“இராமாயணம் – இராமன் – இராமராஜ்யம்” (ஆய்வுச் சொற்பொழிவு-6, 7)

ஜூலை 16-31

 

இனியன்

“இராமாயணம் _- இராமன் _- இராமராஜ்யம்’’ (கம்பன் புளுகும் வால்மீகியின் வாய்மையும்)  (கம்பனின் கூற்றுக்கு கம்பனே மறுப்பு) போன்ற தலைப்புகளில் 12.06.2018 மற்றும் 22.06.2018 ஆகிய நாள்களில் மாலைவேளையில் சென்னை வேப்பேரி பெரியார் திடல் எம்.ஆர்.இராதா மன்றத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆய்வுச் சொற்பொழிவாற்றினார்.

அரங்கம் முழுவதும் மக்கள் நிரம்பியிருந்த இந்த ஆறாவது மற்றும் ஏழாவது சிறப்புக் கூட்டத்திற்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தொடக்க உரையாற்றினார்.

ஆசிரியரின் ஆய்வுச் சொற்பொழிவு

(12.06.2018 ஆறாம் நாள்)

“உலகில் எண்ணற்ற ராமாயணங்கள் உள்ளன. ‘லங்கேஸ்வரன்’ நாடகத்தில் இராவணனுக்கு சீதை மகள் என்றிருக்கிறது.

ராமாயணத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன் இராமன் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், வரலாற்று அறிஞர்களின், அகழ்வாராய்ச்சி யாளர்களின் ஆய்வுகளில் இராமன் வாழ்ந்ததற்கான தடயமே இல்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.’’ “பார்ப்பனர்களுக்கு இக்கட்டான நேரத்தில் இராமாயணத்தைப் படிக்க வேண்டும் என்று சங்கராச்சாரி கூறுகிறார். பார்ப்பனர்களுக்கான குற்றவியல் நடைமுறைச் சட்டம், சிவில் நடைமுறைச் சட்டம் எல்லாம் இராமாயணம்தான் என்கிறார்’’ என்று ஆசிரியர் அவர்கள் பேசியபொழுது அரங்கம் முழுவதும் சிரிப்பலை எழுந்தது. மேலும், பா.வே.மாணிக்க நாயக்கரின், ‘கம்பனின் புளுகும் வால்மீகியின் வாய்மையும்’ என்ற நூல், வால்மீகி இராமாயண ஆய்வாளர் தி.அமிர்தலிங்க அய்யர் நூல் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களை முன்வைத்து ஆசிரியர் உரையாற்றினார்.

தமிழர் தலைவரின் ஆய்வுச் சொற்பொழிவு

(22.06.2018 ஏழாம் நாள்)

“தாறுமாறாக வசைபாடுவதற்காக அல்ல இந்தக் கூட்டம். இஃதோர் ஆய்வுக் கூட்டம். இங்கே நாங்கள் பேசுவது ஆதாரப்பூர்வமானது அல்ல என்றால் வழக்குத் தொடரலாம்’’ எனும் அறைகூவலுடன் ஆசிரியர் அவர்கள் சொற்பொழிவைத் தொடங்கினார்.

“தந்தை பெரியாரை கொச்சைப்படுத்தும் செயல்களில் சமூக ஊடகங்களில்,

ஆர்.எஸ்.எஸ்.சினர் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களின் மூலபலத்திற்கு தக்க பதிலடி தருவதுதான் நம் அணுகுமுறை. இராமனை வைத்துதான் பார்ப்பனர்கள் பிழைத்து வருகின்றனர்’’ என்று முழங்கினர்.

அன்றைய இராமாயண கால ஆரியர்களின் அட்டூழியங்களுடன் இன்றைய சங் பரிவாரங்களின் கொலைவெறி செயல்களையும் ஒப்பிட்டுப் பேசினார்.

“ஆரியம் என்பது மனித தன்மையற்றது. திராவிடம் என்பது மனிதநேயமிக்கது’’ என்பதை ஒப்பிட்டு விளக்கி ஆசிரியர் கூறினார். மேலும், புலவர் பழனி எழுதிய ‘கம்பரின் மறுபக்கம்’, ஸ்ரீநிவாஸ சாஸ்திரிகள் அவர்களின், ‘இராமாயணப் பேருரைகள்’ போன்ற நூல்களிலிருந்தும் ஆதாரங்களை அடுக்கி உரையாற்றினார்.

இரண்டு நாள் சொற்பொழிவுகளிலும் 19ஆம் நூற்றாண்டு, 20ஆம் நூற்றாண்டு மற்றும் 21ஆம் நூற்றாண்டுகளில் வெளியான புத்தகங்களை ஆதாரமாகக் கொண்டு சொற்பொழிவாற்றினார். கூட்டத்தில் நிறைவுரையாற்றிய தமிழர் தலைவர் அவர்கள் கூட்டத்தின் முடிவில் 30 நிமிடங்கள் பார்வையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

கூட்டம் நிறைவு

இரண்டு கூட்டங்களிலும் வழக்கம்போல் உணர்ச்சியுடனும் பேரார்வத்துடனும் பல்துறை அறிஞர் பெருமக்கள், பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளை சார்ந்தோர் திரளாகக் கலந்துகொண்டு தெளிவு பெற்றனர். சிறப்புக் கூட்டம் இரவு 8.45 மணியளவில் சிறப்புடன் நிறைவுற்றது.

(நிறைவு)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *