எல்லாம் எவன் செயல்?

ஜூலை 16-31

பாவலர் ப.கல்யாணசுந்தரம்

சாமி கோவிச்சுக்கிட்டு ஊருக்கும் நாட்டுக்கும் மழைமாரி பெய்யாமல் தடுத்தாண்டு இருக்கு. இந்த விஷயம் எங்களப்போல் பெரியவங்களுக்குத் தெரியுது; எளசுகளுக்கு எப்படித் தெரியும்? நாமதான் ஒரு முடிவு பண்ணணும்!’’ என்று சிவன்கோயில் குருக்களைப் பார்த்தார்.

சோலையூர் ஆற்றில் மணல் லாரிகள் சாரை சாரையாக வந்து மணல் எடுத்துச் செல்லும். சாலையில் _ வீடுகளில் ஒரே புழுதிமயமாய்ப்  போனது. ஊருக்கு அருகிலேயே மணலைக் கொட்டி _ பெரிய மலைபோல் ஆக்கினார்கள். அங்கிருந்து வெளியூர்களுக்கு டோக்கன் போட்டு லாரிகள் வந்து ஏற்றிப்போனபோது அந்த ஊர், மணல் புழுதியில் புதைந்து போனது.

கொதித்துப் போன இளைஞர்கள் ஒன்றுகூடி லாரிகளை முற்றுகையிட்டு மணல் அள்ளக் கூடாது என்று மறியல் செய்தனர்.

சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள், காவல் துறையினர், ஆளும் கட்சி பிரமுகர்கள் வந்தனர்.

ஊர் கூட்டம்போட்டு கூடிப் பேசினர்.

“யப்பா! அரசாங்கம் ஆத்திலே மணல் எடுக்க உரிமம் கொடுத்திருக்கு. நாங்க சட்டப்படிதான் மணல் அள்ளுகிறோம். அதைத் தடுக்க உங்களுக்கு அதிகாரம் இல்லை. கலைஞ்சு போங்க’’ என்று மிரட்டினார் ஆளுங்கட்சி பிரமுகர்.

“விவசாயமே பாழாய் போச்சு, இப்போ, குடிநீரும் இல்ல, ஊரே மணல் புழுதியில இருக்கு. நாங்க வாழறதா, இல்லே ஊரை விட்டே ஓடறதா? ஆகையால் மணல் அள்ள விடமாட்டோம்’’ ஆவேசக் குரலில் சொன்னார்கள்.

“தம்பிகளா…! போலீசு தொணையோட மணல் எடுப்போம், தடுத்தீங்கன்னா? பொது சொத்துக்கு சேதம் பண்ணுனதா கைது பண்ணி உள்ள வைப்போம், தேவைதானா?’’ என மிரட்டினார் ஆளுங்கட்சி பிரமுகர்.

“எங்களை கைது பண்ணிப் பாருங்க! நாங்க தயார்!’’ என்றபடி சில இளைஞர்களும், பெண்களும் முன்னுக்கு வந்தனர். லாரி முன் அமர்ந்தனர்.

அவ்விடம் என்ன நிகழுமோ என்ற பதட்டம் நிலவியது. செய்தியறிந்து அவ்வூர் தர்மகர்த்தாவும், சிவன்கோயில் குருக்களும் வந்துவிட்டனர். சுயநலம் கலந்து பொய் அனுதாபத்துடனும், மிரட்டும் பாவனையிலும் ஊர்க்கூட்டத்தில் பேசினார் தர்மகர்த்தா.

“யப்பா, தம்பிகளா, எளங்கண்ணு பயமறியாது. நீங்க பாட்டுக்கு லாரியை மடக்கி ஒன்னுகெடக்க ஒன்னு ஆச்சுன்னா… நெலமை மோசமாப் போயிரும். அரண்மனைக்கு எதிர் மனை கிடையாது. மணல் எடுக்க அரசு அனுமதி கொடுத்திருக்கு. அதை எதுக்க நம்பால முடியுமா? ஊர்ல மழை மாரி பெய்யல, அதனால ஆத்தில தண்ணி இல்ல, வெவசாயம் இல்ல. அதுக்கு அரசாங்கம் என்ன பண்ணும்?’’ என்று நிறுத்தினார்.

“அதுக்கு என்னதாம் முடிவு தர்மகர்த்தா?’’ ஊர் பெரிசு ஒன்று வெற்றிலையை மென்றபடி அப்பாவியாய்க் கேட்டது.

“அப்படிக் கேளு, சொல்றேன், மழை பெய்யலீன்னா… என்ன காரணம்னு நெனைச்சுப் பாத்தீங்களா? நம்ம ஊருக்கு தெற்கே இருக்கிற சிவன்கோயில் பாழடைஞ்சு கெடக்கு. அதை புணரமைச்சு புதுசாக் கட்டி, கும்பாபிசேகம் செய்ய நாதியில்ல, அவனவன் பொழப்ப தேடிக்கிட்டு இருந்தா சாமி காரியம் பண்றது ஆரு? சாமி கோவிச்சுக்கிட்டு ஊருக்கும் நாட்டுக்கும் மழைமாரி பெய்யாமல் தடுத்தாண்டு இருக்கு. இந்த விஷயம் எங்களப்போல் பெரியவங்களுக்குத் தெரியுது; எளசுகளுக்கு எப்படித் தெரியும்? நாமதான் ஒரு முடிவு பண்ணணும்!’’ என்று சிவன்கோயில் குருக்களைப் பார்த்தார்.

குருக்கள் வானத்தைப் பார்த்து _ கைகளை மேலே உயர்த்தி “எல்லாம் அவன் செயல்!’’ என்றார்.

தொண்டையைச் செறுமியவாறு _ மேலும் தொடர்ந்தார் தர்மகர்த்தா. “இப்படி வெளையாட்டுப் புள்ளைக வெள்ளாமை வெச்சா வீடு வந்து சேருமா? இங்க, மணல் லாரிகளை சிறை புடிச்சா மழை பெய்யுமா? வெவசாயம் செழிக்குமா? இல்ல குடிநீர் கெடைக்குமா? அந்தக் கோயிலக் கட்டி, கும்பாபிசேகம் பண்ணி, சாமிய குளிர வச்சாத்தான் மழை பெய்யும். அதுக்கு மொதல்ல வழியப் பாருங்க!’’ என்று சூழ்நிலையை மாற்றினார்.

“அதானே…! அதானே…! தர்மகர்த்தா சொல்றதும், வாஸ்தவந்தானே!’’ ஊர் பெரிசுகள் சிலதும், மக்களும் இதுதான் காரணமென்று புரிந்து கொண்டதுபோல் ஒத்து ஊதினர்.

கூட்டத்தில் மவுனம் புதைந்தது. எங்கோ காக்கைகள் கூட்டமாக கத்திக் கொண்டிருந்தது.

“தர்மகர்த்தா அய்யா…! நான் ஒரு தீர்ப்பு சொல்றேன். கேளுங்க. ஆத்தோரம் இருக்கிற ஊர்க்காரங்க இப்படித்தான் பிரச்சினை பண்ணினாங்க. அங்கங்க கோயில் கட்ட பணம் கொடுத்தோம். ரூட் கிளிர் ஆச்சுது! இப்ப பிரச்சினை இல்லாம மணல் எடுக்கறோம். இளைஞர்களுக்கும் மணல் குவாரில வேல போட்டுக் கொடுக்கிறோம். என்ன சொல்றீங்க! ஊர் மக்கள கேட்டுச் சொல்லுங்க! சாமி காரியத்தில நாங்களும் உதவி பண்ணினா, எங்களுக்கும் புண்ணியம் கெடைக்கும் பாருங்க!’’ சாதுர்யமாகப் பேசினார் ஆளுங்கட்சிப் பிரமுகர்.

“கட்சிக்காரத் தம்பி! நீங்க சொல்றதும் சரி! கோயில் கட்ட பணத்த என்னிக்குக் குடுக்கிறீங்க?’’ என்று கேட்டு ஊர் பெரிசுகள் மகிழ்ச்சி அடைந்துப் போனார்கள்.

“அறிவில்லாமப் பேசுறீங்களே! கோயில் கட்டுவதற்கும், ஆற்று மணலுக்கும், மழை பெய்வதற்கும் என்ன சம்பந்தம்? ஆற்று வளமும், ஊற்று வளமும்தான் நம்ம வாழ்வாதாரம். அதைக் கெடுத்து மணல் வளங்களைக் கொள்ளை போறதுக்குத் துணை போகச் சொல்றீங்களே! என்ன நாயம்? உங்க மூடநம்பிக்கைக்கு ஒரு அளவேயில்லையா? ஒரு சிலரின் சுயநலத்திற்கு கடவுள் கோயில் வேணும். அதுக்காக நம்ம உரிமைகளை விட்டுக்கொடுத்து, அவங்களுக்கு அடிமைச் சேவகம் செய்யணும்ங்கிறீகளா? சமாதானப்படுத்தும் ஆளுங்கட்சி அதிகாரிகள் சிலர் சுகமா வாழறதுக்காக நம்ம ஏமாறனுமா? முடியாது! இதை அனுமதிக்கவே மாட்டோம்!’’ இளைஞர்கள் அறைகூவல் விடுத்து லாரிமுன் மறியல் செய்தனர்.

அவர்களை காவல்துறை கைது செய்து, வாகனத்தில் ஏற்றினர். “மூடநம்பிக்கை ஒழிக! தடுப்போம்! தடுப்போம்! மணல் கொள்ளையைத் தடுப்போம்!’’ என்று முழக்கமிட்டனர்.

அதுவரை ஊமையாய் நின்ற ஊர் மக்கள், “கைது செய்யணும்னா எங்க எல்லோரையும் கைது செய்ங்க. ஊர்ல ஊழல் பண்றவன், கொள்ளையடிக்கிறவனை எல்லாம் வுட்டுட்டு, ஊர் நல்லதுக்காக போராட்டம் பண்ற எங்க புள்ளைகளைக் கைது பண்றீங்களே!’’ என்று காவலர் வாகனத்தை முற்றுகையிட செய்வதறியாது திகைத்து நின்றது காவல்துறை!

மணல் கொள்ளையர்களும், தர்மகர்த்தாவும் அதிர்ந்து நின்றனர்!

“மணல் கொள்ளையைத் தடுப்போம்!

மக்கள் நலம் காப்போம்’’ இளைஞர்கள் முழங்கினர்

“இதுவும் அவன் செயலா?’’ என்று கேட்பது போல தர்மகர்த்தாவைப் பார்த்தார் அருகில் இருந்த இளைஞர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *