மஞ்சை வசந்தன்
கிராமங்களில் பாமர மக்கள் பேசும்போது, “நீ என்ன பெரிய கலைக்கட்ரா?’’ என்பர்! அந்த அளவிற்கு உயரிய பதவி அது. ஒரு மாவட்டத்தின் நிர்வாகத்திற்கு தலைமை அலுவலர் அவர். அதிகாரங்கள் அதிகம் உடையவர்.
இப்பதவிக்கு வரவேண்டும் என்றால் இந்தியா முழுமைக்கும் நடத்தப்படும் போட்டித் தேர்வில் தேர்வு பெற வேண்டும்.
ஒரு காலத்தில் ஆங்கிலேயர்கள் மட்டுமே வகித்த பதவி, பின் ஆரிய பார்ப்பனர்களால் அதிகம் கைப்பற்றப்பட்டது. அண்மைக் காலமாகத்தான் ஆடுமாடு மேய்க்கும், அடித்தட்டு மக்களின் பிள்ளைகளும் இப்பதவிக்கு வரும் தகுதியை பெற்று வருகின்றனர்.
இந்த ஆண்டுகூட திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கதிற்கு அருகிலுள்ள சின்னக்கல்லுந்தல் என்ற சிற்றூரைச் சேர்ந்த யுவராஜ் என்ற இளைஞர் அய்-.ஏ.எஸ். தேர்வு பெற்றுள்ளார்.
64 வீடுகளைக் கொண்ட சின்ன ஊர். பேருந்து வசதிகூட இல்லை. அந்த ஊரில் 200 சதுர அடியில் ஒரு குடிசை வீடு. அதை ஒட்டி சின்னதாய் ஆடு கட்டும் கொட்டகை. இவற்றின் கூரைகூட ஒழுகும் நிலை. அதைப் பழுதுபார்க்க சில ஆயிரம் வேண்டும். அதற்கு வசதியில்லாமல், அரசியல்வாதிகள் தூக்கி எறியும் “பிளெக்ஸ் பேனர்’’ வைத்து ஓட்டைகளை மறைத்துள்ளனர். குனிந்துதான் குடிசைக்குள் நுழைய முடியும்!
இந்தக் குடிசை வீட்டின் பிள்ளைதான் யுவராஜ். இவரது தந்தை ஆடு மேய்ப்பவர். யுவராஜ் அரசுப் பள்ளியில், தமிழ் வழியில் பயின்றவர். பத்தாம் வகுப்பில் 418 மதிப்பெண்.
பண வசதியில்லாமல், சிரமப்பட்டு கடன் வாங்கி, இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கும்போதே, அய்.ஏ.எஸ் தேர்வுக்கு தன்னை தயார்படுத்தத் தொடங்கினார். புத்தகங்கள் வாங்கப் பணமில்லாமல் ஆன்லைனிலேயே தேடிப் படித்தார். நூலகங்களைப் பயன்படுத்தினார். விடாமுயற்சியுடன் அய்.ஏ.எஸ். தேர்வு எழுதி வெற்றியும் பெற்றுவிட்டார்! ஆம். ஆடு மேய்ப்பவரின் பிள்ளை அய்.ஏ.எஸ். ஆகிவிட்டார்!
இதைக் காண ஆர்.எஸ்.எஸ். ஆரிய பார்ப்பனக் கூட்டத்திற்குப் பொறுக்குமா? அவர்களின் அடிவயிறு எரிய சதித் திட்டம் தீட்டியுள்ளனர். அய்.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றாலும், “அடித்தளப் பயிற்சி’’ என்று புதிதாய் ஒரு பயிற்சி அளித்து, அதில் பெறும் மதிப்பெண்ணையும் சேர்த்து அதனடிப்படையில்தான் அய்.ஏ.எஸ் பதவிப் பெற முடியும் என்ற ஒரு புதிய திட்டத்தை பிரதமர் மோடியின் அலுவலகம் முன்வைத்துள்ளது.
இந்திய அரசின் முதுகெலும்பு என வர்ணிக்கப்படும் ஆட்சிப் பணிகளில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது மோடி தலைமையிலான பாஜக அரசு. அதாவது, குடிமைப் பணித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களோடு அடித்தளப் பயிற்சிக்குப் பிறகு நடத்தப்படும் தேர்வில் பெறும் மதிப்பெண்களையும் சேர்த்து அதன் அடிப்படையில் மாநில ஒதுக்கீடுகளைச் செய்யலாம் என்ற கருத்து பிரதமர் அலுவலகத்தால் முன்வைக்கப்படுகிறது. ‘இனி குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் தேர்வு செய்யப்படுபவர்கள், உத்ரகாண்ட் மாநிலம், முசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி தேசிய மேலாண்மை பயிற்சி நிறுவனத்திற்கு அனுப்பப்படுவார்கள். அங்கு நூறு நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். இந்தப் பயிற்சியின்போது பயிற்சியாளர்களின் திறன் அறியப்பட்டு, மதிப்பெண்கள் வழங்கப்படும். அதன் அடிப்படையில்தான் பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.’ இதுதான் அந்த மாற்றம். இது சமூக நீதியின் மீதான இன்னொரு தாக்குதலாக அமையும்.
சுருக்கமாகச் சொன்னால் சமூக நீதிக்கு சமாதி கட்டும் முயற்சி இது. கிராமப்புற, ஏழை எளிய வர்க்கத்தைச் சேர்ந்த, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த அத்தனை மாணவமணிகளின் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ். போன்ற குடிமைப் பணி பதவிக் கனவுகளை குழிதோண்டிப் புதைக்கும் செயலாகும்.
இந்திய ஆட்சிப் பணி (அய்.ஏ.எஸ்) உள்ளிட்ட 27 அரசுத் துறைகளுக்கான மத்திய குடிமைப் பணித் தேர்வுகளை மத்திய பொதுத் தேர்வாணையம் ஆண்டுதோறும் மூன்று கட்டங்களாக (முதல் நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வுகள் என) நடத்திவருகிறது. இதில் வெற்றி பெறுபவர்களை, அவரவர்களின் தரவரிசைக்கு ஏற்ப, மூன்று மாத கால அடித்தளப் பயிற்சிக்குப் பிறகு சொந்த மாநிலங்களுக்கோ, இதர மாநிலங்களுக்கோ பணிசெய்ய ஒதுக்கீடுசெய்வது வழக்கமாக இருந்துவருகிறது. இதில் பட்டியலின, பழங்குடியின, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான சட்ட பூர்வமான ஒதுக்கீடுகளும் நடைமுறைப் படுத்தப்படுகின்றன. தற்போது பிரதமர் அலுவலகம் இதை மாற்றி இப்புதியத் திட்டத்தை கொண்டுவர முயற்சிக்கிறது.
இச்செய்தி அறிந்ததும் தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தமது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்ததோடு அதுபற்றி விளக்கமாக எழுதி நாட்டு மக்களையும் கல்வியாளர்களையும் எச்சரித்துள்ளார்கள்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டனம்
இந்திய குடிமை நிர்வாகத்தில் முதன்மையான பங்கு வகிப்பது அய்.ஏ.எஸ்., அய்.எப்.எஸ்., அய்.பி.எஸ். என்பது போன்ற முக்கிய பெரும் மேலாண்மை ஆட்சிப் பணிகள் ஆகும்.
கீரை, காய்கறிகள் விற்கும் தாயின் பிள்ளை, கிராமத்தில் விவசாயப் பணிகளும், வீட்டு வேலைகள் செய்யும் பெற்றோர்களின் பிள்ளைகளும்கூட அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். ஆகி சாதனை படைத்த வரலாறு அண்மைக் காலத்தில், அதாவது 1991-ம் ஆண்டில் இருந்தே தொடங்கியது. இதற்கு முழுமுதற் காரணம் பிரதமராக இருந்த வி.பி.சிங்கும், அவரது அமைச்சரவை சகாவான ராம்விலாஸ் பஸ்வானும் ஆவர்.
மண்டல் கமிஷன் பற்றிய நாடாளுமன்ற விவாதத்தைத் தொடக்கி வைத்து, ஆதரித்து முன்மொழிந்து பிரமதர் இந்திரா காந்தி ஆட்சியில், நாடாளுமன்றம் இரவு 12 மணிவரை இந்த விவாதத்தை நடத்தி, சமூகநீதி அரசியல் சட்டம் அளித்துள்ளதை எவரும் மறுக்கவோ, புறக்கணிக்கவோ முடியாது என்பதோடு, இதுபற்றி மாறுபட்ட நிலைப்பாட்டினை எடுக்க முடியாது என்ற வரலாற்று முக்கியத் தீர்மானம் நிறைவேறியது என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஏற்கனவே தாழ்த்தப்பட்ட, மலைவாழ், பழங்குடியினருக்கு 22.5 விழுக்காடு இட ஒதுக்கீடு மத்திய அரசின் துறைகளுக்கு இருந்த காரணத்தால் அதே அளவுக்கு அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்.களுக்கான பதவிகளில் பெரும் அளவுக்கு (ஒதுக்கீட்டின் முழு அளவுக்கு வராவிட்டாலும்கூட) ஏதோ பெற்றுச் சென்றனர்.
பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மக்கள் தொகையில் 65 முதல் 70 விழுக்காடு இருக்கிறார்கள். அவர்களின் விகிதாச்சாரப்படி இட ஒதுக்கீடு தரப்படவில்லை; மாறாக, 27 சதவிகிதம்தான் சட்டப்படி ஒதுக்கப்பட்டது. நடைமுறையில் இந்த 27 சதவிகிதம் தரப்படாமல் வெறும் 11 முதல் 12 சதவிகிம் வரைதான் தரப்பட்டுள்ளது. இதுவே ஒரு பெரும் சமூக அநீதி.
அரசியல் சட்டத்தினையே புறக்கணித்த செயல் அப்பட்ட விதிமீறலே! இப்போது இந்த அளவு சமூகநீதியையும் அறவே பறித்து, கிராமப்புற, ஏழை, எளியவர்களும், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் முதல், இரண்டாம் தலைமுறையைச் சார்ந்தோரும், மகளிருக்கும் தலையில் இடி விழச் செய்வது போன்ற ஒரு கொடுமையான அறிவிப்பை மத்திய அரசு அறிவித்திருப்பது, ஒரு பெரும் கதவடைப்பு, தடுக்கும் சூழ்ச்சியும் ஆகும்.
முதல் நிலைத் தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு, இந்த மூன்று தேர்வுகளுக்குப் பிறகு இதில் அதிக மதிப்பெண்கள் பெறுவோருக்கு மூன்று மாதப் பயிற்சி அளிக்கப்பட்டு, அதன் பிறகு பணி நியமனம் என்பதுதான் தற்போதைய நடைமுறை.
பயிற்சி அளிப்பவர்கள் யார்? பயிற்சி முடிந்து நேர்முகத் தேர்வு நடத்துபவர்கள் யார்? இதில் வெளிப்படைத் தன்மை மிகவும் குறைவு. அரசியல் தலையீடு, உயர் சாதி தலையீடுகளுக்கு அதிக வாய்ப்புண்டு.
கொள்கை முடிவுகள், செயல்படுத்துதல் போன்றவற்றில் மிக முக்கிய அங்கம் வகிக்கக் கூடிய அய்.ஏ.எஸ்., அய்.எப்.எஸ். போன்ற பதவிகளில் இந்த நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களுக்குரிய பங்கு தட்டிப் பறிக்கப்படுமானால், 1925இ-ல் தந்தை பெரியார் எச்சரித்தபடி உயர்ஜாதிநாயகம் ஏற்படும். அந்த நிலையில், மிகப்பெரிய அளவில் புரட்சி வெடிக்கும். வன்முறையில் கொண்டு போய்விடும் என்று எச்சரிக்கிறோம்’’ என்று எச்சரிக்கையோடு தமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். ஆட்களைத் தேர்வு செய்ய முயற்சி: ராகுல் காந்தி சாடல்!
ஆர்.எஸ்.எஸ் தேர்வு செய்யும் நபர்களை அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ் அதிகாரிகளாக்க பிரதமர் நரேந்திர மோடி முயற்சித்து வருகிறார். தேர்வில் வெற்றி பெற்ற பிறகும், தங்களுடன் இணக்கமாக செயல்படுபவர்களை மட்டுமே உயர் பொறுப்புகளை நியமிக்க பாஜக அரசு சதி செய்து வருகிறது. மாணவர்கள் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது. ஏனெனில், மாணவர்களின் எதிர்காலத்தையே அழிக்கும் நடவடிக்கை. மாணவர்கள் மதிப்பெண்கள் அடிப்படையில்தான் பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும். அப்போதுதான் திறமைக்கு உரிய மதிப்பு இருக்கும். அதை விடுத்து, பயிற்சியில் அவர்களைக் கண்காணிப்பது என்பது முற்றிலும் தவறான செயல்பாடு என்று ராகுல் கூறியுள்ளார்.
தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கண்டனம்
இப்போது சிவில் சர்வீஸ் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் இளைஞர்களை அய்.ஏ.எஸ். மற்றும் அய்.பி.எஸ் உள்ளிட்ட பல்வேறு அகில இந்திய பணிகளுக்கு நியமிக்கும் முறையையும், அதன் அடிப்படையில் அவர்கள் பணியாற்றும் மாநில ஒதுக்கீடுகளையும் ரத்து செய்துவிட்டு, முசோரியில் நூறு நாள் பயிற்சியில் இருக்கும்போது எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் எந்தப் பணிக்கு ஒருவரை தேர்வு செய்வது என்பதையும், எந்த மாநிலத்தில் பணியாற்ற அவருக்கு ஒதுக்கீடு வழங்குவது என்பதையும் முடிவு செய்ய வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் விரும்புகிறது என மத்திய பணியாளர் சீர்திருத்தத் துறையின் இணைச் செயலாளர் விஜய்குமார் சிங் அறிவித்திருப்பது, அரசியல் சட்டம் அளித்துள்ள சமூக நீதியை தட்டிப் பறிக்கும் செயல் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
அய்.ஏ.எஸ். மற்றும் அய்.பி.எஸ். உள்ளிட்ட அகில இந்திய பணிகளுக்கான சிவில் சர்வீஸஸ் தேர்வுகளில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின இளைஞர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்று நாட்டின் நிர்வாகத்தில் தங்களது பங்களிப்பை செலுத்தி வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத பா.ஜ.க. அரசும், பிரதமர் அலுவலகமும் இப்படியொரு அநீதியான பவுன்டேஷன் கோர்ஸ் தேர்வுமுறையை புகுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இரவுபகலாக படித்து, தேர்வு பெற்று, பல தடைகளை தாண்டி நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற்ற இளைஞர்களின் தலைவிதியை முசோரியில் உள்ள ஒரு டஜன் பேராசிரியர்களிடம் ஒப்படைத்து, சமூகநீதிக் கொள்கைகளுக்கு மன்னிக்க முடியாத அநீதியைச் செய்ய பா.ஜ.க. அரசும், பிரதமர் அலுவலகமும் துணிந்து விட்டது.
சமூக நீதியை சீர்குலைக்கும்….
நாங்கள் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காகவும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காகவும் பாடுபடுகிறோம், என்று போடப்பட்டு வந்த நான்காண்டு கால பகல் வேஷம் இதன்மூலம் கலைந்துள்ளது. பிரதமர் அலுவலகம் விரும்புகிறது என்றால், பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார் என்றே அர்த்தம். எப்படி ‘வளர்ச்சி’ என்று சொல்லி வாக்குகள் வாங்கி விட்டு, மதவாதத்தை திணித்து நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு குந்தகம் விளைவித்து வருகிறதோ, அதேபோல் இப்போது அய்.ஏ.எஸ். உள்ளிட்ட அகில இந்திய பணிகளுக்கான தேர்விலும் சிவில் சர்வீஸ் தேர்வு தவிர, ஒரு பவுன்டேஷன் கோர்ஸ் என்ற போர்வையில், ஒருவகையிலான “நீட் தேர்வை அறிமுகப்படுத்தி, இளைஞர்களின் எதிர்காலக் கனவுகளைச் சிதைக்க முயற்சிப்பதை, நாடு பொறுத்துக் கொள்ளாது என்பதை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும், பிரதமர் நரேந்திர மோடியும் புரிந்து கொள்ள வேண்டும்.
தவறினால் சமூகநீதிக் கொள்கையை சீர்குலைக்கும் மத்திய பா.ஜ.க. அரசை எதிர்த்து இளைஞர்களை பெருமளவில் திரட்டி மாபெரும் போராட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திடும் என்றும் எச்சரிக்க விரும்புகிறேன்” என அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
புதுவை முதல்வர் நாராயணசாமி எதிர்ப்பு
தற்போது உள்ள முறையில் எந்தக் குறையும் கிடையாது. திறமை வாய்ந்தவர்கள் தேர்தெடுக்கப்பட்ட பிறகு, பயிற்சிக் காலத்தில் அவர்களது திறமையைப் பார்க்க வேண்டியது தேவையில்லாதது. இதுகுறித்து பிரதமர், அய்.ஏ.ஸ், அய்.பி.எஸ் அதிகாரிகள் பணித்துறை அமைச்சர் ஜிதேந்தர் சிங் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளேன். அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ் தேர்வு பெற்றவர்களின் பயிற்சிக் கால மதிப்பீட்டை கணக்கிட்டு, அதை பணி ஒதுக்கீட்டுக்கு பயன்படுத்துவது ஏற்புடையதல்ல.
த.மா.க தலைவர் ஜி.கே வாசன் கண்டனம்
“மத்திய அரசு – அகில இந்திய அளவில் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., உட்பட பல்வேறு அரசுப் பணிகளுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ளதை தவிர்த்து புதிய விதிமுறைகளை திணிப்பதன் மூலம் பணக்காரர்களும், அரசியல் தலையீட்டின் மூலமும் அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ் தேர்வு நிர்ணயிக்கப்படும் என கண்டனம் தெரிவித்துள்ளார்.
தற்போது மத்திய பா.ஜ.க. அரசு அறிமுகப்படுத்த நினைக்கும் புதிய முயற்சியால் பல வகையில் முறைகேடுகள் நடைபெறுவதற்கு வாய்ப்புண்டு. அது மட்டுமல்ல பணக்காரர் களுக்கும், அரசியல் தலையீட்டுக்கும் வழி வகுக்கும். குறிப்பாக கல்வியாளர்களும், மாணவ, மாணவிகளும் இந்த புதிய விதிமுறையை ஏற்க மறுக்கிறார்கள். மேலும் இந்த புதிய விதிமுறையால் கிராமப்புறம், நகர்ப்புறம் என தமிழகம் முழுவதும் உள்ள ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.’’
பத்திரிகைகள் கண்டனம்
தலைவர்கள் மட்டுமல்ல, எல்லா பத்திரிகைகளும் இம்முடிவைக் கண்டித்துள்ளன. குறிப்பாக தமிழகத்தில் வெளிவரும் பத்திரிகைகள் பெரும்பாலும் இத்திட்டம் ஏழைஎளிய மக்களின் அய்.ஏ.எஸ். வாய்ப்பைத் தடுக்கும் சதிச்செயல் என்றே சாடியுள்ளன. இதை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன. உண்மை இப்படியிருக்க ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி ஆட்கள், “சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுபவர்கள் மனப்பாடம் செய்து, தேர்வுக்கான பயிற்சி பெற்று எதிர்கொண்டு வருகிறார்கள். இது களையப்பட வேண்டிய ஒன்று. ‘ஃபவுண்டேஷன் கோர்ஸ்’ மூலம் நேர்மையான, திறமையான, துடிப்பான, அறிவார்ந்த இளைஞர்களை இனம்கண்டு தேர்வு செய்ய முடியும். அதன்மூலம் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். ஆக வருபவர்கள் மேம்பட்ட நிர்வாகத் திறன் பெற்றவர்களாக இருப்பார்கள். இது நாட்டினுடைய சமூக வளர்ச்சிக்கும், சமூக வளர்ச்சிக்கம், சமூக நீதிக்கும் வழிவகுக்கும். இந்த மாற்றம் வருங்காலத்தில் தேர்வுபெறும் புதிய அதிகாரிகளுக்கு உத்வேகத்தை அளிக்கக்கூடியதாக இருக்கும்’’ என்ற கூறுவது பித்தலாட்டப் பிரச்சாரமாகும்.
ஏழ்மையில் பிறந்தாலும் வறுமையில் உழன்றாலும் மனம் தளராது, கல்வி என்ற கலங்கரை விளக்கத்தை துணை கொண்டு பிரகாசித்துவரும் இந்தத் தலைமுறை இளைஞர்களின் முதல் கனவு அய்.ஏ.எஸ். ஆவதே! பட்டப்படிப்பு முடித்தவுடன் குடிமைப் பணிகளுக்கான பயிற்சி மையங்களில் சேர்த்து பயிலும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே வருகிறது. அதற்கேற்ப ஏழை எளிய, நடுத்தரக் குடும்பத்து பிள்ளைகள் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். படிப்புகளில் தேர்ச்சிபெற்று வருவதும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இப்போதைய நடைமுறைப்படி, குடிமைப் பணிகளின்கீழ் வரும் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பணிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் ஆண்டுதோறும் தேர்வு நடத்துகிறது. முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக முதன்மைத் தேர்வு நடத்தப்படும். இதில் வெற்றி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும். பின்னர் இந்த இரு தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் கணக்கீடு செய்யப்பட்டு, அதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ். உள்ளிட்ட பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
இப்படியொரு பணி நியமன சூழலை நிலைகுலையச் செய்து மாணவர்களை பதற வைத்திருக்கிறது மத்திய அரசு கொண்டுவரவிருக்கிற புதிய மாற்றம்.
சமூகநீதிக்கு சமாதி கட்டும் முயற்சி இது. கிராமப்புற, ஏழை எளிய வர்க்கத்தைச் சேர்ந்த, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த அத்தனை மாணவமணிகளின் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்க.எஸ். போன்ற குடிமைப்பணி பதவிக் கனவுகளை குழிதோண்டிப் புதைக்கும் செயலாகும்.
இத்திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்; அதை அறிவிக்கவும் வேண்டும். இல்லையெனில் நாடு தழுவிய பெருங்கிளர்ச்சி வெடிக்கும்! அது சூட்சிக்காரர்களின் ஆட்சியை முடிக்கும்!