மாண்புமிகு கலைஞர் டாக்டர் கருணாநிதி அவர்களுக்கு 49-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நடப்பது குறித்து நான் மிகுதியும் மகிழ்ச்சியடைகிறேன். டாக்டர் அவர்களது வாழ்நாள் ஒவ்வொன்றும் மக்கள் நலம் பற்றி சிந்திப்பதிலும், தொண்டாற்றுவதிலுமே நடந்து கழிவதை நான் மனப்பூர்வமாக உணர்கிறேன். மனம் பூரித்து திருப்தி அடைந்து வருகிறேன். டாக்டர் செய்து வருகிற காரியங்கள் பெரிதும் மற்றவர் சிந்திக்கக்கூட பயப்படும்படியான காரியங்கள் என்பதோடு, அவைகளை வெகு எளிதிலே செய்து முடித்துவிடுகிறார்.
இதன் பயனாகவே அரசியல் உலகில் அவருக்கு எதிர்ப்பாளர்கள் அதிகமாகி வருகிறார்கள். காரணம், டாக்டர் அவர்களது ஆட்சி நீண்ட நாளைக்கு நிலைத்து விடுமோ என்கின்ற பொறாமையும் வேதனையும்தான் என்றாலும், டாக்டர் அவர்கள் யாருடைய எதிர்ப்புக்கும் பயப்படாமல் எப்படிப்பட்ட தொல்லைக்கும் சளைக்காமல் துணிந்து காரியமாற்றி வருகிறார். பொதுவாகவே சமுதாயத்துறையில் சீர்திருத்த தொண்டு ஆற்றினால் யாருக்கும் சுயநலக்காரருடையவும், பழைமை விரும்பிகளினுடையவும் எதிர்ப்பு ஏற்பட்டுத்தான் தீரும். கலைஞர் டாக்டர் அவர்களுடைய புரட்சிகரமான தொண்டுக்கு எதிர்ப்பும், தொல்லையும் ஏற்படுவது அதிசயமல்ல. அவற்றைப்பற்றி சிறிதும் இலட்சியம் செய்யாமல் துணிந்து தொண்டாற்றி வரும் டாக்டர் அவர்களை மனதாரப் பாராட்டி அவர் வாழ்வு எல்லையற்று நீண்டு மக்களுக்கு புதிய உலகம் ஏற்பட வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.
– ஈ.வெ.ராமசாமி, 3.6.1972