நீதிபதிகள் எல்லை தாண்டக் கூடாது!
கே: 65 ஆண்டுகளாக இயங்கிவரும் பல்கலைக்கழக மானியக்குழு கலைக்கப்பட்டு உயர்கல்வி ஆணையம் தொடங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது பற்றி தங்கள் கருத்து என்ன?
– கோ.முருகையன், திருத்தணி
ப: மோடியின் ராஜ்யத்தில் எல்லாம் ‘உய்யலா… உய்லா!’
கே: ‘எனது கட்சிக்கு மது அருந்தாத தொண்டர்கள் மட்டுமே தேவை’ என்று அறிவிக்கும் துணிவு எந்தக் கட்சிக்கும் இல்லாதது ஏன்?
– என்.சுமதி, திட்டக்குடி
ப: தலைவர்களில் சிலர் உள்ளதுபோலவே தொண்டர்களிலும் சிலரே இருப்பர்!
கே: தமிழ்நாட்டில் நடந்த அல்லது நடக்கிற எந்தப் போராட்டங்களிலும் பார்ப்பனர், பங்கு கொண்டதாக வரலாறே இல்லை. இது எதனைக் காட்டுகிறது?
– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
ப: வியக்கவைக்கும் இந்த சூழ்ச்சி, சுயநலத்தால் காலங்காலமாய் மற்றவர்களை ஏவி மோதவிட்டே பழக்கப்பட்டவர்களுக்கு அது மட்டுமே களம் _ இவைகள் தேவையில்லை!
கே: நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது நடைமுறை சாத்தியமா?
– அ.வேல்முருகன், வந்தவாசி
ப: நிச்சயமாக முடியாது. இன்றைய அரசியல் சட்டப்படி, 356 _ நெருக்கடி நிலை முதலிய பல பிரிவுகளுக்கு முழு திருத்தம் _ நீக்கம் வந்தாலொழிய!
கே: மிகப்பெரிய நாடான இந்தியாவில், வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் கூறியிருப்பது நடைமுறையில் சாத்தியப்படுமா?
– சீ. லட்சுமிபதி, தாம்பரம்
ப: நீதிபதிகள் தங்கள் துறையில் உள்ள நிலவரத்தோடு சட்ட விளக்கம் தருவதுதான் சரியான முறை. எல்லை தாண்டி விளம்பர ஆசைக்குப் பலியாகக் கூடாது. நீதித்துறையிலும் பல ஆண்டுகாலம் வாரிசு நீதிபதிகள் உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ள நிலை வந்ததே. அதற்கென்ன பதில்?
கே: அடக்குமுறையால் போராட்டங்களை ஒடுக்க முயலும் மத்திய – மாநில அரசுகளின் போக்கு எப்படிப்பட்ட விளைவை உண்டாக்கும்?
– கா.பாண்டியன், கோவை
ப: தேர்தல் மூலம் மக்கள் பதில் அளித்து அவர்களையே —-காணாமல் போகச் செய்வர். அதுவரை ஆட்டங்கள் ஆடட்டும்!
கே: மோடி அரசின் விருப்பப்படி தமிழக ஆட்சியின் ஆயுள் நீடிக்கும் நிலையில், மு.க.ஸ்டாலினுக்குத் திறமையில்லை என்பது அயோக்கியத்தனமான விமர்சனம் அல்லவா?
– தா.முனுசாமி, வேலூர்
ப: பொறுப்பற்றோரின் விமர்சனம் _ இவைகளை அலட்சியப்படுத்துங்கள். எதிர்க்கட்சித் தலைவர் தி.மு.க. செயல் தலைவர் அவரது கடமையை முறையாகச் செய்து வருகிறார். குறுக்கு வழிகளை நம்பாது தேர்தலை எதிர்கொள்ள நினைப்பது தவறா? _ நேர்மையா?
கே: இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிறுமிகள் பாதுகாப்பாக இருக்க, மீண்டும் விடுதலைப் புலிகளை உருவாக்க வேண்டும் என்று இலங்கை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறியிருப்பதைப் பற்றி தங்கள் கருத்து?
– தீ.கருணாகரன், திருவரங்கம்
ப: விடுதலைப் புலிகளின் பெருமை இப்போதாவது புரிகிறதே. அதுவரை மகிழ்ச்சியே!
கே: பல நிலைகளில் தமிழ்நாட்டிற்கு எதிராக உள்ள மோடி அரசு பசுமை வழிச் சாலைத் திட்டத்தை இவ்வளவு பெரிய செலவில் தமிழ்நாட்டில் செயல்படுத்தத் துடிக்கும் பின்னணி என்ன?
– இளந்தமிழன், அரியலூர்
ப: பின்னணி, முன்னணி எல்லாம் எல்லோருக்கும் தெரிந்த பரம இரகசியம்தானே!
கே: தேசிய மருத்துவ ஆணைத்திற்கும், இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கும் உள்ள வேறுபாடு என்ன? நாம் ஏன் தேசிய மருத்துவ ஆணையத்தை எதிர்க்கிறோம்?
– தமிழ்மகன், சைதாப்பேட்டை
ப: மாநில உரிமைகளைப் பறிக்கும் அமைப்பை எதிர்ப்பது மாநிலங்களின் கடமையாகும்! உரிமை பறிபோவதை வேடிக்கை பார்க்க முடியுமா?