல்லும் வரை அந்தப் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் தான் இருந்தேன்!

திரையில் காட்சி விரியத் தொடங்கிய அடுத்த 10 நிமிடங்களில் நம் கவனத்தை தனக்குள் குவித்துவிடுகிறது ‘மேற்குத் தொடர்ச்சி மலை’. அவ்வளவு அழகாக அடர்ந்த காடுகளுனூடே புகுந்து அசத்தியிருக்கிறது ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரின் கேமரா! திரைப்படங்களில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த வடமொழி கலந்த மேட்டுக்குடி தமிழுக்கு விடைகொடுத்து சாமான்ய மக்களின் மொழியை திரையில் ஏற்றியவர் கலைஞர். அவரின் பராசக்திக்கு பிறகு வெளிவந்த தமிழ்ப்படங்களின் வசன உச்சரிப்புகள் மாறியது.

ஸ்டூடியோவுக்குள் மட்டுமே எடுக்கப்பட்டுவந்த படங்களை அங்கேயிருந்து கிராமத்து வயல்வெளிகளுக்குக் கொண்டுச் சென்றவர் இயக்குனர் பாரதிராஜா!

இளையராஜாவின் இசை தமிழ்த்திரையிசை வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்புமுனையாக இருந்தது. அந்த வரிசையில், ‘மேற்குத் தொடர்ச்சி மலை’யினையும் குறிப்பிடலாம். காரணம், இப்படத்தின் நடிகர்கள் ஏறக்குறைய அனைவரும் அந்தப் பகுதி மக்கள்! நாம் தியேட்டருக்குள் உட்கார்ந்திருக்கிறோமா அல்லது மலைத் தொடரில் இருக்கிறோமா என்று நினைத்துப் பார்ப்பதற்குக் கூட நமக்கு விநாடிப் பொழுது தராமல் காட்சிகள் நகர்கின்றன.

ஒரு அவசரச் செய்தியை அடுத்த ஊருக்கு சொல்வதற்கு, ஒரு பொருளை அடுத்த ஊருக்கு கொண்டு சேர்ப்பதற்கு அந்த மக்கள் ஒரு பெரிய மலையையே ஏறி இறங்கி கடக்க வேண்டியிருப்பது இந்த செல்போன் யுகத்தில் நினைத்துப் பார்த்தால் எத்தனை மலைப்பான விஷயம்!

வனங்களிலும் கல்லிலும் முள்ளிலும் வாழ்ந்தாலும் உழைத்து நேர்மையாகத்தான் சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணுகிற அப்பகுதி மக்கள் ஒரு அற்புதம்!

தன்னுடைய உடல் வலிமையை மற்றவர்கள் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது என்ற வைராக்கியத்தில் முதுமையில் நோயுற்ற நிலையிலும் மூட்டை தூக்கி மலையைக் கடக்கும் முதியவர், அந்த மூட்டையுடனே விழுந்து திரையில் இறந்து கிடந்தாலும், பார்வையாளர்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்!

ஒரு துண்டு விவசாய நிலம் வாங்குவதற்கு ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் உழைக்க வேண்டியிருக்கிறது. அந்த நிலத்தையும் வளர்ச்சிப் பணிகள் என்கிற பெயரில் அதிகாரவர்க்கம் எப்படி பறித்துக் கொள்கிறது என்பதை பார்ப்போரின் நெற்றிப்பொட்டில் அடித்து உணர்த்தியதற்காக இயக்குனர் லெனின் பாரதிக்கு ஒரு சபாஷ்!

படத்தின் நாயகன் ஒரு சிறு நிலம் வாங்குவதற்காக தனது முதலாளியிடமிருந்து பெற்ற ஒரு மூட்டை ஏலக்காயை அவனின் நண்பன் தெரியாமல் தட்டிவிட, அந்த மூட்டை மலையிலிருந்து கீழே உருண்டு அவிழ்ந்து கொட்டிக் கொண்டிருக்கும்போது, ஒரு பின்னணி இசையும் ஒரு ராகமும் வருமே.. இளையராஜாவைவிட வேறு யாருக்கு இது சாத்தியமாகும்! ஏலக்காய் மூட்டையுடன் சேர்ந்து நமது நெஞ்சமும் மலையில் இருந்து கீழே உருண்டோடுகிறது.

மக்களின் தெய்வங்கள் என்று சொல்லப்படும் நாட்டார் தெய்வங்கள் எப்படி உருவானது என்பதையும் இந்த படம் காட்சிப்படுத்துகிறது.

உழைக்கும் மக்களுக்கு ஒரு மரமும் அதற்கு கீழான கற்குவியலுமே கடவுளாக இருக்க போதுமானது. அவர்களுக்கு வேதங்கள், இதிகாசங்கள், சமஸ்கிருத மந்திரங்கள், அக்காரவடிசல், நெய் விளக்கு, உயர்ந்த கோபுரங்கள், சுற்றிலும் பிரம்மாண்ட சுவர்கள் தேவையில்லை என்பதை மறைமுகமாக ஓங்கியடித்துச் சொல்கிறது அக்காட்சி! எனினும் எந்தத் தெய்வமும் உதவி செய்வதில்லை என்பதை போகிறபோக்கில் நம் யூகத்திற்கு விட்டுவிடுகின்றார் இயக்குநர்.

தொடர்ந்து திரைப்படங்களில் இசுலாமியர்களை வில்லன்களாகவும் தீவிரவாதிகளாகவும் காட்டி வரும் தற்காலிக படங்களில் இருந்து விலகி, ஒரு இசுலாமியப் பெரியவரை நெஞ்சுருக்கும்படியான நல்லவராகக் காட்டியிருக்கிறது இந்தப் படம். இது ஒரு ஆரோக்கியமான அம்சம். இப்படியான காட்சிகள் சமூகத்தில் இசுலாமியர்கள் மீது நியாயமற்ற முறையில் பரவியிருக்கும் வெறுப்புணர்ச்சியைக் குறைக்கும்.

காலம் முழுவதும் உழைத்தாலும் விவசாயிகளின் மாறாத ஏழ்மையை ஒரு பக்கத்தில் காட்டிக் கொண்டே, மற்றொரு பக்கத்தில் எந்த உழைப்பும் இல்லாத ஒரு இடைத்தரகரின் அபரிமித வளர்ச்சியைக் காட்டிய இயக்குநர் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர்.

உண்மையாக உழைப்பைச் செலுத்தும் மக்களைவிட புரோக்கர்களும், இடைத்தரகர்களுமே அரசியல் உள்ளிட்ட எல்லாத் துறைகளிலும் தொழில்களிலும் வளர்ச்சி பெற்று வருகின்றனர். இந்தப் போக்கு ஒரு நாட்டுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்றாலும், அதுதான் இங்கே நடந்து கொண்டிருக்கிறது. எங்கெங்கு காணிணும் தரகர்களே கோலோச்சுகின்றனர்.

உழைக்கும் மக்களுக்கு ஒரு உண்மையான கம்யூனிஸ்டால் ஏற்படும் நன்மைகளையும் ஒரே ஒரு காட்டிக் கொடுக்கும் கம்யூனிஸ்டால் அதே மக்களின் வாழ்வாதாரம் எவ்வளவு சீர்கெடும் என்பதையும் பளிச்சென்று சுட்டிக் காட்டியிருக்கிறது இப்படம்!

‘மேற்குத் தொடர்ச்சி மலை’ போன்ற படங்கள் தமிழ்த்திரை உலகில் பெருகட்டும்!

தான் நடிக்க விரும்பிய கதாபாத்திரத்தில், இயக்குநர் லெனின் பாரதியின் விருப்பத்திற்கேற்ப அறிமுகமே இல்லாதவர்களை நடிக்க வைத்து இப்படியொரு படத்தை தயாரிக்கத் துணிந்ததற்காக தயாரிப்பாளர் விஜய் சேதுபதியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ‘மக்கள் செல்வன்’ மக்கள் மீது நம்பிக்கை வைத்து இதுபோன்ற படங்களை தொடர்ந்து தயாரிக்கட்டும்!

மலையளவு வாழ்த்துகள்!

– கருங்குயில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *