‘உங்கள் சத்யராஜ்’
நூலாசிரியர்: சபீதா ஜோசப்
வெளியீடு: குமரன் பதிப்பகம்,
19,கண்ணதாசன் சாலை,
தியாகராயர் நகர்,
சென்னை-17.
பக்கங்கள்: 264 விலை: 150/-
இனமுரசு சத்யராஜ் அவர்களின் தன்வரலாறு. நடிகர் சிவக்குமார் அவர்களின் வாழ்த்துரையுடன் தொடங்குகிறது. ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்த சத்யராஜ் அவர்களின் இளமை காலம் தொடங்கி கல்லூரி காலம் வரையிலான அனுபவங்கள் சுவையான நடையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ‘
பெரியார் தொண்டர்’ எனும் தலைப்பில் சுவரெழுத்துப் புரட்சியாளர் சுப்பையா குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
திரைப்படத்துறையில் நுழைந்து வெற்றி பெறும்வரை அவர் மேற்கொண்ட கடும் முயற்சிகளை விளக்குகிறது. திரைத்துறையில் சிவாஜி, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட மூத்த நடிகர்களுடன் தனது அனுபவங்கள், பல்வேறு திரைப்படங்களின் படப்பிடிப்பு அனுபவங்கள் ஆகியவற்றை சுவையான நடையில் விளக்குகிறார்.
பெரியார் வேடத்தில் நடிக்க விரும்பியதையும் பின்னர் பல ஆண்டுகள் கழித்து அதற்கான வாய்ப்பு ஏற்பட்டதையும், சிறப்பாக நடிப்பதற்கு கலைஞர் அவர்களும் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் கொடுத்த ஆலேசனைகளையும் நினைவுகூர்கிறார்.
தந்தை பெரியாரின் பச்சைக்கல் மோதிரம் பரிசாக கிடைத்ததை மகிழ்வாக நினைவுகூர்கிறார். நூலினை சபீதா ஜோசப் அவர்கள் சிறப்பான முறையில் தொகுத்து வழங்கியுள்ளார்.
குறும்படம்
‘அரளி’
ஒடுக்கப்பட்டவர்களின் தன்னம்பிக்கைச் சிறகுகள் வெட்டப்படும்போதெல்லாம், சிறகு வெட்டப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல, அதற்கடுத்த தலைமுறையின் தன்னம்பிக்கையிலும் ஊனம் ஏற்பட்டுவிடுகிறது.
அப்படி ஒரு கிராமத்தின் ‘அரளி’ எனும் மாணவி தேர்வு எழுதச் செல்லும் சமயத்தில் ஏரியில் நீர் நிறைந்து குறுக்கு வழியில் செல்ல இயலாமல் போய், மிகவும் மனம் உடைந்து போய், தற்கொலைச் சிந்தனை ஏற்படுகிறது. அப்போது, தான் கண்டுபிடித்த காற்றாலைக் கருவி வேலைசெய்து மின்சாரம் தடைப்பட்ட தன் வீட்டின் விளக்கு எரியும்போது, தேர்வு எழுதாமல் போனதால் இழந்துபோன தன்னம்பிக்கையை மீண்டும் பெறுகிறாள். அழுதுகொண்டே ஊராரின்முன் தான் சாதித்துவிட்டதாக அறிவிக்கிறாள்.
இதுதான் ‘அரளி’ _ குறும்படத்தின் கதை. அரசு கவின் கலைக்கல்லூரி மாணவர் தியாகராஜன் எழுதி இயக்கியுள்ளார். இக்குறும்படம் யூடியூபில் அதிக பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டிருக்கிறது.
வாய்ப்புகள் மறுக்கப்படும்போது தன்னம்பிக்கை இழப்பவர்களும் உண்டு. அதற்கு மாறான அரளிகளும் இருக்கிறார்கள். ஆகவே, அரளிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் என்று பாடம் சொல்லிக் கொடுக்கிறது இக்குறும்படம்.