போராட்டமே வாழ்க்கையான
ஈரோட்டு மாணவரே!
“ஏரோட்டும் மக்களெல்லாம் ஏங்கித் தவிக்கையிலே
தேரோட்டம் ஏன் உனக்கு தியாகராஜா?”என்று கேட்ட
திருக்குவளை அறிவொளியே!
எண்பது ஆண்டுகளுக்கு முன்பே
நண்பரோடு இளம் வயதில்
இந்தி எதிர்த்தாய்!
தாண்டவாளத்தில் தலைவைத்து
வண்டமிழை வாழவைத்தாய்!
குண்டர்களின் கொலைவெறித் தாக்குதலில்
பெண்ணொருவர் பாதுகாக்க மீண்டுவந்தாய்!
திரைத் துறையில் சிகரமானாய்!
இலக்கியத்தில் இமயமானாய்!
அரசியலில் ஞானியானாய்!
ஆற்றல்களின் ஊற்று ஆனாய்!
ஆரியர் முன் அரிமா ஆனாய்!
பெரியாரின் பிள்ளையானாய்!
அண்ணாவின் தம்பியானாய்!
ஆளுமையின் வடிவமானாய்!
அடக்குமுறை எதிர்த்து நின்றாய்!
உரிமைக்குக் குரல் கொடுத்தாய்!
வறுமைக்கு விடைகொடுத்தாய்!
சமூகநீதி காத்து
சரித்திரத்தில் நிலைத்துவிட்டாய்!
இனத்தவரின் இதயத்தில்
இரண்டறக் கலந்த உன்னை!
இறப்பு பிரித்திடுமா?
என்றென்றும் நீ வாழ்வாய்!
இனத்தவரை ஆட்சி செய்வாய்!