“காசியபரின் மனைவியருள் கசை என்பவள் ஒருத்தி, அவள் கோபம், அசிங்கமான சொற்கள், பொறாமை, துவேஷம், அசுத்தி போன்ற சர்வ தீயகுணங்களும் நிரம்பியவள். அதனால் காசியபர் அவள் எப்போது எதை வேண்டினும் அதனை அருள்வார்.
தனக்குக் குழந்தை இல்லாததால் மற்றவர்கள் ஏச்சுக்கும், பேச்சுக்கும் காரணமாகி இருப்பதை எடுத்துக் கூறி தனக்குப் புத்திர பாக்கியம் அருள வேண்டினாள். அதன்படி அவள் கருவுற்றாள். முழு மாதங்கள் நிறைந்ததும் ஒருநாள் அந்தி வேளையில் ஒரு புத்திரனைப் பெற்றெடுத்தாள். அந்தப் பாலன் நான்கு கரங்கள், நான்கு கால்கள், இரண்டு தலைகள், உடல் முழுவதும் ரோமங்கள், பெரிய மூக்கு, ஒழுங்கற்ற காதுகள், பானை போன்ற வயிறு என அசிங்கமான உருவத்துடன் சிவப்பு நிறத்துடன் பார்ப்பதற்குப் பயங்கரமாய் காட்சி அளித்தான். அவன் பிறந்த சமயம் அசுர சந்திவேளை ஆகும்.
மறுநாள் காலை சந்தி வேளையில் மற்றொரு மகனை ஈன்றாள். அதுவும் அசுரவேளையே. அந்தப் பாலனுக்கு மூன்று தலைகள், மூன்று கண்கள், மூன்று கால்கள், மூன்று கைகள், பரட்டை தலை, பெரிய மீசை, கல்லால் அடித்தாலும் கலங்காத கடினமான உடல்; இரண்டு நாக்குகள் என்று ஒழுங்கற்ற உருவுடன் அண்ணனைப் போலவே பயங்கரமாய் விளங்கினான்.
ஒரே நாளில் அவர்கள் உருவம் பெரியதாக அவர்களுக்குப் பயங்கர பசி எடுக்க, பெரியவன் தாயையே தின்ன முயல, இரண்டாம் மகன் அதைத் தடுத்தான். இதனால் கோபம் கொண்ட இருவருக்கும் கடுமையான சண்டை ஏற்பட்டது.
அந்தச் சமயத்தில் அங்கு காசியபர் வர இருவரும் தாய் மடியில் சாதுவாகப் படுத்திருந்தனர். புத்திரர்கள் தாயின் குணங்களைப் பெற்று அம்மாவைச் சேவித்து உற்சாகப்படுத்துவர். பெண் தாய் தந்தையரை அனுசரித்து இருப்பாள் என்றார். அதுகேட்ட கசை பெரியவன் தன்னைத் தின்ன வந்ததையும், தம்பி தடுத்ததையும் கூறினாள்.
‘யக்ஷ’=தின்னுதல் என்ற பெயருடைய ‘யக்ஷன்’ என்ற பெயரைப் பெரியவனுக்கும், ரக்ஷ=காத்திடு; எனவே சின்னவனுக்கு ரக்ஷகன் என்றும் பெயரிட்டார். அவர்களுக்கு இரவில் காட்டு மிருகங்களின் மாமிசம், ரத்தமே உணவு என்று கூறிவிட்டு மறைந்து விட்டார்’’ என்று இந்து மதம் கூறுகிறது. பிறந்த குழந்தை ஒரே நாளில் பெரிய ஆளாக ஆகமுடியும் என்பது அறிவியலுக்கு எதிரான கருத்து. மூடக்கருத்து. இப்படிப்பட்ட மடமைக் கருத்தைக் கூறும் இந்து மதம் அறிவியலுக்கு அடிப்படையா?
கலப்பையைக் கொண்டு உயரத்தைக் குறைக்க முடியுமா?
குசஸ்தலீயைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த மனு வம்சத்தைச் சேர்ந்த மன்னன் குகுத்மி. அவனது மகள் ரேவதி.
மன்னன் தன் மகளுக்குத் திருமணம் செய்து வைக்க பெரும் பிரயத்தனம் மேற்கொண்டும் வரன் எதுவும் சரியாக அமையவில்லை. எனவே, நேரில் பிரம்மாவைக் கண்டு தன் பெண்ணுக்கு நிச்சயிக்கப்பட்ட வரனை அறிந்து கொண்டு மணம் முடிக்க எண்ணி பெண் ரேவதியையும் அழைத்துக் கொண்டு பிரம்மாவின் சத்தியலோகம் அடைந்தான்.
பிரம்மா தன் சபையில் வீற்றிருந்து தம்பூரா, வீணையுடன் கந்தர்வர்கள் பாடிக் கொண்டிருக்க அந்தச் சங்கீதத்தில் மூழ்கி அனுபவித்துக் கொண்டிருந்தார். மன்னன் குகுத்மி தன் மகள் ரேவதியுடன் காத்திருந்தான். சங்கீதம் முடிந்து சபை கலையும்போதுதான் குகுத்மியைக் கண்ட பிரம்மா அவர்கள் அங்கு வந்த காரணத்தைக் கேட்க, மன்னன் வந்த காரணத்தைக் கூறித் தன் மகளுக்கு ஏற்ற மணமகன் யார்? என்று வினவ பிரம்மா, “பூலோகத்தில் ஆதிசேஷன், பலராமன் என்ற பெயரில் பிறந்துள்ளான். அவனுக்கு உன் பெண்ணைக் கொடுத்துத் திருமணம் செய்து வை’’ என்றார்.
அது கேட்டு மகிழ்ச்சியுற்ற மன்னன் குசஸ்தலீ நகரம் திரும்பினான். இதற்குள் பல யுகங்கள் கழிந்திட ஊர் மிகவும் மாறி இருந்தது. மக்கள் எல்லாம் குள்ளமாகக் காணப்பட்டனர். ஆனால் மன்னனும், அவன் மகளும் சிறிதும் மாற்றமில்லாதிருந்தனர். பிரம்மலோகத்தில் உள்ளவர்களுக்கு முதுமையோ, மரணமோ ஏற்படுவதில்லை என்பதை ஏற்கெனவே அறிந்திருந்த அவன் பல யுகங்கள் கழிந்ததையும் உணர்ந்தான்.
பிறகு மன்னன் குகுத்மி, தன் மகள் ரேவதியுடன் துவாரகையை அடைந்து கிருஷ்ண பலராமர்களைச் சந்தித்து வந்த காரணத்தை விளம்பினான். பிரம்ம நிர்ணயப்படி பலராமனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டினான். ரேவதி முன் பலராமன் உருவில் சிறியவனாகக் காணப்பட கிருஷ்ணன் அறிவுரைப்படி பலராமன் ரேவதியைத் தனக்குச் சம உயரம் உடையவளாக தன் கலப்பையைக் கொண்டு மாற்றிவிட இருவர் திருமணமும் நடத்தி விட்டு குகுத்மி தவம் செய்ய கானகம் சென்றான்.
ஒருவருடைய உயரத்தைக் குறைக்க முடியாது என்பது அறிவியல். ஆனால், அறிவியல் உண்மைக்கு மாறாக உயரத்தைக் குறைத்தார். அதுவும் கலப்பையைக் கொண்டு குறைத்தார் என்று கூறுவது அறிவுக்குப் பொருந்தாத கருத்தல்லவா? அப்படியிருக்க இப்படிப்பட்ட செய்தியைக் கூறும் இந்துமதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையாகும்?
சோமரசத்தால் கரு உண்டாகுமா?
“அத்திரிமா முனிவர் மூவாயிரம் ஆண்டுகள் தவம் செய்து வர அவர் உடல் சோமரசமயம் ஆயிற்று. அவர் கண்களிலிருந்து சோமரசம் சிந்த ஆரம்பித்தது. அதைக் கண்ட பிரம்மதேவர் தேவதா ஸ்திரீகளை அழைத்து அந்த சோமரசத்தை அருந்தி கருவுறுமாறு கூறிட, அவர்களும் அவ்வாறே செய்து கருவுற்றனர். ஆனால், அதன் கனம் தாங்காமல் அவற்றை அவர்கள் கீழே நழுவவிட அவை கீழே விழுந்து உடனே ஒன்றாக இணைய சந்திரன் (சோமன்) உருவானான். பிரம்மா உடனே சந்திரனைக் கீழே விடாமல் தேரில் வைத்துக் கொண்டு செல்ல பிரம்மாவின் மானச புத்திரர்கள் வேத மந்திரங்களால் துதி செய்தனர். பிரம்மாவுடன், சந்திரன் அத்தேரிலிருந்து பூமண்டலத்தை இருபத்தொரு முறை சுற்றிவர ஓஷதிகள், வனஸ்பதிகள் (தாவரங்கள்) தோன்றி வளர்ந்தன. சந்திரன் தவம் செய்து தன் சக்தியை வளர்த்துக் கொண்டான். பிரம்மா சந்திரனை ஓஷத சாம்ராஜ்ஜியத்திற்குப் பட்டாபிஷேகம் செய்வித்தார்.
தக்ஷன் நட்சத்திரங்களான இருபத்தேழு பெண்களைச் சந்திரனுக்கு விவாகம் செய்து வைத்தான். சந்திரன் அரசாட்சி பெற்ற மமதையுடன் ஆங்கீரசர் ஆகிய முனிவர்களை எதிர்த்து பிரகஸ்பதியின் மனைவியாகிய தாராவை அபகரித்துச் சென்றான். ரிஷிகள், தேவர்கள் அவன் செய்வது அக்கிரமம் என்றும், தாரையை விட்டு விடுமாறும் அறிவுரை கூறினர். ஆனால், அவன் கேட்கவில்லை. அவனுக்கு உதவியாகச் சுக்கிராச்சாரியார் வர தேவாசுரப்போர் நடந்தது. இந்நிலையில் தேவர்கள் பிரம்மாவை நாடிப் போரை நிறுத்த வேண்டினர். பிரம்மாவும் தலையிட்டு போரை நிறுத்தி தாரையைத் தானே பெற்று பிரகஸ்பதியிடம் ஒப்படைத்தார். ஆனால், கருவுற்றிருந்த அவளை ஏற்க மறுத்தார் பிரகஸ்பதி. அக்கருவை விட்டு விட்டு வருமாறு கூறினார். அவள் அக்கருவை ஒரு மரத்தடியில் விட்டு விட்டாள். அக்கரு உடனே ஒரு சிறுவனாக மாறிட அதன் ஒளி, அழகு கண்டு தேவர்கள் வியப்புற்றனர். பின்னார் அக்குழந்தை சந்திரனுடையதே என்று தாரை கூறினாள். அக்குழந்தைக்குச் சந்திரன், புதனெனப் பெயரிட்டான்’’ என்கிறது இந்து மதம். சோம ரசத்தால் கருத்தரிக்கும் என்பதும்; வயிற்றுக் கருவை மரத்தடியில் இறக்கி வைத்த பின் அது சிறுவனாக மாறிற்று என்பதும் பைத்தியக்காரன் உளரல் அல்லவா? இப்படி அறிவற்ற கருத்துக்களைக் கூறும் இந்துமதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?
(சொடுக்குவோம்…)