(இயக்க வரலாறான தன்வரலாறு – 205)

ஜூலை 01-15

 

‘கற்பு’ என்பது

 பெண்ணுக்கு மட்டுமா?

கி.வீரமணி

 
 
 
 18.05.1983 அன்று வெளியான ‘ஜூனியர் விகடன்’ பத்திரிகையின் சார்பில் ‘ஞாநி’ அவர்கள் என்னை பேட்டி கண்டார். அந்த பேட்டி, அந்த இதழில் “ரத்தக் கையெழுத்து வாங்கினார் வீரமணி’’ என்ற தலைப்பில் வெளிவந்திருந்தது.

பெரியார் திடலில் உள்ள திராவிடர் கழகத் தலைமை அலுவலகத்திற்கு தினசரி தபாலில் ரத்தக் கையெழுத்திட்ட கடிதங்கள் நூற்றுக்கணக்கில் வந்தபடி இருக்கின்றன என்பதனை அந்தப் பேட்டியில் விளக்கியிருந்தேன். மாநில உரிமைகளுக்காகவே சீக்கியர்கள் போராடுகிறார்கள். அதுபோல் தமிழ்நாடு வடவர்களின் சுரண்டல் காடாகி வருகிறது என்பதனை தமிழினத்துக்கு உணர்வூட்டவே ரத்தக் கையெழுத்து இயக்கம். உரிமைகளுக்கு எல்லாம் போராடுகின்ற எந்த இயக்கத்திலும் பல்வேறு போக்குகள் இருக்கத்தான் செய்கிறது.

தேசிய பித்தலாட்டம் என்பது பதவிப் போட்டி, துரோகம், பதவிக்காக எதையும் இழக்கத் தயாராகும் மானமில்லாத தன்மை. தேசியப் பித்தலாட்டம், டெல்லி ஆதிக்கத்திற்கு சிவப்பு ஜமுக்காளம் விரிக்க ரகசிய பேரங்கள் என்பதாகத்தான் நிலைமை இருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில் தமிழ் இளைஞர்களுக்கு உணர்வு ஏற்படுத்தி அவர்களைச் சிந்திக்கத் தூண்டுவதற்காகத்தான் ரத்தக் கையெழுத்து இயக்கம் ஆரம்பித்திருக்கிறோம். கொள்கைக்காக உயிரையும் விட்டுக் கொடுக்கத் தயாரான இளைஞர்கள் இருந்தால்தான் தீர்வு காண முடியும் என்பதனை உணர்த்தவே எனது அறிக்கையின் நோக்கமாகும். இதுபோன்று பல்வேறு கேள்விகளுக்கு ‘ஜூனியர் விகடன்’ இதழுக்கு பதில் அளித்தேன்.

“தமிழ் ஈழ இளைஞர்களை சிறையில் தள்ளுவாரா?’’ என்ற தலைப்பில் 26.05.1983 அன்று ‘விடுதலை’யின் முதல் பக்கத்தில் தமிழ் ஈழத்தின் ‘விடுதலை’க்கு தங்கள் உயிரையும் பணயம் வைத்துப் போராடுகின்றனர். இலங்கையில் தன்மான உரிமை வேட்கைமிக்க தனித்தமிழர்கள் அதற்காக ‘விடுதலைப் புலிகள்’ என்ற அமைப்பினைச் சார்ந்த பல  இளைஞர்கள் உயிரைத் துச்சமென மதித்துப் போராடவும் தயங்கவில்லை. தளரா ஊக்கம் உடையவர்களாக, தங்கள் நிலத்தின் விடுதலைக்காகத் தங்களையே அழித்துக் கொள்ளும் உண்மையான தற்கொலைப் படையினராகவே வாழ்ந்து கொண்டு உள்ள அந்த ஒளி பாய்ச்சும் மெழுகு வர்த்திகளில் முக்கியச் சிலரான திருவாளர்கள் முகுந்தன், பிரபாகரன், சோதீசுவரன், இராகவன், நிரஞ்சன்  போன்றோரிடையே ஏற்பட்ட மோதலைக் காட்டி, அவர்கள்மீது தமிழக அரசு பல்வேறு பிரிவுகளைப் போட்டு வழக்குத் தொடர்ந்தது என்பதனை திராவிடர் கழகம் இப்பிரச்சினைக்கு மனிதாபிமானத்துடனும் உரிமை உணர்வுடனும் போராடத் தயங்காது என்பதனை அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன்.

வந்தியத்தேவன் – உமாமகேஷ்வரி திருமணம் மணமக்களுடன் ஆசிரியர் கி.வீரமணி,
எல்.இளையபெருமாள் ஆகியோர் உள்ளனர்

பிரபல தலித் இயக்கத் தலைவர் வி.டி.ராஜசேகர் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ‘தலித் வாய்ஸ்’ ஆங்கில ஏட்டின் 01.06.1983 அன்று வெளிவந்த இதழில், தமிழர்கள் இந்துக்கள் அல்ல; இந்து மதம் என்று ஒன்றும் கிடையாது. இந்து, இந்தியா, இந்துஸ்தான் என்பதெல்லாம் வெளிநாட்டினர் தந்த பெயர்தான் என்பதை அவர் ஆதாரங்களோடு விளக்குகிறார் என்று குறிப்பிட்டிருந்தது.

மேலும், தலித்துகளுக்கு (தாழ்த்தப்பட்டோருக்கு) துணிச்சலும் அறிவும் மிக்க ஒரு தலைமை தேவைப்படுகிறது.

திரு.கி.வீரமணி அப்படிப்பட்ட தலைவர், தலித்துகளும், அம்பேத்காரிஸ்டுகளும் மைனாரிட்டிகளும் தங்களை அறிவுரீதியாக தயார்படுத்திக் கொள்ள வேண்டும்; அறிவைவிட சக்திவாய்ந்த ஆயுதம் வேறில்லை; படுமோசமான இந்த சமூக அமைப்பு முறையை எதிர்த்து கிளர்ந்தெழுவதற்கு இதன்மூலம்தான் முடியும். இந்த வகையில் திராவிடர் கழகம் மிகப் பெரிய பணியை செய்து வருகிறது.

மக்களுக்கு அறிவு புகட்டும் பணியில் தன்னை ஒப்படைத்துக் கொண்டுள்ளது என்று ‘தலித் வாய்ஸ்’ என்ற ஏட்டில் எடுத்துக் காட்டப்பட்டிருந்தது.

03.06.1983 அன்று தொண்டால் பழுத்துவரும் தமிழ்ச் சமுதாயத்தின் தனிப்பெரும் நம்பிக்கை ஒளியாம், தமிழினக் காவலர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் 60 ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அவருக்கு நான் வாழ்த்துகளை தெரிவித்து, ‘விடுதலை’யின் முதல் பக்கத்தில் முக்கிய அறிக்கையை வெளியிட்டிருந்தோம்.

தந்தை பெரியார் அவர்களை, அவர் அறிவு ஆசானாக, அறிஞர் அண்ணா அவர்களை அந்த ஆசான் தந்த முதல் மாணாக்கராக _ சட்டாம்பிள்ளையாகக் கண்ட _ கொண்ட நாள்முதல் அடிச்சுவடுகளிலிருந்து நழுவாமல், வழுவாமல் அதற்காக களங்கள் பல கண்டவர் அவர்.

எனவே, எதையும் தாங்கும் இதயம் _ தெளிவு _ துணிவு _ கொண்ட கலைஞர். அய்யாபோல் ஆயிரம் பிறை கண்டு அதற்கப்பாலும் வாழ்க என வாழ்த்தும் உலகத் தமிழின ஓசையோடு, ஒலி முழக்கத்தோடு, நம் ஓசையும் இணையட்டும்! என்று வாழ்த்து அறிக்கையில் தெரிவித்திருந்தேன்.

03.06.1983 அன்று சைதாப்பேட்டையில் நடைபெற்ற கலைஞர் அவர்களின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினேன். அப்பொழுது, பெரியார்_அண்ணா_காமராசர் மூவரும் சேர்ந்த மொத்த உருவாகத் திகழும் கலைஞரின் கரத்தில்தான் தமிழினத்தின் மீட்சி  இருக்கிறது என்று பேசினேன்.

04.06.1983 அன்று ‘விடுதலை’யில் முக்கிய அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தேன். அதில், “திருச்சியில் அடக்கமான, ஆழமான முக்கியப் பணி’’ என்ற தலைப்பிட்டு எழுதினேன்.

‘குடிஅரசு’ ஏடுதான் நமது இயக்கக் கொள்கைகளுக்கும், இயக்கப் பிரச்சாரத்திற்கும், தந்தை பெரியார் அவர்கள் தொண்டினைப் புரிந்து, உணர்ந்து கொள்வதற்கும் மூலகருவியாகும்!

அந்தப் பழைய ‘குடிஅரசு’ தொகுப்புகள், ‘பகுத்தறிவு’, ‘புரட்சி’ ஆகிய தொகுப்புகளில் ஒவ்வொரு ஆண்டும், 1925 முதல் நமது அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய எழுத்துகள், பேச்சுகள், குறிப்புகள் ஆகியவைகளை ஆண்டுவாரியாகத் தொகுக்கும் பணிதான் அங்கு நடைபெற்ற அரிய பணியாகும் என்று வலியுறுத்தினேன். அப்போது தொடங்கிய பணி 2012இல் நிறைவடைந்தது. ‘குடிஅரசு’ களஞ்சியம் 42 தொகுதிகளாக வெளிவந்துள்ளது.

08.06.1983 அன்று காலை, திருத்தணி அருகேயுள்ள அம்மையார்குப்பத்தில் மு.சந்திரிகா_சுந்தரமூர்த்தி ஆகியோர் வாழ்க்கை துணைநல ஒப்பந்த விழா என்னுடைய தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது.

பிற்பகல் 2.45 மணி அளவில் செங்கற்பட்டு மாவட்டம் திருத்தணி, பள்ளிப்பட்டு வட்டத்தின் சார்பாக கலந்துரையாடல் கூட்டம் என்னுடைய தலைமையில் நடைபெற்றது.

செங்கை மாவட்டம் அத்திமஞ்சாரிப் பேட்டையில் 08.06.1983 அன்று மாலை 4 மணி அளவில் இலங்கேஸ்வரன்_ராஜேஸ்வரி ஆகியோரது வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா என் தலைமையில் நடைபெற்றது.

வடஆற்காடு மாவட்டம் திருப்பத்தூரில் 08.06.1983 அன்று மாலை திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் எம்.பி. சுயமரியாதை வீரர் சி.கே.சின்னராஜ் அவர்களது இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்.

தென்னாற்காடு மாவட்டம் பெண்ணாடத்தில் வந்தியத்தேவன்-உமா மகேஸ்வரி ஆகியோரது வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா 10.06.1983 அன்று காலை 8.30 மணிக்கு சிறப்புற நடைபெற்றது.

மணவிழாவிற்கு நான் தலைமை தாங்கி வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா உறுதிமொழியினைக் கூறி திருமணத்தை நடத்தி வைத்து உரையாற்றுகையில்,

“தமிழர்களின் தன்மானம் காக்கப்பட வேண்டும். சுயமரியாதை நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காகத்தான், இதுபோன்ற வாழ்க்கைத் துணைநல ஒப்பந்தம் என்கிற பெயராலே இந்த மணமுறையை ஏற்படுத்தி பின்பற்றி வருகிறோம்.

வந்தியத்தேவன்_உமாமகேசுவரி ஆகியோரின் திருமணம் மிகச் சிறப்பான முறையில், சுருக்கமான நேரத்தில் கொள்கை விளக்க நிகழ்ச்சியாக நடைபெற்று முடிந்துவிட்டது.

தோழர் வந்தியத்தேவன் அவர்கள் இளமை முறுக்கு காரணமாகவும் கொள்கை துடிப்பு தீவிரம் காரணமாகவும் கலப்புத் திருமணம் செய்துகொள்ள முடியவில்லையே ராகு காலத்தில் மாலை நேரத்தில் திருமணம் செய்துகொள்ள முடியவில்லையே என்றெல்லாம் சங்கடத்தோடு பேசினார்கள்.

நான் அவருக்கு தெளிவாக தெரிவித்துக் கொள்ள விரும்புவதெல்லாம் நீங்கள் அதற்காக சங்கடப்பட வேண்டாம் என்பதுதான்.

இந்தக் குடும்பத்தில் இருந்துகொண்டே இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறீர்கள் என்று சொன்னால் நிச்சயமாக அது நமது இயக்கத்திற்குக் கிடைத்த வெற்றி என்கின்ற காரணத்தினாலே நான் உங்களை மனதாரப் பாராட்டுகிறேன்.’’

“நம்முடைய இயக்கக் குடும்பத்து இளைஞர்களுக்கு இந்த நேரத்தில் ஒன்றைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் நம்முடைய கொள்கையைப் பின்பற்றுவதிலே அளவுக்கு மீறி முரட்டுத்தனமாக நடந்து கொள்ளாமல் உங்களுடைய பெற்றோர்களுடைய திருப்திக்காகவும் கொஞ்சம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளுங்கள்.

அப்படி நடந்துகொள்வதாலே ஏற்றுக் கொண்ட கொள்கையிலிருந்து சாய்ந்து விட்டதாக யாரும் தப்புக் கணக்கு போட்டு விடாதீர்கள்.

மாறுதல் என்கிற வகையிலே இந்த திருமணத்திலே தாலி இல்லை! இதிலே என்ன தவறு! தாய்மார்கள் சிந்திக்க வேண்டும்!

எதற்காக தாலி என்று முதலில் சிந்தித்துப் பாருங்கள். நம் தாய்மார்களை கேட்டால் உடனே பதில் சொல்வாங்க. நாளைக்கு இந்தப் பொண்ணு கல்யாணமானவள்னு தெரிய வேண்டாமா? அதுக்காகத்தான் தாலி என்று சொல்வாங்க.

இந்த இடத்திலேதான் கொஞ்சம் ஆழமா சிந்திக்க வேண்டும். வெளியே போகும்போது கல்யாணமானது தெரியனும் என்றால் மணமகன்_மணமகள் இருவரிலே யார் அதிகமாக வெளியே போவது? மணமகன்தானே? எனவே நியாயப்படி பொண்ணுகையிலே தாலியை கொடுத்து கட்டச் சொல்லவேண்டும்! யாராவது சொன்னோமா? சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா?

தாலியா? அது பெண்ணுக்கு மட்டும்தான்; கற்பா? அது பெண்ணுக்கு மட்டும்தான்; “கட்டுப்பாடா? அது பெண்ணுக்குத்தான்; அடிமைத்தனமா? அது பெண்ணுக்குத்தான்.

இப்படி எல்லாம் ஒருவழிப் பாதையாக நமது சகோதரிகளை அடிமைத்தனத்தில் ஆழ்த்த இன்றைக்கும் துடிக்கிறார்கள் என்றால் அருமைச் சகோதரிகளே இன்னமும் இதை அனுமதிக்கலாமா?

நீங்கள் வாழக்கூடிய வாழ்க்கை பிறர் எடுத்துக்காட்டாக உங்களைப் பின்பற்றி வாழக்கூடிய அளவுக்கு ஒரு ஆழமான சுயமரியாதைக் குடும்பம் என்பதைப்போல இருக்க வேண்டும்.’’

எல்.இளையபெருமாள் அவர்கள் ஆற்றிய உரை…

மனித உரிமைக் கட்சியின் தலைவரும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எல்.இளையபெருமாள் தன்னுரையில், “பெரியார் தொண்டருக்கு _ இயக்கத் தலைவர்களால், நடத்தப்படுகிற இந்த திருமணத்திலே கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்ததற்காக நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன்.

சங்கராச்சாரியார் மூன்று முறை ஆள் அனுப்பி என்னை சந்திக்கச் சொல்லியும் நான் இதுவரை சந்திக்கவில்லை. இனிமேலும் பார்க்கப் போவதில்லை. இதையெல்லாம் நம்முடைய தளபதியவர்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காகத்தான் சொல்கிறேன்!

நம்முடைய நண்பர்களுக்கு ஒன்றைத் தெளிவாகக் குறிப்பிட விரும்புகிறேன். என்னுடைய தலைவர் டாக்டர் அம்பேத்கர்! என்னுடைய அரசியல் தலைவர் மகாத்மா காந்தி! என்னுடைய சமுதாயத் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்! பெரியார் அவர்கள் கடவுள் இல்லை என்று சொன்னவர்தான்; எனக்கு நன்றாக தெரியும்! இருந்தாலும் அவர்தான் எனக்கு சமுதாயத் தலைவர்.

சுதந்திரம் வந்து விட்டதால்தான் துணிச்சலாக எதிர்க்கிறோம் என தப்புக் கணக்கு போட்டுவிடாதீர்கள். நமக்கு சுதந்திரம் வேண்டும் என்பதற்காக காந்தி பாடுபட்டார். முதலில் நமக்கு சுயமரியாதைதான் வேண்டும் என்று பெரியார் பாடுபட்டார். என்னை பொறுத்தவரையில் நமக்கு சுதந்திரம் பெரியதா? சுயமரியாதை பெரியதா? என்றால் சுயமரியாதைதான் முக்கியம் என்று சொல்வேன்!

தந்தை பெரியார் அவர்கள் காட்டுமன்னார்குடிக்கு வந்தார்கள். சிறப்பான முறையில் வரவேற்புக் கொடுத்து பேசச் சொன்னோம். அப்போது தம்பி வீரமணி அய்யாவுடன் வந்திருந்தார். தம்பி வீரமணி அப்போது மிகவும் துடிப்போடு பேசினார். அப்போதே அவரை எனக்குப் பிடித்துவிட்டது.

அதற்குப் பிறகு 4 வருடம் கழித்து எனக்குப் பிறந்த ஆண் குழந்தைக்கு நான் அப்போதே ‘வீரமணி’ என்று பெயர் சூட்டினேன். இப்போது அவன் டாக்டருக்குப் படித்து எம்.எஸ். என்று சொல்லக்கூடிய பட்டப்படிப்பை முடித்து விட்டான். இந்த நேரத்தில் ஒன்றைத் தெளிவாக குறிப்பிட விரும்புகிறேன். அன்பிற்குரிய தளபதி வீரமணி அவர்களே, நம்முடைய காலத்திலேயே ஜாதி ஒழிப்பு போராட்டத்தை நாம் நடத்தி வெற்றி பெற்றாக வேண்டும். அதற்காக ஒரு போராட்டத்தை நீங்கள் துவங்கினால் உங்கள் தலைமையில் சாதாரண தொண்டனாக நான் கலந்துகொண்டு போராட தயாராக இருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் கடவுள் நம்பிக்கைக்காரன்தான்; காங்கிரஸ்காரன்தான்; இருந்தாலும் இந்தப் பிரச்சினையிலே உங்கள் பின்னாலே நாங்கள் அணி வகுக்கத் தயார்!

மண்டல் கமிஷன் அறிக்கைக்காக நீங்கள் குரல் கொடுக்கிறபோது, இளையபெருமாள் கமிஷன் அறிக்கையையும் அமலாக்கப்பட வேண்டும் என்று நீங்கள்தான் குரல் கொடுக்க வேண்டும். இன்றைக்கு கிடப்பிலே போட்டுவிட்ட இளையபெருமாள் ரிப்போர்டை அமலாக்க வேண்டும் என்று நீங்கள்தான் போராட வேண்டும்.’’ என்று உரையாற்றினார். இவரது வேண்டுகோளை ஏற்று பின்னர் உரிய முயற்சிகளை மேற்கொண்டேன்.

மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் த.கோ.சம்பந்தம் வரவேற்புரையாற்றினார். நான் சுமார் ஒரு மணி நேரம் மிகச் சிறப்பான முறையிலே கருத்துகளை வழங்கினேன். அரங்க.இலக்குமணன்(தி.மு.க.), தொழிலதிபர் ஆறுமுகம், மத்திய திராவிடர் கழக உறுப்பினர் காட்டுசாகை வை.குப்புசாமி, வழக்கறிஞர் தியாகராஜன், அருணா சர்க்கரை ஆலை மேலாளர் சிவராமன் உள்ளிட்டோரும்  பொதுமக்களும் திரண்டு நின்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

நெய்வேலியில் 10.06.1983 அன்று இரவு 7.40 மணிக்கு தமிழர் பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் எனக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழர் பண்பாட்டுக் கழகத்தின் புரவலர் டாக்டர் வெ.குழந்தைவேலு எம்.பி. அவர்கள் எனக்கு ஜரிகை மாலையை அன்புடன் அணிவித்தார். தமிழர் பண்பாட்டுக் கழகத்திற்காக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் கட்டடங்களை நான் பார்வையிட்டேன்.

தமிழர்களுடய இனம், மொழி, நாகரீகம், கலாச்சாரம், நூல்கள் ஆகியவற்றினுடைய வளர்ச்சியை கருத்தில் கொண்டு இது அமைக்கப்பட்டதாகும். இரவு 7.55க்கு சுயமரியாதை வீரர் நாராயணசாமி அவர்கள் (80 வயது) விளக்கப்பாடியில் மறைந்ததையொட்டி நான் அவர்கள் இல்லம் சென்று நேரில் ஆறுதல் கூறினேன்.

மறுநாள், 11.06.1983 அன்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தேன். இலங்கையில் தமிழர்கள் சிங்கள இராணுவத்தின் கொடுமைக்குள் அகப்பட்டு சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்! இதன் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன! ஈழத் தமிழ் இளைஞர்களின் வீரம் மிகுந்த விடுதலை உணர்வினை எப்படியும் அடக்கிவிடுவது என்று இலங்கை அரசு கங்கணம் கட்டிக்கொண்டு இராணுவத்தினை ஏவி தமிழர்களை வதை செய்து வருவது சகிக்க முடியாத எல்லைக்குள் சென்றுகொண்டு இருக்கிறது என்பதனை சுட்டிக்காட்டி, “தமிழ் நெஞ்சங்கள் பதைக்கின்றன’’ என்று 19இல் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி கழகம் ஆலோசிக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்து இருந்தேன்.

அகில இந்திய யாதவ மகாசபை 49ஆவது மாநாடு சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற மாநாட்டில். இரண்டாம் (12.06.1983) நாள் நான் கலந்துகொண்டு உரையாற்றினேன். அகில இந்திய யாதவ மகாசபை மாநாட்டின் ஒரு பகுதியாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒற்றுமை மாநாட்டையும் இணைத்து மற்றவர்களையும் அழைத்து _அணைத்து நடத்துகிறார்கள். அனைத்து பிற்படுத்தப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் நலனுக்காக நடத்துகிறார்கள். அதில் நான் கலந்துகொண்டு உரையாற்றுகையில்,

“இங்கே உரையாற்றிய தலைவர்கள் எல்லாம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தந்தை பெரியார் அவர்கள் செய்த சேவைபற்றி குறிப்பிட்டார்கள். சுயமரியாதை இயக்கம் இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் உருவாக வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

எனவே, பெரியார் என்ற கலங்கரை விளக்கத்தை நாடு  உணர ஆரம்பித்திருக்கிறது. அதன் வெளிப்பாடே இது’’ என்று குறிப்பிட்டேன்.

13.06.1983 அன்று தஞ்சை மாவட்டம் சோழபுரத்தில் காலை 9.30 மணிக்கு கு.கண்ணையன்_லெ.சியாமளா, கு.கவுதமன்_வ.வசந்தி, மு.இராமமூர்த்தி_மு.தமிழ்செல்வி ஆகியோரது வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா என்னுடைய தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது.

என்னுடன் துணைவியார் மோகனா அம்மையார் அவர்களும் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினார்கள். சோழபுரம் கலியன் வரவேற்புரையாற்றினார்.

தஞ்சை மாவட்ட இ.காங்கிரஸ் துணைத் தலைவர் சீர்காழி பெ.எத்திராஜ், நெ.து.சுந்தரவடிவேலு ஆகியோர் என்னுடன் கலந்து கொண்டனர். மணவிழாவில் மணமக்களுக்கு அறிவுரையில் சில பகுத்தறிவு கருத்துகளை எடுத்துக்கூறினேன்.

13.06.1983 அன்று தமிழக அரசின் தலைமைச் செயலாளரும் பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவராக இருந்துவந்த க.திரவியம் அய்.ஏ.எஸ். அவர்கள் மறைவு குறித்து இரங்கல் செய்தியை ‘விடுதலை’யில் வெளியிட்டிருந்தோம். திரு.திரவியம் அவர்கள் ஆற்றல்மிக்க எழுத்தாளர், நல்ல பேச்சாளர். அவருக்கு கழகத்தின் சார்பில் மலர்மாலையிட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

15.06.1983 அன்று “கழகத் தோழர்கட்கும் ஆதரவாளர்கட்கும் ஓர் முக்கிய வேண்டுகோள்’’ என்ற தலைப்பில் ‘விடுதலை’யின் முதல் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தேன். அதில், வடசென்னை புதுவண்ணாரப்பேட்டை ‘கிராஸ் ரோடு’ பூங்கா அருகில் உள்ள பகுதியில் வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் தலைவரான பெரியார் பெருந்தொண்டர் திரு.க.பலராமன் அவர்களது சீரிய முயற்சியாலும், அரிய உழைப்பாலும் தந்தை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கென்றே ஓர் அரிய கட்டடத்தை கட்டி வருகிறார். அவர் பெரும் வசதிக்காரர் அல்ல. என்றாலும், உண்மையான பொதுநலவாதி என்பதாலும், கட்டுப்பாடுமிக்க, எந்த சபலத்திற்கும் ஆட்படாத தொண்டர் என்பதாலும் அவருக்கு அப்பகுதி மக்கள் நல்லவண்ணம் ஆதரவு கொடுத்து அக்கட்டடத்தை கட்டிமுடிக்க உதவி வருகின்றனர். தலைமைக் கழகமும் தன்னாலியன்ற உதவிகளைச் செய்துள்ளது என்று குறிப்பிட்டு அப்பணிக்கு உதவிட தோழர்களுக்கு வேண்டுகோள் விடுத்தேன்.

18.06.1983 அன்று இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள சித்ரவதைகள் மிகக் கொடூரமாகி விட்டதைத் தொடர்ந்து, திராவிடர் கழகம் அவசரமாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியது. கூட்டம் சென்னை பெரியார் திடலில் மாலை 5 மணி அளவில் நடைபெற்றது. கூட்டத்தில் எட்டு கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  அதனை தொடர்ந்து மக்கள் எழுச்சியை உருவாக்கிட தமிழகம் முழுவதும் விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்திடவும் ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டன.

சிங்கள இனவெறியர்களும், சிங்கள இனவெறி அரசும் கைகோர்த்துக் கொண்டு, ஈழத் தமிழர்களை நாளும் சித்ரவதை செய்தும், தமிழர்களின் உடைமைகளை அழித்தும், தமிழினப் படுகொலைகள் செய்துகொண்டு, அவற்றினை சட்டப்படி நியாயப்படுத்திக் கொண்டுவரும் மனிதாபிமானமற்ற கொடுஞ் செயல்களுக்கு இக்கூட்டம் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டது.

மன்னையில் 23.06.1983 அன்று இரவு 8 மணிக்கு பகுத்தறிவாளர் கழகக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இரா.இரஷித்கான் (மன்னை வட்ட துணைச் செயலாளர்) வரவேற்புரையாற்றினார். மேலத் தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் இரா.இரத்தினகிரி கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.

கூட்டத்தில் நான் உரையாற்றும்போது மன்னை இராஜகோபால சுவாமி கோயிலில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடந்துகொண்டு வருகிறது. அரசாங்கத்தில் இந்து அறநிலையத்துறை அமைப்பின் கீழ் உள்ள கோயிலில் இப்படி ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்புகள் நடத்தலாமா? பொதுமக்களுடைய பொதுச் சொத்திலே இந்து வெறித்தன அமைப்புகள் தொடர்ந்து அணிவகுப்புகள் நடந்தால் இதை கட்சிகள் சார்பற்ற முறையில் அனைத்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் ஒன்றாகச் சேர்ந்து இராஜகோபால்சுவாமி கோயில் முன்பு சந்திப்போம் அரசாங்கம் இதைத் தடுக்க தகுந்த நடவடிக்கையை உடனே மேற்கொள்ள வேண்டும்’’ என்ற அறிவிப்பை உணர்ச்சி வேகத்துடன் குறிப்பிட்டேன்.

புதுவை மாநில திராவிடர் கழகக் கமிட்டிக் கூட்டம் 24.06.1983 அன்று மாலை 5.30 மணி அளவில் புதுவை கலைமணி இல்லத்தில் என்னுடைய தலைமையில் நடைபெற்றது.

கமிட்டியில் நான் பேசியபோது, கலைமணி அவர்கள் மறைந்த பிறகு அவரது இல்லத்திலே நடைபெறுகின்றது. முதல் கமிட்டிக் கூட்டம் நிகழ்ச்சியாக இது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கலைமணி அவர்களது தொண்டிற்கு முதலில் வீரவணக்கம் செலுத்துகிறோம் என்று குறிப்பிட்டேன்.

(நினைவுகள் நீளும்…)

இரட்டைமலை சீனிவாசன் அனுப்பிய மனு

1895ஆம் ஆண்டில் லண்டனில் சிவில் சர்வீஸ் தேர்வு நடந்தது. அத் தேர்வில் வெற்றி பெறுகிறவர்கள் வெள்ளைக்காரர்களே! அவர்களில் இருந்துதான் மாவட்ட ஆட்சியர், நீதிபதிகள் போன்ற பதவிகளுக்கு நியமனம் செய்யப்பட்டு வந்தனர். அத்தேர்வு இந்தியாவிலும் நடைபெற வேண்டும் என்று லண்டன் பார்லிமெண்டுக்குக் காங்கிரஸ் சார்பில் மனு ஒன்றை அனுப்பினர்.

இதற்கு அதிகாரப் பூர்வமான எதிர்ப்பைத் தெரிவிக்கக் காரணமாக விருந்தார் இரட்டை மலை சீனிவாசன். 112 அடிநீளமுள்ள ஒரு மனுவைத் தயாரித்து அதில் 3412 பேர்களின் கையொப்பங்களைப் பெற்றார். இந்தத் தேர்வு இந்தியாவில் நடந்தால் உயர்ஜாதி இந்துக்களான பார்ப்பனர்கள் உயர்தர உத்தியோகங்களை வகித்து, ஏழை ஜாதியினரை, தாழ்த்தப்பட்டோரை இம்சை செய்வார்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஜெனரல் சர் சார்ஜ் செஸ்னி என்ற நாடாளுமன்ற உறுப்பினர் மூலம் இந்த மனுவை அனுப்பி வைத்தார். என்னே தொலைநோக்கு.

 தாத்தா இரட்டைமலை சீனிவாசன்

பிறந்த நாள்: ஜூலை 7 (1859).

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *