நெருக்கடி நிலையை எதிர்த்து, ஜனநாயகம் காத்தவர் கலைஞர்!
கே: அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு முறைகேடு எதைக் காட்டுகிறது? தீர்வு என்ன?
– அ.செம்பருத்தி, திருச்சி
ப: இது மிகப் பெரிய தலைக்குனிவு _ அனைவருக்கும். ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்று பெயர் பெற்ற தமிழ்நாடு, துணைவேந்தர்கள் நியமனம் தொடங்கி, தேர்வு மறுகூட்டல், ஊழல் வரை எங்கெங்கும் லஞ்சம் _ ஊழல் என்ற நோய்களுக்கான மூலகாரணத்தைக் கண்டுபிடித்துக் களைய வேண்டும். உயர்கல்வித்துறை அமைச்சர், நீண்டகாலமாக உள்ள அய்.ஏ.எஸ் அதிகாரி உட்பட அனைவருமே விசாரணைக்கு உட்படுத்தப்படல் வேண்டும். பல்கலைக்கழகங்கள் கல்வி விளைநிலங்கள். அவை பணப்பயிர் அறுவடை நிலங்களாகக் கூடாது. வேதனை! வெட்கம்!
கே: பணத்துக்கு ஆசைப்பட்டு மாணவர்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் விடுதிகளை கண்டிப்புடன், கண்காணிப்புடன் ஒழுங்குபடுத்தி நிர்வகிக்க சட்டரீதியாக என்ன செய்ய வேண்டும்?
– வெ.சந்திரசேகரன், வந்தவாசி
ப: கடுமையாகத் தண்டிப்பதோடு, அவர்கள் திரட்டிய சொத்துக்களையும் பறிமுதல் செய்து அரசுடமை ஆக்க வேண்டும்.
கே: தமிழ்நாட்டில் கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. போராட்டக்காரர்களைப் பொய் வழக்குப் போட்டு நசுக்குகிறார்கள் என்று டெல்லியில் நடந்த கூட்டத்தில் வக்கீல், எழுத்தாளர் உள்ளிட்டோர் குற்றம் சாட்டியிருப்பது பற்றி தங்கள் கருத்து?
– மோ.காளிதாஸ், காஞ்சி
ப: தமிழ்நாடு ஒரு காலத்தில் கருத்துச் சுதந்திரக் காற்றின் திறந்தவெளி; கலைஞர் அரசு, 1975 நெருக்கடி நிலையை எதிர்த்து ஜனநாயகம் காத்த பூமி. இன்று டில்லியில் நம் மானம் பறிபோகிறதே, இது தேவையா? இந்நிலை ஒழிக்கப்பட வேண்டியது அவசர, அவசியம்!
கே: “நேர்த்திக் கடன் என்ற பெயரில் தலையில் தேங்காய் உடைப்பதால், நரம்பு மண்டலம் பாதிப்படையும்’’ என்று மருத்துவர்கள் எச்சரித்த பிறகும், மக்கள் அதைச் செய்வதால், தாங்கள் கூடுதல் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்வீர்களா?
– தே.பிரதீபா, அரக்கோணம்
ப: நீதிமன்றத் தடைகூட உண்டு; அதைக் காவல்துறையும், தமிழக அரசும் கண்டிப்பாகத் தடை செய்து, மீறி தலையில் உடைப்பவர், உடைப்பட்டு சித்தம் கலங்குவோர்-_ இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். ‘-மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம்’ ஒன்று நிறைவேற்றப்பட வேண்டும்.
கே: தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் பூஜை, அன்னதானத்திற்கான ஆன்லைன் மூலம் முன்பதிவில், ரூ.500 கோடி முறைகேடு நடந்திருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகி இருப்பது பற்றி பார்ப்பனர்கள் வாய் திறக்காதது ஏன்?
– தீ.குமரிமுத்து, மதுரை
ப: மீசையை முறுக்கிடும் அதிகாரிகளின் பார்வை, பார்ப்பன ‘மேலோர்’ மீது படாததே காரணம். பாவம்! சூத்திர,
பஞ்சம மற்றும் பெண் அதிகாரிகள் மீதுதான் பாய்கிறது. பிரச்சனை திசை திருப்பப்படுகிறது!
கே: கேரளாவிலும், தெலுங்கானாவிலும் இடதுசாரிகள் ‘இந்துத்வாவாதிகளாக’ வேடங்கட்டி ஆடுவது பற்றித் தங்கள் கருத்து?
– க.மணிமேகலை, தியாகராயநகர்
ப: வருத்தமாக உள்ளது! வாக்கு வங்கி அரசியலுக்கு நமது “தோழர்கள்’’ பலியாகலாமா? ‘திருந்துவார்கள்’ என நம்புகிறோம்!
கே: “ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி’’ என்று முழங்குவோர் ‘ஒரே ஜாதி’ என்று சொல்ல மறுப்பதேன்?
– வா.தமிழரசி,சேலம்
ப: ஏன்? அவர்கள்தாம் சொல்லாமல் சொல்லுகிறார்களே! செய்கையில் காட்டுகிறார்களே! _ “ஒரே ஜாதி _ பார்ப்பனர் ஜாதி _ ஆதிக்கம்’’ என்று ஆர்.எஸ்.எஸ். ஆணைகள் மூலம்! புரியவில்லையா?
கே: பா.ஜ.க.வின் பண மதிப்பிழப்பிற்குப் பிறகு கறுப்புப் பணம் ஒழிந்ததா? ஜி.எஸ்.டி.க்குப் பின் இந்திப் பொருளாதாரம் வளர்ந்ததா? உலக நாடுகளில் பார்வையில் இந்தியாவின் மதிப்பு என்ன?
– இல.சங்கத்தமிழன், செங்கை
ப: இல்லை; இல்லவே இல்லை! என்பதை தலைசிறந்த பொருளாதார நிபுணர்கள், முன்னாள் நிதி அமைச்சர்கள் உள்பட அத்தனை பேரும் பேசியும் எழுதியும் வருகிறார்களே!
கே: பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பெரியார் திடலில் 27.07.2018 அன்று சந்திரகிரகணம் குறித்த புரிந்துணர்வு நிகழ்ச்சி நடைபெற்று பலரது சந்தேகங்களைப் போக்கியது. இதேபோன்று மாதமொருமுறை பல்வேறு அறிவியல் தலைப்புகளில் நிகழ்ச்சிகள் நடத்துவீர்களா?
– க.காசிநாதன், தெற்கிருப்பு
ப: நல்ல யோசனை! குடும்பம் குடும்பமாகக் கூடி, “ஜோதிட, மூடநம்பிக்கை, வாஸ்து, அதிருஷ்டம், மந்திரம், பேய், பிசாசு, கற்பனைகள் பற்றி கலந்துரையாடலாமே! தனியே மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம் ஒன்றினையும், பெரியார் நூலக வாசகர் வட்டத்தினரும் _ திராவிடர் கழகமும் இணைந்து செய்யத் திட்டமிடலாம்!