விருதுநகர் குறள் மாநாட்டுத் தீர்மானங்கள்

ஜூலை 01-15

 

நேயன்

 

 

எல்லாத் துறைகளைப் பற்றியும் நல்வழி காட்டக்கூடிய – அறிவு வழியைக் காட்டக்கூடிய நீதி நூல் நம் மக்களுக்கு இன்று குறள் ஒன்றைத் தவிர வேறில்லை.

 

1. இப்பொழுதுள்ள கல்வித் திட்டத்தில் முதல் உயர்நிலை வகுப்பு (பாரம்) தொடங்கி இளங்கலைஞர் (ஙி.கி.,)  வகுப்பு முடிய திருக்குறள் முழுதும் படித்து முடிக்கும் வகையில் படிப்படியாகப் பாடத் திட்டம் வகுக்குமாறும், அதற்கென தனி வினாத்தாள் (ஷேக்ஸ்பியர் போல) ஏற்படுத்துமாறும் கல்வித்துறை அதிகாரிகளையும் பல்கலைக் கழகங்களையும் இம்மாநாடு வேண்டுகின்றது.

2. ஆட்சி மன்றங்களில் உறுப்பினராக வருவோர்க்கும், கல்விக் கூடங்களிலும் கல்லூரிகளிலும் தலைவராக வருவோர்க்குரிய தகுதிகளில் திருக்குறள் புலமையும் ஒன்றாக வற்புறுத்துமாறு ஆட்சியாளரை வேண்டுகின்றது.

3. திருவள்ளுவர் விழாவுக்கென ஒரு நாளைக் குறிப்பிட்டு, அரசு விடுமுறை நாளாக்கி, அந்நாளை நாடெங்கும் கொண்டாடுவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென்று அரசாங்கத்தாரைக் கேட்டுக் கொள்கின்றது.

4. திருக்குறள் பற்றிய விழாக்கள், மாநாடுகள் முதலியவற்றின் நிகழ்ச்சிகளை அறிவிக்குமாறும், ஒலி பரப்புமாறும் திருச்சி வானொலி நிலையத்தாரைக் கேட்டுக் கொள்கின்றது.

(3.4.1949 இல் நடைபெற்ற விருதுநகர் குறள் மாநாட்டின் தீர்மானங்கள்)

– `விடுதலை’, 5.4.1949

பெரியார் ஈ.வெ.ரா. வேண்டுகோள்

“இந்த மாதத்தில் சென்னையில் ‘குறள் நாள்’ வெகு ஆடம்பரமாகக் கொண்டாடப்பெற வேண்டும் என்று ஆசை கொண்டிருந்தேன். பெரியார் திரு.வி.க. அவர்களையும் அதில் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். அவரும் மகிழ்ச்சியோடு இசைந்தார். ஆனால், அதை இந்த மாதத்தில் நடத்த எனக்குப் போதிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது குறித்து வருந்துகிறேன். கோவை ஜில்லா சுற்றுப் பிரயாணமும், பிரசாரப் பள்ளியும் இம்மாதத்தைக் கவர்ந்து கொண்டன. அவற்றை மாற்ற முடியவில்லை. ஆதலால், சமீபத்தில் அடுத்த மாதத்தில் ஒரு நாள் தனிமையாய் சென்னையில் கொண்டாடக் கருதி இருக்கிறேன். ஆனாலும் இம்மாதம் 12ஆ-ம் தேதி நல்ல முழு நிலவு நாளாக இருக்கும். ஆதலால் 12ஆம் தேதியில் தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகத்தார் உட்பட எல்லாத் தமிழ் மக்களும் அவசியம் தவறாமல் ஒவ்வொரு ஊரிலும், திருவள்ளுவர் நாள் கொண்டாடவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

தமிழர் பண்பு, திராவிடர் கழகக் கொள்கைகள் யாவற்றிற்கும் குறளில் ஆதாரங்கள் இருக்கின்றன. குறள் _- ஜாதிகள், மதங்கள், கடவுள்கள் ஆகியவற்றைக் கடந்த அறிவு நூல்; மூடநம்பிக்கைக்கு ஆளாகாத பகுத்தறிவு நூல்; அன்பையும், ஒழுக்கத்தையும், உயர்ந்த பண்புகளையும் ஜாதியாகவும், மதமாகவும், கடவுளாகவும் கருதச் செய்யும் அரிய நூல். எதைக்கொண்டு இப்படிச் சொல்கிறேன் என்றால், மேல்குறிப்பிட்ட தன்மைகளுக்கு எல்லாம் வேண்டிய ஆதாரங்கள் குறளில் இருக்கின்றன. குறளுக்கு இதுவரை கண்ட உரைகள் பல அவரவர்கள் கருத்துக்கு ஏற்ப கண்டவைகளாகவே காணப்படுகின்றன. ஆதலால், ஜாதி மத கடவுள் உணர்ச்சி கடந்து, இயற்கை உணர்ச்சியோடு பகுத்தறிவைக் கொண்டு நடுநிலையில் நின்று உரை கண்டால், அவ்வுரை மூலம் திராவிடர் கழகம் விரும்பும் கருத்துக்களைக் காணலாம். ஆதலால் குறளைப் போற்றுங்கள்! குறளைப் படியுங்கள்!! குறள் உள்ளத்தைக் காணுங்கள்!!! எனவே, ஏப்ரல் 12 ஆம் தேதியை குறள் நாளாகக் கொண்டாடுங்கள்” என்று வேண்டிக் கொள்கிறேன்.

– `விடுதலை’, 05.04.1949

இன்று சுயமரியாதைக்காரர்களாகிய திராவிடர் இயக்கத்தைச் சார்ந்தவர்களும், மற்ற திராவிட உணர்ச்சி உள்ள நண்பர்களும், சிறிதுகாலமாகக் குறளைப் பற்றி மக்களிடையே தீவிரப் பிரச்சாரம் செய்து வருவது குறித்து, சிலருக்கு ஆச்சரியமிருக்கக் கூடும். ஏனெனில், பொதுவாக இன்று நம் மதவாதிகளால் – சைவ வைணவர்களால் எது எது நீதி நூல், நெறி நூல், தெய்வ நூல், ஞான நூல் என்று கூறப்பட்டு வருகின்றனவோ, அவைகளை நாங்கள் பெரிதும் வெறுப்பவர்கள் என்பது மட்டுமல்லாமல் குறிப்பாக இராமாயணம், பாரதம் போன்ற இதிகாச புராணங்களை அடியோடு அழித்தொழித்தாலன்றி, மக்களுக்கு நல்வாழ்வும், நல்லொழுக்கமும், மான உணர்ச்சியும், பகுத்தறிவும் ஏற்படாது என்று கூறி, அதற்காகப் பாடுபட்டும் வருகிறவர்கள். அவ்வாறு பாடுபடக்கூடிய நானும், மற்றைய கழகத் தோழர்களும் திருக்குறளை மட்டும் பெரிதும் ஆதரிக்க முன் வந்திருக்கிறோமென்றால், இதுவரை எங்கள் மீது, அதாவது “எல்லா நீதி நூல்களையும் ஒழிக்கும் நாஸ்திகர்கள்’’ என்று எங்களைக் கூறி வந்தவர்களுக்குச் சற்று வியப்பும், திகைப்பும் ஏற்பட்டுத்தான் தீரும்.

மக்கள் ஒரு நல்ல நெறியை – நீதி நூலை எதிர்பார்ப்பது இயற்கையேயல்லவா?

இன்று குறளைத்தவிர வேறு இல்லவே இல்லை. ஆனால்….?

இந்த இயற்கையை ஒட்டியே, அந்த இடத்திற்கு குறளை வைக்குமாறு இப்போது நான் கூறுகின்றேன். எல்லாத் துறைகளைப் பற்றியும் நல்வழிகாட்டக்கூடிய -_ அறிவு வழியைக் காட்டக்கூடிய நீதி நூல் நம் மக்களுக்கு இன்று குறள் ஒன்றைத் தவிர வேறில்லை. இதற்கு மேம்பட்ட ஒரு நீதி நூலை இன்று காண்பது அரிது. நான் இவ்வாறு கூறும்போது, இங்கு ஒரு விளக்கத்தையும் எடுத்துக்காட்ட விரும்புகிறேன். குறளின் உயர்வைப்பற்றி _- அதன் வழிகாட்டித் தன்மையைப்பற்றி நான் வற்புறுத்தும்போது, ஒரு சுயமரியாதைக்காரன், பகுத்தறிவுவாதி, திராவிட இயக்கத் தலைவன் என்கிற முறையில்தான் வற்புறுத்துகிறேனே அல்லாமல் வேறில்லை.

நானோ, என்னுடைய எல்லாக் கொள்கைகளுக்கும், திட்டங்களுக்கும், அவற்றிற்கான நெறிகளுக்கும் குறளையே ஆதாரமாக _- அடிப்படையாகக் கொள்பவன் அல்ல. ஆனால் எனக்கு குறள் ஒரு மேற்கோளாக (அத்தாரிட்டியாக) விளங்குகிறது. மேலும் எங்களுடைய கொள்கை, கருத்து ஆகியவைகளுக்குக் குறளில் ஆதரவு இருக்கிறது.

இதைத் தவிர்த்துப் பொதுவாகக் கூற வேண்டுமானால், நம் மக்களின் நல்வாழ்வுக்குத் தேவையான உயர்ந்த நெறியையும் வழி வகுக்கக், குறளுக்கு மேலான ஒரு நீதி நூல் வேறுகிடையாது என்பதே எனது எண்ணமாகும். நாகரிகம் என்பவை எல்லாம் மனிதனிடம் மனிதன் நடந்து கொள்ள வேண்டியதையே அடிப்படையாகக் கொண்டதாகும். அதற்கான நெறிகள் _- வழிகள் குறளில் காணலாம். சுலபமாகக் கூற வேண்டுமென்றால், குறள் ஒரு பகுத்தறிவு நூல்! மற்றவை நம்பிக்கை நூல்! அதாவது சரியோ தவறோ நம்பிக்கை கொள்ள வேண்டிய நூல்!

பகுத்தறிவைப் பெற்றிருக்கும் மனிதன் _- மற்றவர்களோடு கூடி வாழவேண்டிய ஜீவனாக இருக்கும் மனிதன், சிந்திக்கும் சக்திக்கு உட்பட்டே தீரவேண்டுமல்லவா? இவ்விதச் சிந்தனாசக்தியைத் தடுத்து, அதை அழித்துவிட வேண்டுமென்பதே ஆரியத்தின் அடிப்படையாகவும், ஒரு சிறு கூட்டத்தினரின் தொழிலாகவும், மதமாகவும் இருந்து வருகிறது. அவர்களின் இந்தத் தத்துவத்திற்கே மற்ற நீதி நூல்களும், சைவ_-வைணவ நூல்களும் அவற்றிற்கு ஆதாரமான கடவுள்களும் பக்கத் துணையாய் இருந்து வருகின்றன. இப்பேர்ப்பட்ட நீதி நூல்களும், கடவுளுமே நம்மீது சுமத்தப்பட்டுவிட்டன. எனவே இவ்வித ஏமாற்றுதலை எதிர்த்தொழித்து உண்மையைக் காட்ட, ஒரு நெறி_-வழி இன்றியமையாததாய் இருக்கிறது. அதற்காகவே நாம் திருக்குறளை நீதிநெறி நூலாகக் கொள்கிறோம்.

குறளை ஏன் ஆதாரம் காட்டுகிறோம்?

திராவிட இயக்கத்தினராகிய நாங்கள் பல கடவுள் _- அவை பற்றிய பல மதம்_-புராணம் ஆகியவற்றை எதிர்த்து வருகிறோம். அவைகளை எதிர்க்கும் போது அவற்றை வளர்த்து _- அவற்றால் பயனடைந்து வரும் கூட்டத்தினரோ, பொது மக்கள் எங்களைத் தவறாகக் கருதிக் கொள்ளுமாறு தந்திரம் செய்கின்றனர். பின்னர் தெளிவு பெற்று, “இப்படி எதிர்க்க, உனக்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா?’’ என்று நம்மைக் கேட்கும் நிலையை மக்கள் அடைகின்றார்கள். இந்த நிலையில் தான், அந்த ஆதாரத்திற்கு நாங்கள் குறளையே எடுத்துக்காட்டுகிறோம்’’ என்றார் தந்தை பெரியார்.

(தொடரும்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *