வறுமையிலும் திறமைகாட்டி பன்னாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற இலக்கியா!

ஆகஸ்ட் 01-15

 பண்பாளன்

ஓசூரைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி முத்து இலக்கியா. தமிழக கைப்பந்து அணிக்காக தேசிய அளவில் பல்வேறு பதக்கங்களை குவித்துக் கொண்டிருப்பவர். இந்திய அணிக்கும் தேர்வாகி கடந்த 2018 மே மாதம் தாய்லாந்தில் நடந்த ஆசி அளவிலான ‘ஏசியா உமன்ஸ் கப்’ போட்டியில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வெல்ல காரணமாக இருந்தவர்.

சீனா, ஜப்பான், கொரியா என 12 நாடுகள் கலந்துகொண்ட ‘ஏசியா உமன்ஸ் கப்’ போட்டியில் அதிகப் புள்ளிகள் எடுத்து அத்தனை நாட்டு வீராங்கனைகளையும் பின்னுக்குத் தள்ளி ‘பெஸ்ட் அவுட் சைடு ஸ்ட்ரைக்கர்’ பட்டத்தையும் பெற்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்ந்துள்ளார் முத்து இலக்கியா.  ஆரம்பத்தில் ஓட்டப் பந்தயம், குண்டு எறிதல் என்று தடகளப் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்திவந்த முத்து இலக்கியாவை “நீ நல்ல உயரமாக இருக்கிறாய். அதனால் கைப்பந்து விளையாட்டில் நிறைய சாதிக்கலாம்’’ என்று கைப்பந்து விளையாட்டில் முத்து இலக்கியாவை திசைமாற்றி பயிற்சி அளித்திருக்கிறார் பயிற்சியாளர் லியோ.

கடந்த மூன்று ஆண்டுகளாக கைப்பந்து விளையாடி வரும் இவர் பயிற்சி தொடங்கிய 6 மாதங்களிலேயே ஆட்ட நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார். கிருஷ்ணகிரியில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களிடையே நடந்த போட்டிதான் இவருடைய முதல் போட்டி. அதில் சிறப்பாக விளையாடியதால் சேலத்தில் நடந்த மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி இருக்கிறார். அப்போட்டியில் முத்து இலக்கியா அணியே முதல் பரிசை வென்றது.

அடுத்தடுத்து மாநில அளவிலான போட்டிகளிலும் முத்து இலக்கியா சிறப்பாக விளையாடியதால் தமிழக கைப்பந்து அணிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தேர்வாகி இருக்கிறார். 2016ஆம் ஆண்டு ஆந்திராவில் நடந்த ‘ஸ்கூல் நேஷனல்ஸ்’ போட்டியில் தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.   மத்திய அரசு கடந்த ஆண்டு சென்னையில் நடத்திய தேசிய அளவிலான ‘கேலோ இந்தியா’ கைப்பந்து போட்டியிலும் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இந்த ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற ‘ஸ்கூல் நேஷனல்ஸ்’ போட்டியில் வெண்கலம், கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ‘நேஷனல் சப் ஜூனியர்’ போட்டியில் வெள்ளி என்று முத்து இலக்கியாவின் பதக்கப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

இவ்வளவு சிறப்புகளை இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் தேடித் தந்தாலும் முத்து இலக்கியாவின் குடும்பம் மிக ஏழ்மையானது. இவரது தந்தை வாடகை கார் ஓட்டுநராக உள்ளார். இவரது சகோதரி கல்லூரியில் படிக்கிறார்.

விளையாட்டில் மட்டுமல்ல,

படிப்பிலும் உயர்ந்த மதிப் பெண்களையே பெற்றுள்ளார். அரசு சுயஉதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் படித்து பத்தாம் வகுப்பில் 414 மதிப்பெண்களைப் பெற்றிருக்கும் முத்து இலக்கியா தற்பொழுது ‘செயின்ட் ஜான் போஸ்கோ’ பள்ளியில் தமிழ் வழியில் 12ஆம் வகுப்பு படிக்கிறார். வறுமையிலும் திறமையைக் கொண்டே வெற்றிகளைக் குவித்து வரும் முத்து இலக்கியா வெகு விரைவிலேயே கைப் பந்தாட்டத்தில் உலகளவில் நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிர்வார். அதற்கான தகுதியும் திறமையும் முத்து இலக்கியாவுக்கு நிறையவே உண்டு! ஏழைப்பெண்ணாலும் முடியும் என்பதற்கு இவர் ஓர் எடுத்துக்காட்டு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *