பாலுறவு வன்புணர்ச்சிக்கு பச்சிளம் குழந்தைகளும் குதறப்படும் கொடுமைகள்! உடனடித் தீர்வு கட்டாயம்!

ஆகஸ்ட் 01-15

 

 மஞ்சை வசந்தன்

அச்சு வடிவிலும் காட்சி வடிவிலும் அன்றாடம் வரும் செய்தியாக, சிறுமிகள் மீதான பாலுறவு வன்புணர்ச்சிச் செய்திகள் மாறிவருவது பதற்றத்தையும், ஆத்திரத்தையும், ஆவேசத்தையும் உருவாக்குகிறது.

7 மாத குழந்தை முதற்கொண்டு 70 வயது கிழவி வரை வன்புணர்ச்சிக்கு ஆளாகி சிதைக்கப்படும் கொடுமை இந்தியா முழுவதும் இன்று நடந்துவருகிறது! 16 வயது சிறுவன் முதல் 80 வயது கிழவன் வரை இந்தக் கொடுமையைச் செய்யும் அவலமும் அருவறுப்பைத் தருகிறது.

பாலுறவு வன்புணர்வுக் கொடுமைகளைப் பகுத்தாய்ந்து பார்க்கும்போது சில அதிர்ச்சியளிக்கும் உண்மைகளும் வெளிப்படுகின்றன!

ஆன்மீகப் போர்வையில் அன்றாடம் கொடுமைகள்

நாட்டில் நடக்கும் பெண்களுக்கு எதிரான  வன்புணர்ச்சிகளை வரிசைப்படுத்திப் பார்த்தால் அதில் பெரும்பகுதி சாமியார்களால் நிகழ்த்தப்படுகின்றன. சாமியாரில், சங்கராச்சாரி முதல் சாதாரண சாமியார் வரை அடக்கம்.

ஆசாராம் பாபு:

குஜராத்தின் ஆமதாபாத் அருகே, ஆசிரமம் நடத்தி போலீசாரிடம் மாட்டிக்கொண்ட ஆசாராம் பாபு, லட்சக்கணக்கில் சீடர்கள் கொண்டவன். ஆசாராம் பாபு வடஇந்தியாவில் இருக்கும் பல மதகுருக்களில் ஒருவன்.

மத்திய டில்லியில் உள்ள, கமலா மார்க்கெட் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்ற, பெயர் குறிப்பிடப்படாத இளம்பெண் ஒருவர், 72 வயதான ஆசாராம் பாபு தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக, புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில், பலாத்கார சம்பவம், ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் உள்ள, ஆசாராம் ஆசிரமத்தில் நடந்ததாக அப்பெண் கூறியதால், வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரிக்குமாறு, ராஜஸ்தான் போலீசாரைக் கேட்டுக் கொண்டனர். புகாரையும் அங்கு அனுப்பினர்.

உத்தரப்பிரதேசம் ஷாஜகான்பூரைச் சேர்ந்த அவர், சாமியார் ஆசாராம் பாபுவிடம் ஆசி பெறுவதற்காக, தனது 15 வயது மகளுடன் 13.08.2013 அன்று ஜோத்பூர் சென்றுள்ளார். தனது மகளுக்கு பேய் பிடித்திருப்பதாகச் சொல்லி அவரிடம் சென்று முறையிட்டுள்ளார்.

அப்போது ஆசாரம் பாபு தன்னை மானபங்கம் செய்ததாக மைனர் பெண், தனது தந்தையிடம் கூறினார். இதுகுறித்து மைனர் பெண் 22-.08.2013 மாலை புகார்அளித்தார். இவன் பல மைனர் பெண்களை வன்புணர்வு செய்து கொன்றான். அவனுடைய குற்றச் செயல்களுக்காகச் சிறையில் அடைக்கப்பட்டான்.

ரஜினீஷ் குரோவா

இவன் பிரசாதம் என்ற பெயரில் மயக்க பிஸ்கட்டுகளைக் கொடுத்து, பெண்களை வன்புணர்ச்சி செய்தவன்.

ஜெய்பூரில் இரு பெண்களை இவ்வாறு வன்புணர்ச்சி செய்தான். இதுசார்ந்த படங்கள் ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பாகியது. 22 வயதுடைய பெண் ஜெய்பூர் காவல் நிலையத்தில் இச்சாமியாருக்கு எதிராய்ப் புகார் அளித்தார்.

சந்தோஷ் மாதவன் (சாமி அமிர்த் சைத்தன்யா)

இந்தக் கேடிக்கு ரிச்சர்டு என்ற ரவுடி நெருங்கிய நண்பன். அவன் எல்லா வகையிலும் இந்த ஆளுக்கு உதவியாய் இருந்தான். இந்த நிலையில் ரிச்சர்டுக்கும் ஜக்கிக்கும் நடந்த வியாபார மோதலில் அந்தப் பெண் மாயமாக, ரிச்சர்டு கொலை செய்யப்பட்டான்.

ஆணுறுப்பு அறுக்கப்பட்ட ஸ்ரீஹரி கணேஸானந்தா தீர்த்தபதா சாமியார்!

 

ஓராண்டுக்கு முன்பு, உலகெங்கும் பரபரப்பாகப் பேசப்பட்ட செய்தியின் நாயகன். கேரள மாநிலம் கோலாஞ்சேரியைச் சேர்ந்த ஸ்ரீஹரி என்பவன், அந்த ஊரில் டீக்கடை நடத்தி வந்தான்.

இளம் பெண்ணை 16 வயது முதல் வன்புணர்வு செய்து 7 ஆண்டுகள் கொடுமைப்படுத்தினான்.

அச்சாமியாரின் கொடுமை தாங்க முடியாத அப்பெண் அவனது ஆணுறுப்பையே அறுத்து எறிந்துவிட்டாள்.

சேலத்து சாமியார் நாகராஜன்:

y26.gif - 59.52 KB

பெண்களை மயக்கி பாலியல் வன்முறை செய்த,  சாமியாரை, சேலத்தில், காவல் துறையினர் கைது செய்தனர்.

சேலம், தாதகாப்பட்டியைச் சேர்ந்தவன் நாகராஜன், (வயது 54) வீட்டில் கோவில் ஏற்படுத்தி, மாந்த்ரீகத் தொழில் செய்து வந்தார். ஜோதிடம் மட்டுமின்றி, மனோவசியம் செய்து நோய்களை குணப்படுத்துவதாகக் கூறி, பணம் பறிக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளான்.

ஜோதிடம் பார்க்க வந்த பெண்களை, சாமியார் நாகராஜன் மயக்கி, பாலியல் வன்முறை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்களை படம் எடுத்து, மிரட்டுவதாகவும் தெரியவந்தது.  விசாரணையில், அப்பகுதியைச் சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட பெண்களை, பாலியல் வன்முறை செய்ததோடு, படம் பிடித்து, கைப்பேசியில் மிரட்டல் விடுத்ததும், பணம், நகைகளை பறித்ததும், தெரியவந்தது. இதையடுத்து, சாமியார் நாகராஜனை காவல்துறையினர் கைது செய்தனர்.

சிறுமியிடம் பாலியல் வன்முறை செய்த பாதிரியார் கைது

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கன்டந்திட்டா பகுதியில் தென்னிந்திய திருச்சபையை சேர்ந்த கிறிஸ்தவ ஆலயத்தில் பைபிள் வகுப்புக்கு, அப்பகுதியைச் சார்ந்த பத்து வயது சிறுமி சென்றாள்.

தனது மகளை வீட்டுக்கு அழைத்து செல்வதற்காக அங்கு வந்த அவளது தந்தை, அந்த சிறுமியை அங்கு பணியாற்றும் பாதிரியார் பாலியல் வன்முறை செய்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக, அவர் அளித்த புகாரின் அடிப்படையில் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த காவலர்கள் பாதிரியார் தேவராஜ்(65) என்பவரை கைது செய்து,   நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

சாமியார் குர்மீத் ராம் ரகீம்:

அரியானா மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும், ‘தேரா சச்சா சவுதா’ ஆன்மிக அமைப்பின் தலைமை சாமியார் குர்மீத் ராம் ரகீம்  சிங் (50). இவரது ஆசிரமத்தில் தங்கியிருந்த பெண் சீடர்கள் இருவர், சாமியார் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். 1999ஆம் ஆண்டு முதல் 2001  வரை சாமியார் தங்களை மிரட்டி பாலியல் வன்முறை செய்ததாக கடந்த 2002இல் புகார் அளித்தனர்.

குற்றவாளிக்கு ஆதரவாக வன்முறைகள்:

கடந்த 15 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில், அரியானாவின் பஞ்ச்குலா சிபிஅய் சிறப்பு நீதிமன்றம் கடந்த 25ஆம் தேதி தீர்ப் பளித்தது. இதில்,  சாமியார் குர்மீத் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி ஜகதீப் சிங், தண்டனை விபரம் 28ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவித்தார். இதைத்  தொடர்ந்து சாமியார் குர்மீத், ரோடக் மாவட்டத்தில் உள்ள சுனாரியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். தீர்ப்பு வெளியானதும், அரியானாவில் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. சாமியாரின் ஆதரவாளர்கள், பஞ்ச்குலா நீதிமன்ற வளாகத்தை சுற்றிய  பகுதியிலும், ஆசிரம தலைமையகம் அமைந்துள்ள சிர்சா மாவட்டத்திலும் பயங்கர கலவரத்தில் ஈடுபட்டனர். வாகனங்கள், கடைகள் அடித்து  நொறுக்கப் பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டன.

இந்த வன்முறையில் 38 பேர் பலியாயினர். 250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். துணை ராணுவம் குவிக்கப்பட்டும், 144 தடை உத்தரவு  பிறப்பிக்கப்பட்டும் அரியானாவில் நடந்த பயங்கர வன்முறை நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பஞ்சாப்-, அரியானா  உயர்நீதிமன்ற உத்தரவின்படி, சாமியார் குர்மீத் அடைத்து வைக்கப்பட்டுள்ள சுனாரியா சிறையில் சிறப்பு சிபிஅய் நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இரயில் நிலையம்,  பேருந்து  நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் காவலர்கள்  குவிக்கப்பட்டனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் அளவிற்கு குற்றவாளிகளின் கொடுமை கோலோச்சியது!

ஆர்.எஸ்.எஸ். கொடியவர்களின் அடாவடி வன்புணர்வுகள்:

குஜராத்:

14 பேர் படுகொலை – பாலியல் வன்முறை செய்த சங் பரிவாரைச் சேர்ந்த 11 பேருக்கு ஆயுள் உறுதி!

-குஜராத்தில் மோடி ஆட்சியின்போது, பில்கிஸ் பானு என்ற முஸ்லிம் இளம் பெண்ணின் 3 வயது குழந்தை உள்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் ஒரே இடத்தில் வைத்து சங்-பரிவார் கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர்.

6 மாதக் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானுவும், 12 பேர் கொண்ட சங்-பரிவாரக் கூட்டத்தால், மிகக் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த வழக்கில், 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மும்பை சிபிஅய் சிறப்பு நீதிமன்றம் 2008ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியிருந்தது.

ஆசிஃபா – ஜம்மு காஷ்மீர்

 

“ஆசிஃபா கொலை வழக்கில் ஒரு ஹிந்து கோவில் மையமாக உள்ளது. இந்தக் கோவிலின் பாதுகாவலனான சஞ்சீவ் ராம் என்பவன், பக்கர்வால் சமூகத்தின் மீது வன்முறைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளான். அதற்காகத்தான் அவனுடைய நண்பர்களின் உதவியைக் கொண்டு ஆசிஃபாவை கடத்தி, கற்பழித்துக் கொன்றுள்ளனர்’’ என்று காவல்துறை கூறுகிறது

ஆக, இந்துமதக் கோயில்கள் காவிக் கூட்டத்தின் கொலைக் கூடாரமாக, வன்புணர்ச்சி நிலையங்களாக மாறி வருகின்றன.

பக்கர்வால் சமுதாய மக்கள் வட இந்தியாவின் சமவெளிகளிலும், மலைகளிலும் உள்ள தங்களது மந்தைகளோடு நகர்ந்து செல்லும் நாடோடிகள் ஆவர். குளிர் காலங்களில் தங்கள் விலங்குகள் மேய்ச்சல் கொள்ள இந்து விவசாயிகளிடமிருந்து நிலங்களை குத்தகைக்கு எடுத்துள்ளனர். ஆனால், சமீப ஆண்டுகளாக கத்துவா பகுதியில் சில இந்துக்கள் நாடோடிகளுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். அந்தக் கிராமத்தில் உள்ள காவிகளின் வன்முறைத் தலைவன் சஞ்சீவ் ராம் என்பவன். தங்கள் மதவெறியைக் காட்டி எதிரிகளை விரட்ட இந்த வன்கொடுமையைத் திட்டமிட்டுச் செய்துள்ளான்.

 

பெண்கள் மீதான பாலுறவு பலாத்காரங்கள்:

நிர்பயா

 

புதுடில்லியில் மருத்துவமாணவி நிர்பயா வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிகழ்வு, பெண்களுக்கெதிரான பாலுறவு வன்புணர்ச்சி கொடுமைகளை இந்தியா முழுவதும் பேசச் செய்து, குற்றவாளிகளுக்கு உச்சநீதிமன்றம் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது.

பச்சிளம் குழந்தைகள், பதின்பருவ சிறுமிகள் மீது பாலுறவு வன்கொடுமைகள்:

குழந்தைகள் மீதான வன்புணர்வில் மிக கொடிய, நெஞ்சைப் பதறவைக்கும் நிகழ்வு, இராஜஸ்தானில் 7 மாத குழந்தை பக்கத்து வீட்டில் உள்ள 19 வயது வாலிபனால் செய்யப்பட்டதாகும்.

நாடு முழுவதும் குழந்தைகளை பாலியல் வன்முறை செய்யும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதற்காக கடுமையான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, சிறுமிகளை பாலியல் வன்முறை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் மசோதாவை அறிமுகம் செய்ய மத்திய அமைச்சரவை அனுமதி அளித்தது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்முறையாக பலாத்கார குற்றவாளி ஒருவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த பிண்டு (19) என்ற இளைஞர், பக்கத்து வீட்டில் இருந்த 7 மாத குழந்தை பாலியல் வன்முறை செய்ததாக கைது செய்யப்பட்டான். அவன் மீது “போக்சோ’’ சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவன் குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது.

இதில், பிண்டுவுக்கு மரண தண்டனை விதித்து, சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜகேந்திரா அகர்வால் உத்தரவிட்டார்.

மத்திய பிரதேசத்தில் கற்பழிக்கப்பட்ட 4 வயது சிறுமி மரணம்

மத்திய பிரதேச மாநிலம், சியோனி பகுதி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 4 வயது சிறுமி கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தாள். தனது வீட்டின் வாசலருகே விளையாடிக் கொண்டிருந்த அந்தச் சிறுமிக்கு சாக்லேட் கொடுப்பதாக ஆசை காட்டி, தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்ற இருவர் அவளை மிருகத்தனமாக கற்பழித்தனர். மறுநாள் காலை, பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் வடிந்த நிலையில் அந்தச் சிறுமி வயல்வெளியில் மயங்கிக் கிடந்ததை அறிந்த பெற்றோர், அவளை உள்ளூர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவளது நிலைமை மிகவும் மோசமாக இருந்ததையடுத்து, கடந்த 21ஆம் தேதி விமான ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு, நாக்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். இதற்கிடையில், அவளை இந்த நிலைக்கு ஆளாக்கிய 2 குற்றவாளிகளை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, விசாரணைக் காவலில் அடைத்தனர்.

இந்நிலையில், 10 நாட்களாக அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி, கோமா நிலையில் இருந்த அந்தச் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்

ஹாசினி: தமிழகத்தைப் பொறுத்தவரை 7 வயது சிறுமி ஹாசினி மீது நிகழ்த்தப்பட்ட கொடுமை அதிக அளவு அதிர்ச்சியை உருவாக்கியது. விளை யாடிக் கொண்டிருந்த சிறுமியை தஷ்வந்த் என்ற பக்கத்து வீட்டு வாலிபன் வீட்டிற்குள் அழைத்துச் சென்று பலாத்காரமாக வன்புணர்வு செய்ய அப்பெண் மூச்சுமுட்டி அப்போதே இறந்து போனாள்.

அச்சிறுமியின் உடலை சாக்கில் கட்டி எடுத்துச் சென்று எரித்துவிட்டு, பெற்றோருடன் சேர்ந்து சிறுமியைத் தேடிய மோசடியும் அவனால் செய்யப்பட்டது. அந்த நிகழ்வால் பாதிக்கப்படாதவர் எவரும் இல்லை. பலரால் பல நாள் தூங்கக்கூட முடியவில்லை. நினைக்கும்போதே நிலைகுலையச் செய்த கொடுஞ்செயல் அது. அந்தக் கொடியவனுக்கு கடுந்தண்டனை அளிக்கப்பட்டது சற்றே ஆறுதல் அளித்தது.

ஹாசினி மீது செய்யப்பட்ட வன்கொடுமையின் இரணம் மக்கள் உள்ளத்தில் மாறுவதற்கு முன்,

அயனாவரம் சிறுமி:

சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் 11 வயது மாற்றுத் திறனாளி சிறுமி 22 கொடியவர்களால் திட்டமிட்டு பல நாள்கள் வன்புணர்வு செய்யப்பட்ட கொடுமை உலகையே உலுக்கியுள்ளது.

சென்னை அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலையில், பிரபல அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அந்த அடுக்குமாடி குடியிருப்பில்தான் 11 வயது சிறுமியை 6 மாதங்களாகக் கற்பழித்த கொடுமை நடந்துள்ளது.

அந்தச் சிறுமியின் உடல் முழுவதும் சிறிய காயங்கள் உள்ளன. சிறுமியின் மூத்த சகோதரி சென்னைக்கு வந்திருக்கிறார். சிறுமியின் கழுத்தில் உள்ள காயங்களை பார்த்து விவரம் கேட்டுள்ளார். அதற்கு பிறகுதான் கதறி அழுதபடி தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி சிறுமி விவரமாக கூறியிருக்கிறார். அதன்பிறகு சிறுமியின் பெற்றோருக்கு இந்த விஷயம் தெரியவர அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

இந்தக் கொடூர சம்பவம் குறித்து அயானவரம் உதவி போலீஸ் கமிஷனர் சிராஜூதீனை சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளனர். இந்தப் புகார் மனு பற்றி தெரியவந்ததும் கடுமையான நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

கைதான 17 பேரில், 66 வயது நிரம்பிய லிப்ட் ஊழியர் ரவிக்குமார்தான், முதன்முதலாக சிறுமியிடம் பழகியிருக்கிறான். சிறுமி லிப்ட்டில் செல்லும்போது, ரவிக்குமாரிடம் அன்பாக பேசியிருக்கிறார். அவரது வெகுளித்தனத்தை பயன்படுத்தி ரவிக்குமார் கத்திமுனையில் மிரட்டி முதன்முதலாக சிறுமியிடம் தனது காம இச்சையைத் தீர்த்துக் கொண்டான்.

அதன்பிறகு, ரவிக்குமார் மூலமாக ஒவ்வொருவரின் காமஇச்சைக்கும் சிறுமி பலி ஆக்கப்பட்டிருக்கிறாள். ஒரு கட்டத்தில் சிறுமிக்கு போதை ஊசிபோட்டும், போதை மாத்திரை கொடுத்தும், செக்ஸ் விளையாட்டில் ஈடுபட்டனர். சிறுமியிடம் உறவு கொள்வதை வீடியோ படம் எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. லிப்ட் ஊழியர் ரவிக்குமார், தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அவரைத்தொடர்ந்து கைதான மற்றவர்களும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். சிறுமியை சீரழித்தவர்கள் அனைவரும் போதைக்கு அடிமையானவர்கள். கைதானவர்களில் 7 பேர் 50 வயதைத் தாண்டியவர்கள். பேரன் பேத்தி கண்டவர்கள்.

திருக்கனுர் சிறுமி: புதுச்சேரியில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காதலன் உட்பட 4 பேரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரியை சேர்ந்த 16 வயது சிறுமி, விழுப்புரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு பஸ்சில் சென்று வரும்போது, திருக்கனுர் அடுத்த தமிழகப் பகுதியான வழுதாவூரை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அச்சிறுவன், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

மேலும், அதனை தனது மொபைலில் வீடியோ எடுத்து வைத்து கொண்டு, சிறுமியை மிரட்டி தனது நண்பர்கள் 7 பேருடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

சென்னையில் அதிகக் குற்றங்கள்:

குற்ற ஆவணக் காப்பகத்தின் தகவலின்படி, தமிழகத்தில் கடந்த 2015ஆம் ஆண்டில் குழந்தைகள் தொடர்பான பாலியல் குற்றங்கள் சென்னையில் அதிகளவில் நடந்தது தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து, திருநெல்வேலி, சேலம், வேலூர் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகம் காணப்படுவதாக பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தொடர்பாக ஆயிரத்து 212 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில், சட்டத்தின் தவறு மற்றும், மறைக்கப்பட்ட உண்மைகளால் 26 வழக்குகள் முடிந்ததாகவும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.-

விழிப்பு, பாதுகாப்பு, விரைவான நீதி, கடுந்தண்டனை கட்டாயம் தேவை

7 மாத பெண் குழந்தையைக்கூட வன்புணர்ச்சி செய்கிறான் என்றால், இது மிகவும் கடுமையாகக் கொள்ளப்பட்டு களையெடுக்கப்பட வேண்டிய குற்றமாகும்.

குற்றம் செய்கின்றவன் 18 வயதுக்குக் கீழ் இருந்தால் அவன் சிறுவன் என்கின்ற வரையறை தப்பானது. 17 வயது வாலிபன் அனைத்தும் அறிந்தவன். மனித வளர்ச்சி பெற்றவன்தான். எனவே, குற்றம் செய்தவர்கள் யாராயினும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள் அதிக கண்காணிப்புடன் இருக்க வேண்டும். நெருங்கிய உறவினர்களும், நெருக்கமாகப் பழகக் கூடியவர்களுமே இக்குற்றத்தைப் பெரும்பாலும் செய்கிறார்கள் என்பதால் வசிப்பிடத்திலே அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.

எது நடந்தாலும் அதை சிறுமிகள் பெற்றோரிடம் சொல்லுமளவிற்கு அவர்களுக்கு விழிப்பூட்ட வேண்டும். இக் குற்றவாளிகளுக்கு பிணை வழங்காது, வழக்கை விரைந்து விசாரித்து கடுந்தண்டனை வழங்க வேண்டும். சமுதாயத்தில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து பொறுப்பேற்று இக்குற்றங் களைத் தடுக்க வேண்டும். செல்பேசி வழி உடலுறவு காட்சிகளை அறவே தடை செய்ய வேண்டும். இல்லையேல் ஒவ்வொருவருக்கும் இப்பாதிப்பு வருவது தவிர்க்க முடியாது போகும்! எச்சரிக்கை!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *