கி.வீரமணி
தென்னார்க்காடு மாவட்ட தி.க. செயலாளர் துரை.சந்திரசேகரன், வடலூர் கே.வி.நாராயண சாமி_லீலாவதி ஆகியோர் மகள் கலைச்செல்வி ஆகியோர் மணவிழா 07.08.1983 ஞாயிறு அன்று மாலை 4.30 மணியளவில் குறிஞ்சிப்பாடி பார்வதி அம்மாள் திருமண மண்டபத்தில் என்னுடைய தலைமையில், அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் என் இராசாங்கம் முன்னிலையில் நடைபெற்றது.
மணமக்கள் மோதிரம் மாற்றிக் கொண்டு மாலை அணிவித்த பின் நான் திருமணத்தின் சிறப்புக் குறித்து இரண்டு மணிநேரம் உரையாற்றினேன்.
“சந்திரசேகர் அவர்கள் நமது இயக்கத்தின் தீவிரமான செயல்வீரர், அதேபோல் மணமகள் கலைச்செல்வியின் தந்தை நாராயணசாமி அவர்களும், அவரது தாயரும் நீண்டகாலமாக இயக்க ஈடுபாடு கொண்டவர்கள். கழக நிகழ்வுகளில் தவறாது கலந்துகொள்ளக் கூடியவர்கள்.
மணமகள் கலைச்செல்வி மணவிலக்குப் பெற்றவர். சந்திரசேகர் அவர்கள், தான் பிரச்சாரம் செய்யும் கொள்கைகளைத் தன் வாழ்க்கையிலே கடைபிடித்து வருபவர். அதை இந்தத் திருமணத்தின் மூலம் செய்துள்ளார். பெண்ணடிமைத்தனம் கூடாது என்ற சுயமரியாதைக் கொள்கையின் உந்துதலின் விளைவே இத்திருமணம்.
“தனிமனித சொத்துரிமையும், மதக் கோட்பாடுகளுமே பெண்ணடிமைத்தனத்திற்குக் காரணம். வள்ளுவரால்கூட பெண்ணடிமைத் தனத்தை விடமுடியவில்லையே! அப்படிப்பட்ட நிலையை அடித்து நொறுக்கி வாழ்நாளில் வெற்றிகொண்டவர் தந்தை பெரியார். பெண்களே பெண்ணடிமை நிலைக்குக் காரணமாக இருக்கிறார்கள் என்பதுதான் பெரும் வேதனைக்குரிய உண்மை!’’ என பல்வேறு செய்திகளை எடுத்துக் கூறினேன். விழாவில் ஏராளமான கழகத் தோழர்களும் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
08.08.1983 அன்று சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் நடந்த ஈழத் தமிழர்கள் பாதுகாப்புக் கூட்டத்தில் நான் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினேன். “குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் போன்ற இளைஞர்கள் சரித்திரத்திலே இருபதாம் நூற்றாண்டுக்கான இளம் சிங்கங்கள் வீரர்கள் அவர்கள்.’’
குட்டிமணி அவர்கள், “நான் இறந்த பிறகு என் கண்களை எடுத்து ஒரு கண்ணில்லாத தமிழனுக்குக் கொடுங்கள். அவன் பார்வை பெறட்டும். அந்த பார்வை மூலமாக சுதந்திர மண்ணாக என்னுடைய மண் மலர இருப்பதை நான் பார்த்து மகிழ இருக்கிறேன். தான் உயிரோடு இல்லாவிட்டாலும்கூட’’ என்று அவர் உணர்ச்சியோடு சொன்னார்.
