ஆறு.கலைச்செல்வன்
அறவாணன் எதிர் பார்த்தது போலவே கனிமொழி பூசை அறை எங்கே என்று கேட்டாள்!
வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புதிய இல்லத்தைப் பார்த்து அப்படியே பிரமித்துப் போய் நின்றாள் கண்மணி.
“எவ்வளவு பெரிய வீடு! கோடிக்கணக்கில் செலவாகி இருக்குமே’’ என்று வியந்தபடியே சந்தனக் கிண்ணத்தில் கையை விட்டாள் கண்மணி. அவளைத் தொடர்ந்து அவள் கணவன் அறவாணனும், மகன் மதியழகனும் சென்றனர்.
அறவாணனின் நண்பன் தனபாண்டியன் வீடுதான் அது. புதிய வீட்டில் இன்று குடிபோகிறான். அதற்காக புதுமனை குடிபுகு விழா நடத்துகிறான். அதில் கலந்துகொள்ளவே அறவாணன் தன் குடும்பத்துடன் வந்திருந்தான். அந்த வீட்டைப் பார்த்துத்தான் மலைத்துநின்று பிறகு உள்ளே நுழைந்தாள் கண்மணி. அவள் மனதில் தனக்கும் அப்படி ஒரு வீடு கட்ட வாய்ப்பு கிடைக்காதா? என்ற எண்ணம் மேலோங்கியது.
தனபாண்டியன் அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றான். காலையில் விழா முடிந்துவிட்டது. இவர்கள் தாமதமாக வந்திருந்தனர். தனபாண்டியன் மனைவி கனிமொழி வீட்டைச் சுற்றிக் காண்பித்தாள். ஆறாம் வகுப்பு படிக்கும் அவர்களின் மகன் அறிவழகனும் உடன் வந்தான். அறிவழகனும் மதியழகனும் சம வயதுப் பிள்ளைகள்.
கூடத்தைப் பார்த்தாள் கண்மணி. கூடத்தில் பெரிய தொலைக்காட்சிப் பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அலங்காரமான விளக்குகள் தொங்கவிடப்பட்டிருந்தன.
“அதிகாலையில் குடிவந்தோம். அப்போதே வந்திருக்கக் கூடாதா? எல்லாத்தையும் பார்த்திருக்கலாமே!’’ என்றாள் கனிமொழி.
“விழா நல்லா நடந்ததா?’’ என வினவினாள் கண்மணி.
“காலையில் முதன்முதலா பசுமாட்டை உள்ளே அழைத்து வந்தோம். வீடு முழுக்க கோமியம் தெளிக்கப்பட்டது. அர்ச்சகர் பூசையெல்லாம் நல்லா செஞ்சார்’’ என்றாள் கனிமொழி. “நீ எவ்வளவு படித்திருந்தாலும், பெரிய மனிதனாக இருந்தாலும் நீ மாட்டுக் கொட்டகையில் இருக்க வேண்டியவன் தாண்டா’’ என்று மேல்ஜாதிக்காரன் என்று சொல்லிக்கொள்பவனின் சூழ்ச்சி இது என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான் அறவாணன்.
கூடத்தை அடுத்து இரண்டு படுக்கை அறைகளை சுற்றிக் காட்டினாள் கனிமொழி. ஆனால், கண்மணியின் சிந்தனையெல்லாம் தானும் அப்படிப்பட்ட வீட்டைக் கட்ட வேண்டும் என்றே இருந்தது. ஆனால், தங்கள் வருமானத்திற்கு அதெல்லாம் சாத்தியமா என்ற எண்ணமும் மேலோங்கியது.
அவள் எண்ண ஓட்டங்களை நன்றாகப் புரிந்துகொண்ட அறவாணன் ஏதும் பேசாமல் அனைத்தையும் கவனித்தான்.
சமையல் அறையைக் காட்டினாள் கனிமொழி. அனைத்து வசதிகளும் அங்கு நிரம்பியிருந்தன.
பிறகு பூசை அறைக்கு அழைத்துச் சென்றாள். அது மிகப் பிரம்மாண்டமாக இருந்தது. அதன் கதவுகளில் மணிகள் பொருத்தப்பட்டிருந்தன. கதவு சந்தன மரத்தால் செய்யப்பட்டிருந்தது. சந்தன மணம் வீசியது. பூசை அறைக்குள் நாட்டில் எத்தனை சாமி படங்கள் உண்டோ அத்தனை படங்களும் வைக்கப்பட்டிருந்தன. குத்து விளக்குகள் எரிந்து ஒளி வீசிக் கொண்டிருந்தன. ஊதுபத்தியின் மணம் மூக்கைத் துளைத்தது. உள்ளே ‘ஓம்! ஓம்!’ என்ற ஒலி எழும்பிக் கொண்டேயிருந்தது. பூசை அறைக் கதவைத் திறக்கும்போதும் மூடும்போதும் எழும் மணியோசை இல்லத்தையே அதிரவைத்தது. ஏனைய அறைகளைவிட பூசை அறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நிறைய செலவு செய்யப்பட்டிருந்தது.
தன் மகன் அறிவழகனையும் அவன் வயதை யொத்த கண்மணியின் மகன் மதியழகனையும் உள்ளே அழைத்துச் சென்று சாமி கும்பிட செய்தாள் கனிமொழி.
“வீடு எப்படி இருக்கு?’’ என்று கேட்டான் தனபாண்டியன்.
“ரொம்ப நல்லாயிருக்கு’’ என்றான் அறவாணன்.
“ரொம்ப செலவாயிடுச்சு. உனக்கு எப்படி இருக்கு கண்மணி’’ என வினவினாள் கனிமொழி.
“சூப்பர், பிரமாதம். பூசை அறை ரொம்ப அற்புதமா இருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு’’ என்றாள் கனிமொழி. “நீ வீடு கட்டும்போது பூசை அறையை இதைப் போலவே கட்டிவிடு’’ என்று கண்மணியிடம் கூறினாள் கனிமொழி.
இதைக் கேட்ட அறவாணனுக்கு சுருக் கென்றது. கண்மணிக்கு கனிமொழி ஏதோ தூபம் போடுவதை உணர்ந்தான். ஒரு பெரிய அறையை பூசை அறையென ஒதுக்கி வீணடித்திருப்பதை அவன் விரும்பவில்லை. அந்த பேச்சிலிருந்து விடுபட அறவாணன் தனபாண்டியனிடம் ஒரு கேள்வி கேட்டான்.
“எல்லாம் சரிதான் தனபாண்டின். நூலக அறை எங்கேயிருக்கு?’’
இவ்வாறு அறவாணன் கேட்டவுடன், கனிமொழி முகம் சுருங்கியது. கண்மணி அறவாணனை முறைத்துப் பார்த்தாள். இவன் ஏதோ குழப்பம் செய்ய வந்திருக்கிறானோ என்பதுபோல் அறவாணனைப் பார்த்தான் தனபாண்டியன். சிறுவர்களான அறிவழகனும் மதியழகனும் ஏதும் புரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
“படுக்கை அறையிலேயே படித்துக்கொள்ள வேண்டியதுதான்’’ என்று சொல்லி நிலைமையை சமாளித்தான் தனபாண்டியன். ஆனால், அவன் கூறியதை அறவாணன் ஒப்புக் கொள்ளவில்லை. படுக்கை அறையிலேயே பூசை செய்து கொள்வதுதானே என மனதுக்குள் நினைத்துக்கொண்டான். அடுத்த சில மாதங்களில் கண்மணி கொடுத்த அழுத்தத்தால் வேறு வழியின்றி சொந்த வீடு கட்ட ஆரம்பித்தான் அறவாணன். கையில் பணமில்லாமல் கடன் வாங்கியே கட்டினான். தனபாண்டியன் வீட்டைவிட சற்று சிறியதுதான். இருந்தாலும் பணச்சுமை காரணமாக கண்மணியும் ஏதும் சொல்லாமல் கட்டுமானப் பணியை கவனித்து வந்தாள். பூசை அறையை தனபாண்டியன் வீட்டு பூசை அறையைப் போல் வடிவமைக்க விரும்பினாள் கண்மணி. ஆனால், கண்மணி சொல்வதை யெல்லாம் கேட்டுச்செய்த அறவாணன் பூசை அறையை ஒப்புக் கொள்ளவில்லை.
“பூசை அறை இல்லாமல் வீடா? என்னதான் நெனைச்சிக்கிட்டு இருக்கீங்க?’’ எனக் கத்தினாள் கண்மணி. “இதோ பார் கண்மணி. இதுவரைக்கும் நீ சொன்னதையெல்லாம் கேட்டு செஞ்சிக்கிட்டு வர்றேன். ஆனா, பூசை அறை தனியாகக் கிடையாது. அந்த அறை நூலக அறையாக இருக்கும். நிறைய புத்தகங்கள் வாங்கி வைக்கப்போறேன். அங்கு எந்த சத்தமும் இருக்காது. அமைதியா உட்காந்து படிக்கணும்’’ என்றான் அறவாணன். கண்மணி மனம் புழுங்கினாள். தன் மகன் மதியழகனையும் தூண்டிவிட்டு பூசை அறை வைக்கச் சொன்னாள். மதியழகனும் விவரம் புரியாமல் பூசை அறை வேண்டும் என்றான். ஆனால், அறவாணன் அதில் உறுதியாக இருந்து வீட்டையும் கட்டிமுடித்தான்.
கண்மணியின் எதிர்ப்பையும் மீறி எந்தவித சடங்குகளும் இல்லாமல் வீடு திறப்பு விழா நடைபெற்றது. தனபாண்டியன் குடும்பத்துடன் விழாவிற்கு வந்தான்.
அறவாணன் எதிர்பார்த்ததுபோலவே கனிமொழி பூசை அறை எங்கே? என்று கேட்டாள். கண்மணி ஏதும் பேசவில்லை. அறவாணன் அவர்களை அழைத்துச் சென்று வீட்டைச் சுற்றிக் காட்டினான். முக்கியமாக நூலக அறையைக் காட்டினான். அங்கு நிறை புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அறிவழகனை உள்ளே சென்று புத்தகங்களைப் படிக்கும்படி கூறினான். ஆனால், அவன் விருப்பமுடன் உள்ளே செல்லவில்லை. பூசை அறை இல்லை என்று குறை சொல்லிவிட்டு கனிமொழி புறப்பட்டாள்.
சில நாட்கள் கடந்தன. ஆரம்பத்தில் தன் மகன் மதியழகன் நூலக அறைக்குச் செல்வதில்லை என்பதை அறவாணன் உணர்ந்தான். ஆனால், பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவன் நூலக அறைக்குச் செல்ல ஆரம்பித்தான். அடுத்த சில நாட்களில் புத்தகங்கள் மீது அதிக ஈடுபாடு கொண்டு தொடர்ந்து நூலகத்திலேயே பொழுதைக் கழித்தான். நல்ல நூல்களில் சொல்லப்பட்ட கருத்துகளை பின்பற்றினான். பொது அறிவுப் புத்தகங்கள் நிறைய வாங்கி வரச் சொல்லி தந்தையை அதிகத் தொல்லையும் கொடுக்க ஆரம்பித்தான் மதியழகன். அறவாணனும் சளைக்காமல் புத்தகங்களை வாங்கிப் போட்டான். கண்மணியும் மனம் மாறி மதியழகனுக்கு ஆதரவாக செயல்படலானாள்.
ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகள் உருண்டோடின. பணி மாறுதல் காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பே தனபாண்டியன் குடும்பம் வெளிமாநிலத்திற்குச் சென்றுவிட்டது.
கட்டிய வீட்டை வாடகைக்கு விட்டுச் சென்றுவிட்டனர். சிலகாலம் மட்டுமே தனபாண்டியன் குடும்பத்திற்கும் அறவாணன் குடும்பத்திற்கும் தொடர்பு இருந்தது. தொலைபேசியில் பேசிக்கொண்டார்கள். ஆனால், அது நீடிக்கவில்லை. அய்ந்து ஆண்டுகளுக்கு மேலாக இரு குடும்பத்தினருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ஒரு நாள் வெளி மாநிலத்தில் இருந்த தனபாண்டியன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தான். கனிமொழியும் அறிவழகனும் உடனிருந்தனர்.
தொலைக்காட்சியில் ஒருவரது பேட்டி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. பேட்டி கொடுத்தவரை உற்றுநோக்கினர் தனபாண்டியன் குடும்பத்தினர். அது வேறு யாருமல்ல. மதியழகனேதான். உங்கள் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம் என்ன என்று கேட்ட கேள்விக்கு அவன் கூறிய பதில்,
“நான் படித்து முன்னேறவும், உயர்ந்த அரசுப் பதவியை அடையவும் எனது பொது அறிவை வளர்த்துக் கொண்டு நூல்கள் பல எழுதி அவைகளில் பல அரசின் சிறந்த நூல்களாக பரிசு பெறவும் உறுதுணையாக இருந்தது என் தந்தை எனக்கு அமைத்துக் கொடுத்த ‘நூலக அறைதான்’. ஒவ்வொரு வீட்டிலும் நூலக அறை கண்டிப்பாக இருக்க வேண்டும். எனது உயர்ந்த நிலைக்குக் காரணம் நான் முன்பு கூறியதுபோல எனது வீட்டு நூலகமும் அதற்கு உதவிய தன் தந்தையும் அவருக்கு உறுதுணையாக இருந்த என் அம்மாவுமே’’ என்றான் மதியழகன்.
தனக்கும் தான் சிறுவனாக இருந்தபோதே நூலகம் அமைத்துக் கொடுத்திருந்தால் தானும் உயர்ந்த நிலைக்கு வந்திருப்பேனே என்ற அர்த்தத்தில் தாய் தந்தையைப் பார்த்தான் அறிவழகன். வேலையின்றி உள்ளோமே என்ற கவலை அவனுக்கு.
இன்னும் காலம் இருக்கிறது. போய் புத்தகங்கள் வாங்கி வாருங்கள் என்பதுபோல் தனபாண்டியனைப் பார்த்தாள் கனிமொழி.