நூல்: பெரியார் என்னும் இயக்கம்
ஆசிரியர்: தா.பாண்டியன்
வெளியீடு: நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட்,
41-பி, சிட்கோ இன்டஸ்டிரியல்
எஸ்டேட், அம்பத்தூர்,
சென்னை – 600 098.
பக்கம்: 92 விலை: ரூ.80/-
“தந்தை பெரியார் ஒரு தலைவரோ, சிந்தனையாளரோ, பேச்சாளரோ, எழுத்தாளரோ, தொண்டரோ மட்டும் அல்லர். அவர் இவை அனைத்தையும் ஏனைய ஆளுமையையும் உள்ளடக்கிய ஓர் இயக்கம்; பெரியார் என்ற மாமனிதர் மறைந்துவிட்டார். ஆனால், அவரின் கொள்கைகள், கோட்பாடுகள் மனித நெஞ்சங்களில் புகுந்து இயக்கிக் கொண்டிருக்கின்றன. இன்றும் இயக்கும், நாளையும் இயக்கும். எப்போதும் இயக்கும். அவ்வாறு இயங்குவதுதான் இயக்கம்.’’ நூல் தலைப்பின் காரணத்தைக் கூறும் புலவர் பா.வீரமணி அவர்களின் அணிந்துரையோடு துவங்கும் இந்நூல் தந்தை பெரியாரை புதிய பார்வையில் வடித்துள்ளது. மூத்த பொதுவுடமைவாதியான தோழர் தா.பாண்டியன் எளிய நடையில் இந்நூலை யாத்துள்ளார். கடந்த நூற்றாண்டுகளில் சமூகத்தில் நிலவி பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தெளிவாகப் பதிவு செய்து, அவற்றிலிருந்து பெண்களை மீட்டெடுக்க, தந்தை பெரியார் மற்றும் சுயமரியாதை இயக்கம் ஆற்றிய ஒப்பற்ற தொண்டுகளை விளக்குகிறார் தோழர் தா.பா அவர்கள்.
தந்தை பெரியாரின் பேச்சாற்றலை, எழுத்தாற்றலை கொள்கை விளக்கப் பயணங்களை, பதிவு செய்கையில், “அவரது மேடைப் பேச்சில் அலங்கார வருணனை இருக்காது. சொற்களை அடுக்கி சலங்கை கட்டி ஆட விடுவது போன்ற அலங்காரப் பேச்சை அவர் நாடியது இல்லை. குறுகத் தறித்துக் கூற வேண்டுமானால், அவரது நெஞ்சம் பேசியது. அவர் பயன்படுத்தியது இதய மொழி (லிணீஸீரீuணீரீமீ ஷீயீ பிமீணீக்ஷீt). அவரது அறிவும், இதயமும் பேசின.
ஏன் எனில் அவர் பரிசு பெறுவதற்காகப் பேச்சுப் போட்டிக்குப் பயின்றவர் அல்லர். அவர் கைத்தட்டல் எழ வேண்டும் என்று பேசியவர்அல்லர். மேடை ஏறும்போதே, தன் பேச்சைக் கேட்க வந்துள்ள கூட்டத்தில் நூற்றுவரில் தொண்ணூறு பேர் தன் கருத்துக்கு மாறுபட்ட நம்பிக்கை உடையவர்கள், பழமையில் மூழ்கிய பக்தர்களாக இருந்து வந்தனர் என்பதை அறிந்தவர்’’ என்று கூறுகிறார். நாத்திக தத்துவத்தை மக்கள் இயக்கமாக மாற்றியதைத் தெளிவாக, அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.
உலக நாத்திக அறிஞர்களோடு தந்தை பெரியாரை ஒப்பிட்டு அவர்களுக்குப் பின்னர் அவர்களின் கொள்கைகளைப் பரப்பும் இயக்கங்கள் இல்லாததையும், தந்தை பெரியாருக்குப் பின் அவரது இயக்கம் சிறப்பான மக்கள் இயக்கமாக நடைபோடுவதையும் விளக்கிக் கூறுவதுடன், தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் சிறப்பாக வளர்த்தெடுக்கப்படுவதையும் விளக்கியுள்ளார்.
குறும்படம்
பரிசு!
குடிகார அப்பா; அவரை சகித்துக் கொண்டு குடும்பம் நடத்தும் அம்மா; இப்படிப்பட்டவர்களுக்கு, ‘கொடுப்பதில் இன்பம் காணும் மகள்’ இவர்கள்தான் முக்கிய கதாபாத்திரங்கள். நேர்மை, உண்மை, உழைப்பு, சேமிப்பு என்கின்ற நற்பண்புகளின் அடிப்படையில் சிறுமியின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு இருந்தாலும், அதற்கு ஈடுகொடுத்து, இயல்பாக நடித்திருக்கிறார் சிறுமி ஏஞ்சல்.
“மனிதன் தானாக பிறப்பதில்லை. ஆகவே தனக்காக வாழக் கூடாது’’ என்ற தந்தை பெரியாரின் அரிய கருத்தை நினைவூட்டும் இந்த கதையமைப்பு, குடிகாரத் தந்தையை மாற்றுகிறது. வறுமை இருந்தாலும், மகளின் கலையாத கனவாக இருக்கும் “சைக்கிளை’’ வாங்கித் தர தாய், தந்தை இருவரையும் ஒத்துக்கொள்ள வைக்கிறது. ஒரு திருப்பமாக சிறுமியின் தொண்டறப் பணியால், எதிர்பாராத இடத்திலிருந்து அந்த சைக்கிள் ‘பரிசாக’ கிடைக்கிறது. திரைக்கதை, கதையை மிக இயல்பாக நகர்த்துகிறது. சிறுமியின் உரையாடல்கள் நமக்கு வியப்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது. சொல்லப்பட வேண்டிய கதை! சரவணன் செல்வம், ரகுராம் தயாரிப்பில் சிறீ கணேசன் இயக்கி இருக்கிறார். சீஷீutuதீமீ-இல் இதைக் காணலாம். (றிணீக்ஷீவீsu).