இனியன்
கல்வி காவிமயமாகி வருவதையும் அதனால் ஏற்படவிருக்கின்ற ஆபத்தையும் விளக்கி “மத்திய அரசின் (ஆர்.எஸ்.எஸ்.) கல்விக் கொள்கை _ ஒரு பார்வை’’ என்னும் தலைப்பில் பிரபல கல்வியாளர்கள் பங்குபெற்ற கருத்தரங்கம் 12.07.2018 மாலை சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்றது.
கருத்தரங்கத்தில் கலந்துகொண்டவர்கள்
கருத்தரங்கத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையேற்க, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் வரவேற்புரை யாற்றினார். பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, சென்னைப் பல்கலைக்கழக அஞ்சல்வழிக் கல்வி நிறுவன மேனாள் இயக்குநர் முனைவர் மு.சண்முகம், பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் பெ.ஜெகதீசன், தமிழக உயர்கல்வி மன்ற முன்னாள் துணைத் தலைவர் முனைவர் அ.இராமசாமி ஆகியோர் உரையாற்றினர்.
1. பிரின்ஸ் கஜேந்திரபாபு:
பிரின்ஸ் கஜேந்திரபாபு அவர்கள் தமது உரையில்,
“ஆட்சிக்கு வந்த உடனேயே மிகத் தெளிவாக ‘நாங்கள் எதை கொண்டு வருகிறோமோ அதுதான் இந்த நாட்டினுடைய கல்விக் கொள்கையாக இருக்க முடியும்’’ என்று மத்திய
பி.«-ஜ.பி (ஆர்.எஸ்.எஸ்.) அரசு செயல்பட்டு வருகின்றது.
“நாங்கள் ஒரு ஆணை அமைப்போம். அது என்ன பரிந்துரைக்கிறதோ அதுதான் கல்விக் கொள்கை’’ என பகிங்கிரமாக அறிவித்து செயல்படுகிறது மத்திய அரசு.
ஆனால், இதை நம் மாநில அரசு எதிர்க்காததுதான் கவலை தரும் செய்தி. இதன் உச்சக்கட்டம்தான் உயர்கல்வி சம்பந்தமான மசோதா. கூட்டாட்சி தத்துவத்திற்கு வேட்டு வைக்கும் திட்டம்தான் உயர்கல்வி மசோதா. கல்வி என்பது மாநில அரசின் உரிமை. இதில் மத்திய அரசு தலையிட முடியாது.
இந்தியா மிக உயர்ந்த இமயமலை, பாலைவனங்கள், பீடபூமிகள், கடற்கரைகளைக் கொண்டது. நில அமைப்பையும், தட்பவெப்ப நிலையையும் பொருத்தே பண்பாடு உருவாகிறது. பண்பாட்டின் ஒரு கூறுதான் கல்வி. எனவே, கல்வி பற்றி யோசிக்க _ முடிவெடுக்க மாநில மக்களுக்கும், மாநில அரசுகளுக்கும்தான் உரிமை உண்டு. மத்திய அரசுக்கு அந்த அதிகாரம் இல்லை. எனவே, உயர்கல்வி மசோதாவை திரும்பப் பெறுவதுதான் மத்திய அரசின் முதல் வேலையாக இருக்க வேண்டும். இதுதான் பெரியார் பூமியான தமிழகத்தின் குரலாகவும் இருக்கிறது.
மத்திய அரசே! உங்களால் பல்கலைக்கழக மானியக் குழுவை சரிப்படுத்தி வலுப்படுத்த முடியும் என்றால் ஆட்சியில் இருங்கள். இல்லையென்றால் ஆட்சியிலிருந்து விலகுங்கள்! பெரியார் திடலில் தொடங்கிய எந்த போராட்டமும் வரலாற்றில் தோற்றது கிடையாது! இந்தப் போராட்டமும் வெற்றி பெறும்! வணக்கம், நன்றி!’’ என்று மிக உணர்ச்சிவயப்பட்டு பேசி முடித்தார்.
மு.சண்முகம்:
மு.சண்முகம் அவர்கள் பேசுகையில்,
“யுஜிசி மசோதாவில் மாணவர்களுக்கும், மாநில அரசிற்கும் 1 சதவீதம்கூட நன்மை கிடையாது. கல்வியைப் பொறுத்தே ஒரு நாடு மதிப்பிடப்படுகிறது. கல்விதான் பொருளாதார வளர்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. கல்வி இல்லையென்றால் நாம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சென்று விடுவோம்! அதை செய்யத்தான் மத்திய அரசு முயல்கிறது.
மத்திய பி.ஜே.பி அரசு பல்கலைக்கழகங்களில் இருக்கின்ற யுஜிசியை எடுத்துவிட்டு புதிதாக Higher Education Commission of India என்று ஒன்றை கொண்டுவரத் துடிக்கிறது. ‘ஃபண்ட்’ தருவதைத்தான் இதுவரை யுஜிசி செய்துவந்தது. ஆனால், சட்டம் போடுவதும் தண்டனை தருவதும்தான் இந்த Higher Education Commission of India வேலையாம். இவ்வளவு கேவலமான ஒரு மசோதாவை இதுவரை யாரும் பார்த்திருக்க முடியாது. ஆனால், இதைப்பற்றி அரசியல்வாதிகளோ, மாநில ஆட்சியாளர்களோ யாரும் கவலைபட்டதாகவே தெரியவில்லை.
கேரள முதல்வரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டுமே இந்திய அளவில் பேசி இருக்கிறார்கள். இன்று பெரியார் திடலிலிருந்து இந்தக் கருத்தரங்கம் மூலம் இந்த எதிர்ப்பு தொடங்குகிறது. இது நிச்சயம் வெற்றி பெரும்.
நல்லவேலை வெள்ளையர்கள் வந்து கல்வியைக் கொடுத்தார்கள். இல்லையென்றால் இவர்கள் குலக்கல்வி என்று கொண்டுவந்து நம்மை கொன்று எடுத்திருப்பார்கள். மத்திய அரசு நினைக்கும் யுஜிசி கலைப்புத் திட்டம் நிறைவேறாது. நிறைவேற்றவும் கூடாது.’’ என்று உறுதியாய் சொல்லி முடித்தார்.
பெ.ஜெகதீசன்:
பெ.ஜெகதீசன் அவர்கள் உரையாற்றுகையில்..
“கல்வியில் எல்லா பிரச்சினைகளுக்கும் மூலகாரணம் என்னவெனில் கல்வி என்பது யாரிடம் இருக்க வேண்டுமோ அவர்களிடம் இல்லாமல், யாரிடம் இருக்கக் கூடாதோ அவர்களிடம் இருப்பதே.
கல்வி, சுகாதாரம், காவல்துறை மூன்றும் மாநிலப் பட்டியலில்தான் நெடுங்காலமாக இருந்து வருகிறது. இதற்குக் காரணம்: 1. மாநில அரசுதான் மக்களோடு நேரடியான தொடர்பு உடையது. 2. மாநில அரசுதான் மக்களை ஆள்பவர்கள். (மத்திய அரசு மக்களை ஆள்பவர்கள் அல்ல; மாநிலங்களை ஆள்வது). ஆகவேதான், மக்களோடு தொடர்புடைய மாநில அரசுகளிடம் கல்வி இருக்க வேண்டும்.
திராவிட இயக்கம் எடுத்ததை முடிக்காமல் இருந்தது கிடையாது. யுஜிசி-க்கு எதிராக மத்திய அரசு எடுத்திருக்கும் நிலை நிச்சயம் மாறும். அதற்கு ஆட்சி மாற்றம் ஒன்றே தீர்வு’’ என அழுத்தம் திருத்தமாய் பேசி முடித்தார்.
அ.இராமசாமி:
அ.இராமசாமி அவர்கள் தமது உரையில்,
“பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்த உடனேயே முதலில் சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்று கூறியது. சமஸ்கிருதம் படித்தால்தான் அமெரிக்கா விசா கொடுக்குமா? ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்குமா? சமஸ்கிருதம் படித்தால் என்ன கிடைக்கும்? கோயிலுக்குள் மணி அடிக்கலாம். மணியடித்தால் 1 ரூபாய், 2 ரூபாய் கிடைக்கும். இதற்குத்தான் சமஸ்கிருதம் படிக்க வேண்டுமா?
கல்வியில் பி.ஜே.பி அரசு அறிவியல்துறை, தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவம் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவது இல்லை. வரலாறு அதிலும் குறிப்பாக இந்திய வரலாற்றில் இராமாயணத்தை எப்படியாவது நுழைத்துவிட வேண்டும் என்று முயற்சிக்கிறது.
1956இல் கொண்டுவந்த யுஜிசியை மாற்றிவிட்டுHigher Education Commission of India அய்க் கொண்டுவர முயற்சி செய்கின்றனர். முன்பெல்லாம் யுஜிசி பல்கலைக்கழகங்களுக்கு ‘ஃபண்ட்’ கொடுக்கும். ஆனால், Higher Education Commission of India அதிகாரத்தை மட்டும்தான் கொடுக்குமாம். என்னே கொடுமை!
கல்வியில் எத்தனையோ மோசடிகளைச் செய்தது போதாது என்று இந்தியாவின் நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்ற மோசடி திட்டத்தை பி.ஜே.பி. (ஆர்.எஸ்.எஸ்) அமைப்பு கொண்டுவர நினைக்கிறது. இவற்றைத் தடுக்க வேண்டுமென்றால் வருகிற 2019 தேர்தலில் பா.ஜ.க. மோடி அரசை ஓட ஓட விரட்ட வேண்டும்’’ என தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் தனது உரையை நிறைவு செய்தார்.
பல கலாச்சாரம், பல மொழிகள், பல்வேறு பழக்கவழக்கங்களைக் கொண்ட இந்நாட்டில் ஒரு மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே தேர்தல் என்று ஆர்.எஸ்.எஸ். கொள்கையைப் புகுத்துகின்ற மத்திய அரசின் செயலை முறியடித்து, மீண்டும் பா.ஜ.க. அரசு வரமுடியாத அளவுக்கு ஒன்றுபட்டு குரல் கொடுப்போம் என்று கருத்தரங்கத்தில் பேசி அனைவரும் பேசியது குறிப்பிடத்தக்கது.
தமிழர் தலைவர் ஆசிரியர்
இக்கருத்தரங்கத்திற்கு தலைமையேற்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அரிய விளக்கங்களோடும் மிகத் தெளிவோடும் மிகச் சிறப்பாய் தலைமையுரையாற்றினார். “இது ஏதோ கட்சி சார்பாக நடத்துகின்ற கருத்தரங்கம் அல்ல. ஒரு பல்கலைக்கழகத்தின் வேந்தரென்ற முறையில் நானும் மற்றும் மிகச் சிறந்த கல்வியாளர்களும் கலந்துகொண்டு நடைபெறுகின்ற கருத்தரங்கம்’’ என்று ஆசிரியர் அவர்கள் கூறியபொழுது அரங்கமதிர கரவொலி எழுந்தது.
“மாநிலங்களுடைய உரிமை கல்வி. அதை அறவே எடுத்துவிட வேண்டும் என்று திட்டமிட்டு, ஆர்.எஸ்.எஸ்சினுடைய ஆணைப்படி, மத்திய மோடி அரசு நடந்து கொண்டிருக்கிறது. கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து ஒத்திசைவுப் பட்டியல் என்ற ‘கன்கரன்ட் லிஸ்ட்டு’க்கு கொண்டு போயிருந்தும்கூட, நேரடியாக மத்திய அரசின் பட்டியலாகவே அதை ஆக்கிக்கொண்டு, யாரையும் கலக்காமல், எந்த மாநிலத்தையும் கலக்காமல், அவர்கள் தங்கள் இஷ்டம்போல, பல்கலைக்கழக மானியக் குழுவைக் கலைப்போம், நாங்கள் பார்த்து பணம் கொடுக்கக்கூடிய கமிட்டியை உருவாக்குவோம் என்று சொல்வது இருக்கிறதே, இது முழுக்க முழுக்க அரசமைப்புச்சட்ட விரோதம். கலாச்சார, கல்வி உரிமை என்பது அடிப்படை உரிமை. அந்த அடிப்படை உரிமையைப் பறிப்பதற்கு நாடாளுமன்றமே சட்டம் இயற்றினாலும்கூட, அது அரசமைப்புச் சட்டத்தினுடைய கட்டுமானத்தை உடைப்பதாகும்.
அடிப்படைக் கட்டுமானத்தை உடைக்கக் கூடிய சட்டம்கூட நிறைவேற்றப்பட முடியாது. நிறைவேற்றினால், அது அரசமைப்புச் சட்டத்துக்கு முரணாகும். இதையெல்லாம் திடீரென்று வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்குக் கதவைத் திறப்பதற்காக இந்த ஏற்பாட்டை செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியை கல்வி அறிஞர்கள் விளக்கி இருக்கிறார்கள். நாடு தழுவிய அளவிலே, பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், மேற்பட்டப்படிப்பு படிக்கிறவர்கள் இதை உணரவேண்டும்.’’
இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையில் குறிப்பிட்டார். கருத்தரங்கத்தின் முடிவில் ஆசிரியர் அவர்கள் இதே கருத்துக்களை வலியுறுத்தி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியும் அளித்தார்.
கருத்தரங்கம் நிறைவு
நிகழ்ச்சிக்கு கல்வியாளர்கள், பல்துறை அறிஞர் பெருமக்கள் அனைத்துக் கட்சி மற்றும் அமைப்புகளைச் சார்ந்தோர், பொதுமக்களென மிகத் திரளானோர் கலந்து கொண்டனர். மாநில மாணவர் கழக, செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் நன்றி கூற இரவு 8.30 மணியளவில் நிகழ்ச்சி நிறைவடைந்தது.