வாசகர் மடல்!

ஆகஸ்ட் 01-15

 

விழிப்புணர்வு விடிவெள்ளி

 உண்மை

 

சமுதாய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் உயர்திரு. உண்மை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.

தங்களின் இதழில் வெளிவந்த, “ஏரி காத்தான்’’ என்ற சிறுகதை ஆசிரியர் திரு.ஆறு.கலைச் செல்வன் அய்யா அவர்கள் நமக்கு ஏற்படும் இடர்ப்பாடுகளை நீக்க நாமே களத்தில் இறங்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார். இறைவனால் ஆபத்து விலகிவிடும் என்று முயற்சியே இல்லாமல் முட்டாள்தனமாகச் செய்யும் செயல்பாடுகள் பேராபத்தை ஏற்படுத்துவது உறுதி என தெளிவுபடுத்தியுள்ளார்.

அடுத்து ‘குலமா? குணமா?’ என்ற சிறுகதையில் ஜாதி முக்கியமல்ல. மனிதாபிமானமே சிறந்தது என நிரூபித்துள்ளார்.

மேலும் ‘பூசை அறை’ என்ற சிறுகதையில்,   தற்போதுள்ள மாணவச் சமுதாயம் முன்னேறுவதற்கு நூலகம் எவ்வளவு இன்றியமையாத ஒன்று என தெளிவுப்படுத்தியுள்ளார். போட்டித் தேர்வுகளே நிறைந்துள்ள இந்தச் சமுதாயத்தில் ஒவ்வொரு மாணவரையும் பலதரப்பட்ட அறிவுச் சார்ந்த நூல்களே மிக உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்கிறது என்பதை நிரூபித்து இக்காலச் சூழ்நிலையை விளக்கி மாணாக்கனின் சமுதாயம் உயர ஒரே வழி, சிறந்த வழி நூலக வழி ஒன்றே என தெளிவுப்படுத்தி மாணவச் சமுதாயம் மலர, சிறந்த மாற்றத்தினை அடைய வழிகாட்டிய இக்கதையின் ஆசிரியர் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்!

உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியின் விடிவெள்ளியாக விழிப்புணர்வை பறைசாற்றும் உண்மை இதழின் ஆசிரியர் அவர்களுக்கு எண்ணிலடங்கா நன்றிகள் மற்றும் பாராட்டுகள்!

நன்றி! வணக்கம்!

– இரா.திலகம், பரங்கிப்பேட்டை

“உலகமே வியந்த மாநாடு’’

‘உண்மை’ இதழின் (ஜூலை 16-31, 2018) அட்டைப்படம் இன எதிரிகளை மிரள வைத்துள்ளது. திராவிட மாணவர் கழக மாநில மாநாட்டில் அணி அணியாக அணிவகுத்து நின்று சூளுரை மேற்கொண்ட மாணவர்களின் ஒளிப்படம் காண்போரை வியக்க வைத்தது.

பார்ப்பனர்களின் பித்தலாட்டப் பொய்ப் பிரச்சாரம் பிசுபிசுத்துப் போனதால் ஆசிரியர் அவர்கள் மீது பல்வேறு அவதூறுகளை அள்ளி வீசினர். ஆனால், பெரியாரிடம் முறையாகப் பயின்ற கழகத் தலைவர் அவர்கள் அவற்றையெல்லாம் புறந்தள்ளி உலகமே வியக்கும்வண்ணம் திராவிட மாணவர் கழக மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி மாணவர்களையும், இளைஞர்களையும் இன்பத்தில் திளைக்க வைத்தார்.மொத்தத்தில் வரலாற்றுப் பக்கங்களில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு சிறப்பு வாய்ந்த மாநாடாக, குடந்தையில் 8.7.2018 அன்று நடைபெற்ற திராவிட மாணவர் கழக மாநில மாநாடு சிறப்புற அமைந்தது என்பது நம் இயக்கத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

– சீ.லட்சுமி, திண்டிவனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *