லண்டன் பிரிவி கவுன்சில் வரை சிரித்த வடகலை-தென்கலைச் சண்டை!

ஜூலை 01-15

 

 கவிஞர் கலி.பூங்குன்றன்

(லண்டன் பிரிவி கவுன்சிலில் – நடந்தது என்ன? – சுவையான தகவல்கள் உண்டு!)

 

வடகலை, தென்கலை ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கிடையே அவ்வப்போது மோதல் போக்கு நிலவி வந்திருக்கிறது. 

காஞ்சிபுரத்தில் சமீபகாலமாக நடந்து வரும் சம்பவங்களும் அதன் விளைவாக எழுந்த சர்ச்சைகளும், தற்போது இந்தக் கருத்து வேறுபாட்டை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கின்றன.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை மே_29ஆ-ம் தேதி நடைபெற்றது(2018). அதில் நம்மாழ்வார் அவதாரத்தன்று அவரது சந்நிதியில் வரதராஜ பெருமாளை தென்கலை அன்பர்கள்  நாலாயிரத் திவ்ய பிரபந்தப் பாசுரங்களைப் பாடி சேவிப்பதுடன், நம்மாழ்வாருக்கு பெருமாளின் சடாரி வைத்து மரியாதை செய்வது வழக்கம். இந்த ஆண்டும் அவ்வாறு பாடும்போது,  ‘மறுநாள் அதிகாலையில் கருடசேவை நிகழ்ச்சிக்குப் பெருமாளை அலங்காரம் செய்ய வேண்டும்‘  என்று கூறி வடகலை அர்ச்சகர்கள்  பெருமாளை எடுத்துச் சென்றார்கள். அதிலும் பெருமாளை வஸ்திரத்தால் முழுவதும் மறைத்து, அப்பிரதட்சிணமாக எடுத்துச் சென்றார்கள். பொதுவாக பெருமாள் வீதியுலா செல்லும்போது, வழியில் ஏதேனும் இறப்பு நேரிட்டிருந்தால் அப்போது மட்டுமே பெருமாளை வஸ்திரத்தால் மறைத்து எடுத்துச் செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பெருமாளை அவசரமாக எடுத்துச் சென்றதுடன், சம்பிரதாயமும் மீறப்படவேதான், இரு பிரிவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு உண்டாகி சர்ச்சையானது. ஆன்மிக அன்பர்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தலையிட்டு, பிரச்சினை பெரிதாகிவிடாமல் சரி செய்துவிட்டனர். ஆனால், மறுபடியும் தங்கப் பல்லக்கில் பெருமாள் உலா வரும்போது தென்கலை அன்பர்கள்  பாசுரங்களைப் பாடினார்கள். கோயிலுக்குள்தான் பாசுரங்கள் பாட வேண்டும் என்று கூறி வடகலை அன்பர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதுவும் பெரும் சர்ச்சையாகியது. தொடர்ந்து இப்படி சர்ச்சைகள் ஏற்படுவது குறித்து, காஞ்சிபுரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட திருமலை விஞ்சமூர் வெங்கடேஷிடம் கேட்கப்பட்டது.

பெருமாள் ஒருவர் என்பதே உண்மை. அவரை வழிபடும் முறைகளால் பிற்காலத்தில் உருவானவையே இந்தப் பிரிவுகள். நாதமுனிகள் காலத்தில் ஆழ்வார்களின் பாசுரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவை பெருமாள் கோயில்களில் பாடப்படும் முறை உருவானது. அதை விஸ்தாரமாகச் செயல்படுத்தியவர் ஸ்ரீராமாநுஜர். இவர்கள் காலத்தில்கூட எந்த பேதமும் இல்லாமல் வைணவம் இருந்து வந்தது.

13ஆ-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழில் பாடும் முறையை விரும்பாத சிலரின் தலையீடு காரணமாக பிரச்சினை உருவானது. வடமொழியில் பல நூல்களை எழுதிய வேதாந்த தேசிகரை அடியொற்றி வந்த சிலர், வடமொழியில் பாடுவதே பெருமாளுக்கு உகந்தது என்றெண்ணி செயல்பட்டார்கள். அதே காலக்கட்டத்தில் வாழ்ந்த பிள்ளை லோகாச்சாரியார் தமிழ் மரபிலேயே பாசுரங்களைப் பாடி வழிபாடுகளைத் தொடர்ந்தார். அப்போதும் பெரிதாக பிரிவினை ஏதும் உருவாகவில்லை.

1323ஆம் ஆண்டு உலூக்கான் (முஹமது பின் துக்ளக்) படையெடுத்து வந்த பிறகு தமிழ்நாட்டில் கோயில்களில் வழிபாடுகள் தடைப்பட்டுவிட்டன. பின்னர் 1371-ஆம் ஆண்டில் விஜய நகரப் பேரரசு காலத்தில் மீண்டும் வழிபாடுகள் தொடர்ந்தன. இந்தக் காலக்கட்டத்தில் பழைமையான சம்பிரதாயங்கள் மறைந்து போயின. அப்போது மணவாள மாமுனிகள் என்பவர் சிறீராமாநுஜரின் அடியொற்றி தமிழ்ப் பாசுரங்களை முதன்மையாகக் கொண்டே ஆலய வழிபாடுகளை நடத்தி வந்தார். அப்போதும் பிரிவினை எதுவும் உருவாகவில்லை. ஆனால், மொழி பேதம் மற்றும் சரணாகதி தத்துவங்களால் மெல்ல மெல்ல வைணவர்களுக்குள் பிரிவு உண்டாகி, புகைச்சலாகிக் கொண்டிருந்தது. 1720ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் வடகலை, தென்கலை என்ற பிரிவுகள் உக்கிரமமாக உருவாகி இருவேறு நாமங்கள், தத்துவங்கள், வழிபாட்டு முறைகள் ஏற்பட்டன. இதனால் வடகலை சம்பிரதாயத்தைக் கடைப்பிடித்தவர்கள் பெரும்பான்மையாக இருந்த கோயில்கள் அவர்கள் வசமாகின. தென்கலை சம்பிரதாயத்தைக் கடைப்பிடித்தவர்கள் பெரும்பான்மையாக இருந்த கோயில்கள் அவர்கள் வசமாகின.

ஆனால், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இரு பிரிவினரும் சமமாக இருந்த படியால் சிக்கலானது. எந்த சம்பிரதாயத்தைக் கடைப்பிடிப்பது என்பதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மோதல்கள் அடிக்கடி ஏற்பட்டன. (ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு கட்டிப் புரண்டதும் உண்டு. ஊர் சிரித்த கதைகள் பற்பல!) 1825-ஆம் ஆண்டு, 1852ஆம் ஆண்டு ஆகிய இரு ஆண்டுகளில் வெளியான நீதிமன்ற தீர்ப்புகளில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தென்கலை அன்பர்களுக்கே சொந்தம் என்று தீர்ப்பானது. ஆனாலும், கடந்த 200 ஆண்டுகளில்

காஞ்சியில் இந்த இரு பிரிவினருக்கும் இடையே பல மோதல்கள் நடைபெற்று வருகின்றன. மெல்ல மெல்ல வரதராஜ பெருமாள் கோயில் வடகலை அன்பர்களின் வசமானது. 1940-ஆம் ஆண்டு இந்தக் கோயில் வடகலையை சேர்ந்தவர்களுக்கே உரிமையானது என்று கோர்ட் தீர்ப்பு வழங்கியது. கோயிலின் அனைத்து சந்நிதிகளும் வடகலையைச் சேர்ந்தவர்களுக்கு உரிமையானது. நம்மாழ்வார், மணவாள மாமுனிகள் சந்நிதிகள் மட்டும் தென்கலை அன்பர்களுக்கு உரிமையானது. இதன் காரணமாக ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் இந்த இரு சந்நிதிகளில் நடைபெறும் விழாக்களில் மட்டும் மோதல் வலுக்கிறது.

இப்படித்தான் அன்று நம்மாழ்வாருக்குப் பாசுரம் பாடியபோது, வடகலை அன்பர்கள் நேரமாகி விட்டது என்று கூறி சுவாமியை கொண்டு சென்றனர். வேதாந்த தேசிகரை பெருமாளுக்கு இணையாக வழிபடும் அவர்கள், “ஆழ்வார்களில் சிறப்பான நம்மாழ்வாருக்கும் மரியாதை செலுத்தி ஒரு பத்து நிமிடம் காத்திருந்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் இந்த மோதலே ஏற்பட்டிருக்காது. இந்த மோதலுக்கு நிரந்தரமாக ஒரு தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அறநிலையத்துறை ஆணையரைக் கேட்டிருக்கிறோம்‘’ என்றார்.

இந்தச் சம்பவம் குறித்து மற்றொரு தரப்பைச் சேர்ந்த ரீவத்சன் கூறுகையில், “ஒவ்வோர் உற்சவத்தின்போதும் தேவஸ்தானத்தில் முன்கூட்டியே கூட்டம் போட்டு, எந்தெந்த நேரத்தில் என்னென்ன நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும் என்று சொல்லிவிடுவார்கள். இந்த வருடமும் கோயில் செயல் அலுவலர் நேர அட்டவணை போட்டுக்கொடுத்துவிட்டார். அன்று மாலை 4 மணிக்கு சந்நிதியிலிருந்து புறப்பட வேண்டிய பெருமாள் ஒரு மணி நேரம் தாமதமாக 5 மணிக்குத்தான் புறப்பட்டார். இரவு 10.30 மணிக்கு வாகன மண்டபத்திலிருந்து புறப்பட்டு நம்மாழ்வார் சந்நிதிக்கு வந்து பாசுரங்கள் பாடிவிட்டு, இரவு ஒரு மணிக்குள் சந்நிதிக்கு வந்துவிடவேண்டும். அப்போதுதான் அலங்காரம் முடிந்து கருட வாகனத்தில் பெருமாளை எழுந்தருளச் செய்ய முடியும். எனவே, சீக்கிரம் பாசுரங்களைப் பாடி முடிக்கச் சொன்னார்கள். அதற்கு அவர்கள், “நாங்கள் நிதானமாகத்தான் பாடுவோம்’’ என்று சொன்னதுடன், அவர்களுக்குள்ளேயே சண்டை போட்டுக்கொண்டார்கள்.

இதற்கிடையில் பூஜை செய்து நைவேத்தியமும் செய்துவிட்டார்கள். ஆனாலும், தென்கலையைச் சேர்ந்தவர்கள் காலத்தைக் கடத்திக் கொண்டேயிருந்தார்கள். எனவே, அவர்களிடம் திரையை இறக்கச் சொன்னார்கள். சுவாமிக்கு மாலை, பரிவட்டம், சடாரி போன்றவற்றைக் கொண்டு வந்தார்கள். நேரமாகிக் கொண்டிருந்ததால், மணியக்காரர் சுவாமியை வெளியே கொண்டுவரும்படிக் கூறினார். அப்போது தென்கலையைச் சேர்ந்தவர்கள் நம்மாழ்வார் சந்நிதிக் கதவை மூடிவிட்டார்கள். பரிவட்டம் கட்டும் நேரத்தில் தென்கலையைச் சேர்ந்த அர்ச்சகர், மாலையைப் பிடித்து இழுத்ததுடன், ஸ்வாமியைக் கொண்டு போகக்கூடாது என்று சொன்னதால், இரு தரப்பினருக்கும் அடிதடி தகராறு ஏற்பட்டது. காவல்துறையினர் வந்தபோது அவர்களிடமும் தென்கலை அர்ச்சகர்கள் தகராறு செய்தனர்’’’ என்றார். இவை எல்லாம் ஏடுகளில் வந்த செய்திகள்தான்.

எப்படி இருக்கிறது? “ஹரியும் ஹரனும் ஒன்ணு. இதை அறியாதவர்கள் வாயில் மண்ணு’’ என்றெல்லாம் இவர்கள் பேசுவதில் ஒன்றும் குறைச்சலில்லை. சீரங்கத்து யானைக்கும், காஞ்சிபுரம் யானைக்கும் வடகலை நாமம் போடுவதா, தென்கலை நாமம் போடுவதா என்ற சண்டை முற்றி சென்னை உயர்நீதிமன்றம் சென்றதுண்டு. ஒரு வாரம் வடகலை, அடுத்த வாரம் தென்கலை நாமம் போடலாம் என்ற தீர்ப்பு வந்த நகைச்சுவைப் படலங்களும் உண்டு. இலண்டன் பிரிவி கவுன்சிலுக்கும் வழக்குச் சென்றது.

லண்டன் பிரிவி (Privy Council) கவுன்சில் தீர்ப்புதான் என்ன?

வைஷ்ணவ கோயில்களில் யாருடைய மந்திரத்தைச் சொல்வது என்பதில் பலகாலப் பிரச்சினை இருந்து வந்தது. லண்டனில் உள்ள பிரிவி கவுன்சில் நீதிமன்றம் ஒரு தீர்ப்பைக் கொடுத்தது _ சுவையானது.

பிரிவி கவுன்சில் வழக்கு PC Appeal No.33 of 1943

His Holiness பெரிய கோயில் கேள்வியப்பன் திருவேங்கட ராமானுஜ பெரிய ஜீயங்காருலு வாரு -_ அப்பீல் செய்தவர்.

-எதிர் பார்ட்டி-_

பிரதிவாதி வெங்கடசாருலு மற்றும் பலர்.  _ எதிர்பார்ட்டிகள்.

இந்து மதக் கோட்பாட்டின்படி, இறைவன்  மூன்று நிலைகளில் இருக்கிறான்.

பிரம்மா, உருவாக்குபவர்;

விஷ்ணு, காப்பவர்;

சிவன், அழித்துச் சரி செய்பவர்.

The Deity manifests himself in three aspects as
Brahma – the Creator, Vishnu – the Preserver and
Siva- the Destroyer and Renovator.

இதில் விஷ்ணுவை வழிபாடு செய்து வருபவர்கள் வைஷ்ணவர்கள். தென்னிந்தியாவில் விஷ்ணுவுக்குப் பல கோயில்கள் உள்ளன. 2500 வருடங்களுக்கு முன்பிருந்தே சமஸ்கிருத  வேதங்களும், மந்திரங்களும் விஷ்ணு வழிபாட்டுக்காக இருந்து வருகின்றன. இதுபோலவே தென்னிந்தியாவில் 4000 பிரபந்தங்கள் தமிழில் உள்ளன. இவைகளை விஷ்ணு பக்தர்களான ஆழ்வார்கள் பாடிச்  சென்றுள்ளனர்.

விஷ்ணு வழிபாட்டு முறைகளை வகுத்துச் சென்ற ஆச்சாரியர்களில் முக்கியமானவர்கள்:

கி.பி.1017 _ 1137இல் வாழ்ந்த ராமானுஜர்.

கி.பி.1268-_1369இல் வாழ்ந்த வேதாந்த தேசிகர்.

கி.பி.1370_-1443இல் வாழ்ந்த மணவாள மகாமுனி.

ஆச்சாரியர்கள் ‘ஸ்தோத்திர பதங்கள்’ என்றும், ஆழ்வார்கள் ‘பிரபந்தங்கள்’ என்றும், இறைவனை போற்றிப்பாடும் பாடல்கள் இயற்றி, அவைகளை வழிபாட்டு முறையாக உபயோகித்து வந்துள்ளனர்.

14ஆம் நூற்றாண்டில் இந்த வைஷ்ணவர்களுக்குள் இந்த வழிபாட்டு முறையில் கருத்து வேறுபாடு ஆரம்பமாயிற்று.

ஒரு கூட்டம், வேதாந்த தேசிகரின் சமஸ்கிருத வேதத்தைப் பின்பற்றி வழிபாடு செய்தது. இவர்களை ‘வடகலை’ என்று அழைத்தனர். மறுகூட்டம், ஆழ்வார்களின் பிரபந்தத்தை வழிபாட்டு முறையாக கொண்டது. இவர்கள் மணவாள மாமுனியை பின்பற்றியவர்கள். எனவே இவர்கள் தென்கலை.

மதராஸ் பிரசிடென்சியில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 18 விஷ்ணு கோயில்களில், 5 கோயில்கள் திருமலையைச் சேர்ந்தவை, 13  கோயில்கள்  திருப்பதியைச் சேர்ந்தவை. இவை அனைத்தும் ‘அடயபாகம்’ என்ற தலைமையின் கீழ் இயங்கியவை. அதன் தலைவர் ‘பெரிய ஜீயங்கர்’. இவர் தென்கலை. இவருக்குத் துணையாக இருப்பவர்கள் 4 ஏகாங்கிகள், மற்றும் சில சின்ன சின்ன ஆச்சாரிய புருஷர்கள். இவர்களை எல்லோரையும் சேர்த்தே ‘அடயபாக கோஷ்டி’ என்பர். (வடகலைக்காரர்கள் ஜீயர் என்றும், தென்கலைக்காரர்கள் ஜீயங்கர் என்றும் குறிப்பிடுவர். அதில்கூட அடிதடிதான்)

வழிபாட்டு முறையில் குழப்பம்:

தென்கலை முறை:

பெரிய ஜீயங்கர் இந்த பூஜையை ஆரம்பித்து வைப்பார். அப்போது ‘சாதித் அருளா’ என்று சொல்லி ஆரம்பிப்பார். இதைத் தொடர்ந்து 5 பாடல்கள் (மந்திரங்கள்) பாடுவர். இது தென்கலை முறைப்படி ‘ஸ்ரீ சைலேசா தயாபத்ரம்’ என்று தெடங்கும். அதில் தென்கலை குருவான மணவாள மகாமுனியின் பாடல்கள் இருக்கும்.

வடகலை முறை:

இதில் வழிபாட்டின் முதல் பாடல், ‘ராமானுஜ தயாபத்ரம்’ என்று தொடங்கும். இதில் வடகலை குருவான வேதாந்த தேசிகரின் பாடல்கள் இருக்கும். மீதி உள்ள 4 பாடல்கள் இறைவனை வணங்கும் பொதுவான பாடல்களே. வழிபாட்டு முடிவில், இறைவனுக்கு ‘வாழி’ பாடுவர். இதற்கு ‘வாழி திருநாமம்’ என்று பெயர். இது மொத்தம் 9 பாடல்கள். இதில் முதல் நான்கு பாடல்கள் பொது. மீதி 5 பாடல்களில்தான் பிரச்சினையே.

இந்தக் கடைசி 4 வாழி பாடல்கள் பாடும்போது தென்கலை பாடல்களைப் பாடுவர். வடகலை ஆச்சாரியர்கள் அமைதியாக இருக்க வேண்டும். ஆனால் அப்போது வடகலை ஆச்சாரியர்களும் சேர்ந்து அவர்களின் வாழி பாடல்களை பாடுவர். இது வேண்டுமென்றே பாடப்படுவதால், ஒரு குழப்பமாக இருந்துவிடும்.

வழக்கு:

வடகலைக்கு இப்படியொரு பழக்கம் இல்லை என்றும், இதை அவர்கள் கோயிலில் பூஜையில் பாடக் கூடாது என்றும், மற்ற நேரங்களில் பாடிக் கொள்ளலாம் என்றும், எதிர்த்து வட ஆற்காடு சப்-கோர்ட்டில் வழக்கு; பழைய பழக்க-வழக்கங்களை நீதிமன்றம் ஆராய்ந்து தென்கலை முறையே சரி என்றது. அதை எதிர்த்து மதராஸ் பிரசிடென்சி உயர்நீதிமன்றதுக்கு மேல்முறையீடு வழக்கு. அங்கும் “திருமலையிலும், திருப்பதி கோயில்களிலும் வடகலை ராமானுஜ தயாபத்ரத்தை’ அனுஷ்டிப்பதில்லை. காலங்காலமாக திருச்சானூர், திருமலை, திருப்பதி கோயில்களில் இந்த தென்கலை முறையே பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறிவிட்டது.

லண்டன் பிரிவி கவுன்சில் வரை:

இதற்கு முன் 1887-_1893இல் திருச்சானூர் கோயிலில் இதுபோல் ஒரு வழக்கு வந்தது. அதில் திருச்சானூர் கோயிலில் முழுக்க முழுக்க தென்கலை மந்திரமே சொல்லப்பட்டு வருகிறது என்றும், திருச்சானூர் பழக்கமே, திருமலையிலும் திருப்பதியிலும் பின்பற்றப்படுகிறது என்றும் தீர்ப்பு உள்ளது.

மற்றொரு வழக்கில் (Krishnasami v.Krishnama, 1882 ILR 5 Mad 313) காஞ்சிபுரத்திலுள்ள பெரிய கோயிலில் தென்கலை முறையே உண்டு. வடகலை முறையை தடைசெய்ய இந்த வழக்கு வந்தது. அதில் முழுக்க முழுக்க தென்கலை முறையே சரி என்று தீர்ப்பு.

மற்றொரு வழக்கில் (Srinivasa Thathachariar v. Srinivasa Aiyangar, 1899, 9 Mad LI 355)  இதில் திருநெல்வேலி கோயிலில் தென்கலை மந்திரமே சொல்ல வேண்டும் என்றும் வடகலை மந்திரத்தை சொல்ல உரிமையில்லை என்றும்,  வாழி மந்திரம் சொல்லும்போது, வடகலை ஆச்சாரியர்கள் அதை அவர்கள் வேண்டுமென்றே சேர்ந்து உச்சரிக்கக் கூடாது என்றும் உயர்நீதிமன்ற தீர்ப்பு உள்ளது.

இவ்வாறு பல தீர்ப்புகளை ஆராய்ந்து, பிரிவு கவுன்சில் முடிவாக: தென்கலை முறையே சரி; ‘சாதித் அருளா’ சொன்னவுடன் தென்கலை மந்திரங்களே தொடங்க வேண்டும். வடகலை மந்திரங்களை திருப்பதியில் ‘தர்மபுரி, கோடிகன்னிகாதானம், தோமாலை’ (Dharmapuris, Kotikannikadanams and
Thomalais) இவைகளில் தவிர வேறு எங்கும் சொல்லக் கூடாது. வாழி திருநாமம் எப்போது சொன்னாலும், தென்கலை மந்திரத்துடனேயே சொல்லவேண்டும்.

திருமலை சேர்ந்த திருப்பதி, திருச்சானூர் வாழும் தென்கலை பண்டிதர்கள் எப்போதும் தென்கலை மந்திரம் சொல்ல உரிமையுண்டு. அதில் வடகலை மந்திரம் சொல்லி குழப்பக் கூடாது.

பெரிய ஜீயங்கர் தலைமையில் இவை நடக்க வேண்டும்.

பிரச்சினை _ இந்து மதத்தின் காத்தல் கடவுள் என்று சொல்லப்படும் விஷ்ணுவைப் பொறுத்தது. அவர் சம்பந்தப்பட்ட பிரச்சினையையே அவர்களால் தீர்த்துக்கொள்ள முடியவில்லை. அவர்கள் சரணடையும் நம்பும் ஆண்டவனாலும் கையாளாகவில்லை.  வெள்ளைக்கார கிறித்தவ நீதிபதிகள் லண்டன் பிரிவி கவுன்சில்தான் தீர்க்க வேண்டியிருந்தது. வெட்கப்பட வேண்டாமா?

இந்த இலட்சணத்தில் கடவுள் பக்தி குறைந்ததால்தான் நாட்டில் ஒழுக்கம் கெட்டுப் போய்விட்டது; அமைதி சீர்குலைந்தது என்று சொல்லுவதற்கு மட்டும் குறைச்சல் இல்லை; ஏழு நூற்றாண்டுகளாக இந்தச் சண்டை அடங்கவில்லை.

 இந்து ராஜ்ஜியத்தை உண்டாக்கப் போவதாகக் கூறும் காவிக் கூட்டம் இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறதாம்?

கண்டு முட்டு! கேட்டு முட்டு!

வடகலை பக்தன் தென்கலைப் பக்தனைப் பார்த்துவிட்டால் சுவரில் போய் முட்டிக் கொள்வான். அதற்குப் பெயர் ‘பார்த்து முட்டு’.

ஒரு கலைகாரன் இன்னொரு கலைகாரனைப் பற்றிக் காதில் கேட்டுவிட்டாலும் சுவரில் போய் முட்டிக் கொள்வானாம். இதற்குப் பெயர் ‘கேட்டு முட்டு’. எப்படி இருக்கிறது?

வைணவப் பக்தரான ராஜாஜி அவர்கள் முதல் அமைச்சராக இருந்த நிலையிலேயே சரியாக _ ‘அழகாக’ ஒன்றை சொன்னார்.

“நம் நாட்டில் மற்றவர்கள் சண்டைகளைக் காட்டிலும், பக்தர்களின் சண்டையே அதிகம். ‘என் தெய்வம் பெரிதா? உன் தெய்வம் பெரிதா? என்ற சண்டைகள்தான் அதிகம்’’ என்றாரே!

(சென்னைத் தமிழிசைச் சங்கக் கட்டடத் திறப்பு விழாவில் – 15.4.1953)

நாமக் குறியா? ஆண் குறியா?

இந்து மதத்தின் பெருங் கடவுளர் மூவர். இவர்களுள் ஒருவர் விஷ்ணு. இந்த விஷ்ணுவைக் கும்பிடுகிறவர்கள் வைஷ்ணவர்கள். வைஷ்ணவ பக்தர்களை வழிநடத்தும் பார்ப்பன பூசாரிகள் அய்யங்கார்கள் எனப்படுவார்கள்.

இந்துக்களில் ஏறத்தாழப் பாதிப் பேர் வைஷ்ணவர்கள். மற்ற இந்துமதப் பிரிவுகளிலிருந்து வைஷ்ணவர்களைத் தனிமைப்படுத்திக் காட்டுவது அவர்கள் தங்கள் நெற்றியில் அணியும் மதக்குறி. இந்தக் குறியின் பெயர் நாமம் என்பது.

லிங்கத்துக்குப் போட்டி நாமம்!

நாமக்குறியின் உட்பொருள் சிருஷ்டி தத்துவம். அதாவது சைவர்களின் லிங்கத்துக்கு இணையான வைணவக் குறியே நாமம். சைவர்கள் என்பவர்கள் சிவன் என்னும் இந்துக் கடவுளை வழிபடுவார்கள். சிவன் இந்துக்களின் முப்பெரும் கடவுள்களில் ஒரு கடவுள். லிங்க வழிபாடு என்பது பிறப்பு உறுப்பு வழிபாடு ஆகும்.

நெற்றியில் செங்குத்தாக இரண்டு வெள்ளைக் கோடுகள், இந்த இரண்டுக்கும் இடையே ஒரு சிவப்புக் கோடு – இதுதான் நாமம்! இரண்டு வெள்ளைக் கோடுகளும் மகாவிஷ்ணுவின் தொடைகளைக் குறிக்கும். மத்தியில் உள்ள சிவப்புக்கோடு சிருஷ்டி தத்துவத்தைக் குறிக்கும். (அதாவது தொடைகள் இரண்டுக்கும் இடையில் தொங்கும் உறுப்பு – ஆண்குறி).

வடகலை – தென்கலையைப் பிரிப்பது எது?

வைணவர்களில் இரண்டு பிரிவுகள் உள்ளன. இவை ஒன்றுக்கு ஒன்று எதிரும் புதிருமானவை. இவர்களை ஒருவரிலிருந்து மற்றவரைப் பிரித்து அறிந்துகொள்வது எப்படி? இவர்கள் நாம் தீட்டிக் கொள்ளும் விதத்தின் அடிப்படையில் தான் _ அதாவது, நாமத்தின் இரண்டு வெள்ளைக் கோடுகளை எப்படி இணைப்பது என்பதில்தான்!

வடகலையினர் எனப்படுவோர் இரண்டு வெள்ளைக் கோடுகளையும் இணைக்கப் பரவளைவு (Parabola)) ஒன்றினைத் தீட்டுகிறார்கள். தென்கலையினரோ இதற்குக் கீழே தனியாக ஒரு தாங்கு காலைத் தங்கள் மூக்கின் மீது வரைந்து கொள்கிறார்கள்.

 

மாஜிஸ்திரேட் செய்திருக்க வேண்டியது என்ன?

மன்னார்குடி சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் இந்தக் குறிப்பிட்ட வழக்கில் வடகலையினருக்குச் சாதகமாகத் தீர்ப்புக் கூறியிருக்கிறார். ஆனால், ஊரில் அமைதி நிலவ வேண்டும் என்பதில் அக்கறை கொண்ட ஒரு நீதிபதி என்ன செய்திருக்க வேண்டும் – என்ன செய்திருப்பார்?

இரண்டு தரப்பினரையும் கட்டுப்படுத்தி யிருப்பார். தற்குறி பிண்டங்களான மக்களின் கீழ்த்தரமான உணர்ச்சிகளைக் கிண்டிக் கிளறி தீ மூட்டி அனல் கக்கச் செய்யவல்ல கேடுகெட்ட சாமிச் சிலைகளை எழுந்தருளச் செய்யும் ஊர்வலத்துக்கே தடையல்லவா விதித்திருப்பார் – விதித்திருக்க வேண்டும்.

மன்னார்குடி மாஜிஸ்திரேட் இவ்வாறு செய்யாமல் தவறிவிட்டது ஏன்? அவர் தம்மை பொருத்தமட்டிலும் இவ்வாறு செய்யக்கூடிய மனவெழுச்சி படைத்தவர்தான். ஆனால், ஓட்டை உடைச்சலான சட்டங்கள்தாம் அவரது கையைக் கட்டிப் போட்டிருக்கும்.

 கொட்டப்பட்ட குருதி கொஞ்சமா நஞ்சமா?

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத் தாண்டுகளாகத் தென்கலையினரும் வடகலையினரும் தங்களுக்குள் கலகம் செய்து வருகிறார்கள். மதவெறி பிடித்த இவர்களது உற்சாகம் காரணமாகத் தென்னகத்தின் வரலாற்றில் கொட்டப்பட்ட குருதிக்குக் கணக்கே இல்லை.

குருதி கொட்டும் இந்துக் கலகங்களைவிட மோசமானது இவர்கள் பெரும் பணம் செலவிட்டு நீதிமன்றங்களில் நடத்தியிருக்கும் வழக்குகள்தாம். இந்த வழக்குகளின் பயன் என்ன? வழக்குரைஞர்களுக்கு நல்ல சம்பாத்தியம், அய்ரோப்பிய நீதிபதிகளுக்கு நல்ல தமாஷா, பொதுமக்களுக்கோ ஓயாத தலை வேதனை!

 

பிரிட்டிஷாரின் நடைமுறை!

பிரிட்டிஷ் நிர்வாகிகள் கையாண்டு வரும் நடைமுறைகள் என்ன? பூசாரிக் குலம் மக்கள் மீது பிடித்திருக்கும் பிடியை மேலும் இறுகச் செய்யும்படி அல்லவா பிரிட்டிஷ் நிர்வாகிகளின் நடைமுறை அமைந்திருக்கிறது. இப்படிப்பட்ட கொள்கையைக் கடைப்பிடிப்பதற்கு அவர்கள் காட்டும் காரணம் என்ன? மத விவகாரங்களில் நடுநிலையைக் கடைப்பிடிக்கும் கொள்கையையும், நினைவுக்கெட்டாத காலந்தொட்டு நிலவிடும் மக்களின் பழக்க வழக்கங்களை அப்படியே போற்றிக் காக்க வேண்டும் என்னும் கொள்கையும் அல்லவா காரணம்!

மன்னார்குடியிலே நடைபெற்றதாகக் கூறப்படுவது போன்ற காட்டுமிராண்டித் தனமான காரியங்களில் தன்னையொத்த இந்துச் சகோதரர்கள் ஈடுபட்ட அவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொள்வதைக் கண்டு இந்து ஒவ்வொருவனும் துளியத்தனை சுயமரியாதையுள்ள இந்து ஒவ்வொருவனும் வெட்கித் தலைகுனிய வேண்டியதிருக்கிறதே!

சுயமரியாதை உணர்ச்சி படைத்த இந்துக்கள் இந்தச் சட்டங்களை மாற்றியமைக்க வேண்டும் என்று கோரிப் போராடுவதற்காகக் கச்சை வரிந்து கட்டி, களங்காண உடனே கிளம்புவார்கள் என்று நம்புவோமாக! மாற்றி யமைக்கப்பட்ட புதிய சட்டங்கள் இத்தகைய மத மவுடீகங்களைத் தண்டனைக்குரியவைகளாக ஆக்கும். இல்லையென்றால் இந்த மத மவுடீகங்கள் இந்நாட்டின் பெருமைமிக்க பெயரைப் புதைச் சேற்றுக்குள்ளே இழுத்துப் போட்டு அமுக்கி விடாதா?

நன்றி: ‘மெயில்’ (26.2.1929)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *