திருமாவின் தி(த)ருப்பணி!

செப்டம்பர் 1-15

5000 பேருக்குத் தமிழ்ப் பெயர்ச் சூட்டி தமிழர் வரலாற்றில் தனி முத்திரைப் பதித்தவர் திருமாவளவன். அந்தப் பணியை தமிழர்கள் தொடர வேண்டும். சமஸ்கிருதப் பெயர் வைப்பதில் இன்றைக்குத் தமிழர்கள் பெருமை கொள்ளும் இழிநிலை வளர்ந்து வருகிறது. இன்றைய தலைமுறை வேற்று மொழியில் உச்சரிப்பதை உயர்வாக எண்ணும் உளப்பாங்கின் வெளிப்பாடே இந்தக் கேடு. எனவே, மீண்டும் தமிழ்ப் பெயர்ச் சூட்டுவதை ஓர் இயக்கமாகச் செய்ய வேண்டும்.

அதே திருமா தற்போது மிக மிக வரலாற்று முதன்மையுடைய ஓர் அற்புதப் பணியைத் தொடங்கியுள்ளார்.

பனை ஏழைகளின் கருவூலம். வறட்சியிலும் வளர்ந்து பல்லாண்டுகள் பலன் தரக்கூடிய கருப்புத் தரு. (தரு என்றால் மரம்).

செங்கல் சூளையில் பனையின் வரலாறு முடிந்து போகுமோ என்று கவலை கொண்டிருந்த நிலையில் திருமா கையில் எடுத்துள்ள இப்பணி மிக மிக பாராட்டப்பட வேண்டிய, பலரும் பின்பற்ற வேண்டிய ஒரு பணி!

30 கோடி பனை மரங்கள் இருந்த தமிழ்நாட்டில் தற்போது 3 கோடி பனை மரங்களே உள்ளன என்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்நிலையில் 10 லட்சம் மரக்கன்றுகளை நடும் பணியை அவர் தொடங்கியிருப்பது மகிழ்வளிக்கிறது. அரியலூரில் தனி ஒரு ஆளாய் ஒரு லட்சம் பனங்கன்றுகளை நட்டவர் பிரேம் ஆனந்த். பனை வளர்ப்பிற்கு “பனை நாடு’’ அமைப்பு கண்டவர் ஜெகத் கஸ்பார். இவர்களும் திருமாவுடன் இணைந்து செயல்படுவது இத்திட்டம் மாபெரும் மக்கள் இயக்கமாக மாறும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.

திருமா தொடங்கியுள்ளார். எல்லோரும் இணைந்து கோடிக்கணக்கான பனங்கன்றுகளை நட வேண்டும். பனையின் ஓலைதான் அக்காலத்தில் நமக்கு தொல்காப்பியம், திருக்குறள் உள்ளிட்ட அனைத்து அரிய நூல்களையும் காத்து அச்சு உலகத்திற்கு அளித்தது.

பனங்கிழங்கு சத்து மிகுந்த உணவு. பனம் பழம் உடல் நலத்திற்கு ஏற்ற அற்புத பழச்சாற்றை அளிக்கக் கூடியது.

பனஞ்சாறு (பதனி) பனஞ்சாற்றினைக் காய்ச்சிப் பெறப்படும் பனைவெல்லம், கற்கண்டு (கருப்பட்டி) எல்லாம் உடல் நலத்திற்கு உதவும் ஒப்பிலா உயர் உணவுகள். பனம் நுங்கு கோடையில் குளுமை தந்து, உடல் நலத்தையும் காக்கக் கூடியது. பனையின் வேர் மண்ணரிப்பைத் தடுக்கும். 500 அடி நீளத்திற்கு தன் வேரை நீட்டும் ஆற்றல் உடையது பனை. ஒரு பனை மரம் ஆண்டுக்கு பல ஆயிரம் ரூபாய் வருவாய் தரும்.

இத்தகு பயனுள்ள பனை அழிவின் விளிம்பில் இருந்த நிலையில் திருமா பனை பயிரிடும் பணியைத் தொடங்கியுள்ளது பாராட்டப்பட வேண்டியது மட்டுமல்ல ஒவ்வொருவரும் கையில் எடுக்க வேண்டிய பணி.

 எல்லோரும் இத்தி(த)ருப்பணியை எந்நாளும் செய்வோம்!  

 

– நுண்ணோக்கி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *