பாரதப் பாத்திரங்கள் (6)

ஜூலை 16-31

 

 

 

சு.அறிவுக்கரசு

குந்தி

திருமணத்துக்கு முன்பே சூரியனுடன் கலவி செய்து கர்ணனைப் பெற்றவள் குந்தி. அது கள்ளப் பிள்ளையாம். எனவே, கங்கை ஆற்றோடு போக விட்டுவிட்டாள். கணவனுக்குப் பெறாமல் வேறு ஆள்களுக்குப் பெற்றவை நல்ல பிள்ளைகளா? தன் மகன்கள் என்றால் குந்தி.

வியாசனின் கர்ப்பதானத்தால் பிறந்த திருதராஷ்டிரன், பாண்டு, விதுரன் என்போரில் பாண்டு ஒரு சாபத்தைச் சுமந்தான். உடலுறவில் ஈடுபட்டிருந்த மான்களை வேட்டையாடிக் கொன்றான். உடல் உறவில் ஈடுபட்டால் பாண்டு இறந்துபோவான் என்பது சாபம். எனவே அவன் மனைவி குந்தி கணவன் சுகம் என்ன என அறியாமலே இருந்தவள்.

திருமணத்திற்கு முன்பே மிகச் சிறு வயதிலேயே சூரியக் கடவுளைப் புணர்ந்து பிள்ளை பெற்றவள் குந்தி. இருந்தாலும் கணவன் மூலம் பிள்ளை பெற முடியாதவள். பாண்டு விடவில்லை. “எந்த முனிவனையாவது புணர்ந்து பிள்ளை பெற்றுக்கொள்’’ என்றான். அவனும் அப்படிப் பெறப்பட்டவன்தானே!

குந்தி தயங்கினாள். பாண்டுவின் மற்றொரு மனைவியான மாத்ரியும் தயங்கினாள். நாங்களே அப்படிப் பிறந்தவர்கள்தானே! இதில் என்ன அவமானம்?’’ என்றான் பாண்டு.

பாரதக் கலாச்சாரமே அதுதானே! சாஸ்திர சம்மதமானதுதானே நியோகம்? நெய் பூசிப் புணர்ந்து உருவானவர்களின் ஜாதிதானே நியோகிகள்?

புரிந்த குந்தி சம்மதிக்கிறாள். ரிஷி எதற்கு? தேவர்களையே கூப்பிட்டுக் கலவி செய்யும் வித்தை கற்றவள் நான். துர்வாசர் சொல்லிக் கொடுத்துள்ளார் எனக் கூறவும் பாண்டு மனம் குதூகலிக்கத் தலையை ஆட்டுகிறான். குந்தி கூப்பிட்டாள்.

எமன் வந்தான். சாவுக் கடவுள். மகாபாரதம், வசனகாவியம், ஆதி_பக்கம் 190இல் சண்முகக் கவிராயர் எழுதுகிறார் _ “எமன்வர குந்தி அவனை எதிர்கொண்டு அழைத்துப் போய் மலரணையில் இருத்தி உபசரித்துத் தன்னுடைய முற்றா முலையை எமனது மார்பு ஊடுருவப் புல்லினாள். எமனும் அவளை இறுகத் தழுவிக் காமசாஸ்திரம் விதித்த அனைத்து முறைகளையும் கையாண்டு இறுதியில் வீரிய விருத்தியால் குந்திதேவி வயிற்றில் கருவுண்டாகி, குரு வாரத்தில் நவக்கிரகங்களும் நல்ல நிலையில் இருக்கிற தருணத்தில் உலகையெல்லாம் ஒரு குடையில் ஆளத் தகுந்த சிறப்பினை உடைய ஒரு புத்திரன் பிறந்தான்.’’

அவன் யுதிஷ்டிரன். தருமன் எனப்படுபவன். உலகை ஆண்டானா? ஊரை ஆளவே உனக்காச்சு, எனக்காச்சு என்று பங்காளிகளுடன் சண்டை. கிரக நிலைகள் நன்றாகக் கூடிய நேரத்தில் கூடிப் பெற்றாலும் நிலைமை அப்படித்தான்.

எமனை அனுப்பிய குந்தி மேலும் இரண்டு கடவுள்களை அழைத்தாள். வந்தார்கள். பிள்ளை கொடுத்தார்கள் ஆக குந்திக்கு மூன்று பிள்ளைகள்.

தனக்கு மட்டும் மூன்று. தன் சக்களத்தி மாத்ரி நிலை? அவளுக்கும் ஏற்பாடு செய்தாள். இரண்டு தேவர்களை அழைத்து மாத்ரியைக் கூட்டிக் கொடுத்தாள். குந்திக்கு தருமன், பீமன், அர்ச்சுனன். மாத்ரிக்கு நகுலன், சகாதேவன்.

பாண்டுக்கு மகன்கள் அய்ந்து பேர். பாண்டவர்கள். பஞ்ச பாண்டவர்கள். அய்வரும் அப்பனுக்குப் பிறக்காதவர்கள். வேற்றானுக்குப் பிறந்தவர்கள். பாரதக் கலாச்சாரத்தில் இதற்கு ஷேத்திரஜா என்று பெயர். வனஜா என்றால் வனத்தில் பிறந்தவன். கிரிஜா என்றால் மலையில் பிறந்தவன். ஷேத்ரஜா என்றால் ஊரானுக்குப் பிறந்தவன்.

திருமணத்துக்கு முன்பே சூரியனுடன் கலவி செய்து கர்ணனைப் பெற்றவள் குந்தி. அது கள்ளப் பிள்ளையாம். எனவே, கங்கை ஆற்றோடு போக விட்டுவிட்டாள். கணவனுக்குப் பெறாமல் வேறு ஆள்களுக்குப் பெற்றவை நல்ல பிள்ளைகளா? தன் மகன்கள் என்றால் குந்தி.

பாண்டுவின் அண்ணன், பார்வையற்ற திருதராஷ்டிரன் தன் மனைவி காந்தாரியுடன் ஆட்சியில், அரண்மனையில் இருந்தான். தன் மக்கள் நூற்றுவர் கவுரவர்கள் எனப் பட்டனர். மூத்தவன் துரியோதனன்.

பாண்டு இறந்துபோனான். கைம்பெண் ணாகிவிட்ட குந்தி அரண்மனையில் ஒண்டுக் குடித்தனம்.

ஆட்சியுரிமை யாருக்குச் சேர வேண்டும்? இதுதான் பாரதக் கதை.

திருதராஷ்டிரன் மூத்தவன். பாண்டு இளையவன். மூத்தவன் இருக்க இளையவன் மாண்டுபோனான். மூத்தவனின் மகன் துரியோதனன். அவன் பிறக்கும் முன்பே பாண்டுவுக்கு தருமன் பிறந்துவிட்டான்.

தருமன்தான் இப்போது வயதில் பெரியவன். அவன்தான் ஆளவேண்டும் என்பது பாண்டவர் தரப்பு. திருதராஷ்டிரன்தான் மூத்தவன். அவன் மகன்தான் ஆளவேண்டும் என்பது கவுரவர் தரப்பு.

எது சரி? எது வழக்கம்?

கணவனுக்குக் கண்பார்வை இல்லை என்பதால் தானும் கண்களைக் குத்திக் கொண்டு தியாக வாழ்வு வாழ்ந்த காந்தாரியின் பிள்ளைகளா?

திருமணத்திற்கு முன்னேயும் சரி, ஆனபின்னேயும் சரி தேவர்களை வரவழைத்துப் புணர்ந்து பிள்ளைகள் பெற்றுக் கொண்டு காம வாழ்வு வாழ்ந்த குந்தியின் பிள்ளைகளா? விதுரன் சொன்னான்: திருதராஷ்டிரன் முடிதுறந்து தருமன் முடிசூட வேண்டுமாம்.

பாண்டவர்கள் ஆசைப்பட்டனர். ஆசை வெறியாகியது. காரணம் அவர்கள் வசம் உதவிக்கான சிறுபடை இருந்தது. திரவுபதியைக் கட்டிக்கொண்டதால் அந்நாட்டுப் படைகளைப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டம், படை சிறிதாயினும் கிருஷ்ணனின் சூழ்ச்சிகளும் கபடத் தனங்களும் வெற்றிக்கு உதவும் எனவும் திட்டம்.

அதிகாரப் போட்டி பெரிதாகியது. நாட்டைப் பிரித்து ஆளுக்கொரு பங்காக ஆளலாம் என்பதை கிருஷ்ணன் கூறிய சமரச சமாதான யோசனை ஏற்கப்பட்டது.

நாடு பிரிக்கப்பட்டது. இந்திரப்பிரஸ்தம் உருவானது. பாண்டவர்கள் இங்கே. கவுரவர்கள் அஸ்தினாபுரத்தில்.

குந்தியின் முதல் மகனாகிய கர்ணனைக் கொன்றிட அவனது கவசகுண்டலங்களைக் கேட்டுப் பெற்று பாண்டவர் ஆட்சிக்கு வர உதவியவள், குந்தியே! உள் மனதில் அய்ந்து மகன்கள் மீது மட்டும்தான் அன்பு, ஆசை, பாசம், அனுதாபம், ஆதரவு என எல்லாமே! நல்ல தாயுள்ளம் தானா? நல்ல தாய் தானா? ஓரவஞ்சனை செய்தவள்!

                                                                                                (தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *