மானமும் அறிவும்

செப்டம்பர் 16-30

மானமும் அறிவும் மனிதனுக்கழகு
மனதில் இதை நிறுத்து
மதமும் ஜாதியும் உள்ளத்தின் அழுக்கு
அடித்துத் துவைத்து உலர்த்து
வானத்தில் இருந்து குதித்திடவில்லை
நீயும் நானும் நம்பு
வருவதும் போவதும் ஒருவழிதான் – அட
எதற்கு இந்த வம்பு!  -நீ
இயல்பாய் மனிதப் பண்பு

வட்டையும் பட்டையும் கட்டுற ஆளை
வலைகள் போட்டு தேடு
வழிகள் இருக்கு கயவர்கள் அவரை
சிறையில் தள்ளி மூடு  – அறிவு
செழிக்கும் வழிகள் தேடு
தொட்டால் தீட்டு சொல்லுற பேர்க்கு சொந்தம் இல்லை நாடு
தோழமையோடு வாழும் மனங்களே
தமிழன் என்று பேரு  – நிலத்தை
தலை நிமிர்த்தும் தீர்வு
கோடுகள் தாண்டி கூடிடும் உறவுகள்
கொலைகளில் முடிகிறது
குற்றங்கள் புரியும் கொடியோர் கூட்டம்
வீதியில் அலைகிறது  கூடி
வெறிகொண்டு திரிகிறது

ஆடுகள் மாடுகள் ஒன்றாய்த்தானே
மந்தையில் மேய்கிறது
ஆரியம் வளர்த்த ஜாதிய நோய்கள்
அறிவை மறைக்கிறது  – நம்மை
அழித்துச் சிதைக்கிறது

ஜாதிகள் பிரித்தே இனத்தை அழித்தான்
ஈழத்திலே நேற்று
சதிகளை உணர்ந்து கோபத்தைத் திருப்பு
எதிரிகளைப் பார்த்து – நம்
இனவுணர்வைச் சேர்த்து

நீதிகள் இல்லா நெறிகளை எல்லாம்
நெருப்பு வைத்து மூட்டு
நெஞ்சினில் பெரியார் நினைவுகள் ஏந்தி
சமத்துவத்தை நாட்டு – தமிழன்
சரித்திரத்தை மீட்டு

– கவிஞர் காளமேகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *