ஆறு.கலைச்செல்வன்
“மாரியாத்தாளுக்கு வேண்டி தீ மிதித்து வழிபாடு செய். உன் கஷ்டங்கள் எல்லாம் அந்தத் தீயிலே கருகி காணாமல் போயிடும்’’ என்று உபதேசம் செய்தார் சோதிடர்.
கட்டிக் கொண்டிருக்கும் வீட்டை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தான் முகுந்தன். வீடுகட்ட ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனாலும் கட்டி முடித்த பாடில்லை. பண நெருக்கடி அவனை வாட்டி வதைத்தது. ஏதோ ஒரு தைரியத்தில் கையில் இருந்த பணத்தை வைத்துக்கொண்டு வீடு கட்டும் பணியைத் தொடங்கினான். விவசாய வருமானத்தில் வீட்டைக் கட்டி முடித்து விடலாம் என்ற நிலையில் இருந்தான். ஆனால், விவசாயத்தில் தொடர்ந்து நஷ்டமே எற்பட்டது. மனைவி தேவியின் நகைகளையெல்லாம் அடகு வைத்துவிட்டான். ஆனால், கட்டுமானப் பொருட்களின் விலை ஏற்றத்தால் பணப் பற்றாக்குறை நிறைவே ஏற்பட்டது.
வீடு கட்ட வேண்டுமென்பதில் முகுந்தனுக்கு அதிக ஆர்வமில்லை என்றாலும் அவன் மனைவி தேவியின் பிடிவாதத்தால் அதற்கு இணங்கினான். ஒரே மகனையும் பள்ளியில் சேர்க்க வேண்டிய வயது வந்துவிட்டது. ஆங்கில வழிப் பள்ளியில்தான் சேர்க்க வேண்டுமென தேவி அடம் பிடித்தாள்.
அதற்கும் நிறைய பணம் வேண்டும். என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருந்தான்.
அப்போது அங்கு பக்கத்து ஊர்க்காரரான வரதராஜன் என்பவர் வந்தார்.
“என்ன முகுந்தா, ரொம்ப நேரமா யோசனை பண்ணிக்கிட்டு இருக்க போலிருக்கு! என்ன விஷயம்?’’ என்று கேட்டார். அவர் ஏதோ ஒரு பெரிய திட்டத்துடன்தான் அவனிடம் பேச்சுக் கொடுத்தார்.
“ஒன்னுமில்லை அய்யா, வீடு கட்ட ஆரம்பிச்சேன். விவசாயத்தை நம்பி இருந்தேன். நஷ்டமாயிடுச்சு. வீடு கட்ட முடியல. வீட்டுச் செலவுக்கே பணமில்லை. சாப்பாட்டுக்கே கஷ்டப்படுற நெலமையாயிடுச்சு’’ என்று சோர்வுடன் பதில் கூறினான் முகுந்தன்.
“நம்ம நாட்டில விவசாயிங்களோட நெலமையைப் பார்த்தியா? உன்னைப் பார்த்தா ரொம்ப கஷ்டமாயிருக்கு. வீட்டையும் உன்னால கட்டி முடிக்க முடியல. உனக்கு ஏதாவது உதவி செய்யனும்னு நெனைக்கிறேன்’’ என்று பீடிகையுடன் பேச்சுக் கொடுத்தார் வரதராசன்.
“என்ன உதவி அய்யா செய்யப் போறீங்க’’ என்று ஆவலுடன் கேட்டான் முகுந்தன்.
“வீட்டைக் கட்டி முடிக்க பணம் கடனாத் தர்றேன். உனக்காக வட்டியை வேணும்னா குறைச்சிக்கிறேன். வட்டியை மட்டும் மாசா மாசம் கொடுத்திட்டா போதும். அசல எப்ப வேணும்னாலும் திருப்பிக் கொடு’’ என்றார் வரதராசன்.
வரதராசன் வட்டிக்குப் பணம் கொடுப்பவர். நிறைய வட்டி வாங்குவார். முகுந்தன் நிலத்தை ஒட்டியே அவரது நிலங்களும் இருந்தன. அவரது நோக்கம் முகுந்தனின் நிலத்தை அபகரித்துவிட வேண்டும் என்பதுதான். கடன் வாங்கினால் முகுந்தன் எப்படியும் பணத்தைத் திருப்பித் தரமாட்டான். பணத்திற்குப் பதிலாக நிலத்தை எழுதி வாங்கிவிடலாம் என்பது அவரது திட்டம்.
இதை அறியாத முகுந்தன் அவரிடம் கடன் வாங்க ஒப்புக் கொண்டான். தனக்கு உண்மையிலேயே உதவ முன்வந்ததாகவே நினைத்தான்.
அடுத்த சில தினங்களில் மனைவி தேவியுடன் வரதராசன் வீட்டிற்குச் சென்று அவர் நீட்டிய தாட்களில் கையெழுத்துப் போட்டுவிட்டு அய்ந்து லட்ச ரூபாயை கடனாகப் பெற்றுக்கொண்டு வீடு திரும்பினான்.
பணத்தைக் கடனாகக் கொடுத்த வரதராசனின் மூளை பலமாக சிந்தனை செய்தது. எந்த வகையிலாவது தேவையில்லாமல் அந்தப் பணத்தை அவனால் செலவிட வைக்கப்பட வேண்டும் என முடிவு செய்தார்.
பணத்தை எப்படி செலவு செய்யலாம் என்பது குறித்து சோதிடர் ராமதேவனிடம் முகுந்தன் செல்வான் என்பதை அறிந்த வரதராசன் அவன் செல்வதற்கு முன்பே ராமதேவனை சந்தித்து வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துவிட்டார்.
அவர் எதிர்பார்த்தபடியே முகுந்தன் சோதிடர் ராமதேவனைச் சந்தித்தான்.
“சோதிடர் அய்யா, நான் கடன் வாங்கியிருக்கேன். அதை எப்படி செலவு செய்யணும்’னு சொல்லுங்க’’ என்று கேட்டான் முகுந்தன்.
ராமதேவன் முகுந்தனைப் பார்த்து,
“முகுந்தா, கொஞ்சப் பணத்திற்கு கட்டுமானப் பொருட்களை வாங்கு மீதிப் பணத்தை விவசாயத்தில்போடு. உன் கிரக வாட்டத்திற்கு இப்ப விவசாயம் நல்லாயிருக்கும். மரவள்ளிக்கிழங்கு பயிர் வை. நல்ல லாபம் கிடைக்கும். கடனையும் அடைச்சுடலாம்’’ என்றார்.
அவர் கூறியதை அப்படியே நம்பி செயல்பட்டான் முகுந்தன். மரவள்ளிக்கிழங்கு பயிரிடும் வகையில் தன் வயல் மணற்பாங்கான நிலம் இல்லை என்றாலும் சோதிடர் சொன்னதை நம்பி பயிர் வைத்தான்.
ஆனால், சில மாதங்களில் கடும் நஷ்டத்தை சந்தித்தான். கிழங்கு பெருக்காமல் எடையற்று இருந்ததால் விற்பனையாகாமல் அனைத்தும் வீணாயின.
இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட வரதராசன் ஒரு நாள் முகுந்தனைப் பார்த்தான்.
“முகுந்தா, எனக்கு பணம் அவசரமாகத் தேவைப்படுது. உடனே பணம் வேணும். கொஞ்ச மாசமா வட்டிகூட சரியா நீ தரல. இப்ப உடனே வட்டியோட அசலையும் கொடு’’ என்றார்.
பணம் திருப்பித் தர இயலாமல் முகுந்தன் தவித்தான்.
ஆனால், வரதராசன் விடவில்லை. நாள்தோறும் அவனிடம் பணம் கேட்டார். ஒரு கட்டத்தில் மிரட்டவும் ஆரம்பித்துவிட்டார்.
“பணம் கொடுக்கலைன்னா போலீசில் சொல்லி, உன்னைக் கம்பி எண்ண வைச்சுடுவேன். மரியாதையா பணத்தைக் கொடு. இல்லாட்டி உன் நிலத்தை எழுதிக் கொடு’’ என மிரட்டினார்.
அவரது எண்ணமே அவனது நிலத்தை அபகரிக்க வேண்டும் என்பதுதானே!
முகுந்தன் பயந்து நடுங்கினான். வரதராசனைப் பார்க்கவே பயப்பட்டான். அவரைப் பார்ப்பதையே தவிர்த்தான். அவனுக்கு மேலும் தொல்லை கொடுக்க விரும்பிய வரதராசன் சோதிடர் ராமதேவனை சந்தித்து முகுந்தன் கையில் இருக்கும் சொச்ச பணத்திற்கும் செலவு வைத்து சுத்தமாக அவனை கடன்காரன் ஆக்குமாறு கேட்டுக்கொண்டார். அப்போதுதான் அவனது நிலத்தை எழுதி வாங்க வசதியாக இருக்குமென வரதராசன் நினைத்தார்.
அதற்கும் நல்ல வாய்ப்பு கிடைத்தது. முகுந்தன் மீண்டும் சோதிடர் ராமதேவனை சந்தித்தான்.
ராமதேவன் அவன் நிலைமையை எண்ணி வருந்துவதாகக் கூறினார்.
“முகுந்தா, கவலைப்படாதே. உன் கவலைகளும் கஷ்டங்களும் தீர ஒருவழி இருக்கு’’ என்றார்.
“என்ன வழி அய்யா? சொல்லுங்க. உடனே செய்றேன்’’ என்றான் முகுந்தன்.
“மாரியாத்தாளுக்கு வேண்டி தீ மிதித்து வழிபாடு செய். உன் கஷ்டங்கள் எல்லாம் அந்தத் தீயிலே கருகி காணாமல் போயிடும்’’ என்று உபதேசம் செய்தார் சோதிடர்.
அதை அப்படியே நம்பி தீ மிதித்தலுக்கு தடபுடலான ஏற்பாடுகளை கையில் இருந்த பணத்தை வைத்துக் கொண்டு செய்ய ஆரம்பித்தான் முகுந்தன். தினம் பணம் கேட்டு நச்சரித்த வரதராசன் பல நாட்களாக அவனைப் பார்க்க வரவில்லை. சுத்தமாக இவன் வீணான பின் நிலத்தை எழுதி வாங்கிவிடலாம் என்பது அவரது எண்ணம்.
தீ மிதிக்கும் நாள் வந்தது. வீட்டுத் தோட்டத்தில் இருந்த மரங்களையெல்லாம் வெட்டி காயவைத்து தீ மூட்டியிருந்தான் முகுந்தன்.
வேடிக்கை பார்க்க ஊர் மக்கள் திரண்டிருந்தனர். முகுந்தன் மனைவி தேவிக்கு உடல் நடுங்கியது. அவள் மனதில் ஏதோ ஒரு அய்யப்பாடு தோன்றியதாலும், முகுந்தனும் செய்வது சரிதானா என நினைத்தான்.
முகுந்தனும் தேவியும் கழுத்தில் மாலை போட்டுக் கொண்டனர். முகுந்தன் தலையில் கலசத்தையும் தோளில் தன் மகனையும் சுமந்து கொண்டான்.
மேள சத்தமும் மக்களின் ஆரவாரமும் அதிகரித்தது. தீயில் இறங்க தயாரானார்கள் முகுந்தனும் தேவியும்.
ஓரடி வைத்தபோது எதிரே நின்று கொண்டிருந்த வரதராசன் முகுந்தனின் கண்களில் தென்பட்டார். அவரைப் பார்த்தவுடன் நிலைதடுமாறிய முகுந்தன் கால் இடறி அப்படியே தீயில் மகனுடன் விழுந்தான். அனலில் துடித்தான். மக்கள் ஓடிவந்து அவர்களைத் தூக்கினர்.
சில நாட்கள் சென்றன. மருத்துவமனையில் மகனுடன் படுத்திருந்தான் முகுந்தன். தேவி கண்ணீருடன் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள்.
கணவனுக்கும் மகனுக்கும் உயிருக்கு ஆபத்தில்லை என்பது அவளுக்கு ஆறுதலாக இருந்தது.
“சோதிடத்தையும் பக்தியையும் நம்பி நான் ஏமாந்துவிட்டேன். இனிமேல் கண்டிப்பா அதுகள் நமக்குத் தேவையில்லை’’ என்று தேவியைப் பார்த்து மெல்லிய குரலில் சொன்னான் முகுந்தன்.
“கொஞ்ச நாளுக்கு முன்னாடியே இப்படி எனக்கு தோணுச்சு. நாம ஏமாந்துட்டோம். இனிமே அந்தச் சனியன்களை விட்டுட்டு நல்லபடியா இருப்போம். உழைச்சி கடனை அடைப்போம். நீங்க கவலைப்படாதீங்க’’ என்று ஆறுதல் கூறினாள் தேவி.
அதை ஆமோதிப்பதுபோல் தலையசைத்தான் முகுந்தன்.