பெரியார் பேருரையாளர் அ.இறையன் நினைவு நாள் : ஆகஸ்ட் ,12

ஆகஸ்ட் 01-15

தமது மாணவர் பருவத்தில் திராவிட மாணவர் கழகத்தில் இணைந்து தமது இறுதி காலம் வரை திராவிடர் கழகத்தில் பணியாற்றியவர் பேராசிரியர் அ.இறையன். அரசுப் பணியிலிருந்து ஓய்வடைந்த இவர், மறுநாள் காலையே இயக்கத் தலைமையகத்திற்கு வந்து இயக்கத் தொண்டுக்கு முழுமையாக தன்னை ஒப்படைத்துவிட்டார். தலைமையின் நோக்கப்படி தலைவரின் கட்டளையேற்று பல்வேறு பணிகளை செய்தவர். ‘விடுதலை’, ‘உண்மை’ இதழ்களில் இனநலம், தமிழாளன், நாடகன், பொருநன், பெரியார் மாணாக்கன், மாந்தன், பாணன், வேட்கோவன், சான்றோன், அறிவேந்தி, கிழவன், வழக்காடி, பிடாரன், சுவைஞன், சீர்தூக்கி, பூட்கையன், செய்தி வள்ளுவன் போன்ற பல புனைபெயர்களில் தொடர்ந்து பெரியாரின் தத்துவங்களை, தனித்தமிழ் எழுத்தாற்றல் மூலம் வெளிப்படுத்தியவர்.

மேலும், ‘சுயமரியாதைச் சுடரொளிகள்’, ‘இல்லாத இந்துமதம்’, ‘தமிழின மானமீட்பர் பெரியார்’, ‘புரிந்துகொள்வீர் புராணங்களை இதிகாசங்களை’, ‘இதழாளர் பெரியார்’ போன்ற அவரது நூல்கள் அரிய கருத்துக் கருவூலங்கள் ஆகும். இவற்றில் ‘இதழாளர் பெரியார்’ ஓர் அரிய ஆய்வுக் கருவூலம் ஆகும். பெரியார் ஒரு மாபெரும் ‘பத்திரிகையாளர்’ என்பதை எடுத்துக்காட்டும் வகையில் இப்பணியை மிக விரிவாகவும் ஆழமாகவும் ஆய்வு செய்து எழுதியுள்ளார் பேராசிரியர் இறையன் அவர்கள். இந்நூல் உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டு, பலராலும் பாராட்டப்பெற்றது.

‘சமுதாய விஞ்ஞானி’ தந்தை பெரியார் நடத்திய இதழ்களான ‘குடிஅரசு’, ‘புரட்சி’, ‘திராவிடன்’, ‘பகுத்தறிவு’, ‘விடுதலை’, ‘உண்மை’ ‘ஸிமீஸ்ஷீறீt’. ‘யிustவீநீவீக்ஷ்மீ’, ‘ஜிலீமீ விஷீபீமீக்ஷீஸீ ஸிணீtவீஷீஸீணீறீவீst’ போன்ற அனைத்தும் ஏழை, எளிய மக்களைச் சிந்திக்க வைத்தன. இந்த இதழ்களை தொடங்கியபோது தந்தை பெரியார் உலகிற்கு அளித்த கொள்கைகள்,  இதில் பதிவாகியுள்ள முக்கால் நூற்றாண்டு தமிழக அரசியல் சமூக, இலக்கிய வரலாற்றுத் தகவல்கள், நடத்திவரும்பொழுது சந்தித்த இடையூறுகள், எதிர்ப்புகள், சிறைவாசங்கள், தண்டனைத் தொகை செலுத்துதல் ஆகியவற்றை இந்நூல் விளக்குகிறது. இறையனாரின் இறுதி காலத்தில், இந்நூல் வெளியிடப்பட்டு அவரது இயக்கத் தொண்டறத்தில் இது ஒரு மகுடமாக அமைந்துள்ளது. இன்றைய இளைஞர்களும் மாணவர்களும் ஊடகவியலாளர்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *