செத்த சிலந்தி குழந்தையாய் பிறக்குமா ..?
சிகரம்
“ஒரு சிலந்திப்பூச்சி திருவானைக்காவில் எழுந்தருளிய சிவபெருமானுடைய திருமுடியின் மேல் சூரிய வெப்பமும் சருகும் படாதிருக்கும் பொருட்டுத் தன்னுட் கலந்த வாயின் நூலினாலே மேற்கட்டிபோல் நூல்வலைப் பந்தர் செய்தது. வழக்கம்போல் இறைவரது திருவடியினை வணங்கச் சென்ற வெள்ளை யானை, சிலந்தி இழைத்த வாய்நூல்வலையின் பரப்பினைக் கண்டு, “இஃது அநுசிதம்’’ என்று கருதிச் சிதைத்தது. அதுகண்ட சிலந்தி, “இன்று யானையின் கை சுழன்றதால் நூற்பந்தர் சிதைந்தது’’ என்று கொண்டு மறுநாள் மீண்டும் வலையை இழைத்தது. பின்னாளிலும் அவ்வெள்ளையானை அதனை அழித்தது. சிலந்தி அதனைக்கண்டு, “எமது சிவபெருமான் திருமுடிமேல் சருகுகள் விழாதபடி நான் வருந்தி இழைத்த நூல் பந்தரை இந்த யானை அழிப்பதோ?’’ என்று கோபித்து எழுந்து யானையின் துதிக்கையினுள்ளே புகுந்து கடித்தது. அவ்வருத்தம் பொறாமல் யானை தன்னுடைய துதிக்கையைத் தரையில் வேகமாக மோதி நிலைகுலைந்து வீழ்ந்து இறந்தது. வெள்ளையானையின் துதிக்கையினுள்ளே புகுந்து கடித்த சிலந்தியும் இறந்தது.
சோழர் குலத்தரசனாகிய சுபதேவன் தன்னுடைய பெருந்தேவி கமலவதியுடனே சிதம்பரத்தை அடைந்து, பொன்னம்பலத்தில் திருக்கூத்தாடுகின்ற சிவபெருமானின் திருவடிகளை வணங்கித் துதித்துத் திருப்படியின் கீழ் வழிபட்டுக் கொண்டிருந்தான். அவர்களுக்கு மக்கட் பேறு இல்லாமையால் அரசமாதேவி வரத்தினை வேண்டிநின்றனள். கூத்தப் பெருமான் அதற்கிரங்கித் திருவுள்ளம் பற்றியதனாலே பெருந் திருப்பணி செய்த சிலந்தியானது கமலவதியாரின் திருவயிற்றில் அழகிய ஒரு மகவாய் வந்து அடைந்தது என்று திருவிளையாடல் புராணம் கூறுகிறது.
பெண்ணின் சினையணுவுடன் ஆணின் விந்தணு சேர்ந்துதான் கரு உருவாக முடியும். அதுதான் அறிவியல். அப்படியிருக்க செத்த சிலந்தி கருவாக உருவானது என்பது அறிவியலுக்கு எதிரானது அல்லவா? அறிவியலுக்குப் புறம்பான செய்திகளைக் கூறும் இந்துமதம் எப்படி அறிவியலுக்குப் பொருந்தும்?
விலகிப் போ என்றால் சமுத்திரம் விலகுமா?
பாரத நாட்டின் தென்பகுதியில் கோகர்ண க்ஷேத்திரம் உள்ளது. அது பரமேஸ்வரன் மனமுவந்து அமர்ந்துள்ள இடம். அவ்விடத்தில் செய்யும் தான தருமங்கள் ‘தவம்’, ஜபம் ஆகியவை பல மடங்காகப் பரிணமிக்கும். அங்கு இறப்பவர் மோக்ஷம் அடைவர். இங்கு நீராடி ‘கோகர்ணேச்வரருக்கு’ ஜபம், அபிஷேகம், ஓமங்கள் ஆகியவை செய்தால் நினைத்த காரியங்கள் சித்தியாகும்.
அந்தத் திருத்தலத்தில் முனிவர்கள் தினமும் கோகர்ணேச்வரரைச் சேவித்து அங்கேயே வாசம் செய்தனர். அத்தலம் கடல், ஆகாய கங்கையால் நிரம்ப நீரில் மூழ்கிவிட்டது. இதனால் கவலையடைந்த முனிவர்கள் பரசுராமரை அணுகி அத்தலம் நீரிலிருந்து வெளிவர ஆவன செய்து தங்களுக்கு உதவுமாறு வேண்டினர்.
உடனே பரசுராமர், தென் சமுத்திரக் கரையை அடைந்து கோகர்ண ஷேத்திரத்தை வெளியிட வேண்டிட, சமுத்திரராஜன் பதில் கூறவில்லை. அப்போது பரசுராமர் கோபம் கொண்டு ஆக்கினேய அஸ்திரத்தை எய்ய முற்பட அது கண்டு பயமடைந்த சமுத்திரராஜன் தோன்றி “பார்க்கவ ராமா! உங்கள் பலத்தை நான் அறிவேன். முன்பு பிரம்மன் என்னை யாராலும் வெல்ல முடியாது என்று வரமளித்தார்.
எனினும், நீங்கள் விஷ்ணு அம்சமானவர். எனவே, தாங்கள் எந்த எல்லை வரையில் என்னை அகன்று செல்லச் சொல்கிறீர்களோஅதுவரையில் நான் செல்கிறேன்’’ என்று கூற, பரசுராமர் “கோகர்ண தலம் வெளிவர ஏதுவாக நாலாபக்கமும் இடம்விட்டுச் செல்க’’ என்றார்.
தலம் வெளிவந்து நிலை பெற்றது. ரிஷிகள் பரசுராமரைப் புகழ்ந்தனர். அவரும் கோகர்ணேசுவரனைப் பக்தியுடன் ஆராதனை செய்துவிட்டு மகேந்திரபுரிக்குச் சென்றார்’’ என்கிறது இந்துமதம். ஆணையிட்டதும் சமுத்திரம் விலகி நின்றது என்னும் அடிமுட்டாள்தனமான கருத்தைக் கூறும் இந்துமதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?
கற்ற கல்வியை குரு கேட்டால் கொடுக்க முடியுமா?
“மிதிலை நகரை ஆண்டு வந்த ஜனக மகராஜன், ‘வித்தியா தத்துவம் அறிந்த பிரம்ம ஞானி யார்?’ என்றறிய மகரிஷிகளை எல்லாம் வரவழைத்து ‘வித்வத்பாஷத்து’ ஒன்றை ஏற்பாடு செய்தான்.
ஆயிரம் பசுக்கள், பொன், ரத்தினம், அக்கிரகாரம், பணியாட்கள் முதலியவற்றை வெகுமதியாக அறிவித்து, அந்தப் பரிஷத்தில் யார் மகா வித்வானோ? யார் பிரம்ம ஞானியோ? அவருக்கு இந்த வெகுமதிகள் அனைத்தும் உரியவை என அறிவித்தான்.
அவ்வமயம் அங்கே மகாபண்டிதரான ‘யாஜ்ஞவல்ணகியர்’ வந்தார். அங்கு நடந்தன யாவும் அறிந்து சீடனை அழைத்து அந்த வெகுமதிகள் அனைத்தையும் தன் வீட்டிற்கு எடுத்துச் செல்லுமாறு கூறினார். அதைக்கண்ட அனைவரும் வியப்பும், குரோதமும் அடைந்தனர்.
உடனே அனைவரும் யாஜ்ஞவல்கியரிடம் ஆயிரக்கணக்கில் கேள்விகள் கேட்க, அனைத்திற்கும் அவர் சரியான பதில்கள் பகன்றார். பின்னர் அவர் மற்றவர்களைப் பல கேள்விகள் கேட்க அவர்கள் விடை சொல்ல முடியாமல் தவிக்க யாஜ்ஞவல்கியர் வாதில் வெற்றி பெற்றார். அவர் வெகுமதிகளை எடுக்கப் போகையில் சாகல்யன் என்னும் முனிவர் தன்னை வெல்லுமாறு கூற, தோற்றவர் உயிரை விடவேண்டும் என்ற நிபந்தனையுடன் வாதம் ஆரம்பித்து இப்போட்டியிலும் யாஜ்ஞவல்கியரே வெற்றி பெற போட்டியின் நிபந்தனைப்படி தோற்ற சாகல்ய முனிவர் யோகசக்தி மூலம் உயிர்விட்டார்.
“யாஜ்ஞவல்கியருக்கு இத்தனை உயர்ந்த ஞானம் எவ்வாறு ஏற்பட்டது?’’ என்று ரிஷிகள் கேட்க வாயுதேவர் சொல்லலானார்.
ஒரு சமயம் மேரு மலையில் பிரம்மாவின் முன்னிலையில் ஒரு பிராம்மண பரிஷத்து நடைபெற்றது. அனைத்து முனிவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. அதில் பங்கு கொள்ளாதவர் பிரம்மஹத்தி தோஷம் அடைவர் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது. அச்சத்தில் எல்லோரும் தவறாமல் வந்துவிட்டனர். வைசம்பாயன மகரிஷி மட்டும் போகவில்லை. அதனால் அவரை பிரம்மஹத்தி தோஷம் சேர்ந்திட அவர் தன் சீடர்களிடம் அந்தத் தோஷத்தைப் பகிர்ந்து கொள்ளும்படிக் கூறி தன்னை அப்பாவத்திலிருந்து விடுபடுமாறு செய்ய வேண்டினார்.
அப்போது அவர் சீடரான யாஜ்ஞவல்கியர் மகாமேதாவி. தவமகிமை பெற்றவர். அவர் குருவிடம், “நான் ஒருவனே அதை ஏற்படுத்துகிறேன். மற்றவர்கள் வேண்டாம்’’ என்று கூற, அவர் அகம்பாவத்தால் கூறியதாகக் கொண்ட குரு வைசம்பாயனர் அவரிடம் யாஜ்ஞ வல்கியர் கற்ற யஜுர் வேதத்தைத் திருப்பித் தருமாறு கூறிட, அவரும் தான் கற்ற யஜுர் வேதத்தைக் கக்கினார்.
அதனால் ஒளியிழந்தவரான யாஜ்ஞவல்கியர், சூரியனை வேண்டி அவரை குருவாக இருந்து யஜுர் வேதத்தைத் கற்பிக்குமாறு வேண்டிட சூரியனும் அவ்வாறே அருளினார். குதிரை வடிவில் சஞ்சரித்து சூரியனைப் பின்தொடர்ந்து சென்ற யஜுர் வேதத்தைக் கற்றார் யாஜ்ஞவல்கியர்.
‘வாஜ்’ என்றால் குதிரை, வாஜி ஆக இருந்து இவர் கற்ற வேதசாகைக்கு ‘வாஜஸநேய சாகை’ எனப் பெயர் பெற்றது. அதுவே ‘சுக்கில யஜுர் வேதம்’ ஆகும். இவரது சீடர்களான கண்வர், வைதேயர், மத்யம், திசன், சாபேயன், உத்தவன் முதலியோர் இந்தச் சுக்கில யஜுர்வேத சாகையைப் பரப்பினர்’’ என்று கூறுகிறது இந்து மதம். ஒருவன் தன்னிடமுள்ள பொருளைக் கொடுக்கலாம். அது இடம் மாறும். எடுத்துக் கொடுக்க முடியும். ஆனால், ஒருவனது கல்வி அறிவை எப்படி எடுத்துக் கொடுக்க முடியும்? அறிவு என்பது ஒருவரோடு இணைந்தது. அப்படியிருக்க அதை இன்னொருவருக்குக் கொடுத்ததாய், அறிவுக்குப் புறம்பாய்க் கூறும் இந்து மதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையாகும்?
(சொடுக்குவோம்…)