ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களில் ஏழு பேர் பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோரின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு விட்டது.
சுமார் 27 ஆண்டுகள் சிறைகளில் அவர்கள் அத்தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.
சில நாள்களுக்குமுன் உச்சநீதிமன்றம் ஜஸ்டீஸ்
திரு.ரஞ்சன்கோகாய் தலைமையிலான அமர்வின்மூலம், அந்த ஏழு பேரையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய பரிசீலிக்கும் உரிமை மாநில அரசுக்கு உண்டு என்று கூறியது.
இதன்மூலம் பந்து, தமிழ்நாடு (அ.தி.மு.க.) அரசிடம் உள்ளது என்பது தெளிவானது.
ஆளுநரின் அதிகாரம் என்ன?
இந்த ஏழு பேர் விடுதலை பற்றிய பிரச்சினையில் தமிழ்நாடு அரசின் அமைச்சரவையே கூடி சட்டப்படி அட்வகேட் ஜெனரல் போன்ற சட்டத் தரணிகளோடு அறிவுரை நாடி, முடிவு எடுத்து, பிறகு ஆளுநருக்கு அனுப்பியுள்ளார்கள்.
அரசின் கொள்கை முடிவு
இப்படிப்பட்ட அமைச்சரவையின் முடிவு என்பது ஒரு திட்ட கொள்கை முடிவு (Policy Decision) என்றே கருதிடவேண்டும்; காரணம் இது ஜெயலலிதா அவர்கள் தலைமையில் அமைச்சரவை எடுத்த முடிவினை மேலும் உறுதிப்படுத்தும் இரண்டாவது தடவை முடிவாகும்.
இதனை அடுத்து தமிழக அ.தி.மு.க. அரசும், இதனை வரவேற்று கேட்டுக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்கூறும் நல்லுலகத்தின் நன்றிக்கும், பாராட்டுக்கும் உரியவர்கள்.
போற்றத்தக்க ராஜீவ் காந்தி குடும்பத்தினர்….
இதில் காங்கிரசு கட்சியின் நிலைப்பாடு அதனால் நேரிடையாக பாதிப்புக்குள்ளானவர்களான திருமதி.சோனியா காந்தி, மகன் ராகுல்காந்தி, மகள் பிரியங்கா ஆகியவர்களே அவர்களுக்குக் கருணை காட்டுவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர். இது அவர்களது பெருந்தன்மை, மன்னிக்கும் மனப்பான்மையின் வெளிப்பாட்டுக்கு, பண்பாட்டிற்கும் எடுத்துக்காட்டு ஆகும்!
ஆனால், இதையே நீர்த்துப் போகச் செய்யும் வகையில், அவரது காங்கிரசு கட்சியின் பேச்சாளர்கள் பேசுவது, அறிக்கை விடுவது காங்கிரசு கட்சிக்குப் பெருமை சேர்க்காது.
‘ராஜாவை மிஞ்சும் ராஜவிசுவாசம்‘ எப்போதும், எங்கும் விரும்பத்தக்கதல்ல.
மேலும் அத்தலைவர்களுக்கு பொதுவாக மக்கள் மத்தியில் சேரவேண்டிய பெருமையைக் குறைக்கவே செய்யும்.
அடுத்து சட்டப் பிரச்சினைக்கு வருவோம். தமிழக ஆளுநர் இதில் தமிழக அரசின் அமைச்சரவை முடிவை ஏற்பதுதான் சட்டப்படி அவர் தனது கடமையை கண்ணியத்துடன் செய்தார் என்பதற்கான அடையாளம் ஆகும்!
மத்திய அரசு இதனை எதிர்த்து வாதாடிய பிறகும்கூட, உச்சநீதிமன்றம் மாநில அரசுக்கு பரிசீலித்து முடிவு எடுக்க உரிமை உண்டு என்று தெளிவாகத் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுவிட்டது என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல முடியுமா?
மேலும், 2013ஆம் ஆண்டுவரை வந்த உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் பலவும் அப்படி ஒரு முடிவு கருணை அடிப்படையில் எடுக்கப்பட்டு கைதிகள் விடுதலை செய்யப்பட்டால், அதனை எதிர்த்து மீண்டும் நீதிமன்றத்தில் எவரும் வழக்குத் தொடுக்கக்கூடும் என்பதற்குக்கூட முன்வந்த உச்சநீதிமன்ற தீர்ப்புகளில் பரந்து விரிந்த அதிகார உரிமை இல்லை. (ளிஸீறீஹ் றீவீனீவீtமீபீ sநீஷீஜீமீ) ஓரளவுக்கு உண்டு. ஆளுநர்கள் தன்னிச்சையாக, சரியானபடி ஆய்வு செய்யாமல், கருணை காட்டி விடுதலை செய்யும் நிலை ஏற்பட்டால் மட்டுமே நீதிமன்றங்களை நாட முடியும் என்பது மட்டுமே உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின்மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள சட்ட நிலைப்பாடு ஆகும். எனவே, இந்த ஏழு பேர் பிரச்சினையில் அதற்கு வாய்ப்பில்லை; காரணம், அமைச்சரவை இரண்டு முறை விவாதித்த முடிவு _ பரிந்துரையாகும்.
அடுத்து இதில் கருணை காட்டுவது ஒரு அம்சம் என்றாலும், இதன் மற்றொரு முக்கிய அம்சம் –
1. இவ்வழக்கு தடா சட்டத்தின்கீழ் நடைபெற்ற வழக்கு _ சரியானபடி விசாரணை தீர்ப்புகள் அமையவில்லை என்று தீர்ப்பு வழங்கிய ஓய்வு பெற்று தற்போது வாழும் ஜஸ்டீஸ் கே.டி.தாமஸ் அவர்களே கூறியுள்ளார்.
2. பேரறிவாளனிடம் கருத்துகளைப் பதிவு செய்த காவல்துறை கண்காணிப்பாளர் தியாகராஜன் (எஸ்.பி.,) என்பவர், அவர் சொல்லாததையெல்லாம் எழுதிக் கொண்டு ஒப்புதல் வாக்குமூலமாகப் பதிவு செய்தேன் என்று கூறியது நீதிப் போக்குபற்றிய அய்யத்தை விரிவாக தெரிவிக்கிறது.
27 ஆண்டுகள் சிறைவாசம் – தேவைப்படுவது கருணை!
கைதிகளுக்கு வழங்கப்படும் தண்டனை _ பழிவாங்கும் தத்துவ அடிப்படையில் அமையாது, சீர்த்திருத்தி நல்வாழ்வு வாழவேண்டியவர்களாக அவர்களை ஆக்கிடுவதே என்ற நவீன தண்டனைத் தத்துவ அடிப்படையிலும்கூட வரவேற்கப்படவேண்டியதே தவிர, விடுதலையை எதிர்ப்பதில் எந்த நியாயமும் இருக்க முடியாது.
காங்கிரசு தோழர்களின் கவனத்துக்கு…
இறுதியாக மனவேதனை அடையும், வருந்தும் காங்கிரசு மற்றும் விடுதலை செய்யக்கூடாது என்று கூறுபவர்கள் உணரவேண்டிய உண்மை _ இவர்களது குற்றம் விடுபட்டது என்பது இதன்மூலம் பொருள் ஆகிவிடாது; கருணை அடிப்படையில்தான் விடுதலை என்பதினால், அந்தத் தீர்ப்பு மாறிவிடவில்லை என்பதும் உறுதியாகிறது.
மேலும், மனிதாபிமானத்தால் இதன்மூலம் அனைவரும் உயர்வார்களே!
– கி.வீரமணி,
ஆசிரியர், ‘உண்மை’