போர் விமானியாக
சாதனை புரியும் பெண்!
இந்திய விமானப்படையின் போர் விமானிக்கான தேர்வு அண்மையில் நடைபெற்றது. நாடு முழுவதும் இந்தத் தேர்வை 6 இலட்சம் பேர் எழுதினர். இதில் 22 பேர் போர் விமானி பணிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் மத்தியப் பிரதேசத்தைச் சார்ந்த ஆன்சல் கங்க்வாலும் (24) ஒருவர்.
ஆன்சலின் தந்தை சுரேஷ் மத்தியப் பிரதேசத்திலுள்ள ‘நீமுச்’ பேருந்து நிலையத்தில் தேநீர்க்கடை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளி, கல்லூரி நாட்களிலேயே கூடைப்பந்து, 400 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் ஆன்சல் கங்க்வால் பரிசுகளை வென்றுள்ளார். கல்லூரி படிப்புக்குப் பிறகு சப்_இன்ஸ்பெக்டர் தேர்வில் வெற்றிபெற்று பயிற்சியில் சேர்ந்தாலும் விமானப் படையில் சேர வேண்டும் என்பதைத்தான் இலட்சியமாகக் கொண்டு தேர்வுக்கு தயாராகி இருக்கிறார். இவரது தந்தை சுரேஷும் கடன் வாங்கி இவரை படிக்க வைத்திருக்கிறார். ஆன்சல் கங்க்வாலும் கடுமையாக உழைத்து தன் இலட்சியத்தையும் குடும்பத்தின் கனவையும் நிறைவேற்றி இருக்கிறார்.
ஹைதராபாத்திலுள்ள இந்திய விமானப் படை பயிற்சி மையத்தில் ஆன்சல் பணியில் சேர்ந்திருக்கிறார். இவருக்கு நாடு முழுவதிலிருந்து பலர் வாழ்த்துகளை தெரிவித்தவண்ணம் உள்ளனர். பெண்ணால் எதுவும் முடியும் என்பதற்கு இவர் ஒர் எடுத்துக்காட்டு!
ஆணை வீழ்த்திய ஆற்றல்மிக்க பெண்!
ஆண்கள் ஆதிக்கம் மிகுந்த ‘மிக்ஸ்ட் மார்ஷியல் ஆர்ட்’ என்ற தற்காப்புக் கலையில் பங்கேற்று சாதித்துக் கொண்டு இருக்கிறார் கோமல் ராவ். இந்தப் போட்டியில் அண்மையில் பங்கேற்று ஆடவரை வீழ்த்தி பட்டம் வென்ற ஒரே பெண்மணி என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார். இவருடைய தாயார் சீமா ராவ், இந்தியாவின் முதல் பெண் கமாண்டோ பயிற்சியாளர் என்ற சிறப்பைப் பெற்றவர். தாயை போலவே தன்னம்பிக்கையும், வலிமையும் கொண்ட பெண்மணியாக உருவெடுத்திருக்கிறார்
கோமல் ராவ். புரூஸ் லீ விரும்பிக் கற்ற இந்த அதிரடி தற்காப்புக் கலையை தாய் _ மகள் இருவருமே கற்றிருக்கிறார்கள்.
“அப்போது எனக்கு 15 வயதிருக்கும். காவலர்களுக்கு பயிற்சி அளிக்கும் இடம். அங்கு வீரர்களுக்கு கமாண்டோ உடையில் பயிற்சி அளித்தபோது என் அம்மாவுக்குள் மிளிர்ந்த கம்பீரமும் ஆளுமையும் என்னை வியக்க வைத்தது.
எனக்கு என் தாயார் முன்மாதிரியாக இருக்கிறார். எனது வலிமை அவரிடமிருந்து கிடைத்து’’ என்கிறார் கோமல்ராவ்.
பெண்கள் என்றாலே மென்மையானவர்கள். உடல் வலிமை குறைந்தவர்கள் என ஏளனமாய் எண்ணிக் கொண்டிருப்பவர்கள் வியக்கும் விதமாக ஒரு போட்டியில் ஆடவருடன் போட்டியிட்டு வெற்றிவாகை சூடி, “பெண் என்பவள் வீரத்திலும், விவேகத்திலும் ஆண்களையே விஞ்சக் கூடியவர்கள் ‘பயிற்சி எடுத்தால் பெண்ணும் பலசாலி’ என்பதை இவர் உறுதி செய்துள்ளார்!