திராவிடர் கழக சட்டத்துறை சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு ‘நீதிபதிகளின் நினைவேந்தல் நிகழ்வு’ சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் 31.8.2018 அன்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று சிறப்புரையாற்றினார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்கள் இணைப்புரை வழங்கினார். நிகழ்ச்சி மேடையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் படத்தைத் திறந்து வைத்து நீதிபதிகள் நினைவேந்தல் உரை நிகழ்த்தினர். அந்த உரைகளின் சாரம் கீழே கொடுக்கப்படுகிறது.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உரை
“சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் தாழ்த்தப்பட்ட நீதிபதியாக ஜஸ்டிஸ் ஏ.வரதராசன் அவர்கள் வருவதற்கு மூல காரணம் முதல் அமைச்சர் கலைஞர்தான். கலைஞர் மறைவு வெற்றிடத்தை உருவாக்கவில்லை. எங்களுக்கு நன்றாகக் கற்றுக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார் கலைஞர் அவர்கள்.
பெரியார் திடலுக்கு என்ன ஒரு தனித்தன்மை -_ ஏன் பெரியார் திடலுக்கு அடிக்கடி வருகிறோம் என்று கலைஞர் அவர்கள் சொல்கிறபொழுது, “பாம்பும், கீரியும் சண்டையிட்டு, பாம்பு கடித்து கீரிக்கு காயம், புண் ஏற்பட்டால், ஒரு பச்சிலையில் புரண்டால், அதன் புண்கள் எல்லாம் சரியாகிவிடுமாம். அந்தப் பச்சிலைதான் பெரியார் திடல்’’ என்று சொல்லி, பெரியார் திடலின் பெருமை என்ன என்பதைப்பற்றி சொல்வார். இந்த இடத்தில் அவருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்துவது, நீதிபதிகள் இந்நிகழ்வில் கலைஞரின் சிறப்புகளை சொல்வது என்பது மிகவும் பொருத்தமானது. அண்ணா வழியிலே அயராது அவர்கள் உழைத்தார்கள்.’’
உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி வி.இராமசாமி உரை
“யாமறிந்த புலவரிலே, கம்பனைப்போல், வள்ளுவர்போல், இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கனுமே கண்டதில்லை. உண்மை அது உண்மை. வெறும் புகழ்ச்சி இல்லை’’ என்று பாரதியார் சொன்னார். இன்று பாரதியார் இருந்திருந்தால், “யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வள்ளுவர்போல், இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கனுமே கலைஞர் கருணாநிதியைத் தவிர கண்டதில்லை’’ என்று சொல்லியிருப்பார். அவர் இருந்த காலத்தில் அவர் முதல்வராக இருந்த காலத்தில், நானும் வாழ்ந்தேன், நானும் நீதிபதியாக இருந்தேன் என்பதைச் சொல்வதில் நான் பெருமை அடைகிறேன்.’’
உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி எஸ்.மோகன் உரை
“அவர் கவிதைப் பெட்டகம். கலைஞர் ஒரு தனிப்பட்ட மனிதரல்ல. ஒரு மாபெரும் சக்தி. ஒரு இயக்கம். தேசியத் தலைவர். எனக்கு ஒரேயொரு அய்யம். இனிமேல் அவரைப் போன்றவர்கள் தோன்றுவார்களா? என்பதுகூட தெரியவில்லை. ஆனால், அவருடைய வழித்தோன்றல் ஸ்டாலின் இருக்கின்றார். அந்த நிம்மதிதான் எனக்கு. அந்த தெம்புதான் எனக்கு. அவரைப்பற்றி சொல்ல வேண்டுமென்றால், ஆயிரமாயிரம் சொல்லலாம்.’’
உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி ஏ.ஆர்.இலட்சுமணன் உரை
“சில பேரை வரலாறு படைக்கிறது. ஆனால் மிகச் சிலர்தான் வரலாற்றைப் படைக்கிறார்கள். அத்தகைய மாமனிதர்களுள் முதல்வராக வாழ்ந்து வரலாறு படைத்தவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள்.
பகுத்தறிவுப் பகலவன் பெரியார் அவர்களுக்கும், தமிழே மூச்சென்று வாழ்ந்த பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும் அணுக்கத் தொண்டராக வாழ்ந்து வரலாறு படைத்தவர் முத்தமிழ் அறிஞர் அவர்கள். பெரியாரது சமூகச் சிந்தனைகளையும் பேரறிஞர் அண்ணாவின் ஆறாத தமிழ்ப் பற்றையும் குழைத்துக் கலைஞர் கொடுத்த அமிழ்தைத் தமிழகம் 70 ஆண்டுகள் பருகியது.
ஒன்றல்ல இரண்டல்ல அய்ந்து முறை தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவி பெற்றவர். பதவிகளை அவர் என்றும் தேடிப் போனதில்லை. பதவிகள்தான் என்றும் அவரைத் தேடிப் போய்ப் புகழ்பெற்றன. என்னை மிகவும் கவர்ந்தவை ஊருக்கு ஊர் அவர் தோற்றுவித்த பெரியார் சமத்துவபுரங்கள்.’’
நீதிபதி பி.ஆர்.கோகுலகிருஷ்ணன் அவர்கள் உரை
“‘கலைஞர் மறைந்தார்’ என்ற செய்தி என்னால் நம்முடியாத செய்தியாக இருந்தது. அவர் என்னை நீதிபதியாக அமர்த்திப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர். அவர் முதலமைச்சர் ஆனவுடனே முதன்முதலில் திராவிடர் முன்னேற்றக் கழகத்தினுடைய அபிமானியாக இருந்த ஒருவர் நீதிபதியாக வந்தார் என்றால் அது நான்தான். அவரைப் பற்றி நான் சொல்லுகின்றபொழுது எத்தனையோ நினைவலைகள் வந்து போகின்றன. ‘உழைப்புதான் ஒருவனை உயர்த்த முடியும்’ என்ற நம்பிக்கை கொண்டிருந்தார். அதேநேரத்திலே, “தலைமை என்றால் அதற்குத் தலைவணங்க வேண்டும்; தலைமையிடும் கட்டளைகளையெல்லாம் நிறைவேற்ற வேண்டும்’’ என்று எண்ணி இருந்தவர். கலைஞர் அவர்கள் தமிழறிஞர் _ மூதறிஞர் _ அரசியல் ஞானி. அவர் புகழ் பார் உள்ள அளவும், பஞ்சபூதம் உள்ள அளவும் நிலைக்கும்.’’
நீதிபதி கே.சாமிதுரை அவர்கள் உரை
“நீதிபதிகளின் சம்பளத்தை மிக அதிகமாக உயர்த்தியவர் கலைஞர் அவர்கள். சேரி சேரி என்று ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதியைச் சொல்லுகின்ற நிலையை மாற்றி காலனி என்று மாற்றம் செய்தார் கலைஞர். பாரதியாருக்கு எட்டயபுரத்தில் நினைவிடம் கட்டினார். வீரபாண்டிய கட்டபொம்மனுக்குக் கயத்தாறில் நினைவிடம் கட்டினார். கண்ணகிக்குப் பூம்புகாரில் நினைவிடம் கட்டினார். அம்பேத்கருக்குச் சென்னையில் நினைவிடம் மற்றும் பல்கலைக்கழகத்திற்கு அவர் பெயர் சூட்டினார். நான் நீதிபதியானதும் என் மகன் நீதிபதியானதும் கலைஞர் காலத்தில்தான்.’’
நீதிபதி ஏ.கே.ராஜன் அவர்கள் உரை
“நான் கலைஞரை என் சிறு வயது முதலே போற்றி ஏற்றுக் கொண்டவன். நான் எந்தக் கூட்டத்தில் பேசினாலும் கலைஞரின் ‘பராசக்தி’யைப் பற்றி என்னால் பேசாமல் இருக்க முடியாது. ஏனென்றால், ‘பராசக்தி’ என்பது சாதாரண சினிமாப் படம் அல்ல. மிகப் பெரிய சமூக சீர்திருத்தத்தைக் கொண்ட ஓர் இலக்கியம். 1996ஆம் ஆண்டு மதுரையிலே நீதிபதியாக இருந்தபொழுது ஒருநாள் காலை 10.30 மணியளவில் கலைஞரிடமிருந்து அழைப்பு வந்தது சட்ட செயலாளர் பொறுப்பு ஏற்கும்படி. நான் பொறுப்பேற்றவுடன் கலைஞரால் ‘மெட்ராஸ்’ என்ற பெயர் ‘சென்னை’ என்று மாற்றி சட்டம் நடைமுறைக்கு வந்தது. மக்களை ஏமாற்றிய சீட்டுக் கம்பெனிகளிடமிருந்து பணத்தினை வசூல் செய்வதற்காக சட்டம் இயற்றி ரூபாய் 3,000 கோடிக்கு மேல் நீதிமன்றத்தின் மூலம் சாமான்ய மக்களுக்கு கலைஞர் பெற்றுத் தந்தார்.
நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி அவர்கள் உரை
“தந்தை பெரியாரிடமும், அறிஞர் அண்ணாவிடமும், கலைஞர் அவர்களிடமும் திராவிட உணர்வை பெற்றேன். இவர்கள் மூவருமே சிறுபான்மையினரான இசுலாமியர்களை இதயத்தில் தாங்கிக்கொண்டனர். கலைஞர் அவர்களால்தான் எனக்கு சட்டக் கல்லூரியில் இடம் கிடைத்தது. நான் ஒரு நீதி அரசராக ஆனதற்கும் காரணம் கலைஞர் அவர்கள்தான். இசுலாமியர்களுக்கு நீதிபதியாவதற்கு 3.5 சதவீதம் இடஒதுக்கீடு அளித்தவர் கலைஞர் அவர்கள்.’’
நிகழ்ச்சி நிறைவு
நிகழ்ச்சியில் தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், மேனாள் மத்திய அமைச்சர்கள் ஆ.இராசா, வேங்கடபதி, மேனாள் மாநில அமைச்சர் க.பொன்முடி, இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தி.மு.க. பொறுப்பாளர்கள், வழக்குரைஞர்கள், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். நினைவேந்தல் நிகழ்வின் முடிவில் திராவிடர் கழக சட்டத்துறைத் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.
– தமிழோவியன்