(இயக்க வரலாறான தன்வரலாறு – 206)

ஜூலை 16-31

 

ஒரு நாளில் 35 நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன்!

கி.வீரமணி

 

பெரியாருடன் ஓ.வி.கே. நீர்காத்தலிங்கம்

ஓமலூருக்கு அருகில் மேல சிந்தாமணியூரில் மாரியப்பன்_சிங்காரம், பெருமாள்_கலையரசி ஆகியோரது வாழ்க்கை துணைநல ஒப்பந்த விழாவை 29.06.1983 அன்று காலை 9 மணிக்கு   தலைமையேற்று நடத்திவைத்தேன்.

மறுநாள் 30.06.1983 அன்று ஈரோட்டில், எஸ்.ஆர்.சாமி (தந்தை பெரியார் அவர்களின் தங்கை கண்ணம்மா_இராமசாமி அவர்களின் இளைய மகன்) சாரதா அவர்களின் செல்வன் எஸ்.ராம்கண்_ஏமலதா, செல்வன் எஸ்.கலியாணசுந்தரம்_சத்தியவதி ஆகியோர் திருமணத்தை நடத்திவைத்தேன். அவ்விழாவில், எஸ்.ஆர்.சாமி அவர்கள் பெரியார் மணியம்மை கல்வி அறப்பணிக் கழகத்திற்காக அன்று ரூ.2000 (இரண்டாயிரத்திற்கு) ஒரு காசோலையை  என்னிடத்தில் அளித்தார்கள்.

மதுரை பெரியார் பெருந்தொண்டர் ஓ.வி.கே. நீர்காத்தலிங்கம் அவர்கள் 01.07.1983 அன்று காலை திடீரென மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்பதை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அன்று எழுதிய இரங்கல் அறிக்கையில், “நல்ல சுயமரியாதைக் குடும்ப பாரம்பரியத்தால் வந்த அவர் மதுரையில் அய்யாசிலை அமைக்கவும் இரண்டாவது கருஞ்சட்டைப் படை மாநாடு நடத்தவும் எடுத்த முயற்சிகள் மிகவும் முக்கியமானதாகும்.

‘மிசா’ கைதியாக இருந்தபோதும் அவர் தளர்ந்துவிடவில்லை. ஆனால் அவரது உடல்நிலை வெகுவாகப் பாதித்தது.

சென்னை கோடம்பாக்கத்தில் 01.07.1983  அன்று காலை 9.30 மணிக்கு கிருஷ்ணா திருமண மண்டபத்தில் ஊடகவியலாளர் ஜெயக்கிருஷ்ணன் _ சாந்தி ஆகியோரது வாழ்க்கை ஒப்பந்த விழா என் தலைமையில் நடைபெற்றது.

‘தேவி’ வார இதழ் உரிமையாளர் ராமச்சந்திர ஆதித்தனார் திருமணத்திற்கு முன்னிலை வகித்தார்.

நான், மணமக்களுக்கு வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தத்தை, உறுதிமொழியைக் கூறி திருமணத்தை நடத்தி வைத்தேன்.

அன்று இரவு அம்பத்தூரில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் நான் கலந்துகொண்டு உரையாற்றினேன்.

“இந்திய துணைக் கண்டத்திலேயே தமிழ்நாடு மட்டுமேதான் கதவு இல்லாத வீடாக இருந்துகொண்டு இருக்கிறது.

மலையாளிகளுக்கு நாம் கேரளர்கள் என்று உணர்வுதான் தலைதூக்கி நிற்கிறது. இதை அங்கு வெளிவரும் ‘திஸ் வீக்’ என்ற பத்திரிகையே குறிப்பிட்டுள்ளது. கேரளாவில் தனியார் நடத்தும் பஸ்கள், கேரளக்காரர்களாக இருந்தால் மட்டுமே நடத்த  முடியும் என்கிற நிலைமை இருந்து வருகின்றது.’’

“தமிழா உன் நிலைமையை எண்ணிப் பார்! இனவுணர்வு கொள்! இதுதான் எங்கள் முழக்கம். இன்றைக்கு தமிழனுக்கு தேவையானது இந்த உணர்வுதான்!’’ என்று பல்வேறு சம்பவங்களை குறிப்பிட்டு உரையாற்றினேன்.

தமிழகத்தில் அடைக்கலம் புகுந்த விடுதலைப் புலிகளை தமிழக அரசு, மத்திய அரசிடம் ஒப்படைக்கும் போக்கைக் கண்டித்து 02.07.1983இல் ஷெனாய் நகர் _ புல்லா ரெட்டி அவென்யூ சாலையில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தி.மு.க. தலைவர் கலைஞர், பாவலரேறு, நெடுமாறன், லத்தீப் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தோழர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.

லட்சக்கணக்கான தமிழர்கள் இந்தக் கூட்டத்தில் திரண்டு வந்திருந்தார்கள். கூட்டத்தில் நான் உரையாற்றும்போது, “ஈழத் தமிழர்களின் விடுதலைக் கோரிக்கைக்கு, நாம் ஆதரவு தந்தால் -_ நம்மையும் “பிரிவினைவாதிகள்’’ என்று பூச்சாண்டி காட்டுகிறார்கள். அண்ணன் தம்பிகளுக்கிடையே கருத்து மாறுபாடுகள் வந்து பிரிவினை நடக்கிறது. மாமியார் மருமகள்கூட ஒன்றாக வாழமுடியாமல் பிரிந்து போகிறார்களே என்று நான் சொன்னபோது _ கூட்டத்தில் பலத்த கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர். தமிழனுக்கே இனஉணர்ச்சி பஞ்சமாக இருக்கும்போது _ ஈழத்தமிழன் உரிமைக்கு இவன் எப்படி குரல் கொடுப்பான் என்ற கேள்வியை சிலர் எழுப்பக் கூடும். வீட்டுக்கு விருந்தினரோ, நண்பரோ வரும்பொழுது தமிழன் தனக்கு இல்லாவிட்டாலும் வந்தவர்களைத்தான் உப சரிப்பான். அதுபோல் தமிழன் சொந்த நாட்டிலே உணர்ச்சிபெறாவிட்டாலும் அண்டை நாட்டுத் தமிழன் தவிப்பதைப் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டான்’’ என்று விளக்கம் அளித்து உரையாற்றினேன்.

கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்றும்போது, “நாம் வன்முறையை எதிர்ப்பவர்கள்தான்; இங்கே இருக்கும் தலைவர்கள்; தங்கள் தொண்டர்களிடம் வன்முறை கூடாது என்று சொல்பவர்கள்தான். ஆனால், இலங்கையில் இன்று ஏற்பட்டுள்ள தலைமையை பார்க்கும்போது விடுதலைப் புலிகள் கையிலே ஆயுதத்தை ஏந்துவதைத் தவிர வேறு வழியில்லை. அப்படிப்பட்ட நிலையை உருவாக்கியதே இலங்கை சிங்களர்கள் ஆட்சிதான். இன்று ஆயுதம் ஏந்தி போராடா விட்டால் தமிழினமே அழிக்கப்பட்டிருக்கும். எனவே, விடுதலைப்புலிகள் போராட்டத்தை நான் ஆதரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்’’ என்று கலைஞர் அவர்கள் பிரகடனப் படுத்தினார்கள். கூட்டத்தில் தலைவர்கள் பலரும் உரையாற்றினர்.

தமிழக அரசில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநராகப் பணியாற்றிய பகுத்தறிவுப் பேராசிரியர் டாக்டர் நன்னன் அவர்கள் பதவி ஓய்வு பெற்றதும் பகுத்தறிவாளர் கழகத்தின் தலைமைப் பொறுப்பை அவர்கள் மீது சுமத்தினாலும் அதனை அவர்களும் உற்சாகத்துடன் ஏற்றார். அதனைப் பாராட்டி, வரவேற்று 04.07.1983 அன்று நான் எழுதிய முக்கிய அறிக்கை, “டாக்டர் நன்னன் அவர்களை இருகை நீட்டி இப்பணிக்கு வரவேற்கிறோம்’’ என்று எழுதி நம் இயக்கத்தின் சார்பில் நம் உணர்வைப் பதிவு செய்தேன்.

தஞ்சை மாவட்டம் கொட்டாரக்குடியில் திராவிடர் கழகத் தோழர் குருசாமி அவர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்களால் படுகொலை செய்யப்பட்டார். நான், மறைந்த குருசாமி அவர்களது இல்லத்திற்குச் சென்று 04.07.1983 அன்று இரவு 7 மணிக்கு குருசாமி துணைவியார் லெட்சுமி அவர்களைச் சந்தித்து, துயர்நிலையில் இருந்த அவர்களுக்கும், அவர்களது குழந்தைகளுக்கும் ஆறுதல் கூறினேன்.

“நீங்கள் அனாதைகள் அல்ல. உங்களுடைய எந்தவித துன்பத்தையும் துடைப்பதற்கு கழகம் காத்திருக்கின்றது’’ என்று ஒவ்வொரு குழந்தையின் படிப்பையும், வயதையும் கேட்டறிந்து குழந்தைகளுடைய படிப்பு வளர்வதற்கு வேண்டியவைகளெல்லாம் செய்ய கழகத்தின் சார்பில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க உறுதியளித்தோம்.

04.07.1983 அன்று மட்டும் 35 நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன். இளவங்கர்குடி, கீழப்பாளையூர், குடவாசல் பகுதி, போலகம், கொட்டாரக்குடி, சோழங்கநல்லூர், சூரனூர், வைப்பூர், நன்னிலம் உள்ளிட்ட அத்தனை கிராமம் கிராமமாக என்னுடைய பயணத் திட்டம் அந்திருந்தது.

எல்லா இடங்களிலும் எழுச்சியும், உணர்ச்சியும் மேலோங்கி நின்றது. கழகத் தோழர்கள் மட்டுமன்று பொதுமக்களும் ஆர்வத்துடன் காத்திருந்து பங்கேற்றனர்.

மாநில இளைஞரணி மாநாடு 09.07.1983 அன்று எழுச்சியுடன் சென்னை பெரியார் திடலில் துவங்கியது. தமிழ்நாடு முழுவதுமிருந்தும் ஏராளமான இளைஞரணி தோழர்களும், கழகத் தோழர்களும், தோழியர்களும் பெரியார் திடல் முழுவதும் நிரம்பியிருந்தனர்.

தொடர்ந்து இளைஞரணி செயலாளர் கோவை கு.இராமகிருஷ்ணன் எழுச்சிமிக்க வரவேற்புரை ஆற்றினார்.

நான், ஈழத்தமிழர்கள் கொடுமையை விளக்கும் கண்காட்சியை திறந்து வைத்து எழுச்சி உரையாற்றினேன். அதனைத் தொடர்ந்து 06.07.1983 அன்று சோலையார் பேட்டையிலிருந்து புறப்பட்டு வடஆற்காடு மாவட்ட இளைஞர் அணியின் எழுச்சி சைக்கிள் பேரணி வழிநெடுக பிரச்சாரம் செய்துகொண்டு பெரியார் திடலை அடைந்தது.

திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டில் நான் ஆற்றிய எழுச்சிமிக்க உரையில், “தந்தை பெரியார் வழியில் இளைஞர்கள் சுயநலம் பாராது ஆற்ற வேண்டிய கடமைகள் பற்றி எடுத்துக் கூறினேன்.

09.07.1983 அன்று இரவு சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.இராதா அரங்கில் நடைபெற்ற அண்ணாவின் ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ நாடக விழாவில் கலந்துகொண்டேன்.

மறுநாள் (10.07.1983 அன்று) சென்னை பெரியார் திடலில் ‘தமிழர் கலைப் பெருவிழா’ விழாவில், தி.மு.க. தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களும், தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களும், பேராசிரியர் தமிழ்க்குடிமகன், டாக்டர் மா.நன்னன், எம்.ஏ.அப்துல் லத்தீப், பொருளார் கா.மா.குப்புசாமி, அறந்தை நாராயணன் உள்ளிட்ட கழக முக்கிய பொறுப்பாளர்களும் பெருந்திரளாக கலந்துகொண்டார்கள்.

விழாவில், தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்றும்போது, “ஈரோடு நகரத்தில் ‘குடிஅரசு’ அலுவலகத்தில் துணை ஆசிரியராகத் தந்தை பெரியார் அவர்களி டத்திலே பணியாற்றிக் கொண்டி ருக்கிறேன். அப்பொழுது திருவையாறு தியாகையர் உற்சவம்.

திருவையாற்றில் மறைந்துவிட்ட நம்முடைய இசையரசர் தண்டபாணி தேசிகர் அவர்கள் பாடுவதற்காகச் சென்றார்கள். அவர் தமிழ்ப்பாடல்களாகவே பாடினார். அவர் பாடி முடித்தப் பிறகு உயர்ந்த சமுதாயத்தை சேர்ந்த இன்னொரு மகாவித்துவான் அந்த மேடையில் பாட வேண்டும். அந்த வித்துவானை அழைத்தபோது அவர் சொன்னார், “மேடை தீட்டாகி விட்டது. தமிழிசை பாடப்பட்ட காரணத்தால் மேடை தீட்டாகிவிட்டது. எனவே, மேடையைக் கழுவி சுத்தம் செய்து தோஷம் கழித்து புண்ணியதானம் செய்த பிறகு தான் நான் இந்த மேடையிலே ஏறுவேன்’’ என்று சொல்லி, அவர் சொன்னாவறு காரியங்கள் நடைபெற்று அதற்குப் பிறகு அவர் அந்த மேடையேறி தெலுங்குப் பாடல்களை _ வடமொழிப் பாடல்களைப் பாடினார் என்பது கற்பனையல்ல, நடந்த செய்தி!

இந்தச் செய்தி வந்தவுடன் தந்தை பெரியார் அவர்கள் கொதித்தார்கள், குமுறினார்கள். “என்னிடத்தில் செய்தியைத் தந்து ‘குடிஅரசு’ பத்திரிகையில் ஒரு துணைத் தலையங்கம் எழுது’’ என்று சொன்னார்கள். இன்றைக்கும் நீங்கள் காணலாம். பழைய ‘குடிஅரசு’ ஏட்டை எடுத்துப் பார்த்தால் ‘தீட்டாயிடுத்து’ என்ற தலைப்பில் நான் எழுதினேன்.’’ என்று பழைய வரலாற்று நிகழ்வை நினைவுகூர்ந்து தமிழர்களுக்கு உணர்வூட்டினார்.

பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள், தமிழர்களின் இனவுணர்வு புத்துயிர் பெற இதுபோன்ற விழாக்கள் கட்டாயம் என்று வலியுறுத்தினார்.

கலை விழா நிகழ்ச்சியில் தலைமை உரையாற்றிய நான், தமிழர்கள் கலையில் ஆரியர்கள் செய்த சூழ்ச்சிகளையும், அதை முறியடிக்க தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா சொன்ன கருத்துகளையும் சுட்டிக்காட்டி எழுச்சியான உரை நிகழ்த்தினேன்.

அன்று காந்தி_காமராஜ் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் நண்பர் திரு.குமரி அனந்தன் அவர்கள், திருவொற்றியூரில் தொகுதிப் பணிகளை கவனிக்கச் சென்றபொழுது காரை வழிமறித்துத் தாக்கப்பட்டதைக் கண்டித்து 12.07.1983 அன்று “எத்தனை நாள் இந்தக் காலித்தனம்?’’ என்ற தலைப்பில் முக்கிய அறிக்கை ஒன்று ‘விடுதலை’யின் முதல் பக்கத்தில் எழுதினேன். கருத்து வேறுபாடு கொள்ளுவது என்பது மனிதனுக்கு இயற்கை. காரணம் மனிதனுக்கு தான் ஆறாம் அறிவாகிய பகுத்தறிவு உள்ளது.

விடுதலை ஆர்.ராதா – டாக்டர் இளமதி இணையருடன்

ஆசிரியர் கி.வீரமணி, மோகனா அம்மையார், மணமகளின்

 தந்தை சி.ஆளவந்தார்.

 

அதற்காக மாறுபடுபவர்களை, எதிர்ப்பவர்களையெல்லாம் ஒழித்துக் கட்டுவோம் என்ற ஆணவப் போக்கு ஆளும் கட்சியில் உதித்தால் அதன் தலைவராக உள்ள முதலமைச்சரின் முக்கிய கடமை என்ன?

பெரியார், அண்ணா மண்ணில் இவ்வாறு நடப்பதா? என்று கண்டித்து அறிவுறுத்தினேன்.

அன்று மாலை சென்னை நியூ உட்லண்டஸ் ஓட்டலில் ‘விடுதலை’யில் பணியாற்றிய ஆர்.ராதா_டாக்டர் இளமதி ஆகியோர் வாழ்க்கை ஒப்பந்த வரவேற்பு விழா நிகழ்ச்சி  சிறப்பாகவும், எளிமையாகவும் நடைபெற்றது.

விழாவில், என்னுடன் எனது வாழ்விணையர் திருமதி மோகனா வீரமணி அவர்களும் கலந்து கொண்டார்கள்.

15.07.1983இல் ஆத்தூரில் ஒன்றியக் கழக தலைவர் பி.கொமாரு அவர்களின் மகள் தனலட்சுமிக்கும்_அன்புமணிக்கும் வாழ்க்கை ஒப்பந்த விழா என் தலைமையில் சிறப்புற நடந்தது.

திருமணத்திற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும், மோகனா அம்மையார் அவர்களும் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தினுடைய தாளாளர் புலவர் இமயவரம்பன் அவர்களும் செய்திருந்தார்கள்.

‘காரவன்’ ஏடு 15.07.1983 அன்று என்னை பேட்டி கண்டது. அப்போது, “மறைந்த பெரியார் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட பகுத்தறிவு இயக்கத்தின் 60 ஆண்டு பணிகளில் என்ன விளைவு ஏற்பட்டிருக்கிறது?’’ என்று கேட்டது.

நான், “திராவிடர் கழகம், பெரியார் இயக்கத்தால் தமிழர்களிடையே மிகப் பெரிய எண்ண மாற்றம் உருவாகியிருக்கிறது. எண்ணிக்கையில் அதிகமாக இல்லாவிட்டாலும், எண்ணங்களின் சக்தி மிக அதிகம்’’ என்றேன்.

திராவிடர் கழகத்தின் அடிப்படை லட்சியம் ஜாதிகளற்ற வர்க்க பேதங்களற்ற ஒரு சமத்துவமான சமுதாயத்தை உருவாக்குவதாகும். அந்த சமுதாயத்திலே ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை உண்டு. மதங்களின் அடிப்படையிலும் மத நூல்களின் அடிப்படையிலும் பின்பற்றப்பட்டு வரும் கடவுள், பக்தி போன்ற மூடநம்பிக்கைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பது தி.க. கொள்கை. அதை அடைவதில் பெரும் வெற்றி பெற்றுள்ளோம்.’’ என்று பதில் அளித்தேன்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் 16.07.1983 காலை 10.30 மணி அளவில் ஆத்தூர் வட்ட ஆசிரியர் சங்கத்தின் சார்பாக ‘சமுதாயத்தில் ஆசிரியர்களுடைய பங்கு’ என்ற தலைப்பில் நான் சிறப்பான ஒரு கருத்துரையை ஆற்றினேன்.

கும்பகோணத்தில் மறைந்த சுயமரியாதைச் சுடரொளிகள் குடந்தை பத்மாவதி _ இராமமூர்த்தி ஆகியோரது படத்தை 18.07.1983 அன்று இரவு 8.05 மணிக்கு நான் திறந்துவைத்து உரையாற்றினேன். நிகழ்ச்சிக்கு கழக பொருளாளர் கா.மா.குப்புசாமி தலைமை வகித்தார்.

கும்பகோணம் நகரத் தலைவர் தட்சிணாமூர்த்தி, மேலத்தஞ்சை மாவட்ட செயலாளர் ராஜகிரி தங்கராசு, மாவட்டத் தலைவர் ஆர்.டிசாரங்கன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

நான் பேசுகையில், “பத்மாவதியார்_ இராமமூர்த்தி மறைந்த பிறகு இவர்களது பிள்ளைகளை இந்த இயக்கத்திற்கு விட்டுச்சென்றிருப்பதுதான் எல்லாவற்றிற்கும் சிறப்பான தொண்டாகும்.

சில குடும்பங்களில் தான் மட்டும் சுயமரியாதைக் காரனாகவும் தன்மான முள்ளவனாகவும் வாழ்ந்து அவர்களுடைய அந்தக் கொள்கை முடிந்து போகின்ற அளவுக்கு வாழ்க்கையிலே வாழ்ந்து மறைந்தார்கள்.

இராமமூர்த்தி_பத்மாவதி ஆகியோர் எந்தக் கொள்கைக்காக இந்த இயக்கத்திலே இருந்தார்களோ அதே கொள்கையை அவர்களது பிள்ளைகள் விடாமல் பின்பற்றி வருவது பாராட்டுக்குரியதாகும்’’ என்று பேசினேன்.

திருவில்லிபுத்தூரில் 20.07.1983 இரவு 8.30 மணிக்கு தேரடி திடலில் மேற்கு முகவை மாவட்டம் திருவில்லிபுத்தூரில் சென்ற வருடம் மம்சாபுரத்தில் என் மீது தாக்குதல் நடைபெற்று ஓராண்டு ஆகியும் அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரையில் எடுக்காததைத் கண்டித்து நடைபெற்ற கண்டன பொதுக் கூட்டத்தில் நான் கலந்துகொண்டு உரையாற்றினேன்.

22.07.1983 அன்று இரவு 8 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் காயிதேமில்லத் அவர்களது பிறந்த நாள் விழாவில் நான் கலந்துகொண்டு உரையாற்றினேன். அதில்,

“கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட்பேட்டன் அவர்கள் சென்னைக்கு வந்தார்கள். சென்னைக்கு வந்து காயிலேமில்லத் அவர்களை சந்தித்துப் பேசினார்கள்.

கவர்னர் ஜெனரலாக இருக்கக் கூடியவர் சொன்னார். ‘முஸ்லிம் லீக்கை கலைத்துவிடுங்கள்’ என்று. “எனக்காக இதைச் செய்யாவிட்டாலும் பிரதமராக இருக்கக்கூடிய நேரு அவர்களுக்காவது இதைச் செய்யுங்கள்’’ என்று கேட்டார்.

காயிதேமில்லத் அவர்கள் மறுத்துவிட்ட நிலையில், தான் கொண்டுவந்த பூனைக் குட்டியை வெளியே விட்டுவிட்டுச் சென்றார்.

தனி நபருடைய விரோதம், குரோதம் காரணமாக விருப்பு, வெறுப்பு காரணமாகத் தோன்றியதல்ல இந்த இயக்கம்.

இளைஞரணி மாநாடு – தமிழர் கலைவிழாவையொட்டி நடந்த பேரணி (ஜூலை 10)
 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இரண்டாகப் பிரிந்தது. பாகிஸ்தான் தனியாகப் பிரிந்தபோது அதற்குரிய நிதி ரூ.17 இலட்சத்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு பிரித்துத் தருவதாகத் சொன்னார்கள். ஆனால், காயிதே மில்லத் அவர்கள் சொன்னார்கள். அந்த நிதி எங்களுக்கு வேண்டாம். அதை பாகிஸ்தானிடமிருந்து பெற்றதாகச் சொல்லுவார்கள். அதை எங்களுடைய தோழர்களால் உருவாக்கிக் கொள்ள முடியும்’’ என்று சொன்னார்கள்.

“காயிலேமில்லத் அவர்கள் பண்பாட்டினுடைய மொத்த உருவம்’’ என்று பல்வேறு வரலாற்றுத் தகவல்களை எடுத்துக் கூறி உரையாற்றினேன்.

இலங்கையிலே தமிழினப் படுகொலைகள் திட்டமிட்டு பல ஆண்டுகளாக சித்திரவதைக்கு ஆளாக்கப்படுவதைக் கண்டித்து 27.07.1983 அன்று ‘இந்திய அரசே, இராணுவத்தை அனுப்பு!’’ என்று தலைப்பிட்டு முக்கிய அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தேன். அன்று மாலையில்  நெய்வேலியில் இதுகுறித்து உரையாற்றினேன்.

மயிலாடுதுறையில் 29.07.1983 முற்பகல் 11.30 மணிக்கு ‘விடுதலை’யில் செய்தியாளராக பணிபுரியும் ராதா அவர்களது சகோதரர் பாலசுப்பிரமணியம் _ செல்வராணி ஆகியோர் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா என்னுடைய தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அடுத்து பட்டுக் கோட்டை காசாங்குளம் வடகரை அழகிரி பந்தலில் அண்ணா அரங்கில், பகுத்தறிவாளர் கழக மாநாடும் தமிழர் கலை விழாவும் 31.07.1983இல் சிறப்புற நடைபெற்றது.

பகுத்தறிவாளர் கழக மாநாடு என்றாலும், இலங்கையில் நடைபெற்ற தமிழர் படுகொலையைக் கண்டித்து அம்மாநாட்டில் நீண்ட உரை ஆற்றி மத்திய, மாநில அரசுகளின் கடமைகளை வலியுறுத்தினேன்.

“மத்திய அரசு இந்தப் பிரச்சினையில் அடிஅடியாக எடுத்து வைக்கிறதே தவிர அடிமேல்அடி கொடுக்க மறந்துவிட்டது.

தமிழக அரசு தூதுகோஷ்டி அனுப்பலாமே தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது. ஈழவிடுதலைப்புலி குட்டிமணி, ஜெகன் ஆகியோர்களைக் காப்பாற்ற அவர்களுடைய தாய், தந்தையர் கருணை மனு கொடுத்தார்கள். அந்த வீரத் தமிழர்கள், “நாங்கள் கருணை மனு மூலம் உயிர் பிச்சை பெற்று வாழ விரும்பவில்லை என்று மறுத்துவிட்டார்கள். அவர்களிடம் கடைசி ஆசை என்ன என்று கேட்டபொழுது “என்னுடைய கண்களை பார்வையற்ற ஈழத்தமிழனுக்கு பொறுத்துவீர் களேயானால் அவர் மூலமாக மலரப்போகின்ற தமிழ் ஈழத்தைப் பார்ப்பேன்’’ என்று சொல்லி இருக்கின்றார் என்றால் அவர்களது வீரத்தை என்னவென்று சொல்வது?

இப்படி பல்வேறு தகவல்களை அந்த மாநாட்டில் எடுத்துக் கூறினேன்.

(நினைவுகள் நீளும்..)

 

 

 

வளர்தொழில் ஆசிரியர் ஜெயக்கிருஷ்ணன் – சாந்தி இணையருடன் ஆசிரியர் கி.வீரமணி, ‘தேவி’ வார இதழ் உரிமையாளர் ராமச்சந்திர ஆதித்தனார்.

ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடன் மா.நன்னன்

 

 

கலைஞர்

 கருணாநிதி

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *