அறுபத்தொன்பது

செப்டம்பர் 1-15


நண்பர் ஒருவரின் அறுபதாம் கல்யாணத்திற்குச் சென்று வந்த பிறகு நாள்தோறும் தனது கணவர் குணசேகரனை நச்சரிக்கத் தொடங்கினார் வள்ளியம்மை.

“ஏங்க, நமக்கும் அடுத்த ஆண்டு வயசு அறுதாண்டு முடியப் போகுது. நம்ம இருவருக்குமே ஒரே வயசுதான். உங்க நண்பர் போலவே நாமும் அறுபதாம் கல்யாணம் செஞ்சுகிட்டா என்ன?’’, இப்படி குணசேகரனைக் கேட்கத் தொடங்கிவிட்டார் வள்ளியம்மை.

ஆனால், குணசேகரன் அதற்கு இணங்கவே இல்லை. இதனால் தனது வயதான அம்மாவிடமும், மகள், மருமகன் மற்றும் உறவினர்களிடமும் முறையிட்டு குணசேகரனை இணங்க வைக்க முயற்சி செய்தார்.

“தம்பி, எனக்கு எண்பது வயசாயிடுச்சி. என் மகள் ஆசைப்படறா. அறுபதாம் கல்யாணம் நடத்திக்கப்பா. அதை நான் கண்ணாலப் பார்த்துட்டா நிம்மதியா சாவேன்’’, என்றார் குணசேகரின் மாமியார் தங்காயாள்.

“மாமா, நாங்கயெல்லாம் எவ்வளவு ஆசையா இருக்கோம் தெரியுமா? உங்க கல்யாணத்தை நாங்க பார்க்கல. அதற்கு வாய்ப்பும் இல்லை. ஆனா, இப்ப அதுக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு. அவசியம் நீங்க ஒத்துக்கணும்’’, என்று மருமகன் இராசுவும் கேட்டுக்கொண்டான்.

அவரது மகள் கவிதாவும் தந்தையை மிகவும் வற்புறுத்தினாள்.

“அப்பா! அம்மாவுக்காக நீங்க அறுபதாம் கல்யாணத்துக்கு ஒத்துக்கணும்’’, என்றாள்.
குணசேகரின் மைத்துனி இராணியும் அவரை விடவில்லை.

“அத்தான், அக்கா எவ்வளவு ஆசைப்படறாங்க. எல்லா செலவையும் நாங்க பாத்துக்கிறோம். நீங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டா போதும்’’, என்றாள்.

ஆனால் குணசேகர் யாருக்கும் பிடி கொடுக்கவில்லை. ஒருநாள் எல்லோருமே ஒரு சேர வீட்டிற்கு வந்து குணசேகரை வற்புறுத்தினார்கள். தனித்தனியாக கேட்பதைவிட ஒன்றாக வந்து கேட்டால்தான் இணங்குவார் என்று ஒத்து பேசிக் கொண்டு அனைவரும் ஒருசேர வந்தனர்.
அவர்களைப் பார்த்து குணசேகர்,

“அறுபதாம் கல்யாணம் என்றால் என்ன?’’, என்று கேட்டார்.

“அறுபது ஆண்டு என்று காலத்தின் ஒரு சுழற்சி. அந்த வயதில் மனிதன் மறுபிறவி எடுக்கிறான். அந்த மறு பிறவியிலும் நீங்க அதிக ஆயுளோடு இருக்கணும். அதுக்காகத்தான் இந்த அறுபது வயது நிறைவு விழா’’, என்றான் மருமகன் இராசு.

“நீங்க எல்லோருக்கும் வழிகாட்டியா இருக்கணும். அறுபது வயதில் நீங்க எல்லோருக்கும் ஆசி வழங்கணும். அப்படி

செஞ்சா எல்லோரும் அறுபது வயதைத் தாண்டி வாழ்வாங்க’’, என்றாள் மகள் கவிதா.

“அத்தான், நீங்க அக்காவைக் கல்யாணம் பண்ணிக்கும்போது வரதட்சணையா எதுவும் கேட்கலையாம். அக்காவுக்கு இப்பவேணும்னா நகையெல்லாம் போட்டு கல்யாணம் பண்ணி வைக்கிறோம்’’, என்று கிண்டலடித்தாள் மைத்துனி. அதைக் கேட்டு குணசேகர் உட்பட அனைவருமே சிரித்து விட்டனர்.

“அதுசரி, கல்யாணம் எங்கே செய்து கொள்வது?’’, என்று கேட்டார் குணசேகர்.

இப்படி அவர் கேட்டதும் அவர் ஒப்புக் கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டார் என நினைத்த இராசு,
“திருக்கடையூரில் செய்துகொண்டால் நல்லது’’, என்றான்.

“அத்தான் கோயிலுக்கெல்லாம் வரமாட்டாங்க. அவங்க கல்யாணமே சுயமரியாதைக் கல்யாணமாயிற்றே. எங்க அம்மா அப்பாகிட்ட அத்தான் போட்ட ஒரே கண்டிஷன் சுயமரியாதைக் கல்யாணம் செய்து கொள்வேன் என்பதுதானே!’’, என்றாள் மைத்துனி இராணி.

“நீங்க எல்லோருமா ஒண்ணா வந்து என்னை வற்புறுத்திக் கேட்கறீங்க. ரொம்ப மகிழ்ச்சியாவும் இருக்கு’’, என்று பேச்சை ஆரம்பித்த குணசேகர் தொடர்ந்து பேசலானார்.

“ஒரு காலத்தில் அறுபது வயதுவரை வாழ்வதென்பது பெரிய விஷயமா இருந்துச்சு. பலரும் நோய் நொடியில் சிக்கி சின்ன வயசிலேயே செத்துப் போயிட்டாங்க. காலரா, பெரியம்மை போன்ற நோய்களால் இறந்தவர்கள்  அதிகம். ஆனா இப்ப நிலைமை அப்படி இல்லை. மேல்நாட்டு அறிஞர்களும் மருத்துவர்களும் நோய்க்கான அனைத்து காரணங்களையும் கண்டறிந்து அதற்கான மருந்துகளையும் கண்டுபிடித்துவிட்டனர். எட்வர்ட் ஜென்னர் என்ற இங்கிலாந்து நாட்டு மருத்துவர் 1749ஆம் ஆண்டில் பெரியம்மைக்கு தடுப்புசி கண்டார். அவரது கண்டுபிடிப்பால் 1980ஆம் ஆண்டு உலகில் அம்மை நோய் முற்றாக அழிந்துவிட்டது. அதேபோலத்தான் காலரா. கொத்து கொத்தாக மக்கள் செத்தாங்க’’, என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே இடைமறித்தார் தங்காயாள்.

“ஆமாம் தம்பி. நான் சின்னப் பிள்ளையா இருக்கும்போது காலராவால் நிறைய பேர் செத்தாங்க. கட்டின பாடையைக் கூட பிரிக்க மாட்டாங்க. அடுத்தடுத்து பிணம் விழுந்துகிட்டே இருக்கும்’’, என்றார்.

அதற்குப் பின் தொடர்ந்து பேசினார் குணசேகர்.

“ஆமாம். ஆனா இப்பெல்லாம் அப்படி இல்லை. எல்லாத்துக்கும் தடுப்பூசி கண்டுபிடிச்சாச்சி. போலியோ நோய்க்கு அமெரிக்க நாட்டின் ஹிலாரி கோப் ரோவ்க்ஸ்கி என்பவர் சொட்டு மருந்து கண்டுபிடித்தார். அதனால் போலியோ அறவே ஒழிந்தது. ரோட்டரி சங்கத்தின் பணியும் அதில் மிக அதிகம். இப்படி அறிவியல் முன்னேற்றத்தின் காரணமா மக்கள் அறுபது வயதைத் தாண்டி வாழும் நிலை உருவாயிடுச்சி’’, என்றார்.

“இப்ப நீங்க என்னதான் சொல்ல வர்றீங்க?’’ என்று அனைவரும் அவரை ஒருசேரக் கேட்டனர்.
“இன்னும் நாம் எல்லோருமே ரொம்ப வருஷங்க உயிரோட இருப்போம். அப்ப நான் இந்த மாதிரியான கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன். அதுவரைக்கும் அமைதியா இருங்க’’, என்றார் குணசேகர்.

இனி இவரிடம் பேசிப் பயனில்லை என்பதை உணர்ந்த அனைத்து உறவினர்களும் தங்களது ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

ஆண்டுகள் சில கரைந்தன. ஒரு நாள் குணசேகர் அனைத்து உறவினர்களையும் வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

அவர் அழைப்பை ஏற்று அனைவரும் குணசேகர் இல்லம் வந்தனர்.

ஆனால் அவர்கள் யாருக்குமே குணசேகர் நம்மை ஏன் அழைத்தார் என்ற விவரம் தெரியவில்லை.

அவர் வீட்டிலேயே தங்கியிருந்த மாமியார் தங்காயாளுக்கும் எதுவும் தெரியவில்லை. வயதான நிலையில் சற்றே அவர் தளர்ந்த நிலையில் இருந்தார்.

அவரது துணைவியார் வள்ளியம்மைக்குக் கூட எதுவும் தெரியவில்லை.

அனைவரும் மதிய உணவு சாப்பிட்ட பின் அவரது மகள் அழைத்த விவரம் கேட்டாள்.

“அப்பா, எங்களையெல்லாம் எதுக்கு வரச் சொன்னீங்க’’, என்று கேட்டாள் கவிதா.

குணசேகர் அனைவரையும் ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு பதில் கூறினார்.

“நீங்க ஏதோ கல்யாணம் பண்ணிக்கச் சொன்னீங்களே, அந்த நிகழ்ச்சியை இப்போ நடத்துங்க’’, என்றார்.

இதைக் கேட்டதும் அனைவர் முகத்திலும் வியப்பின் ரேகைகள் பறந்தோடின.

“என்னப்பா இது! உங்களுக்கு இப்போ அறுபத்தொன்பது ஆகியிருக்கு. இப்ப சொல்றீங்களே. அறுபதில்தானே செய்வாங்க. அப்போ நாங்க உங்களை எவ்வளவோ வற்புறுத்தினோம்’’, என்றாள் கவிதா.

ஆனால், வள்ளியம்மை முகத்தில் காணப்பட்ட மகிழ்ச்சியைக் கண்ட அவர்கள் இப்போதாவது அவர் ஒப்புக் கொண்டாரே என்ற மகிழ்வில் நிகழ்ச்சியை எவ்வாறு நடத்துவது என்பது பற்றி விவாதிக்கத் தொடங்கினர்.

அதுபற்றியும் குணசேகர் தெளிவாகக் கூறிவிட்டார்.

“சடங்குகள் எதுவும் இருக்காது. நமது ஊரில்தான் விழா நடக்கும். விழாவிற்கு தலைவர் இருப்பார். நாங்கள் இருவரும் மேடையில் அமர்ந்திருப்போம். என்னுடன் நெருங்கிப் பழகியவர்களும், உறவினர்களும் வாழ்த்துரை வழங்குவார்கள். நான் வரவேற்று பேசுவேன்’’, என்றார்.

அனைவரும் மகிழ்வுடன் சென்றனர்.

விழா நாள் வந்தது.  கிராமத்தில் அறுபத்தொன்பது என்ற எண்ணை பெரிதாக விளம்பரம் செய்து பதாதைகளை குணசேகர் அமைத்திருந்தார். நண்பர்களும், உறவினர்களும், கிராம மக்களும் குவிந்தனர்.

குணசேகருக்கும் வள்ளியம்மைக்கும் பலரும் வாழ்த்துக் கூறினர். வள்ளியம்மை பெரும் மகிழ்ச்சியடைந்து பெருமிதத்தில் ஆழ்ந்தார்.

விழாவிற்கு வந்திருந்த பலருக்கும் அவர் ஏன் அறுபத்தொன்பதாவது வயதைத் தேர்ந்தெடுத்தார் என்பது புரியவில்லை.

குணசேகர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். “நான் ஏன் இந்த வயதைத் தேர்ந்தெடுத்தேன் என்பது இன்னும் பலருக்கும் புரியவில்லை. அதை இப்போது விளக்கிச் சொல்கிறேன். அறுபத்தொன்பது என்ற எண் தமிழக மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்தது. சமூகநீதி கண்ட எண் அறுபத்தொன்பது. தமிழ் நாட்டில் மட்டுமே பிற்பட்ட மக்களுக்கு முப்பது சதவீதம், மிகவும் பிற்பட்ட மக்களுக்கு இருபது சதவீதம், தாழ்த்தப்பட்டோருக்கு பதினெட்டு சதவீதம், மலைவாழ் மக்களுக்கு ஒரு சதவீதம் என அறுபத்தொன்பது சதவீத இடஒதுக்கீடு உள்ளது.’’

இவ்வாறு குணசேகர் கூறியதும் கூட்டத்தில் பலத்த கைத்தட்டல் எழுந்தது.
குணசேகர் தொடர்ந்து பேசினார்.

“இந்த இடஒதுக்கீடு எழுபத்தாறாவது இந்திய அரசியல் சாசனத் திருத்தம் பெற்று அரசியல் சட்டம் 31_சி பிரிவின்கீழ், ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டு, பாதுகாப்புடன் இருந்து வருகிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முதல் திருத்தம் கொண்டு வருவதற்குக் காரணம் தந்தை பெரியார் ஆவார்கள். அதுபோல் எழுபத்தாறாவது சட்டத் திருத்தம் பெற்று இன்று அறுபத்தொன்பது சதவீத இடஒதுக்கீடு பாதுகாப்புடன் இருக்கிறது என்று சொன்னால் அதற்குக் காரணம் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அய்யா அவர்கள்தான்.’’

மீண்டும் கூட்டத்தினர் கைத்தட்டி ஆரவாரம் செய்ததால் சற்றுநேரம் பேச்சை நிறுத்தி முகத்தைத் துடைத்துக் கொண்டு மேலும் பேசலானார்.

“இந்த அறுபத்தொன்பது சதவீத இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட பலர் முயல்கின்றனர். எதிர்த்து நீதிமன்றத்திற்கு செல்கின்றனர். அந்த இடஒதுக்கீட்டை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவுமே நான் இந்த விழாவை எனது அறுபத்தொன்பதாவது வயதில் நடத்த ஒப்புக்கொண்டேன். இதற்கு ஒத்துழைத்த எனது துணைவியாருக்கு என் முதல் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்களும் அந்த எண்ணை மக்கள் மனதில் நிறுத்துங்கள். மரக்கன்றுகள் நட்டால் அறுபத்தொன்பது கன்றுகள் நடுங்கள். இளைஞர்கள் விழிப்புணர்வு மிதிவண்டிப் பயணம் செய்தால் அறுபத்தொன்பது கிலோ மீட்டர் செல்லுங்கள். இவ்வாறு ஒவ்வொருவரும் நமது வாழ்வாதாரமான அறுபத்தொன்பது சதவீத இடஒதுக்கீட்டை மக்கள் மனதில் பதிய வைக்க அந்த எண்ணை பயன்படுத்துங்கள்’’
இவ்வாறு அவர் பேசியதும் அனைவருக்கும் அவர் இந்த விழாவிற்கு ஒப்புக் கொண்டதன் நோக்கம் புரிந்தது.

இடஒதுக்கீடு பற்றியே தெரியாமல் இருந்த இளைஞர்களும் மற்றவர்களும் உண்மையை உணர்ந்தனர்.

விழாவும் சிறப்பாக நடந்து முடிந்தது.

 

– ஆறு.கலைச்செல்வன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *