மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். ‘உண்மை’ மே (16-31) இதழ் மிகப் பொலிவோடு இருந்தது. “பகுத்தறிவு இயக்கம் ஏன்?’’ என்ற தந்தை பெரியாரின் கட்டுரை என்னுள் இருந்த பல அய்யங்களை தீர்த்தது. கணியூரில் மிகச் சிறப்பாய் நடந்து முடிந்த திராவிட மகளிர் எழுச்சி மாநாட்டிற்கு செல்லவில்லையே என்ற ஏக்கத்தை திரு.மஞ்சை வசந்தன் அவர்களின் மாநாடு குறித்த கட்டுரை தீர்த்தது. “மீண்டும் கணியூர் வருவேன்!’’ என்ற தலையங்கம் உணர்வு பூர்வமாக இருந்தது.
சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள் பகுதியில் “அழகப்பா என்னும் அழகிய மனம்’’ என்ற நூல் இடம் பெற்றிருந்தது மிகப் பொருத்தம். தென் மாவட்ட கல்விக்கு அழகப்பா செட்டியாரின் பங்களிப்பை முழுமையாக அறிந்துகொள்ள முடிந்தது. அவர் மீது பன்மடங்கு மரியாதை ஏற்படுத்தியது ‘உண்மை’ இதழ். சிறப்பான செய்திகளை சீரிய முறையில் வழங்கிக் கொண்டிருக்கும் ‘உண்மை’ இதழுக்கு வாழ்த்துகள்!
– எஸ்.யாழினி, திருநெல்வேலி
2018, மே (16-31) ‘உண்மை’ இதழ் மிகவும் அருமை. மனிதன் மதித்துப் போற்ற வேண்டியது குலமல்ல, குணம்தான் என்று அழகாய் எடுத்துரைத்த ஆறு.கலைச்செல்வன் அவர்களின் சிறுகதை நெத்தியடியாய் இருந்தது. ‘நீட்’ தேர்வை நிரந்தரமாய் நீக்குவதே தீர்வு! என்ற கட்டுரையில் நுண்ணோக்கி அவர்கள் ‘நீட்’ தேர்வால் ஏற்படும் பாதக விளைவுகளை படம்பிடித்துக் காட்டியிருந்தார்.
தந்தை பெரியார் திருக்குறளை பரப்ப எத்தனை பாடுபட்டார்? என்பதை நேயன் எழுதிய ‘எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை’ மூலம் தெரிந்து தெளிய முடிந்தது. இந்து மத புராண புளுகுகளையெல்லாம் அம்பலப்படுத்தும் விதமாக ‘அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா?’ என்ற தொடர் மிக சிறப்பாக உள்ளது. ஆக்கப்பூர்வமான கருத்துகளை அள்ளித்தரும் ‘உண்மை’ இதழுக்கும் ஆசிரியர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!
– ஆர்.பாலகிருஷ்ணன், கோவை
‘உண்மை’ ஆசிரியர் மானமிகு தமிழர் தலைவர் அவர்களுக்கு வணக்கம்! ஆன்மிகம், ஜோதிடம் என்று மக்கள் மத்தியில் மூடப்பழக்கங்களை விதைத்துக் கொண்டிருக்கும் பார்ப்பன இதழ்களுக்கு மத்தியில் கடந்த 49 ஆண்டுகளாக பகுத்தறிவு, சுயமரியாதை மற்றும் அறிவியல் செய்திகளை மக்களுக்கு தந்து தன்மான உணர்வை ஊட்டிக் கொண்டிருக்கும் ‘உண்மை’ இதழுக்கும் உங்களுக்கும் முதலில் வாழ்த்துகள்.
அடுத்த ஆண்டு ‘உண்மை’ இதழ் பொன்விழா கொண்டாட இருக்கின்ற நிலையில், அந்நிகழ்வினை மிகச் சிறப்பான முறையில் தமிழகமெங்கும் ஊர்ஊராய் நடத்திட வேண்டும் என்று விழைகிறேன்.
மேலும், ஒவ்வொரு மாதமும் குறித்த நேரத்தில் ‘உண்மை’ இதழ் எங்களின் கைகளில் வந்தடைவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. இதற்காக கடுமையாய் உழைத்துக் கொண்டிருக்கும் ஆசிரியர் குழுவுக்கும், பணியாளர் நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்! ‘உண்மை’ இதழில் இன்னும் எத்தனை எத்தனை புதுமைகள் செய்ய முடியுமோ அத்தனையும் செய்து தந்தை பெரியாரின் புரட்சிகரமான கருத்துகளை தரணியெல்லாம் விதைத்திட வேண்டுகிறேன். வாழ்த்துகளுடன்.
– கு.ரத்தினக்குமார், நாகப்பட்டினம்