வீதிக்கு வீதி,
வீட்டிற்கு வீடு
பிரச்சாரங்கள்
வேண்டும்!”
கே: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதத்தில் மட்டுமே எழுத வேண்டுமெனக் கூறிவிட்டு பிறகு உடனே திரும்பப் பெற்றிருக்கிறாரே மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர். இது எதனைக் காட்டுகிறது?
– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
ப: முன்யோசனையற்ற சமஸ்கிருத வெறியர்களின் ஆட்சியாக மத்திய பா.ஜ.க. ஆட்சி உள்ளது என்பதையும், எதிர்ப்புப் புயல் கிளப்பியதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய ஆட்சி இது என்பதையும் காட்டுகிறது.
கே: இந்தியாவின் முதுகெலும்பு விவசாயிகள் என்பது மட்டுமல்லாது, விவசாய நாடு, விவசாயத்திற்கு என தனி நிதிநிலை (பட்ஜெட்) அறிக்கையை மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தால் என்ன?
-மன்னை சித்து, மன்னார்குடி-1
ப: ஏற்கனவே இருந்த ரயில்வே தனிப் பட்ஜெட்டை பாராளுமன்றத்தில், பொது பட்ஜெட்டிற்கு முதல் நாள் சமர்ப்பிப்பதையே ஒழித்தவர்களிடமா இதை எதிர்பார்க்க முடியும்?
கே: ‘தேர்தல் ஆணையம்’, ‘சி.பி.அய்’ போன்றவற்றின் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்து வருவதைப் போலவே, ‘நீதித்துறை’ மீதான நம்பிக்கையையும் இழந்து வருவதைப் பற்றி தங்கள் கருத்து?
– சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை
ப: யார் அதிக மக்களின் நம்பிக்கையை இழப்பதில் முதலிடம் பெறுவது என்பதில் அந்த அமைப்புகளுக்கிடையே போட்டி நிலவுகிறது போலும்!
கே: ‘ஆஷ் துரை’யை கொன்ற ‘வாஞ்சிநாதன்’ சுதந்திரப் போராட்ட வீரனா? சனாதன வெறியனா?
– ஈ.வெ.ரா.தமிழன், சீர்காழி
ப: வாஞ்சிநாத அய்யர் ஒரு சனாதன வெறியர். அவரது வெறியே ஆஷ் துரையைச் சுட்டுக்கொல்ல முழுமுதற் காரணம். தேசியம் _ வெறும் போர்வையே! (ஆதாரக் கடிதங்கள் உண்டு)
கே: தினம் தினம் மனிதர்களே மனிதர்களை வெட்டி சாய்க்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. சிறு சிறு சண்டைக்கெல்லாம் வெட்டிச் சாய்க்கும் கலாச்சாரம் அதிகரித்து வரும் நிலையில் இதற்கு ஏதேனும் தீர்வு உண்டா? இவர்களின் மனநிலையை எப்படி மாற்றுவது?
– க.சி.பாக்யா, ஆவடி
ப: வேதனையான செய்திகள்தான்! என்ன செய்வது? கூலிப்படைகளும் பெருகிவிட்டன! தொலைக்காட்சி சீரியல்களும் ஒரு மறைமுகத் தூண்டல் காரணங்கள் ஆகும்!
கே: பார்ப்பன மேல் வர்க்க(ருண)த்தார் மேன்மேலும் வளர்ச்சியடையவும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களின் எல்லா உரிமைகளையும் சதிசெய்து நசுக்கி வளரவிடாமல் தடுக்கவும், ஆர்.எஸ்.எஸ் கையாளாக செயல்படுவதுதான் பி.ஜே.பி.யின் நான்காண்டு சாதனைகளா? இதை மக்கள் உணர என்ன செய்ய வேண்டும்?
– இல.சங்கத்தமிழன், செங்கை
ப: வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு திண்ணைப் பிரச்சாரங்கள் செய்ய வேண்டும். “இன்று நான் கூடுதலாக ஒருவருக்குத் தெளிவை ஏற்படுத்தினேன்’’ என்ற மனநிறைவடைய உழைக்க வேண்டும்.
கே: ‘பிராமணாள் ஓட்டல்’ என்று நடத்தலாம் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை திருத்த என்ன செய்யவேண்டும்?
– காசிநாதன், கடலூர்
ப: நீதிமன்ற மேல்முறையீடும் வீதிமன்ற அறப்போர் கிளர்ச்சியும் தொடரவேண்டும்.
கே: அரசியல் கட்சிகள் தேர்தல் ஆதாயத்திற்காக மதத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் பி.ஜே.பி வழக்கறிஞர் அசுவினி உபாத்தியாய் தொடர்ந்துள்ள வழக்கு பற்றி தங்கள் கருத்து என்ன?
– கி.மாசிலாமணி, காஞ்சி
ப: தேர்தல் ஆணைய விதிமுறைகளில் ஏற்கனவே இருக்கும் விதிதான் அது! தேர்தல் ஆணையத்தின் செயலற்ற தன்மையால் இப்படிப்பட்ட வழக்குகள் தேவைப்படுகின்றன.
கே: ஒவ்வொரு ஆண்டும் கம்பன் விழாக்கள் நடைபெறுவதற்கு எதிர்வினையாக இராவணக் காவிய விழாக்களை பெரிய அளவில் நடத்தி புலவர் குழந்தையின் கவிநயத்தை – கருத்தாழத்தை அறியச் செய்தால் என்ன?
– தென்றல், உல்லியக்குடி
ப: நல்ல யோசனை. செயல் படுத்தலாம். ‘கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும்’, ‘கம்பனின் இனத் துரோகம்’ போன்ற தலைப்புகளில் அறிவு விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்திட வேண்டும்.