மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். கோவில்பட்டியில் இருந்து ஜெயா எழுதுகிறேன். முதன்முதலில் நான் எழுதிய கடிதத்தை ‘உண்மை’, ‘விடுதலை’யில் நீங்கள் வெளியிட்டிருந்தீர்கள். நன்றி!
உங்களுடைய கருத்துகள் எனக்கு பெரிய தூண்டுகோலாய் இருந்தன. இந்தச் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற எண்ணம் அடிக்கடி எனக்குத் தோன்றும். பெரிய பெரிய வெற்றியாளர்கள்கூட தன் மனதை ஜெயிக்க முடியாமல் தோல்வி அடைகிறார்கள். பெண் என்பவள் காதல் என்கிற வலையில் மாட்டிக்கொண்டு தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் தற்கொலை செய்து கொள்கிறாள். அதை கீழே எழுத்து வடிவமாக்கியிருக்கிறேன்.
பெண்ணே! மனச்சிறையில் மாட்டாதே!
பெண்ணே – உன் சிரிப்பில் என்னை இழந்தேன்
என்பான் அது அவனின் இழப்பல்ல.
உன்னை அவனிடம் இழப்பதற்கு அவன் போடும் வேஷம்!
உன்னிடம் பக்கத்தில் வந்து பேசுவான் – அது
உன்னை பாதுகாக்க அல்ல! – பெண்ணே
உன்னை பாழாக்க!
பெண்ணின் உறுப்புகளை மட்டுமே பார்க்கின்ற
ஓநாய்கள் இவ்வுலகில் நிறைய உண்டு! – பெண்ணே
காதல் உணர்வு வெறும் இனக் கவர்ச்சியே
என்று தெரிந்துகொள் பெண்ணே!
மனம் என்பது இதயத்தில் அல்ல! அது மூளையில்தான்
உள்ளது என்று புரிந்து அந்த மூளையைக் கொண்டு
சிந்தித்து செயல்படு பெண்ணே!
இந்த மனச் சிறையிலிருந்து
சிந்தித்து வெளியில் வா!
முயற்சி செய் வெற்றி உனதாகட்டும்!
பெரியார் கண்ட புரட்சிப் பெண்ணாக மாறு பெண்ணே!
இப்படிக்கு,
செ.ஜெயா, கோவில்பட்டி
“மாணவர்களின் கடமை”
‘உண்மை’ (ஜூலை 1-15) இதழின் அட்டைப் படம் கண்களை காந்தமாய்க் கவர்ந்தது. மாணவர் கரங்களில் திராவிடர் கழகக் கொடி கம்பீரமாய்ப் பட்டொளி வீசிப் பறப்பது காண்பவர் மனதை வெகுவாய் வசீகரித்தது. மேலும், “கற்கும் காலத்தில் கைகளில் கத்திகள் ஏன்?’’ – ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் கட்டுரை மாணவர்களை செழுமைப்படுத்தும் விதமாக செறிவானதாகவும், நிறைவானதாகவும் இருந்தது.
சூத்திரனுக்கு கல்வி கற்க உரிமை மறுக்கப்பட்ட அவல நிலையில், பல்வேறு தடைகளைத் தகர்த்தெறிந்து, கல்வி கற்பதற்கு ஏதுவாக நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை பாடசாலைகள் கல்விச் சோலையாக பூத்துக் குலுங்க பெரிதும் காரணமாகவும் – காரியமாகவும் இருந்தவர்கள் தந்தை பெரியாரும், கல்வி வள்ளல் காமராசரும் ஆவார்கள்.
ஆனால், இவற்றையெல்லாம் சற்றும் சிந்திக்காதவர்களாக மாணவர்கள் நடந்துகொள்வது வெட்கம் – வேதனை! அறிவையும், ஆற்றலையும் வளர்த்துக்கொண்டு வீட்டின் வளர்ச்சிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கவேண்டிய மாணவர்கள் ஆயுதங்களை ஏந்தலாமா? எனவே, ‘கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு! என்று கூறிய பேரறிஞர் அண்ணாவின் அறிவுரையை நெஞ்சில் நிலைநிறுத்தி செயல்பட வேண்டியது மாணவர்களின் தலையாய கடமையாகும்.
– இல.சீதாபதி,
மேற்கு தாம்பரம், சென்னை – 45.