இறந்தவர் உடலில் வேறு ஒருவர்
உயிர் புகுந்து உயிர் வாழ முடியுமா?
சிகரம்
ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் 3000 ஆண்டுகள் வாழ்ந்து 3000 பாடல்களை எழுதினார் என்கிறது இந்து மதம்!
திருக்கயிலைமலையில் சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருக்கோயிலுக்கு முதற்பெருங் காவலராக விளங்கி, இந்திரன், திருமால், பிரமன் முதலாகிய தேவர்களுக்குச் சிவநெறியினை அருளிச் செய்யும் பணிபூண்ட திருநந்திதேவரின் திருவருள் உபதேசத்தினைப் பெற்ற நான்மறைச் சிவயோகியர் ஒருவர் இருந்தார். அவர் அணிமா முதலிய எண்வகைச் சித்திகளையும் கைவரப் பெற்றவர்; அகத்திய முனிவரிடத்து நட்பின் தொடர்பு கொண்டவர். அவர் ஒருமுறை அகத்திய முனிவரைக் கண்டு அவரோடு உடனாகச் சிலநாள் தங்கியிருந்ததற்கு எண்ணி வடகயிலையினின்றும் நற்றமிழ் கமழும் பொதியமலையினை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.
பின், அவர் அந்தத் தலத்தை விட்டு நீங்கிக் காவிரிக்கரை வழியே செல்லும்போது பசுக்கூட்டங்கள் சேர்ந்து புலம்புவனவற்றை எதிரே கண்டார்; அவற்றை மேய்க்கின்றவன், அந்தணர்கள் வாழ்கின்ற சாத்தனூரில் இடையர்கள் குடியிலே பிறந்த தம்மரபின் தொழில்முறையில் பசுக்களை மேய்த்துவரும் மூலன் என்னும் பெயருடையவன். அவன் மேய்ச்சலிடைத் துணையின்றித் தனியேவந்து பசுக்களை மேய்க்கும்போது பாம்பின் வல் விடத்தினால் உயிர் துறந்து நிலத்தில் வீழ்ந்தான். இறந்துகிடந்த மூலனுடைய உடம்பை அப்பசுக்கள் வந்தணைந்து சுற்றி மிகக் கதறிச் சுழன்று மோந்து வருந்தின. சிவயோகியார் அவற்றின் செயலினைக் கண்டு, “சிவபெருமானது திருவருளினாலே இப்பசுக்களின் துயரத்தை ஒழிப்பேன்’’ என்று தம் கருத்தில் அமைத்து, “இந்த இடையன் உயிர்பெற்றெழுந்தாலன்றி இப்பசுக்கள் துயரம் நீங்கமாட்டா’’ என்ற திருவுளங்கொண்டு தம்முடைய உடம்பினை ஓரிடத்தில் காவல் செய்து வைத்துப் பிராகாமியம் (கரகாயப் பிரவேசம்) என்ற சித்தியினாலே தம் உயிரை இடையனது உடலினுள் புகுத்தித் திருமூலராய் எழுந்தார்.
திருமூலர் மாடுகளை மேய்த்தல்
அதனைக் கண்ட பசுக்கள் எல்லாம் மகிழ்ச்சியுடன் நாத்தழும்பேறத் திருமூலரை நக்கி மோந்து அருகு அணைந்தன; கனைத்தன; களிப்பினால் வால்களை மேலே எடுத்துத் தூக்கித் துள்ளின; துன்பம் நீங்கியவையாய் வரிசைபெறச் சென்று மேய்ந்தன.
திருமந்திரமாலை
திருமூலர் திருவாவடுதுறையிலுள்ள திருக்கோயிலை அடைந்து சிவபெருமானை வணங்கி அங்குத் தங்குவாராகித் திருக்கோயிலின் சுற்றுப் புறத்திலே மேற்குப் பக்கத்தில் வானோங்கி நிற்கும் அரச மரத்தின் கீழே தேவாசனத்தில் (யோகாசனத்தில்) அமர்ந்து சிவராசயோக நிட்டையிலிருந்து இதயகமலத்தில் எழுந்தருளிய இறைவருடன் இரண்டறக் கூடி ஒன்றித் திகழ்ந்தார். உலகத்தார் பிறப்பு என்னும் விஷத் தொடர்பிலிருந்து நீங்கி உய்யும் பொருட்டு ஞானம், யோகம், கிரியை, சரியை முதலிய நான்கு நெறிகளையும் விரித்துக் காட்டும் நல்ல திருமந்திரமாலையினை ஓர் ஆண்டுக்கு ஒரு திருமந்திரப் பாடலாகப் பரம்பொருளாகிய சிவபெருமானைப் போற்றி, “ஒன்றவன்தானே’’ என்று தொடங்கி, மூவாயிரம் ஆண்டுகள் இவ்வுலகில் சிவயோகத்தில் அமர்ந்து மூவாயிரம் திருமந்திரப் பாடல்களைப் பாடி உலகுக்கு உபகரித்தருளினார்’’ என்கிறது இந்துமதம். உயிர் என்பது விளக்கில் எரியும் தீ போன்றது. தீ அணைந்தால் அது வேறு ஒரு விளக்குக்குச் சென்று எரியாது. அப்படிதான் ஓர் உடல் இழந்த உயிர் இன்னொரு உடலுக்குள் சென்று வாழ முடியாது. அறிவியல் உண்மை இப்படியிருக்க இறந்த உடலில் வேறொருவர் உயிர் புகுந்து உயிர் வாழ்ந்தது என்பது மடமையல்லவா? அதுவும் 3000 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தது என்பது அண்டப் பெரும் புளுகு அல்லவா? மடமைக் கருத்தைக் கூறும் இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?
வெட்டப்பட்ட கூந்தல் உடனே வளர்ந்து கூந்தலாகுமா?
மாவிரத முனிவர் வேடங்கொண்டு வந்த இறைவனார் (சிவன்) மானக்கஞ்சாற நாயனாரைப் பார்த்து, “இங்கே என்ன மங்கலச் செயல் நடக்கப் போகிறது?’’ என்று கேட்டார். நாயனார், “அடியேன் அருமையாகப் பெற்றதொரு பெண்ணின் திருமண நிகழ்ச்சி இது’’ என்றார். அம்முனிவர் மானக்கஞ்சாற நாயனாரைப் பார்த்து, “மற்றுமக்கு மங்கலம் உண்டாகுக’’ என்று ஆசிகூறி யருளினார். உடனே நாயனார் பெருந்தவர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, மனையினுட் சென்று மணக்கோலம் பூண்டிருந்த மணம் கமழும் மலர்களை அணிந்த கூந்தலையுடைய திருமகளாரை அழைத்து வந்து, மாவிரதியரை வணங்கும்படி செய்தார். மாவிரதியாராகிய சிவபெருமான் தம்மை வணங்கி எழுந்த மணமகளது மேகம் தழைத்ததுபோல நீண்டு வளர்ந்த அழகிய கூந்தலின் புறத்தோற்றத்தை நோக்கி, மானக்கஞ்சாற நாயனாரைப் பார்த்து, “இப் பெண்ணினுடைய தலைமயிர் நமக்குப் பஞ்சவடிக்கு ஆகும்” என்று கூறினார். அதுகேட்ட நாயனார் தம்முடைய உடைவாளை உருவி, “இவர் இதனைப் பஞ்சவடிக்கு ஆம் எனக் கேட்கும் பேறு பெற்றேன்’’ என்று மனத்துட்கொண்டு, பூங்கொடி போன்ற தம் மகளாரின் கூந்தலை அடியோடு அரிந்து எதிரே நின்ற மாவிரதியரின் மலர்க்கரத்தில் நீட்டினார். அதனை வாங்குவார்போல நின்ற மறைப்பொருளாகிய அவர் மறைந்து, உமாதேவியாரோடு விடையின்மேல் எழுந்தருளி ஆகாயத்தில் காட்சி தந்தருளினார்.
‘முண்டிதமான பெண்ணை எவ்வாறு மணப்பது’ என்று மனந்தளர்ந்தார். அப்போது இறைவன், “கலிக்காமா, நீ மனந்தளர வேண்டாம்; இப்பெண்ணிற்குக் கூந்தலை மீளக் கொடுத் தருளுவோம்; மணஞ் செய்துகொள்’’ என்று அருளிச் செய்த திருவாக்கின் திறங்கேட்டு மனத்தளர்ச்சி நீங்கினார்; பெண்ணின் கூந்தல் முன்போல வளர்ந்ததைக் கண்டு மகிழ்ந்து அப்பெண்ணைத் திருமணம் புரிந்துகொண்டார். ’’ என்கிறது இந்துமதம். கூந்தல் வெட்டப்பட்டால் அது மீண்டும் நீண்டுவளர பல மாதங்கள் ஆகும். அதுதான் அறிவியல். உண்மை அப்படியிருக்க வெட்டப்பட்ட கூந்தல் உடனே கூந்தலாக வளர்ந்தது என்பது அறிவுக்கும் நடப்புக்கும் அறிவியலுக்கும் எதிரானது அல்லவா? அப்படியிருக்க இப்படிக் கூறும் இந்துமதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையாகும்?
(சொடுக்குவோம்…)
அறிவுரைக் கொத்து
தனித்தமிழ் எனும் சொல்லுக்கு வித்திட்ட காரணத்தால் ‘தனித் தமிழ்த் தந்தை’ என அழைக்கப்பட்ட, ‘தமிழ்க்கடல்’ மறைமலையடிகள் எழுதிய ‘அறிவுரைக்கொத்து’ என்னும் நூல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டபோது, அதில் அமைந்திருந்த ‘மேல்நாட்டவரும் தமிழ் நாட்டவரும்’ கட்டுரையை பாடத்திட்டத்தில் வைக்கக் கூடாது என்று உ.வே.சாமிநாத அய்யர் உள்ளிட்ட பார்ப்பனர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. தந்தை பெரியார் இந்த எதிர்ப்புகளுக்கு ‘போக்கிரித்தனமான புகார்’ என்ற தலைப்பில் பதிலடி தந்து ‘குடிஅரசு’ ஏட்டில் எழுதினார். மேலும் அக்கட்டுரையை 18.8.1935 மற்றும் 25.8.1935 ஆகிய தேதிகளில் ‘குடிஅரசு’ ஏட்டில் தொடராக வெளியிட்டார். அவை தொகுக்கப்பட்டு ‘மறுப்புக்கு மறுப்பு’ எனும் தலைப்பில் புத்தகமாக வந்தது குறிப்பிடத்தக்கது. அது தற்போது பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தால் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.
– மறைமலையடிகளார் பிறந்த நாள்:
ஜூலை 15, (1876)
“