ஆரிய மாயை ஒழித்திடும் தந்தை பெரியாரும் அண்ணாவும்

செப்டம்பர் 1-15

‘அண்ணா’ என்ற பெயர் அண்ணாதுரை என்ற பெயரின் சுருக்கம் என்பது பலரும் அறிந்ததுதான். ஆனால், இயற்கையாய் அமைந்த அந்த அண்ணா என்ற பெயர்ச் சுருக்கத்தின் உட்பொருள், ஆழம், அகலம், பொருத்தம், பொருள், பிணைப்பு போன்றவை ஏராளம்; ஏராளம்.

திராவிட இயக்கம் ஒரு குடும்பம். இது மிகையாகச் சொல்லப்படும் வார்த்தை அலங்காரம் அல்ல. உண்மை! ஒருவரும் மறுக்கமுடியாத உண்மை!

பெரியார் திராவிட இயக்கத்தின் தந்தை! அண்ணா உட்பட அவரது தொண்டர்கள் அனைவரும் உடன்பிறப்பு. அதில் மூத்த பிள்ளை அண்ணா என்பதால், அண்ணன் என்ற பொருளுடைய அண்ணா என்ற பெயர் எவ்வளவு இயற்கைப் பொருத்தம். இந்த உறவை உறுதி செய்யும் நோக்கில்தான் கலைஞர் திராவிட இயக்கத்தவரை “உடன்பிறப்பே!’’ என்றார்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை ‘இளவல்’ என்றார்.

திராவிட இயக்கத்தின் தனிச் சிறப்பே குடும்ப உறவைவிட கொள்கை உறவே முதன்மை என்று சொல்லும், ஏற்கும் உளப்பாங்குதான்!

நீரடித்து நீர் விலகாது என்பதை இந்த உறவு பலமுறை உறுதி செய்துள்ளது.

அண்ணா அய்யாவை விட்டு பிரிந்து அரசியல் நடத்தினாலும் தலைவர் பெரியார்தான் என்றார்.

“தான் கண்ட கொண்ட ஒரே தலைவர் தந்தை பெரியார்’’ என்றார். பெரியார் ஒரு சகாப்தம். பெரியாருடன் இருந்த காலமே என் வாழ்வின் வசந்த காலம் என்றார்.

உலகம் போற்றும் ஒர் அறிஞர் பெருந்தகை, ஒருவரைத் தலைவராக ஏற்கிறார் என்றால், அந்தத் தலைவரின் தகுதி எத்தகையது! முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் எல்லாம் நான்காம் வகுப்பு படித்த பெரியாரைத் தலைவராக ஏற்றனர்; அவரின் சிந்தனைகளைப் பின்பற்றினர் என்றால், அந்தப் பெரியாரின் சிந்தனைத் திறன், தரம், நுட்பம் எப்படிப்பட்டதாக இருக்கும்!

உதடு உதிர்க்கும் வார்த்தைகளால் பாசம் காட்டிய உறவு அல்ல. திராவிட குடும்பத்தின் பாசமும் உறவும் உள்ளார்ந்த பிணைந்த உறவு.

தந்தை பெரியாரும் அண்ணாவும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட பாசத்திற்கு அளவே இல்லை. இதை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உணர்வு பொங்கக் குறிப்பிடுகிறார்.

“அண்ணாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னை  பொது மருத்துவமனையில் தங்கி, அவர்கள் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அமெரிக்காவில் ‘நியூயார்க் டவுன்ஸ்டே’ மருத்துவமனையில் சேர்த்து, டாக்டர் மில்லர் அவர்களால் அவருக்குத் தனிச் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதை அவர் அரசு செலவில் செய்து கொள்ளவிரும்பவில்லை. கட்சிதான் நிதி உதவியது! அரசு இயந்திரம் தனது சொந்த இலாபத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது என்ற உயர்ந்த நெறியை, அவர் ஆபத்தான நிலையில், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த போதும் கூட கடைப்பிடிக்கத் தவறவில்லை.

அப்படி அண்ணா அவர்களைப் பல முக்கிய தலைவர்களும், சென்னை பொது மருத்துவமனையில் பார்த்து, வாழ்த்தி வழியனுப்பினர். அய்யா அவர்களும் இதற்காகவே சென்னை வந்தார்கள். தவத்திரு.குன்றக்குடி அடிகளாரும் அன்று வந்திருந்தார்கள். ‘ஸ்பெஷல் வார்டு கியில் தங்கிச் சிகிச்சை பெற்று வந்த அண்ணாவைக் கண்டதும், கசிந்து கண்ணீர் விட்டு ஆறுதல் சொன்னார் அடிகளார்! அவ்விரு பெருமேதைகளுக்கும் சேர்த்துத் தைரியம் சொன்னார் அய்யா அவர்கள்! “இயற்கைக்கு விட்டு விடுவோம். அறுவை சிகிச்சை நல்லபடி முடிந்து, நல்ல உடல்நலத்தோடு திரும்ப வேண்டும் தாங்கள்’’ என்று அய்யா தனது பேரன்பினை அண்ணாவிடம் தெரிவித்துக் கொண்டார்கள்!

அண்ணாவுக்கு அந்த மொழிகள் எத்தகைய பெரிய ஆறுதலை அந்த நேரத்தில் தந்தன என்பது அதிகம் பேசாமல், வாஞ்சையுடன் அவர் தலையாட்டி நன்றி தெரிவித்ததன் மூலம் எங்களுக்குத் தெரிந்தது; “தங்கள் உடல் நிலையை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள், இடையறாத சுற்றுப் பயணத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்’’ என்று அண்ணா, அய்யாவைப் பார்த்து கூறினார்! அருகில் இருந்த எங்களுக்குக் அக்காட்சி வார்த்தைகளால் வடிக்க முடியாத உணர்ச்சிக் காவியமாய் இருந்தது!

விமான நிலையத்திற்கு வர வேண்டாம் என்று அண்ணா -_ அய்யாவை அப்போது கேட்டுக் கொண்டார்.

திடலுக்குத் திரும்பினார் அய்யா அவர்கள். உணவு முடித்துச் சிறிது படுக்கையில் ஓய்வு எடுக்கும் பழக்கம் பொதுவாக இல்லை அய்யாவுக்கு -என்றாலும் கூட, மனச் சோர்வுடன் காணப்பட்ட அய்யா அவர்கள் ஏதோ ஒன்றை இழந்தவர் போல மிகுந்த கவலையுடன் கட்டிலில் ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டவராக அமர்ந்திருந்தார்கள்.

‘விடுதலை’ அலுவலகத்தில் (சில அடிகள் தூரத்தில்) எனது அறையில் பணிபுரிந்த என்னை அய்யா அழைக்கிறார் என்ற தகவல் வந்தவுடன் சென்றேன்.

“ஏம்பா, அண்ணா விமானம் புறப்படுவது இன்று எத்தனை மணிக்கு?” என்று என்னைக் கேட்டார். நான் (பகல்) இரண்டரை மணிக்கு என்றேன். தமது கடிகாரத்தைப் பார்த்து 2.15 மணி. நாம் விமான நிலையம் சென்று அண்ணாவைப் பார்த்து வரலாமே என்றார். அவரது பாசமிகுந்த தவிப்பினை அருகில் இருந்த என்னாலும், புலவர் இமயவரம்பனாலும் உணர முடிந்தது!

சற்றுத் தயங்கிக் கொண்டே நான் அய்யா அவர்களிடம், “சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் போய்ச்  சென்றடைய எப்படியும் 35 முதல் 45 மணித்துளிகள் ஆகும். நாம் போய்ச் சேருவதற்குள் விமானம் புறப்பட்டுப் போய்விடக் கூடும்; அய்யா! நம்மால் அண்ணாவைப் பார்க்க இயலாமல் ஆகிவிட்டால், என்ன செய்வது?’’ என்று கூறினேன்.

எந்த ஒரு சிறு முடிவு எடுத்துவிட்டாலும், எளிதில் அதை மாற்றிக் கொள்ளாதவர் அய்யா என்பது எங்களுக்கு மிக நன்றாகத் தெரியும், என்றாலும் அவர்கள் அங்கே போய் ஏமாற்றதிற்கு இரையாகக் கூடாதே என்பதற்காகத் தான், இப்படிக் குறுகிய கால அவகாசம் பற்றி அய்யாவுக்கு நினைவூட்ட வேண்டிய நிலைக்கு நான் ஆளானேன்!

அய்யா அவர்கள் உடனே, “அதனால் என்ன? அண்ணாவைப் பார்க்க முடியாவிட்டால் என்ன? அவர் விமானம் புறப்பட்டுச் செல்லும் அல்லவா? அதைப் பார்த்து வருவோமே” என்றார்!

அதில்தான் எத்துணை பாசப் பிழியல்கள்! குழந்தைத்தன கொஞ்சல் உணர்வுகள்! அடடா! நெகிழ்ச்சியால் தாக்குண்டோம், உடனிருந்த நாங்கள். அவசரமாக அய்யா வேனை எடுக்கச் சொல்லி, அய்யாவையும், தள்ளுச் சக்கர நாற்காலி உட்பட ஏற்றி, புறப்பட்டோம். ஓட்டுநருக்கு மிகமிக வேகமாகப் போக நாங்களே ‘கட்டளை’யிட்டோம். வழமைக்கு மாறாக! சென்னை மவுண்ட் ரோட்டில் (அப்போது அண்ணா சாலையாக அது பெயர் மாற்றம் பெறவில்லை) சாலையின் இருமருங்கிலும் மக்கள் சோகம் படர்ந்த முகங்களுடன் ‘சாரி சாரியாக’ புறப்பட்டுச் செல்லும் கார்களைவிட அண்ணாவை அங்கே நின்று வழியனுப்ப மக்கள் காத்திருந்தனர்.

‘அய்யா பெரியார் அதோ போகிறார், விமான நிலையம் போகிறார் போலும்’ என்ற குரல்கள். போக்குவரத்து விதிகளைக் கூடத் தற்காலிகமாகப் புறந்தள்ளி அய்யா ‘வேன்’ விமானம் போல பறந்து சென்று மீனம்பாக்கத்தினை அடைந்தது. விமானம் எதுவும் மேலே பறக்கவில்லை என்பதை வேனிலிருந்தே உறுதி செய்து கொண்டே போகிறோம்.

அப்பாடி! அண்ணா புறப்படவில்லை. மணி 2.45 அப்போது.   அமைச்சர்கள், தலைவர்கள், அதிகாரிகள் அணிவகுத்து, சோகப் புயலில் சிக்குண்டு, அமைதி ஆட்சி புரியும் நிலையில் அங்கே நின்றனர்! எங்கே குண்டூசி விழுந்தாலும் அதன் ஓசை கேட்கும் போல் இருந்தது. அவ்வளவு நிசப்தமான சூழ்நிலை! அய்யாவை இறக்கித் தள்ளு சக்கர நாற்காலியில் அமர்த்தினோம். அய்யா ஓர் ஓரத்தில் நின்றால் போதும், உள்ளே விமானம்  அருகில் போக வேண்டாம் என்று எங்களுக்குக் கட்டளை பிறப்பித்தார்.

சில மணித்துளிகளில் ஒரு காரில் அண்ணா, (முன் இருக்கையில் கலைஞர்) வந்தார். இருமருங்கிலும் இருந்தோரை நோக்கிக் கையாட்டி வந்த அவர், அய்யாவை அங்கு எதிர்பார்க்கவில்லை. அய்யாவும், பலருடன் ஒருவராக சக்கர நாற்காலியில் அமர்ந்து இருப்பதைக் கண்டவுடன், வண்டியை நிறுத்தச் சொன்னார். ஏன் கதவைத் திறந்து இறங்கும் உணர்ச்சிக்கும் ஆளானார். அண்ணா- _- கையெடுத்துக் கும்பிட்ட நிலையில்! அதைப் பார்த்த அய்யா, ஓங்கிய குரலில், “தயவு செய்து நிறுத்தாதீர்கள், செல்லுங்கள்’’ என்று கூறினார். அனைவருடைய கண்களும் கண்ணீர் அருவிகளைக் கொட்டின! அக்காட்சி அய்யாவின் கவலை படர்ந்திருந்த முகம்பற்றி அண்ணா நியூயார்க்கிலிருந்து அய்யாவுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் அருமையாகப் படம் பிடித்து இருந்தார்!

அய்யா ஒருவாறான நிம்மதியுடன் விமான நிலையத்திலிருந்து திரும்பினார். கலகலப்பாக – ‘வேனில்’ உள்ளவர்களிடம் பேசும் வழமையுள்ள அய்யா அவர்கள் அன்று அப்படிச் செய்யவில்லை. அமைதி வடிவாய் ஆழ்ந்த யோசனைக் களத்தில் நிற்பவர் போலக் காட்சி அளித்தார்.’’ அது மட்டுமல்ல, சிக்கனவாதியான பெரியார் அண்ணாவின் மருத்துவச் செலவிற்கு தாராளமாய் கொடுத்தார். எத்தனை பாசம் இருவருக்குமிடையே பாருங்கள்!

அரசியல்வாதிகள் கற்க வேண்டிய அண்ணா பாடம்!

அறிஞர் அண்ணா ஏழ்மையில் எளிமையாய்க் கற்று உயர்ந்து தமிழ்நாட்டின் முதல்வர் ஆனவர். இன்றைய அரசியல் வட்டச் செயலர்கூட அல்ல ஓர் ஊரின் கிளைச் செயலர்கூட ஆடம்பரமாய், பந்தா காட்டி, ஆட்கள் புடைசூழ ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்; அவரவர் திறமைக்கு ஏற்பச் சுருட்டுகின்றனர். ஆனால், தமிழ்நாட்டின் முதல்வராய் இருந்த அண்ணா எப்படி நடந்துகொண்டார் என்பதை ஒவ்வொரு அரசியல்வாதியும் பாடமாகப் படிக்க வேண்டும்.

வேண்டியவருக்கு சலுகை காட்டாத நேர்மை

அண்ணா தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தபோது திரு. சி.வி.இராசகோபால் அவர்கள் தன் மருமகனுக்கு ஏதாவது ஒரு பதவி அளிக்கும்படி அண்ணாவிடம் வேண்டினார்.

அதற்கு அண்ணா, “சண்முகத்தை ஓர் ஏலக்காய் மாலையாக நினைக்கிறேன். உங்கள் மருமகனுக்கு பதவி தந்துதான் முன்னேற்ற வேண்டும் என்பதில்லை. பதவி இல்லாமலே வளரும் தகுதி, திறமை அவரிடமிருக்கிறது. அப்படி நான் ஏதாவது பதவி தந்தால் சி.வி.ஆர். மருமகனுக்குக்கூட பதவி வாங்கித் தந்துவிட்டான் என்ற பெயர் உனக்கும், சி.வி.ஆர். மருமகனுக்கு அண்ணா பதவி தந்தார் என்ற கெட்ட பெயர் எனக்கும் ஏற்பட்டுவிடும்’’ என்றார்.
அண்ணாவின் பதிலைக் கேட்ட சி.வி.ஆர். அவரது நேர்மையைக் கண்டு வியந்து, “அண்ணா உங்கள் நிலைப்பாடுதான் சரி’’ என்று சொல்லி விடைபெற்றார்.

ஒருநாள் விருத்தாசலம் கூட்டம் முடித்துவிட்டு அண்ணா சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது அண்ணா முதலமைச்சர். அயல் மாநிலங்களுக்கு அரசி கடத்துவதைத் தடுக்க சோதனைச் சாவடி பல இடங்களில் அமைக்கப்பட்டிருந்தது. அண்ணாவின் கார் என்று தெரியாமல் ஒரு சோதனைச் சாவடியில் ரெவன்யூ இன்ஸ்பெக்டர் காரை நிறுத்தினார். இரவு நேரம் என்பதால் அண்ணாவை அதிகாரி கவனிக்கவில்லை.

“டிக்கியை திறந்துவிடு’’ என்று ஓட்டுநரை கடுக்கினார். டிக்கியை திறந்ததும் டிக்கி முழுக்க ரோசா மாலைகள். வாழ்த்து மடல்கள் என நிரம்பியிருந்தது. அப்போதுதான் வந்திருப்பது அண்ணா என்பது ரென்யூ இன்ஸ்பெக்டருக்குத் தெரிந்தது. பயந்துபோன அவர், “அய்யா மன்னித்து விடுங்கள்’’ என்று நடுங்கினார்.

அண்ணா தன் உதவியாளரைப் பார்த்து இவர் பெயரைக் குறித்துக் கொள்ளுங்கள் என்றார். உடனே அதிகாரி விழுந்து வணங்குகிறார்.

அண்ணா அவரைத் தூக்கிநிறுத்தி, “உன் பெயரை எதற்கு எழுதச் சொன்னேன் தெரியுமா? கடமையைச் சரியாகச் செய்த உனக்கு தாசில்தார் பதவி உயர்வு அளிக்கத்தான்!’’ என்றார்.
அதிகாரிக்கு இன்ப அதிர்ச்சி. மகிழ்வோடு கண்கலங்கினார்.

தமிழ்நாட்டின் முதல்வர் எந்த ஆடம்பரமும் இல்லாமல், காவல்துறை அணிவகுப்பு, கட்சிக்காரர் அணிவகுப்பு காட்டாமல், ஒரு எளிய மனிதராய் பயணம் செய்த மாண்பு எத்தகையது பாருங்கள்! அது மட்டுமல்ல. முதல்வர் காரை இன்று நிறுத்தியிருந்தால் அந்த அதிகாரி பாடு என்ன ஆகியிருக்கும் ஒப்பிட்டுப் பார்த்தால் அண்ணாவின் உயர் பண்பு தெரியும்.

மக்களோடு அமர்ந்து திரைப்படம் பார்த்த எளிமை!

இவை மட்டுமல்ல தமிழ்நாட்டின் முதல்வராய் இருந்தபோதே திரையரங்கிற்கு சாதாரண மனிதராய் படம் பார்க்கச் சென்றார்.

மதுரையில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அண்ணா மாலை அன்பில் தருமலிங்கத்திடம், “பிளாசா தியேட்டரில் என்ன படம்? டிக்கெட் வாங்கி வா!’’ என்றார். படம் ஆரம்பித்ததும் எந்த பாதுகாப்பும் இன்றி இவரும் தருமலிங்கமும் கவிஞர் கருணாநந்தமும் தியேட்டருக்குள் சென்றனர்.

அண்ணா இருக்கையில் அமர்ந்ததும், இவர்கள் இருவரும் சிரித்தனர். உடனே அண்ணா, “நீங்க ஏன்யா அப்படி நினைக்கிறீங்க, நான் நிறைய சினிமா பார்ப்பேன். முதலமைச்சரே நம்மோடு உட்கார்ந்து படம் பார்க்கிறார் என்று உயர்வாகத்தானே நினைப்பார்கள்!’’ என்றார்.

இதேபோல், காரைக்காலில் கூட்டம் முடித்துவிட்டு முதல்வர் அண்ணா காரில் வந்தபோது, திருநள்ளாறு என்ற இடத்தில் கார் பழுதாகி நின்றுவிட்டது. பிறகு பழுதுபார்த்த பின் கார் புறப்பட்டது.

பேரளம் என்ற இடத்திற்கு கார் வந்ததும் அண்ணா காரை நிறுத்தச் சொன்னார். உடன் வந்தவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.

“எம்.ஜி.ஆர். நடித்த, ‘அன்பே வா!’ ஓடுது! பார்த்துவிட்டுப் போகலாம்!’’ என்றார் அண்ணா, விளையாட்டுப் பிள்ளைபோல.

படம் தொடங்கும் நேரத்தில் அண்ணா வாழ்க! முழக்கம் எழுந்தது. அண்ணா வந்தது அறிந்த மக்கள் ஆரவாரம் செய்தனர். பின் அண்ணா படத்தைப் பார்த்தார். படம் முடிய அய்ந்து நிமிடம் இருக்க மக்களுக்குத் தெரியாமல் புறப்பட்டுச் சென்றார்.

நாட்டின் முதலமைச்சரானாலும் தானும் சராசரி மக்களில் ஒருவர் என்ற எண்ணமும், முதலமைச்சர் ஆனாலும் தன் அன்றாட விருப்பங்களை அவர் மக்களோடு மக்களாய் கலந்து பழகியே நிறைவேற்ற விரும்பினார் என்ற உயர் பண்பும் இந்நிகழ்வு மூலம் வெளிப்படுகிறது.

தன் உயிருக்குப் போராடு நிலையில் பிறர் உயிர் காத்த மனிதம்

அண்ணா நோய்வாய்ப்பட்டு மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார். யாரையும் அனுமதிக்கக் கூடாது என்று டாக்டர்கள் கூறி, அவ்வாறே செய்தும் வந்தார்கள். ஒருநாள், கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து ஒரு பெண் கைக்குழந்தையுடன், ஒரு வக்கீலுடன் வீட்டிற்கு வந்து அண்ணாவைப் பார்க்க வேண்டுமென்று அவரது உதவியாளரிடம் அங்கிருந்தோர் கூறினார்கள்.

அவர் நிலைமையை விளக்கி, பார்க்க முடியாது என்று கூறிவிட்டார்கள். அவர்கள் அங்கேயே காத்திருந்தனர். சிறிது நேரத்திற்குப் பின் திருமதி ராணி அண்ணாதுரை கீழே வந்தபோது அந்தப் பெண் தன் கைக்குழந்தையை திருமதி அண்ணா காலடியில் போட்டுவிட்டு என் கணவரைத் தூக்கிலிட உள்ளார்கள். நீங்கள்தான் காப்பாற்ற வேண்டுமென்று கதறினாள். திருமதி அண்ணா உதவியாளரிடம் இதுகுறித்து கேட்டபோது,

ஏற்கெனவே கேட்டு வைத்திருந்த விவரங்களைக் கூறினார். அந்த அம்மையாரும் மிகவும் இளகிய மனம் உள்ளவர். எனவே மாடிக்குச் சென்று விவரங்களைச் சொல்ல, அண்ணா உதவியாளரைக் கூப்பிட்டு முழு விவரங்களையும் கேட்டார்.

இன்னும் இரண்டு தினங்களில் அவரது கணவரை தூக்கிலிட உள்ளதாகவும், இது சம்பந்தமாகத் தங்களைப் பார்க்க ஒரு பெண் வக்கீலுடன் வந்துள்ளதாகவும் தெரிவித்தார். உடனே அவர்களை அழைத்து வரும்படி அண்ணா கூற, அவர்கள் அழைத்து வரப்பட்டனர்.

அண்ணா தன் நோயையும், வலியையும் மறந்து, முழு விவரங்களையும் கேட்டு அவர்கள் கொடுத்த கருணை மனுவையும் பெற்றுக்கொண்டு, மதுரை சிறையிலிருக்கும் அவரது கணவரைத் தூக்கிலிடுவதை உடனே நிறுத்தி வைக்கும்படி பணித்தார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய தனது உதவியாளரிடம் கூறினார்.

உடனே அப்போது உள்துறை செயலாளராகப் பணியாற்றிய ஏ.வெங்கடேசன் அய்.ஏ.எஸ். அவர்களுக்கும், மதுரை சிறை கண்காணிப்பாளருக்கும் விவரங்களை தொலைபேசி மூலம் கூற தூக்கிலிடுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

அறிஞர் அண்ணா அவர்கள் ஒரு முதல்வர் என்பதைவிட தான் ஒரு மனிதாபிமானம் உள்ளவராக வாழவேண்டும் என்றே விரும்பினார் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

உதவியாளரை மருத்துவமனையில் சேர்த்து காத்துக்கிடந்த மாண்பு

அண்ணா முதல்வராக இருந்தபோது, அவரின் நேர்முக உதவியாளராய் பணியாற்றிய எஸ்.கஜேந்திரன் அவர்களுக்கு மாலை 6 மணியளவில் வாந்தியும், வயிற்றுவலியும் வந்து துடித்தார். அதைப் பார்த்த அண்ணா, அரசு பொதுமருத்துவமனைக்கு தானே அவரை அழைத்துச்சென்று அறுவை சிகிச்சை முடியும்வரை அங்கேயே இருந்து, அவரைப் படுக்கையில் சேர்த்த பின்னரே வீட்டுக்கு வந்தார்.

இப்படி ஒரு உயர் உள்ளம் கொண்டவரை ஆடம்பரமில்லா எளிய மனிதரை உலகத்திலே காட்ட முடியுமா? அற்பர்கள் ஆடுவார்கள்-_ ஆர்ப்பரிப்பார்கள், உயர்ந்தோர் அடக்கத்தின் அடையாளமாய் இருப்பர் என்பதை அண்ணாவே ஓர் உதாரணம் மூலம் காட்டினார்.

ஒருநாள் சேலத்தில் உள்ள தன் நண்பர் வீட்டில் மதிய உணவு உண்ண அமர்ந்ததும், இலையில் அப்பளமும் முட்டையும் வைத்தார்கள். மின்விசிறி சுற்றியதும் அப்பளம் படபடத்தது. முட்டை ஆடாமல் இருந்தது.

அதைப் பார்த்து அண்ணா, “நாலணா முட்டை அமைதியாய் உள்ளது. காலணா அப்பளம் எப்படி ஆட்டம் போடுகிறது பார்!’’ என்றார். இன்றைய அரசியல்வாதிகள் அப்பளம் போல ஆடாமல், அண்ணாவிடம் பாடம் கற்றால் அவர்களுக்கும் நல்லது, மக்களுக்கும் நல்லது! மதிப்பும் உயர்வும் ஆடம்பரத்தில் இல்லை. அடக்கம் எளிமையில்தான் உள்ளது.

அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல. அண்ணா தமிழினத்தின் தலைநிமிர்வுக்கு உரியவர். அவர் வழிநின்று தமிழர்களை உயர்த்துவோம்!

                                      வாழ்க அண்ணாவின் புகழ்!
    

                                                                                                                      – மஞ்சை வசந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *