தந்தை பெரியார் பிறப்பால் தமிழரல்ல. பிறப்பால் தமிழரான பலரையும்விட தமிழினத்துக்காக அதிகம் உழைத்தவர். நான் தமிழன், நான் தமிழன் என்று மூக்கில் ரத்தம் வர கத்துபவர்களைவிட, “ஆமாம் நான் மாற்று மொழியைச் சேர்ந்தவன்தான்’’ என்று சொல்லிக்கொண்ட பெரியார் தமிழினத்துக்குச் செய்த சேவை, தொண்டு, விழிப்புணர்ச்சி அதிகம். அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால், அதிகப்பிரசங்கி தமிழ்த் தேசியர்கள் சில பேர் பெரியாரைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்கக் காரணம் அவர்களது பார்வை இரண்டும் கயமைச் சாதியால் வேரோடிப் போனதால் பெரியாரும் இப்படித்தான் என்று தங்களது வன்மச் சட்டத்துக்குள் அவரை அடித்து மாட்டத் துடிக்கிறார்கள்.
இவர்கள் தாங்கள் பிறந்த இனத்துக்கு, வளர்த்த தலைவர்களுக்கு, ‘பணம் கொடுத்து வளர்க்கும்’ மனிதர்களுக்கு உண்மையாக இருப்பதில்லை என்பதால் பெரியாரும் அப்படித்தான் இருப்பார் என்று நினைத்து அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள்.
வேற்றுமொழிக்காரராய்ப் பிறந்து வளர்ந்து தமிழினத் தலைவராக ஆக முயற்சித்தார் பெரியார்; அவர் களமாடுவதற்கு தாய்த் தமிழ் மண்தானா கிடைத்தது; அவர் எப்போதும் கன்னடராக மட்டுமே இருந்தார்; திராவிடஸ்தான் என்று அவர் கேட்டது தெலுங்குஸ்தான்; தாம் தமிழரல்லாத கன்னடர் என்பதால் தமிழர்கள் தன்னை தலைவராக ஏற்க மாட்டார்களோ என்ற அய்யம் பெரியாருக்கு இருந்தது; தமிழர்களுக்கு நாயக்கர் எப்படி தலைவராக முடியும்? என்றெல்லாம் தமிழ்த் தேசியவாதிகளின் மேடைகளில் ஒலிக்கப்படுகிறது.
‘தமிழ்’ என்று சொல்லும் போதெல்லாம் ‘திராவிட’ என்றும், ‘திராவிட’ என்று எழுதும் போதெல்லாம் ‘தமிழ்’ என்றும் அடுத்தடுத்துக் குறிப்பிட்டவர் பெரியார். ஏனென்றால் திராவிட _ தமிழ் என்கின்ற இரண்டு சொற்களையும் ஒரே பொருளில்தான் அவர் பயன்படுத்தினார். ஒரு பொருள் தரும் இருவேறு சொற்கள் என்றே நினைத்தார்.
தமிழகமாகிய -_ ‘திராவிட நாடு’ தனி அரசு நாடாக… (விடுதலை: 10.8.1952)
தமிழகத்தை _ திராவிட நாட்டை வடவன் ஆட்சிக்கு உட்படுத்தி… (விடுதலை: 10.8.1952)
தமிழ், தமிழன் (திராவிட இன) உணர்ச்சி இல்லாதவர்களைப் போட்டால்… (விடுதலை: 22.4.1955)
திராவிட மொழி என்பது தமிழ்மொழி என்பதுதான் (விடுதலை: 27.11.1948)
இந்தி எதிர்ப்பு ஒரு தேசிய (தேச)ப் போராட்டம்; ஒரு தேச மொழி (தமிழர்)ப் போராட்டம் என்பதைச் சுத்த (கலப்பற்ற) தமிழ் (திராவிட) மக்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து தனது கடமையைச் செய்வார்களாக! (விடுதலை: 25.7.1972)
நாமெல்லோரும் தமிழர் _ திராவிடர். நமக்குள் ஜாதி வேற்றுமை உணர்ச்சி இல்லை. (குடிஅரசு: 27.5.1944)
இதை ஒவ்வொரு தமிழ் மகனும் திராவிடரும் உணர்ந்திருந்தால்
(குடிஅரசு: 11.02.1940)
இதே வழக்கு தமிழன் (திராவிடன்) நீதிபதியாக இருந்தால் இப்படி நடந்திருக்குமா? (விடுதலை: 4.9.1960)
நம் முன்னோர்கள் (திராவிட இனத்தவரான தமிழர்கள்)
(விடுதலை: 27.11.1960)
வெள்ளையரிடம் நீக்ரோக்கள் நடத்திய போராட்டத்தைப் போலவே பார்ப்பனர்களிடம் தமிழ் மக்கள் (திராவிட) நடத்திவரும் போராட்டமேயாகும். (விடுதலை: 18.7.1964)
இப்படி நூற்றுக்கணக்கான மேற்கோள்களைக் காட்டலாம். அவரைப் பொறுத்தவரை தமிழ் இனம் என்பதும், திராவிட இனம் என்பதும் ஒரே பொருளைக் கொண்டதுதான்.
பிறப்பால் நாயக்கர் என்பதால் தமிழ் இலக்கியங்களை விமர்சித்தார், தமிழ் மன்னர்களை விமர்சித்தார், தமிழை விமர்சித்தார் என்பது இவர்களது குற்றச்சாட்டு.
அதற்காக தெலுங்கை, கன்னடத்தை ஆதரித்துவிட்டாரா? தெலுங்கு நாயக்க மன்னர்களை போற்றிப் புகழ்ந்தாரா? பெரியாருக்கு மனிதப் பற்று நீங்கலாக எந்தப் பற்றும் இல்லை.
“எவனொருவன் மனித சமுதாய முன்னேற்றத்திற்காகத் தொண்டாற்ற வருகிறானோ அவனுக்கு நாட்டுப்பற்று, மொழிப்பற்று, கடவுள் பற்று, மதப் பற்று, சாஸ்திரப் பற்று, பழைமைப் பற்று, முன்னோர் பற்று, சாதிப் பற்று எதுவுமே இருக்கக் கூடாது. இதில் எந்தப் பற்று இருந்தாலும் அவனால் உண்மையான மனித வளர்ச்சித் தொண்டு செய்ய முடியாது.’’
(விடுதலை: 21.9.1968)
-_ என்றவர் பெரியார். இப்படிச் சொன்னவர் மட்டுமல்ல. இப்படியே நடந்தவர். அவரை ‘நாயக்கர்’ என்று கண்டுபிடித்துக் கொச்சைப்படுத்தும் மனிதர்களுக்கு ‘நாயக்க மன்னர்கள்’ குறித்து பெரியார் பேசியது, எழுதியது தெரியுமா? எதுவுமே தெரியாது என்பதைப் போலவே இதுவும் தெரியாது!
தமிழ் மன்னர்களை, சேர சோழ பாண்டியர்களை பெரியார் விமர்சித்தார். உண்மைதான். தமிழகத்தை ஆண்ட தமிழ் மன்னர்களோடு நாயக்க மன்னர்களையும்தான் பெரியார் விமர்சித்துள்ளார். மராட்டிய, முஸ்லிம் மன்னர்களையும் கண்டித்துள்ளார். சேர சோழ பாண்டியர்களாக இருந்தாலும், நாயக்கர் மராட்டியர்களாக இருந்தாலும் அனைவருமே தமிழர்களாக, சூத்திரர்களுக்காக ஆட்சி நடத்தவில்லை. பார்ப்பனர் நன்மைக்காகவே ஆட்சி நடத்தினார்கள் என்று குற்றம் சாட்டினார். தமிழ் வளர்ச்சிக்காக எதுவும் செய்யாமல் சமஸ்கிருத வளர்ச்சிக்காக ஆட்சி நடத்தினார்கள் என்று விமர்சித்தார். தமிழர்களுக்கு கல்வி கற்பிக்க கல்விச் சாலைகள் அமைக்காமல் பார்ப்பனர் கல்வி பெற கல்விச் சாலைகள் அமைத்ததாகக் குற்றம் சாட்டினார். இன்றைக்கு நாம் அடிமைப்பட்டு இருக்கும் நிலைக்குக் காரணமே இந்த மன்னர்கள்தான் என்றார்.
“நமக்கு ஜாதி இல்லை. இருந்ததுமில்லை. இந்த நாட்டு மன்னர்கள் என்பவர்கள் சேரன், சோழன், பாண்டியன், நாயக்கனெல்லாம் பார்ப்பானுக்குக் கையாளாக இருந்ததுதான் இந்த நிலை வந்தது.’’ (விடுதலை: 27.12.1956)
நம்மை ஆண்ட மன்னர்கள் அனைவரும் பார்ப்பான் சுகவாழ்வு வாழ ஆண்டவர்கள் என்பதால்தான், ‘மனுமுறை தவறாது ஆட்சி நடத்தியவர்கள்’ என்று பாராட்டப்பட்டதாக பெரியார் சொன்னார். சூத்திரரின் பிறவி இழிவைப் போக்க எவனுமே ஆட்சி நடத்தவில்லை என்றார். படிப்பு வசதியை செய்து தரவில்லை என்றார்.
“எந்த அரசனை எடுத்தாலும் மனுநீதி தவறாத குணசீலன் என்றுதான் புகழ்வான். அவன் பார்ப்பான் பேச்சுப்படி ஆண்டு வந்தவன். ஏதோ வாய்க்கால் வெட்டுவான். குளம் வெட்டுவான். அது வேறு; கோயில் கட்டியிருப்பானே தவிர பள்ளிக்கூடம் ஏற்படுத்தினான் என்று சொல்வதற்கில்லை. பார்ப்பானுக்குத்தான் கோயில் கட்டினான். சோறு போட்டான். பார்ப்பானுக்குத்தான் படிப்பு சொல்லிக் கொடுத்தான்.
(விடுதலை: 2.8.1961)
நம் நாட்டில் ஆண்ட மூவேந்தர்கள், நாயக்கர், மராட்டியர் எல்லாம் அசல் மனு தருமப்படி ஆண்டார்களே ஒழிய மனித தருமப்படி ஆளவே இல்லை.
(விடுதலை: 18.12.1961)
திருமலை நாயக்கர் பத்தாயிரம் பேர்கள் படிக்கும்படியான பள்ளிக்கூடம் கட்டினார். படிக்கின்றவர்களுக்கு ஓசிச் சாப்பாடும் போட்டார் என்று சரித்திரம் கூறுகிறது. இப்படி ஏற்படுத்திய பள்ளிக்கூடம் என்ன பள்ளிக்கூடம் என்றால் சமஸ்கிருதப் பள்ளிக்கூடம் ஆகும். படித்தவர்கள் எல்லாம் பார்ப்பனர்கள் ஆவர். நம்மவர்களைப் பற்றிக் கவலைப்படவே இல்லை. (விடுதலை: 26.4.1963)
வரலாற்று காலத்தில் மன்னர்களை மிரட்டி பார்ப்பனர்கள் காரியம் சாதித்துக் கொண்டதை பெரியார் பட்டியலிட்டார். சோழ மன்னர்களும், மராட்டிய நாயக்கர் மன்னர்களும் மக்கள் அறிவு பெற பள்ளிக்கூடம் கட்டினார்களா? என்று கேள்வி எழுப்பினார். இந்த மன்னராட்சிகள் அனைத்தும் பார்ப்பான் உயர்சாதி, மற்றவர்கள் இழிமகன் என்ற தத்துவத்தின்படிதான் ஆளப்பட்டு இருக்கின்றன என்றவர், இதில் எந்த மன்னருக்கும் வித்தியாசம் இல்லை என்றார். இந்த மன்னர்கள் குறித்து பெரியார் பயன்படுத்திய சொற்களை இன்று பயன்படுத்த முடியாது. அந்தளவுக்கு கடுமையாக விமர்சித்தார். பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்புவரை இந்த நிலைமைதான் என்ற பெரியார், ‘காமராசர் ஆட்சி வரை அரசியல் என்றால் இப்படித்தான் இருந்துள்ளது’ என்றார்.
‘தமிழைப் பழித்த தெலுங்கர்’ என்கிறார்களே… அந்த தெலுங்கர்தான், நாயக்க மன்னர்கள் ஆட்சியையும் திட்டித் தீர்த்தார் என்றால் என்ன காரணம்? அவருக்கு மனிதப் பற்று மட்டுமே இருந்துள்ளது. அவ்வளவுதான்.
கடவுள் பற்று மட்டுமே கொண்டவர்கள், மதப் பற்று மட்டுமே கொண்டவர்கள், சாஸ்திரப் பற்று மட்டுமே கொண்டவர்கள், சாதிப் பற்று மட்டுமே கொண்டவர்கள், பெரியாரை விமர்சிக்கவே செய்வார்கள். கடவுள் வேஷத்தை, மத வேஷத்தை, சாதி வேஷத்தை மறைப்பதற்காக பெரியார் மீது சாதிச் சாணியை ஊற்றுவார்கள். ஊற்றுகிறார்கள். அவர் வாழ்ந்த காலத்தில் சதை மீது ஊற்றிய சாதிச் சாணியே அவர் உடல்மீது ஒட்டவில்லை. அவர் சிலை மீது ஊற்றும் சாதிச் சாணியா ஒட்டும்?
பெரியார், தமிழ் இலக்கியங்களை விமர்சித்தார். ஆமாம், மூடநம்பிக்கைகளை விதைக்கும் இலக்கியங்களை மட்டும் விமர்சித்தார். பெரியார், தமிழ்ப் புலவர்களை திட்டினார். ஆமாம், வெறும் மொழிச் சுவையை மட்டுமே பேசிக் கொண்டிருந்த புலவர்களை மட்டும் விமர்சித்தார். ஆனால் ‘தமிழை’ அல்ல!
“உண்மையைச் சொல்ல வேண்டுமானால், ஆரியம் சமயத் துறையில் ஆதிக்கம் பெற்றதாலும், ஆங்கிலம் அரசியல் முதலிய பல துறைகளில் ஆதிக்கம் பெற்றதாலுமே தமிழர்களுக்குள் இன உணர்ச்சி பலப்படவில்லை; குறைந்துவிட்டது’’
(விடுதலை: 25.7.1972)
என்று பெரியார் கூறியது போதாதா தமிழ் உணர்ச்சிக்கு? தமிழ், தமிழ்நாட்டு மொழி என்றவர் அவர். அதுவே இந்நாட்டுக் கலாச்சாரத்துக்கு ஏற்ற மொழி என்றவர் அவர். வடமொழிக் கலப்பால்தான் தமிழ் சிதைந்தது என்றும் சொன்ன தனித்தமிழ்ப் பற்றாளர். ‘எம்மொழித் தொடர்பு இருந்தாலும் பரவாயில்லை, வடமொழித் தொடர்பு கூடவே கூடாது’ என்றவர் அவர். தமிழில் இருந்து மதத்தை பிரித்துவிட வேண்டும் என்று விரும்பினார். மதம் பிரிக்கப்பட்ட தமிழே அவருக்கு விருப்பமானது.
“தமிழ், தமிழ்நாடு என்கின்ற பெயர்கூட இந்நாட்டுக்கு _ சமுதாயத்திற்கு இருக்க இடமில்லாதபடி எதிரிகள் சூழ்ச்சி செய்து வெற்றி பெற்றுவிட்டார்கள் என்கின்ற நிலைமை ஏற்பட்டு விடுமானால், என்னுடைய கழகத்தினுடைய, என்னைப் பின்பற்றும் நண்பர்களுடைய வாழ்வு வேறு எதற்காக இருக்க வேண்டும்?’’ (விடுதலை: 11.10.1955)
என்று கேட்ட தமிழ்ப் பெரியார் அவர். மொழிப் பற்று வேண்டாம் என்ற பெரியாருக்குள் தமிழ் எப்படி வெளிப்பட்டு வெடிக்கிறது? இவரையா ‘நாயக்கர்’ என்று நிராகரிக்கிறீர்கள்? சாதிக் கண்ணுக்கு ‘நாயக்கர்’ தெரிவதால் ‘நாயகன்’ தெரிய மாட்டான்!