அதை மனதில் வைத்துக்கொண்டு சிங்கள வெறியர்கள் சிறைச்சாலையைத் திறந்து வெளியே கொண்டுவந்து நிறுத்தி அடித்துக் கொன்று முதலிலே அவருடைய கண்களை கீழே போட்டு காலால் நசுக்கினார்கள். இத்தகைய கொடுமைகளைக் களைய தமிழ்ப் பெருமக்களை நாங்கள் கட்சி வேறுபாடு இல்லாமல் வேண்டிக் கொள்கிறோம்’’ என்று உணர்வு பொங்க வேதனையால் நெஞ்சுவேகப் பேசினேன். 11.08.1983 அன்று திருச்சி டவுன் ஹாலிலும், 12.08.1983 அன்று மதுரையிலும் திராவிடர் கழகம் நடத்திய ஈழத் தமிழர்கள் படுகொலை கண்டனக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றினேன்.
16.08.1983 அன்று ‘விடுதலை’யின் முதல் பக்கத்தில் “அச்சம் என்பது மடமையடா!’’ என்ற தலைப்பில் முக்கிய அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தேன். அதில், “நமது மத்திய கழக முடிவின்படி, ஆகஸ்ட் 15அய் துக்க நாளாக கொண்டாடுங்கள். அன்று இல்லங்களில் கருப்புக் கொடி ஏற்றி, கருப்புச் சின்னமணிந்து ஈழத்தில் நமது தமிழ்ச் சகோதர, சகோதரிகளுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு துயர உணர்வினைக் காட்டுங்கள்’’ என்ற வேண்டுகோளினை ஏற்று 3 ஆண்டுகள் தண்டனை என்று தமிழ்நாடு அரசு சென்ற ஆண்டு (தேவையில்லாதது) நிறைவேற்றிய கருப்புச் சட்டத்தினைக் கண்டு அஞ்சாது, துணிந்து செயல்பட்ட அத்துணைக் கழகத் தோழர்கட்கும், கட்சிக் கண்ணோட்டம் பாராது கருப்புச் சின்னம் அணிந்த அத்துணை இன உணர்வுமிக்க தமிழர்கட்கும் நமது உளப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொண்டேன்.
17.08.1983 அன்று திராவிட இயக்கத்தின் அழுத்தமான கொள்கை வீரரும் _ தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களின் இயக்கத்தில் முழுமையாக தன்னை ஒப்படைத்துக் கொண்டவருமான மதியழகன் அவர்கள் காலை மறைவுற்றார் என்ற செய்தி கேட்டு நான் மிகவும் துயரம் அடைந்தேன். ‘விடுதலை’யின் முதல் பக்கத்தில் இரங்கல் அறிக்கையும், கண்ணீர் மல்க இறுதி மரியாதையும் செலுத்தினேன்.
18.8.1993 அன்று வியாழன் காலை 9 மணி அளவில் நாடார் திருமண மண்டபத்தில் குடந்தை நகர தி.க. தலைவர் எஸ்.தெட்சிணாமூர்த்தியின் செல்வன் ஆசைத்தம்பிக்கும், வைத்தீஸ்வரன்கோயில் த.இராமசாமி அவர்களின் செல்வி செந்தாமரைக்கும் என்னுடைய தலைமையில் திருமணம் நடைபெற்றது. என்னுடன் மணமக்களைப் பாராட்டி கவிஞர் சுரதா, ஆசிரியர்கள் பொன்முடி, சபாபதி, கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி, மாவட்டத் தலைவர் ஆர்.பி.சாரங்கன், செயலாளர் கோ.தங்கராசு மற்றும் கழகத் தோழர்கள் பலரும் மணமக்களை வாழ்த்தி உரையாற்றினர். விழாவில் எஸ்.தெட்சிணாமூர்த்தி நன்றி தெரிவித்தார். விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். மணமக்களை வாழ்த்தி சுமார் ஒரு மணிநேரம் உரையாற்றினேன்.
21.08.1983 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மடிப்பாக்கத்தில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு ஈழத்தமிழர் படுகொலைக்கு எதிரான கண்டன உரையாற்றினேன். அப்போது,
ஆசிரியர் கி.வீரமணி.
“தமிழர்கள் கொடூரமாகத் தாக்கப்படுகிறார்கள். துப்பாக்கிக் சூட்டுக்கு ஒரு வயது குழந்தை துடிதுடித்து மாண்டது! நான்கு வயது குழந்தை கருகிச் செத்தது! திரிகோணமலையில் தமிழ் மக்கள் படும் சித்திரவதையை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. திரிகோணமலை மாவட்ட அமைச்சர் நெல்சன் இந்த நிலை நீடிக்குமானால் நான் என் திரிகோணமலை மாவட்ட அமைச்சர் பதவியை மட்டுமல்ல; என்னுடைய எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்ய தீர்மானித்துவிட்டேன்’’. என்று அறிவிப்பு செய்திருக்கிறார். இப்படி எண்ணற்ற ஈழத்தமிழர் படுகொலைக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர் என்பதை கண்டன குரலாக தமிழகம் கொதித்து எழவேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்தேன். பொதுக்கூட்டம் அல்ல; மாநாடு போல் மக்கள் திரண்டிருந்தனர்.
தந்தை பெரியார் ஆர்வலர் பொறியாளர் ஞானசுந்தரம் எம்.ஈ., அவர்களால் மடிப்பாக்கத்தில் உருவாக்கப்பட்ட பெரியார் மய்யம் திறப்பு விழா 21.08.1983 ஞாயிறு அன்று மாலை பக்தர்கள் அஞ்சி நடுங்கும் இராகுகால நேரத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பொறியாளர் ஞான.சுந்தரம் பெரியார் _ மணியம்மை கல்வி அறப்பணிக் கழகத்திற்கு நன்கொடையாக ரூபாய் அய்யாயிரத்திற்கான காசோலையை வழங்கினார்.
காசோலையைப் பெற்றுக் கொண்ட பெரியார்_மணியம்மை கல்வி அறப்பணிக் கழகத்தின் தலைவர் என்ற முறையில், தோழர் ஞான.சுந்தரத்தின் கொள்கை உள்ளத்தையும், பொதுநல உணர்வையும் பாராட்டும் வகையில் புத்தாடை போர்த்தி அவரது தொண்டுகளைப் பாராட்டிப் பேசினேன்.
22.08.1983 அன்று கொழும்பு சிறையிலே படுகொலை செய்யப்பட்ட ஈழவிடுதலை வீரர் குட்டிமணி, ஜெகன், தங்கதுரை ஆகியோரின் குடும்பத்தினரான மதிவாணன் (குட்டிமணியின் மகன்), கரிகாலன் (தங்கதுரையின் மகன்), ஜானகி அம்மாள் (தங்கதுரையின் தாயார்), சிறுமி மதுமதி (குட்டிமணியின் மகள்), நவமணி (தங்கதுரையின் துணைவியார்) ஆகியோரை கவிஞர் சிகாமணி வீடு சென்று சந்தித்து ஆறுதல் கூறிவந்தேன்.
23.08.1983 அன்று தோழர் நெடுமாறனுக்கு வரவேற்பு. இலங்கைக்கு தியாகப் பயணம் நடத்திய “மாவீரன்’’ நெடுமாறனுக்கு தியாகப் படைக்கு தலைமை ஏற்று _ வரலாற்று சிறப்புமிக்க பயணத்தை நடத்திக் காட்டியதற்கு சென்னை பெரியார் திடலில் அவர்களை வரவேற்று 23.08.1983 அன்று கழகத்தின் சார்பில் ஆடை போர்த்தி பாராட்டினைத் தெரிவித்தேன். அவருடன் தி.சு.கிள்ளிவளவன், எம்.கே.டி. சுப்பிரமணியம் ஆகியோரும் வந்திருந்தனர்.
ஈழவிடுதலை வீரர்கள் குட்டிமணி,ஜெகன்,தங்கதுரை குடும்பத்தினருடன் ஆசிரியர் அவர்கள்.
“ஈழ மாணவர் கல்விப் பிரச்சினை குறித்து மத்திய, மாநில அரசுகட்கு வேண்டுகோள்’’ அறிக்கை ‘விடுதலை’யில் 24.08.1983 அன்று வெளியிட்டேன். இலங்கை கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த படிக்கும் வயதுள்ள பிள்ளைகள் ‘டூரிஸ்டு விசா’வில் தமிழகம் வந்துள்ளார்கள். இந்த மாணவர்களை இந்தியாவில் உள்ள கல்விக் கூடங்களில் சேர்க்க வேண்டுமானால் அவர்கள் ‘ஸ்டூடன்ஸ் டூரிஸ்டு விசா’ கொடுக்க வேண்டும். தற்போது இந்த ‘விசா’ வேண்டுமானால், இந்தியா வந்துள்ள இந்த மாணவர்கள் மீண்டும் இலங்கை சென்று, அங்குள்ள அரசிடம்தான் அதைப் பெற்று வரவேண்டும். இன்றுள்ள சூழ்நிலையில் இது சாத்தியமில்லை. ஒரு அசாதாரண நிலை என்பது எல்லோருக்கும் தெரிந்த நடைமுறை உண்மையாகும்.
எனவே, இந்திய நடுவண் அரசு _ இலங்கையிலிருந்து தப்பிப் பிழைத்தோம் என்ற முறையில் இந்தியா வந்து சேர்ந்துள்ள ஈழத் தமிழர்களின் பிள்ளைகள் இந்தியக் கல்விக் கூடங்களில் எந்தவிதத் தடையும் இல்லாமல் சேர்ந்திட சட்டவிதிகளைத் திருத்துமாறு கேட்டுக்கொண்டேன்.
அய்ரோப்பிய நாடுகள் பல சென்று அய்யாவின் கொள்கைமணம் பரப்ப இங்கிலாந்து நாட்டிலும், பிரான்ஸ் நாட்டிலும், ஜெர்மனி நாட்டிலும் வாழும் இன உணர்வுமிக்க தமிழ் சகோதர, சகோதரிகளின் அன்பழைப்பை ஏற்று 26.08.1983 மற்றும் செப்டம்பர் 17, 18 தேதிகளில் நடைபெறும் திரு.வி.க. நூற்றாண்டு, தந்தை பெரியார் பிறந்த நாள் விழாக்களிலும் கலந்துகொள்வதற்காக 24.08.1983 அன்று மாலை 6 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்றேன்.
அய்ரோப்பிய நாடுகளுக்கு ஒரு மாதகால சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிற என்னை வழியனுப்பு விழாவை கழகத் தோழர்களும் நண்பர்களும் நடத்தினர்.
தமிழகம் முழுவதும் கழகத் தோழர்கள் அணிவித்த மாலைகளுடன், துண்டுகளும் மலைபோல் குவிந்தன.
ஜனார்த்தனம் எம்.எல்.சி., மணவைத் தம்பி எனக்கு மாலை அணிவித்தனர். என்னுடன் கா.மா.குப்புசாமி, மதுரை மாநகர கழகத் தலைவர் தேவசகாயம், சுபா.சுந்தரம், ஆகியோர் வந்தனர்.
லண்டன் போய் சேருவதற்கு முன்பாக, லண்டன் செல்லும் வழியில் பம்பாய் விமான நிலையத்தில் பம்பாய் திராவிடர் கழகம், தி.மு.க., பகுத்தறிவாளர் கழகம், தாராவி தி.மு.க., ஓர்லி தி.மு.க., பாந்தரா தி.மு.க., தி.மு.க. இலக்கிய அணி ஆகிய அமைப்புகள் சார்பாக மலர்மாலைகள், கைத்தறி துண்டுகள் அணிவித்தார்கள். சிறப்புமிக்க வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பை ஏற்றுக்கொண்டு நன்றியுரை ஆற்றினேன்.
பாரீஸ் விமான நிலையத்தில் தமிழக குடும்பங்கள் வந்திருந்து அன்பான வரவேற்பை அளித்தார்கள். தமிழக முன்னேற்றக் கழகத் தலைவர் நாகதேவன், செயலாளர் தேவதாசன், துணைத் தலைவர் சுந்தரம், துணைச் செயலாளர் ரத்தினம் மற்றும் ராமசாமி, வீசிங்கம், வடிவேலு, இராயகுமார், புருஷோத்தமன், புலவர் மாயவன், தியாகராசன், சந்திரபாபு, ‘அம்பேத்கர் நினைவு டிரஸ்டின்’ முக்கிய பொறுப்பாளர் சக்கரவர்த்தி, என்னுடைய மைத்துனர் ஜெயம் மற்றும் தோழர்கள் வரவேற்றனர்.
தமிழ் விடுதலைக் கூட்டணி _ லண்டன் கிளையைச் சார்ந்த அமீர். காண்டீபன் (தமிழ் அய்க்கிய முன்னணித் தலைவர் அமிர்தலிங்கம் அவர்களின் மகன்) உமாமகேஸ்வரன் ஆகியோரும் என்னை சந்தித்துப் பேசினர்.
நான் லண்டன் சேர்ந்தவுடன் ‘விடுதலை’ அலுவலகத்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலமாக வந்துசேர்ந்த செய்தியை தோழர்களுக்கு தெரிவிக்குமாறு சொன்னேன்.
27.08.1983 அன்று லண்டன் நகரில் நடைபெற்ற திரு.வி.க. நூற்றாண்டு மலரை தோழர் அரங்க.முருகையன் வெளியிட, முதல் பிரதியை நான் பெற்றுக்கொண்டேன்.
லண்டன் _ திருவள்ளுவர் பள்ளியில் நடந்த திரு.வி.க. நூற்றாண்டு விழாவில் நான் கலந்துகொண்டு உரையாற்றினேன். தமிழர் குடும்பங்கள் பெருமளவு கலந்துகொண்டனர்.
29.8.1983 அன்று கொள்கைப் பிரச்சாரம் மேற்கொள்ள லண்டன் சென்று இருந்த நான் கழகத் துணைப் பொதுச்செயலாளருக்கு கடிதம் எழுதியிருந்தேன். கழகப் பணிகள் செம்மையாக நடைபெறவும், கல்வி நிறுவனங்களில் ‘அட்மிஷன்ஸ்’ குறித்தும், லண்டனில் சிறப்புடன் நடைபெற்ற விழாக்கள் குறித்தும் விளக்கி அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டேன்.
“இந்த ஆண்டு நமது அறிவு ஆசான் தந்தை பெரியாரின் பிறந்த நாளை பாரீசில் நானும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரும் கலந்து கொண்டு இங்குள்ள தோழர்களுடன் சிறப்பாகக் கொண்டாடும் நல்வாய்ப்பைப் பெற்றிருக்கின்றோம். நமது தோழர்கள் அனைவரும் அய்யா அவர்களின் பிறந்த நாளில் கலந்துகொண்டு சிறப்புடன் கொண்டாட வேண்டும்’’ என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
16.09.1983 அன்று பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீசு நகரத்தில் தமிழீழ விடுதலை அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நானும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களும் கலந்துகொண்டோம். நிகழ்ச்சிக்கு ஏராளமான தமிழன்பர்கள், இளைஞர்கள் வந்திருந்தனர்.
தந்தை பெரியார் அவர்களின் படத்தை நான் திறந்து வைத்தேன். நிகழ்ச்சி தியேட்டர் சணலா மண்டபத்தில் நடைபெற்றது. (இங்குதான் முன்பு பாரதி விழாவும் நடைபெற்றது) நிகழ்ச்சியில் இனவுணர்வு கொண்ட தமிழர்கள் ஏராளமாக குடும்பம் குடும்பமாக கலந்துகொண்டார்கள்.
தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் 17.09.1983 அன்று மாலை பாரீசு நகரத்தில் தந்தை பெரியார் அவர்களின் மார்பளவு சிலையை பாவலரேறு பெருஞ்சித்திரனார் திறந்து வைத்தார்.
இந்த சிலை உலகப் புகழ்பெற்ற ‘ஜார்ஜ் பம்பைடு தேசிய நூலகம்’ _ அருங்காட்சியத்திற்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. கார்ல் மார்க்ஸ் போன்ற உலகப் புகழ் பெற்ற முக்கிய தலைவர்களின் சிலை இந்த காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. தந்தை பெரியாரின் சிலையும் அங்கு வைக்கப்பட்டது.
அதன் பிறகு பிற்பகல் 1 மணிக்கு (லண்டன் நேரம்) பாரீசிலிருந்து லண்டன் சென்றோம். அங்கு 19.9.1983 அன்று இலங்கை தமிழர் அய்க்கிய முன்னணித் தலைவர் அமிர்தலிங்கம் அவர்களும் நானும் சந்தித்துப் பேசினோம் என்பது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.
பின்பு லண்டனில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் நாங்கள் இருவரும் கலந்துகொண்டோம்.
விழாவில் தந்தை பெரியார் படத்தை தமிழ் அய்க்கிய விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம் திறந்து வைத்து தந்தை பெரியாரின் தொண்டுகளைப் பற்றியும், தமிழ் ஈழ விடுதலை பற்றியும், இந்தியாவின் தூதர் ஜி.பார்த்தசாரதி ஜெயவர்த்தனேயுடன் தாம் நடத்திய பேச்சு வார்த்தைகள் பற்றியும் விளக்கி உரையாற்றினர்.
விழாவில் கேள்வி பதில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டத்தினர் கேட்ட கேள்விகளுக்கு அமிர்தலிங்கம் பதிலளித்துப் பேசினார். அவரைத் தொடர்ந்து நானும் உணர்ச்சிபூர்வமான உரையை ஆற்றினேன்.
19.09.1983 அன்று லண்டன் ‘பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன்’ (ஙி.ஙி.சி) தமிழோசை நிகழ்ச்சிக்கு திரு.தி.சங்கரமூர்த்தி அவர்கள் என்னை பேட்டி கண்டார். அப்பேட்டியில், “தந்தை பெரியார் ஆலமரத்தின் விழுதுகள் நாங்கள். நான் இந்த இயக்கத்தின் தொண்டர்களுக்கெல்லாம் தொண்டன். பெரியார் இந்தியாவைத் தாண்டி உலகத்தவரால் பின்பற்றப்படுகிறார்’’ என்று குறிப்பிட்டேன்.
அதனைத் தொடர்ந்து 20.9.1983 அன்று ‘அம்பேத்கர் மிஷன்’ அமைப்பைச் சார்ந்த தமிழர்கள் ஏற்பாடு செய்திருந்த விழாவில் நான் கலந்துகொண்டு உரையாற்றினேன்.
தொடர்ந்து லண்டன் நகரில் நடைபெற்ற லண்டன் பகுத்தறிவாளர் சங்கம் (ழிணீtவீஷீஸீணீறீ ஷிமீநீuறீணீக்ஷீ ஸிமீபீ ஷிஷீநீவீமீtஹ்) ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினேன்.
உலக நாத்திகத் தலைவர்களில் ஒருவரான சார்லஸ் பிராட்லா அவர்களால் உருவாக்கப்பட்டது இந்த அமைப்பு.
இந்த சிறப்பான நிகழ்ச்சி லண்டன் நகரில் உள்ள “ரெட் ஸ்கொயர்_கான்வே’’ மன்றத்தில் (ஸிமீபீ ஷிஹீuணீக்ஷீமீ சிஷீஸீஷ்ணீஹ் லீணீறீறீ) நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு திருமதி மார்பரா தலைமை தாங்கினார். சார்லஸ் பிராட்லாவின் 150ஆவது பிறந்த நாள் செப்டம்பர் மாதம் வருவதை ஒட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆசிரியர் அவர்களும் இலங்கை தமிழர் அய்க்கிய முன்னனித் தலைவர் அமிர்தலிங்கம் அவர்களும் உரையாடும் காட்சி.
பிராட்லா அவர்களின் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியிலும் நான் கலந்து கொண்டு பின் நிகழ்வில் உரையாற்றினேன். தந்தை பெரியார் அவர்களின் நாத்திக கொள்கைகளையும் சிந்தனைகளையும் மனிதாபிமானக் கொள்கைகளையும் விளக்கி உரையாற்றினேன். உலகப் புகழ்வாய்ந்த இந்தப் பகுத்தறிவு சங்கத்திற்கு தந்தை பெரியார் படத்தையும், அய்யாவின் நூல்களையும் நான் அன்பளிப்பாக வழங்கினேன்.
கேள்வி _ பதில் நிகழ்ச்சியும் 3 மணி நேரம் நடைபெற்றது. மனிதாபிமான சங்கத்தைச் சேர்ந்தவர்களும் (பிuனீணீஸீவீst கிssஷீநீவீணீtவீஷீஸீ) ஆந்திர நாத்திகர் கோராவுடன் மகன் லவணனும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ‘அம்பேத்கர் மிஷன்’ அமைப்பைச் சார்ந்த தோழர்களும் கலந்துகொண்டனர்.
21.9.1983 அன்று ‘ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்’ பகுதியில் பிரிட்டிஷ் லேபர் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த விழாவில் நானும் கலந்துகொண்டு உரையாற்றினேன்.
லேபர் கட்சியைச் சார்ந்த இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் என்னை சந்தித்து உரையாடும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பதும், லண்டன், பாரீசு உள்ளிட்ட நகரங்களில் என்னுடைய பயணம் கொள்கைப் பயணமாக அ¬மைந்தது.
அய்யாவின் கருத்துகளை அய்ரோப்பிய நாடுகளில் புகழ்பரப்பி வெற்றியுடன் திரும்பிய என்னை சென்னை விமான நிலையத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து வரவேற்றார். 29.09.1983 அன்று விமான நிலையத்தில் கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக வந்திருந்து என்னை வரவேற்றார்கள். கழகக் குடும்பங்களின் அன்பு வெள்ளத்திலும், மறைந்த ஈழ விடுதலைப் போராளிகள் தங்கதுரை, குட்டிமணி குடும்பத்தாரின் சார்பிலும் எனக்கு மாலை அணிவித்து வரவேற்றார்கள் என்பதை நினைக்கும்போது உணர்வு மெய்சிலிர்க்கிறது.
02.10.1983 அன்று சென்னை பெரியார் திடலில் மண்டல் குழு பரிந்துரையை அமல்படுத்தக் கோரி நடக்கும் ஆர்ப்பாட்டத்தை விளக்கி நடந்த அனைத்துக் கட்சி பொதுக்கூட்டத்தில் நான் கலந்துகொண்டு உரையாற்றினேன்.
நாத்திகர் சார்லஸ் பிராட்லா சிலை அருகில் ஆசிரியர்.
அய்ரோப்பிய நாடுகளில் வெற்றிகரமாக சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய எங்களுக்கு ‘பெரியார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக்’ சார்பாக 06.10.1983 முற்பகல் 11.30 மணிக்கு மிகச் சிறப்பான அளவுக்கு வரவேற்புக் கொடுத்தார்கள்.
நான் உரையாற்றினேன். தமிழ் மக்களுடைய வாழ்வு, நாகரீகம், பொருளாதாரம், கலாச்சாரம் ஆகியவைகளை மேலைநாட்டுடன் ஒப்பிட்டுக் காட்டியும், குறிப்பாக பெண்களுடைய நிலைமை நமது நாட்டிற்கும், மேலை நாட்டிற்கும் எவ்வாறு மாறுபட்டிருக்கிறது என்பதனை விளக்கி மிகச் சிறப்பான அளவுக்கு பேசினேன்.
06.10.1983 அன்று தஞ்சையில் நடந்த ஈழத் தமிழர் கண்ணீர் கண்காட்சித் திறப்பு மற்றும் பாராட்டு விழாக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன். சிதம்பரத்தில் 7.10.1983 அன்று இரவு 7.35 மணிக்கு ஈழத் தமிழர்களின் கண்ணீர்க் கதை புகைப்படக் கண்காட்சியை நான் துவக்கி வைத்து உரையாற்றினேன்.
“உலகத்திலேயே எந்தவிதத்திலும் நாதியற்றுக் கிடக்கின்ற இனம்தான் நமது பாராண்ட தமிழ் இனம்.
இங்கே ஈழத் தமிழர்களுடைய கண்ணீர்க் கதையை புகைப்படமாக வைத்திருக்கிறார்கள். இதை ஒவ்வொரு தமிழனும் அவசியம் பார்க்க வேண்டும். தமிழர்கள் ஆகிய நாம் எந்த தியாகத்துக்கும் தயாரானவர்களாக இருக்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டேன்.
‘தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் கமிஷன்’ தலைவர் அம்பாசங்கர் அவர்கள் 06.10.1983 அன்று எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதம் 08.10.1983 அன்று ‘விடுதலை’யின் முதல் பக்கத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழில் வெளியிட்டிருந்தோம்.
“கமிஷனைப் பற்றி எந்தத் தவறான எண்ணத்தையும் களைவதற்கு நான் விரும்புகிறேன். அதோடு, கமிஷன் இந்திய அரசியல் சட்ட ஷரத்துகள் 15(4), 16(4) பிரிவுகள், அது சம்பந்தப்பட்ட அரசியல் சட்டப் பிரிவுகள் மற்றும் இந்திய சுப்ரீம் கோர்ட் வழங்கிய பல்வேறு தீர்ப்புகளை கவனத்தில் கொண்டு, கமிஷனுக்கு வரையறுக்கப்பட்ட அலுவல் வரம்பு விதிகளில் குறிப்பிட்டுள்ளதைப் போல கமிஷன் கண்டிப்பாக செயல்படும் என்றும் தங்களுக்கு உறுதி கூறுகிறேன்’’ என்று அந்தக் கடிதத்தில் எனக்கு உறுதி கொடுத்திருந்தார்.
பீகார் மாநில தலைநகரான பாட்னாவில் நடைபெற்ற தாழ்த்தப்பட்டோர் மலைவாழ் மக்களின் உரிமைக் காப்பு மாநாட்டில் 09.10.1983 அன்று நான் கலந்துகொண்டு எழுச்சிமிகு உரையாற்றினேன். பெரியார், நாம் எப்படி கீழ்ஜாதி? யாரால் தாழ்த்தப்பட்டோம்? ‘எவை’ எவை இதற்கு மூல காரணங்கள் என்று சிந்தியுங்கள். அப்போது தான் உங்களது இழிவுக்கு மூலக் காரணம் என்னவென்பது புரியும்’’ என்று கூறினார்.
நாளை நாம் முடிவு செய்து ஏர்பிடிக்க மாட்டோம்; நகரச் சுத்திப் பணியை செய்ய மாட்டோம்; முடிதிருத்த மாட்டோம்; வீடு கட்ட மாட்டோம் என்று வேலை நிறுத்தம் செய்துவிட்டால் சமூகம் நடக்க முடியுமா? அதே உயர்ஜாதிப் பார்ப்பனர்கள். அதற்குப் போட்டியாக வேலை நிறுத்தம் செய்தால் என்ன நடந்துவிடும்? எது நின்றுவிடும்? யோசித்துப் பாருங்கள். மாறாக நம்மைப் பிடித்த பீடை ஒழிந்துவிடும். நமக்கு பீடித்த சமுதாயத் தொல்லை நின்றுவிடும். இப்படிப்பட்ட தெளிவும் துணிவும் உங்களுக்கு இருந்தால் ஒழிய, ஜாதியை தீண்டாமையை ஒழிக்க முடியாது. தீண்டாமை ஒழிந்துவிட்டதா? சுதந்திரம் வந்து 35 ஆண்டுகள் ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்திய அரசியல் சட்டத்தில் 17ஆவது பிரிவில் தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்று எழுதியுள்ளது. ஜாதி ஒழிக்கப்படவில்லை.
(நினைவுகள் நீளும்…)