முத்திரைப் பதித்த மூன்று நிகழ்வுகள்!

செப்டம்பர் 1-15

நாடித்துடிப்பை விளக்கி நம்பிக்கை தந்த மருத்துவர் உரை!

“உங்கள் நாடித் துடிப்பை அறிவீர், இதயத் துடிப்பில் மாறுபாடுகள்” எனும் தலைப்பில், தமிழக மூதறிஞர் குழு, பெரியார் நூலக வாசகர் வட்டம், பெரியார் மருத்துவக் குழுமம்  இணைந்து ஏற்பாடு செய்த மருத்துவ உரை 15.8.2018 அன்று மாலை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் மாலை 6 மணி முதல் 8 மணி வரை நடந்தது.

இந்நிகழ்ச்சியில் தமிழக மூதறிஞர் குழு பொருளாளர் ஆடிட்டர் இராமச்சந்திரன்,  பேராசிரியர் மருத்துவர் எம்.எஸ்.இராமச்சந்திரன், சிறுநீரகவியல் மருத்துவ வல்லுநர் மருத்துவர் அ.இராஜசேகரன், தமிழக மூதறிஞர் குழுத் தலைவர் டாக்டர் நீதிபதி ஏ.கே.ராஜன் ஆகியோர் கலந்துகொள்ள சென்னை அப்பல்லோ மருத்துவமனை இதயநோய் சிகிச்சை வல்லுநர் மருத்துவர் ஏ.எம்.கார்த்திகேசன் சிறப்புரை ஆற்றினார்.

இதயநோய் சிகிச்சை வல்லுநர் மருத்துவர் ஏ.எம்.கார்த்திகேசன்

“இந்தியா வெகு விரைவில் உலகின் சர்க்கரை நோயின் தலைமை இடமாகி விடக்கூடிய அபாயம் இருக்கிறது. இதயத் துடிப்பிற்கும், நாடித் துடிப்பிற்கும் சர்க்கரை நோய் _ இரத்த அழுத்தம் மூலகாரணமாக இருக்கிறது.

கருவில் வளரும் குழந்தையின் இதயம்கூட சரியாக இயங்கவில்லையெனில் Ultrasonic Scan மூலம் பார்த்து கருவிகள் மூலம் சரிசெய்து விடலாம்.

பேஸ் மேக்கர் (Pace maker)  என்ற கருவி மூலம் இதயத் துடிப்பை ஒழுங்குபடுத்திவிட முடியும். இதயத் துடிப்புகளில் வேறுபாடு வரும்போது இக்கருவி அதை ஒழுங்குபடுத்துகிறது. இதையும் தாண்டி மேலும் சக்திவாய்ந்த இன்னொரு கருவி சிஸிஜியை இதயத்துக்குள் பொருத்தி நோயாளிக்கும் டாக்டருக்கும் செய்திகளை அறிவிக்கும் நிலையும்கூட இன்று வளர்ந்துள்ளது. இதன்மூலம் இதய வலி, மாரடைப்பு வந்தவர்கள், தக்க சிகிச்சை எடுத்துக்கொண்டு நலமுடன் வாழ நிறைய வாய்ப்பு உண்டு’’ என்று படத்துடன் விளக்கினார். பார்வையாளர்களின் கேள்விகளுக்கும் புரியும்படி விடையளித்தார்.

ஆசிரியர் கி.வீரமணி

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பாராட்டுரை வழங்கினார்.

“மருத்துவ நெருக்கடி உடலுக்கு ஏற்படும்போது மட்டும் மருத்துவர்களை அணுகாமல் வரும் முன்னர் காக்கும் வகையில் அனைத்து வயதினரும் ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

குருதிக்கொடை, உடற்கொடைகளின் மூலமாக ஜாதி, மதம் என்பவை செயற்கையானது, அறிவியல்பூர்வமானது அல்ல என்று நிரூபிக்கப்படுகிறது’’ என்ற ஆசிரியரின் கருத்து அனைவரையும் சிந்திக்க வைத்தது! நிகழ்ச்சி முடிவில் மேனாள் மாவட்ட நீதிபதி பரஞ்சோதி அவர்கள் நன்றி கூறினார்.

நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி கோரி ஆர்ப்பாட்டம்!

நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி கோரி சென்னை மண்டல திராவிடர் கழகத்தின் சார்பில் 16.8.2018 அன்று காலை 11 மணியளவில் சென்னை துறைமுகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.

சென்னை மண்டல முக்கிய நிர்வாகிகள் பலர் முன்னிலை வகிக்க, வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் வரவேற்புரையாற்றினார். வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன் தொடக்கவுரையாற்ற, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் ச.இன்பக்கனி, அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்ட விளக்கவுரையாற்றினார்கள்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்து விளக்க உரையாற்றினார்.

சமூகநீதி என்பதும், இடஒதுக்கீடு என்பதும் வெறும் கல்வி, உத்தியோகத் துறையிலே மட்டும் இருக்கக் கூடாது. உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் நீதிபதிகள் நியமனத்திலும் இருக்க வேண்டும்.

உச்சநீதிமன்றத்திலே 31 நீதிபதிகளில் ஒருவர்கூட தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் கிடையாது. அதேபோல, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உரிய இடம் 27 சதவீதம் என்பதும் இல்லை. எனவே, மத்திய அரசிற்கு இந்த ஆர்ப்பாட்டம் மூலம் விடுக்கும் முக்கிய கோரிக்கை என்னவெனில்,

உச்சநீதிமன்றத்தில் 31 இடங்களில் 25 இடங்களில்தான் இப்போது நீதிபதிகள் நிரப்பி இருக்கிறார்கள். எனவே, காலியான இடங்களிலே பெண்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், மற்றும் தாழ்த்தப்பட்டவர்களை நியமிக்க வேண்டும்.

 உயர்நீதிமன்றங்களிலும் இது தெளிவாக இருக்க வேண்டும்.

தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு வேண்டும்.

இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தின் நிறைவாய் தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் நன்றி கூறினார். சென்னையில் மட்டுமல்லாது இதே கருத்துகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் எழுச்சியுடன் நடைபெற்றது.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை! அடுத்த நிலை என்ன?

சென்னை வேப்பேரி பெரியார் திடல் எம்.ஆர்.இராதா மன்றத்தில் “அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை முதல் வெற்றி! _ அடுத்த நிலை என்ன?’’ என்னும் தலைப்பில் 21.8.2018 அன்று மாலை 7.30 மணியளவில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

கவிஞர் கலி.பூங்குன்றன்

கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் வரவேற்புரையில், “அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை பொருத்த அளவில் ஜாதி ஒழிப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக தந்தை பெரியார் தன் இறுதி போராட்டமாக அறிவித்தார். பொதுவெளியில் ஒரு காலத்திலே  பொது வீதிகளிலும், உணவு விடுதிகளிலும் தீண்டாமை இருந்தது. அவற்றையெல்லாம் போராடி நாம் ஒழித்திருக்கிறோம். ஆனால், இன்றைக்கும் ஜாதி அதிகாரப்பூர்வமாக இருக்கக்கூடிய ஒரு புகலிடம் கோயிலினுடைய கருவறை இருக்கிறது. இதை அடித்து விரட்டிட வேண்டும் என்பதற்காகத்தான் இப்போராட்டத்தை தந்தை பெரியார் அறிவித்தார்கள்.’’ என்று பல அரிய செய்திகளை நினைவுப்படுத்தி பேசினார்கள்.

மு.பெ.சத்தியவேல் முருகனார்

சிறப்பு அழைப்பாளர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் பேசுகையில், ”ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே சமூகநீதி செங்கோலிலே ஏற்பட்ட ஒரு வளைவு இன்றைய தினம் நீங்கியிருக்கிறது என்பது மிகப் பெரிய வெற்றி! தந்தை பெரியாரின் கடைசி ஆசையான இந்த வெற்றிக்காக ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தீவிரமாய் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த வெற்றியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் சில பத்திரிகையில் தரம் தாழ்ந்து எழுதுகிறார்கள் என்பதை நினைக்கையில் மனம் வேதனைப்படுகிறது. நான் வாரியார் அவர்களின் பேரன். வாரியார் சுவாமிகள் சொல்வார்கள் “இந்த தமிழ் நாட்டிற்கு ஒரு பெரியார் போதாது’’ என்று. சிலர் என்னை விபூதி வைத்த தி.க.காரன் என்று சொல்வதும் உண்டு.  பெரியார் நெஞ்சில் இருந்த முள்ளை 1970இல் கலைஞர் அவர்கள் பாதி எடுத்தார்கள். பரம்பரையாக அர்ச்சகர் பணி செய்வதை கலைஞர் தூக்கி எறிந்தார். 2015இல் பெரியாரின் கடைசி விருப்பத்திற்கு முழு வெற்றியும் கிடைத்துள்ளது. இந்த வெற்றி மகிழ்ச்சிதான் ஆயினும் அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும், ஆகமம் ஆகமம் என்று சொல்லுகிறார்களே, மாதத்தில்  17 நாள்கள் பல் துலக்கக் கூடாது என்பதும் ஆகமவிதிதான்!’’ என்று சொல்லி அரங்கத்தையே அதிர சிரிக்க வைத்தார்.

தோழர் இரா.முத்தரசன்

தோழர் இரா.முத்தரசன் அவர்கள் பேசுகையில், “ஆசிரியருக்கு உறுதுணையாக இருந்த ஒரே ஒருவர் கலைஞர்தான். அவரும் போய்விட்டார் என்று ஆடிட்டர் குருமூர்த்தி சொல்லியிருக்கிறார் என்று கவிஞர் அவர்கள் தனது தொடக்கவுரையில் குறிப்பிட்டார். ஆசிரியரோடு ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். என்றென்றைக்கும் இருப்பார்கள். நாங்களும் இருப்போம். ஆசிரியர் போராட்டம் அரசியலில் இடம் பிடிப்பதற்காக அல்ல. மக்களுக்காகவும், சமூக நீதிக்காகவும் ஆகும். அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதை பற்றி பலரும் பேசிக் கொண்டிருந்தாலும், எழுதிக் கொண்டிருந்தாலும் அதுகுறித்து தொடர்ச்சியான போராட்ட நடவடிக்கை எடுத்தும், இந்த வெற்றியை கொண்டாடியும்,  அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியை எழுப்பி ஒரு விடையைத் தேடியும் செயல்படும் இடமாகப் பெரியார் திடல் தொடர்ந்து இருந்துகொண்டு இருக்கிறது.  அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை பெற ஆசிரியர் என்ன முடிவு எடுத்தாலும் நானும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் என்றும் உறுதுணையாக தோளோடு தோள் கொடுப்போம்’’ என்றார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

 

நிறைவாக ஆசிரியர் அவர்கள் தமது சிறப்புரையில், ஏறத்தாழ 50 வருட போராட்டம் இன்று வெற்றி பெற்றிருப்பது என்பது மிக மகிழ்ச்சியானது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு தெளிவாக வந்த நேரத்திலே கூட (16.12.2015) பத்திரிகையாளர்களும் பார்ப்பனர்களும் திட்டமிட்டு குழப்பினார்கள். ஏன்  நீதிபதிகளாக இருந்தவர்களேகூட அவர்களுக்கு துணை நின்றார்கள்.

கலைஞர் அவர்கள் இன்றைக்கு உருவமாக இல்லை. உணர்வாக நம்மோடு கலந்திருக்கிறார்.அவருக்கு நம்முடைய வீரவணக்கத்தை செலுத்தி இந்த வெற்றி விழாவை கொண்டாட நாம் கடமைபட்டுள்ளோம்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதற்கு சட்டரீதியாக உரிமை உள்ளது. இதற்கு யாரும் சலுகை காட்ட தேவையில்லை. பரம்பரை அர்ச்சகர் என்று இல்லை. அர்ச்சகர்கள் பள்ளித் தொடங்கி வைணவ ஆகமம், சைவ ஆகமம் என பிரச்சனை இல்லாமல் பிரித்து வைத்துவிட்டார் கலைஞர் அவர்கள். அரசு வேலைகளில் 69 சதவிகித இடஒதுக்கிடு சட்டப்படி உண்டு, அர்ச்சகர் உள்பட. ஆகவே, அடுத்தக் கட்டம் சட்டத்தை அமல்படுத்துங்கள்! அரசாங்க ஆணைகளை அமல்படுத்துங்கள்! அரசாங்க சட்டத்தை செயல்படுத்துங்கள்! என போராடுவதே நமது அடுத்த வேலை.

இப்போது சிலர் அறநிலைய துறையை ஒழிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். வடநாட்டில் கோயில்களை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்தான் கொள்ளையடித்துக் கொண்டு இருக்கின்றனர். ஆகவே, நமது போராட்டம் ஒரு நீண்ட கால போராட்டம்.அடுத்து உடனடியாக செய்ய வேண்டிய வேலை 205 பேர் ஆகம பயிற்சி முடித்தவர்களுக்கு உடனடியாக வேலை கொடுக்க வேண்டும். அதற்கு அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும். அரசு தவறினால் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும். பயிற்சி முடித்த சிலர் இறந்து இருக்கிறார்கள். இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு இழப்பீடு கொடுக்க வேண்டும். அர்ச்சகர் பயிற்சி பள்ளி உடனே திறக்கப்பட வேண்டும். அய்யா மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்களை போன்றோர்களின் வழிகாட்டுதலோடு அவை நடைபெற வேண்டும். அர்ச்சகர் பணியில் ஆண் பெண் பேதம் இருக்கக் கூடாது.’’ என்று உரிமைக் குரல் எழுப்பினார்.

இந்த சிறப்புக் கூட்டத்தில் இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன் பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளைச் சார்ந்தோர், பொதுமக்கள் என அரங்கம் நிறைய அமர்ந்தும், நின்றும் கேட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *