பகுத்தறிவு குருடர்கள்!

ஜூலை 01-15

 

கூனிக் குறுகி

                        குப்பையில் கிடந்த

குருடி ஒருத்தியை

                        குசலங் கேட்டு

கூட்டு சேர்ந்த

                        இன்னொரு குருடி;

கொஞ்ச நேரத்தில்

                        குழைந்து பேசி

நெஞ்சம் நிறைந்தாள்!

 

பசிக்கு உணவு

                        பகிர்ந்து தந்து,

வசிக்கும் இடத்தில்

                        வந்து தங்க

வாவென் றழைத்தாள்!

 

இதுவுமொரு இனப்பற்றென்ற

                        ஏகாம்பர சாமி,

இருட்டில் வாழும் இவளுக்கு

                        இறைவன் தந்த துணையென்றார்!

 

பார்வையற்ற குருடே பரவாயில்லை

                        இவரோ பகுத்தறிவுக் குருடு!

குருடிக்கு இறைவன்

                        கொடுத்தா னென்றால்,

பார்வையை அல்லவா

                        கொடுத் திருக்கணும்?

 

 

வாசகர் கடிதம்

 

‘உண்மை’ (ஜூன் 16 – 30) இதழில் ‘நீட்’ தேர்வு படுகொலைகள்! மோசடிகள்!எனும் தலைப்பில் வெளிவந்துள்ள எழுத்தாளர் மஞ்சை வசந்தனின் கட்டுரை, ‘நீட்’ எனும் மருத்துவ நுழைவுத் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டியுள்ள பாங்கு பாராட்டுக்குரியது.

கிராமப்புற ஏழை – எளிய மாணவர்கள் மருத்துவராக வருவதை தடுக்கும் கெட்ட நோக்கத்தில் மத்திய பி.ஜே.பி. அரசு திட்டமிட்டு ‘நீட்’ எனும் நஞ்சை மாணவர்களிடையே திணித்ததின் மூலம் ‘சமூகநீதிக்கு வேட்டு’ வைக்கும் வஞ்சகச் செயலை அரங்கேற்றியுள்ளது.

தமிழ்நாடு, தந்தை பெரியார் பிறந்த மண். அறிஞர் அண்ணா ஆண்ட மண். எனவே, ‘சமூகநீதிக்கு வேட்டு’ வைக்கும் இழிவான செயலில் எந்த அரசு செயல்பட்டாலும் அதனை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். கட்சி பேதமின்றி ஜாதி – மத வேறுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் ‘நீட்’டை விரட்டி அடித்து ‘சமூகநீதி’யை வென்றெடுப்பார்கள் என்பது உறுதி.

வெல்க சமூகநீதி! வீழ்க ஆரியம்!

– சீதாலட்சுமி, திண்டிவனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *