எலி இளவரசியாய்ப் பிறக்குமா?
“திரேதா யுகத்தில் வைகுந்தன் என்றொரு பிராமணன் இருந்தான். அவன் ஒரு விஷ்ணு பக்தன். ஒருநாள் அவன் விஷ்ணு ஆலயத்தில் விளக்கு ஏற்றி விட்டு வீட்டுக்குச் சென்றான்.
நெய் ஊற்றி விளக்கை ஏற்றியதால், அதன் மணம் ஓர் எலியை ஈர்த்தது. அது விளக்குத்திரியைக் கடிக்க ஆரம்பித்தது. அந்த அசைவினால் விளக்கு நன்கு பிரகாசிக்கத் தொடங்கியது. அதனால் பெருமான் விக்கிரகமும் ஒளிர்ந்தது. அந்த எலி ஒரு பாம்பினால் இறந்தது. அதனை யமதூதர்கள் கயிறு கட்டி இழுத்துச் செல்ல முற்பட்ட போது விஷ்ணு தூதர்கள் அங்கு வந்து அவர்களைத் தடுத்து, “விஷ்ணு பக்தர்களை யமதூதர்கள் நெருங்கக்கூடாது என்று தெரியாதா? இது விஷ்ணுவின் விக்கிரகத்தைச் சாந்தி அடையச் செய்தது. எனவே அது விஷ்ணு பக்தனாயிற்று. அதன் பாவங்கள் விலகிவிட்டன. அது எங்களுடன் விஷ்ணுலோகம் அடையும்’’ என்று கூறி அந்த எலியை விஷ்ணு லோகம் எடுத்துச் சென்றனர். அங்குப் பல காலம் இருந்து, பின் அது ஒரு இளவரசியாக உலகில் பிறந்தது.’’ என்கிறது இந்துமதம். பாம்பு கடித்து இறந்த எலி, இளவரசியாய் பிறந்தது என்று கூறும் மூடக் கருத்துகொண்ட இந்துமதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?
பார்ப்பானுக்கு பூசணிக்காயைக் கொடுத்தால் பிள்ளை பிறக்குமா?
“திரேதா யுகத்தில் ஸ்ரீதரன் என்றொரு மன்னன் ஹேமாபிரபாவதி என்னும் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். அவர்கள் வாழ்க்கை நன்றாக இருப்பினும் அவர்கள் புத்திரபாக்கியம் இல்லாதிருந்தனர்.
ஒருநாள் ஸ்ரீதரன், வேதவியாசர் என்ற முனிவரைத் தரிசித்தான். அவரிடம் தன் குறையைக் கூறி, “தனக்கு ஏன் புத்திரப் பேறு இல்லை?’’ என்று கேட்டான். அப்போது முனிவர் அவனது முற்பிறவி வரலாற்றை எடுத்துரைத்தார்.
“ஸ்ரீதரன் முற்பிறவியில் சந்திரன் என்ற பெயரில் இருந்த ஓர் அந்தணன். ராணி ஹேமாபிரபாவதி சந்திரன் மனைவி சங்கரி, இருவரும் ஒரு நாள் பயணம் செய்து கொண்டிருந்தபோது வழியில் ஒரு சிறுவன் ஒரு குட்டை நீரில் முழுகிப் போவதைக் கண்டும், அவசர நிமித்தமாக அவனைக் காப்பாற்றாமல் சென்று விட்டனர். அந்தப் பாவத்தினால் இப்பிறவியில் மகப்பேறில்லை’’ என்றார் முனிவர்.
“இதற்கு வழியொன்றும் இல்லையா?’’ என்று மன்னன் கேட்க, வேதவியாசர் “பிராமணர்களுக்குப் பூசணிக்காய், ஆடை தானம் கொடு. பசுவும், பொன்னும் தானம் அளி. புராணங்களைக் கேள். அதன்மூலம் புத்திரப்பேறு ஏற்படும்’’ என்றார்.
ஸ்ரீதரனும் ஹேமாபிரபாவதியும் அவ்வாறே பிராமணர்களுக்குத் தானங்கள் செய்தனர். அதனால் அவர்களுக்கு ஓர் அழகிய புத்திரன் பிறந்தான். தானம் பலனளிக்காமல் போகாது.’’ என்கிறது இந்து மதம். மலடில்லா ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்வதன் மூலமே பிள்ளை பிறக்கும் என்பது அறிவியல். ஆனால், பார்ப்பானுக்கு பூசணிக்காயை தானம் கொடுத்தால் பிள்ளை பிறக்கும் என்னும் இந்துமதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையானதாக இருக்க முடியும்?
மனிதன் சிங்கமாக, யானையாக உருமாறமுடியுமா?
மஹிஷாசுரன் என்னும் அரக்கன் சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்து மும்மூர்த்திகளாலும் மரணம் ஏற்படாதவாறு வரம் பெற்று, அந்த அகம்பாவத்தால் கொடுமைகள் செய்து வர தேவர்கள் மும்மூர்த்திகளிடம் முறையிட அவர்கள் முகத்திலிருந்து தோன்றிய கோபக்கனல் ஒரு பெண்ணாய் உருவெடுத்தது. அந்தத் தேவிக்கு தேவர்கள் தங்கள் சக்திகளையும், ஆயுதங்களையும் அளித்தார்கள்.
இவ்வாறு தோன்றிய தேவி மஹிஷாசுரன் காதில் விழும்படியாகச் சிங்கமென முழங்க, அவன் தன் சேனாதிபாதியான சிட்சூரனை விவரம் அறிந்து வர அனுப்பினான்.
அவன் தனக்கிணையாக வீரர்கள் உக்ரதர்ஷனன், பிடாவன், காலன் ஆகியோருடன் சேனை கொண்டு தேவியை எதிர்த்தான். அசுர மாயையால் ஆயிரக்கணக்கான ஆயுதங்களை ஏவி தேவியை மறைத்துப் பின்னர் அவள் சிம்ம வாகனத்தை அடித்து, அவள் இடக்கையை வாளால் வெட்ட வாள்தான் உடைந்தது. பின்னர் சிட்சூரன் ஒரு கொடிய சூலாயுதத்துடன் தேவி மீது பாய, தேவி அவன் சூலத்தை முறித்து அவனையும் கொன்றாள்.
அதுகண்ட சாமரன் என்னும் அரக்கன் சக்தி ஆயுதத்தை வீச தேவி ஹூங்காரத்தால் அதை அழிக்க, சிங்கம் பாய்ந்து சென்று அவனைக் கொன்று அழித்தது.
இவ்வாறு வலிமைமிக்க பல அரக்க வீரர்கள் தேவியுடன் போர் புரிந்து அழிந்தனர். அதைக் கண்ட மஹிஷாசுரன் தேவியை எதிர்த்தான். தேவி அவனைப் பாசத்தால் கட்டி இழுக்க, அவன் சிம்ம வடிவில் தேவியை எதிர்த்தான். தேவி சூலத்தால் தாக்க அவன் மனித வடிவில் மாறி அம்புகளை ஏவ, தேவியும் அவற்றை முறியடித்தாள்.
மகிஷாசுரன் யானை வடிவம் கொண்டு சிங்கத்தை இழுக்க, தேவி வாளால் அதன் துதிக்கையை வெட்ட, அவன் மஹிஷ வடிவில் தோன்றிப் பின்னங்கால்களால் தேவியை உதைக்க முயற்சிக்கையில் தேவி அவன் கால்களைப் பிடித்துக் கொண்டு தலையை வெட்டி வீழ்த்தினாள்.’’ என்கிறது இந்துமதம். ஒரு மனிதன் பல விலங்குகளாக உருமாற முடியும் என்ற இந்து மதக் கருத்து அறிவியலுக்கு எதிரானது அல்லவா? அப்படியிருக்க அது எப்படி அறிவியலுக்கு அடிப்படையாகும்?
கையில் பிள்ளை பிறக்குமா?
மகாவிஷ்ணு மோகினி வடிவத்தோடே சிவனருகில் செல்ல, சிவனுக்கு ஆசை வந்துவிட்டது. மோகினி வடிவிலுள்ள மகாவிஷ்ணுவைப் புணரத் துடித்தான். நோக்கம் புரிந்துகொண்ட மகாவிஷ்ணு ஓட ஆரம்பித்தார்.
சிவன்தான் அறிவுகெட்டவன் என்றால், அவன் மைத்துனன் அவனைவிட அறிவுகெட்டவன் போலிருக்கு. சிவன் ஆசைப்படுகிறான் என்று தெரிந்தும் ஏன் ஓட வேண்டும்? உடனே மோகினி உருவத்தை மாற்றி, சுய உருவத்தை (ஆண் உருவம்) எடுத்துவிட வேண்டியதுதானே! அந்த அளவுக்கு ஏது அறிவு? விஷ்ணு ஓடவே, சிவனும் துரத்திக் கொண்டே ஓடினான். மீண்டும் ஓட்டப் பந்தயம்! ஓடுகின்ற ஆட்களிலும், ஓடுகின்ற நோக்கத்திலுந்தான் மாறுபாடு! விஷ்ணு வெட்கத்தோடு ஓடினான். சிவன் வெறியோடு ஒடினான். வெட்கத்தை வெறி வென்றது. ஆம், மகாவிஷ்ணு கையை சிவன் பிடித்தார்; அவர்களின் கையிலே ஒரு ஆண் குழந்தை பிறந்துவிட்டது.’’ என்கின்ற மூடக்கருத்தைக் கூறும் இந்து மதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையாகும்? ஒருவர் கையை மற்றவர் பிடிக்க கையில் குழந்தை பிறக்கும் என்பது அறிவியலுக்கு எதிரான கருத்து அல்லவா? அக்கருத்தைக் கூறும் இந்துமதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையாகும்?
இறந்த உடலின் தொடையைக் கடைய மனிதன் பிறப்பானா?
“துருவனின் வமிசத்தில் தோன்றிய அங்கன் என்பவன் மிருத்யுவின் மகள் ஸுநீதை என்பவளை மணந்தான். அவர்களுக்கு வேனன் என்றொரு புத்திரன் பிறந்தான். அவன் தக்க வயதில் அரசனானான். அவன் துஷ்டனாகவே தோன்றி வளர்ந்து, துஷ்ட அரசனாகவே இருந்து நாத்திகக் கொள்கையை நிலைநாட்டினான். அவன் யாக, தான, ஹோமங்கள் செய்ய யாரையும் அனுமதிக்கவில்லை.
இத்தகைய வேனனை மகரிஷிகள் தர்ப்பத்தையே ஆயுதமாகப் பயன்படுத்திக் கொன்றனர். பின்னர் அவர்கள் வேனனுடைய துடையைக் கடைய ஒரு கரிய, குறிய, கோரமுகம் கொண்ட ஒருவன் தோன்றினான்.
அவன், தான் என்ன செய்ய வேண்டும் என்று வேண்ட, ஒன்றும் செய்ய வேண்டாம். உட்கார் _ அதாவது ‘நிஷித’ என்றனர். அவன் நிஷாதன் எனப்பட்டான். அவனது பரம்பரையில் தோன்றிய வேடுவர்கள் ‘நிஷாதர்’ எனப்படுகின்றனர்.
இந்த நிஷாதனால் வேனன் பாவம் நீங்கியது. பின் அவன் புனித உடலில் வலக்கையை கடையத் தோன்றினவன் ‘பிருது’ ஆவான்.’’ என்கிறது இந்துமதம். ஒருவன் தொடையை அதுவும் இறந்துபோனவன் தொடையைக் கடைந்ததும் அதில் மனிதன் பிறந்தான் என்னும் மடமைக் கருத்தைக் கூறும் இந்துமதம் அறிவியலுக்கு எப்படி அடிப்படையாகும்?
(சொடுக்குவோம்…)
– சிகரம்