(இயக்க வரலாறான தன்வரலாறு – 203)

ஜூன் 01-15

 “பெரியார் நிறுவனங்களின் பெருமையை செல்லுமிடமெல்லாம் சொல்லுவேன்’’ துக்ளக் ‘சோ’

கி.வீரமணி

 
ராமேஸ்வரத்தில் தமிழர் தலைவரின் எடைக்கு எடை நாணயம் வழங்கும் விழா; படத்தில் கே.எம்.சிகாமணி, ச.இன்பலாதன், அகமதுதம்பி. (15-3-83)

ராமேஸ்வரத்தில் 15.3.1983 அன்று நடைபெற்ற விழாவில் எனக்கு எடைக்கு எடை நாணயம் வழங்கினார்கள்.

விழாவில் நான் உரையாற்றும்போது, “இன்றைய தினம் நான் உணர்ச்சிவயப்படக்கூடிய அளவுக்கு எடைக்கு எடை நாணயத்தை அளித்து தங்களது மகிழ்ச்சியைக் காட்டினார்கள். என்னுடைய எடைக்கு எடை நாணயம் 6508 ரூபாயை அளித்தார்கள்.

அய்யா அவர்களால்தான் ஆச்சாரியார் மந்திரிசபை பதவி விலகியது. பிறகு கல்வி வள்ளல் காமராஜர் ஆளவந்தார்.

நான் உரையாற்றுகையில் பல வரலாற்று சம்பவங்களை எடுத்துக் கூறினேன். மதுரை மாநகர மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் பே.தேவசகாயம் தலைமை வகித்தார். ச.இன்பலாதன் (கிழக்கு முகவை மாவட்ட தி.க. தலைவர்), இரா.சண்முகநாதன், சாமி.திராவிடமணி உள்ளிட்ட ஏராளமான கழக முன்னணி தோழர்கள், தோழியர்கள் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பு செய்தனர்.

மதுரையில் 16.03.1983 அன்று நடைபெற்ற அன்னை மணியம்மையார் நினைவு நாளையொட்டி நடந்த மகத்தான பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன். அப்பொழுது ‘அம்மா’ அவர்களைப் பற்றி இங்கே சொல்லும்போது, தந்தை பெரியார் அவர்களை ஒரு செவிலித்தாயைவிட அன்பாக கவனித்து அவர்களிடத்திலே பணியாற்றி பெருமை பெற்றவர்கள்.

தந்தை பெரியார் அவர்களுக்காக எந்த அளவுக்கு இழிவான வசைமொழிகளை தாங்கிக் கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு உலக வரலாற்றில் இல்லாத அளவுக்கு இழிவான வசைமொழிகளையெல்லாம் ஏற்றுக் கொண்டார்கள்’’ என்று அம்மா அவர்களின் தியாகங்களை எடுத்துக் கூறினேன்.

1974ஆம் ஆண்டு அம்மா அவர்கள் இருந்த போது சென்னை பெரியார் திடலில் டிசம்பர் 25ஆம் தேதி ‘இராவண லீலா’ என்ற வரலாற்றுக்குரிய நிகழ்ச்சியை நடத்தினோம்.

தாம்பரத்திற்கு அருகிலுள்ள கவுரிவாக்கத்தில் அமைந்துள்ள எஸ்.அய்.வி.இ.டி. கல்லூரியில் 18.03.1983 அன்று பிற்பகல் 3 மணிக்கு தமிழ் மன்றத்தின் சார்பாக முத்தமிழ் விழா சிறப்பாக நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் பத்மநாபன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். தமிழ்மன்றத்தினுடைய துணைத் தலைவர் சிவ.ராமலிங்கம் வரவேற்புரையாற்றினார்.

இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி முன்னணி தலைவர்களில் ஒருவரும் ‘ஜனசக்தி’ ஏட்டின் ஆசிரியருமான தோழர் தா.பாண்டியன் அவர்களும் என்னுடன் கல்லூரியின் விழாவில் கலந்துகொண்டார்கள். விழாவில், எனக்கு திரு.வி.க. நூற்றாண்டு சுழற்கேடயத்தை அவர்கள் விருப்பப்படி மாணவர்களின் பலத்த கரவொலிக்கிடையே கல்லூரி முதல்வர் தி.பத்மநாபன் அவர்கள் வழங்கினார்கள்.

விழாவில், “செய்க! எதையும் துணிந்து செய்க! சிந்தியுங்கள்! எதையும் ஆழமாகச் சிந்தியுங்கள்! வளர்கின்ற சிந்தனையிலே புதிய நோக்கத்தோடு உலகத்தைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிந்திக்க வேண்டும்.

இதுபோன்ற தமிழ் மன்றத்தின் சார்பாக இதுபோன்ற சிந்தனைகள்தான் வரவேண்டும். வளர வேண்டும்’’ என்று பல்வேறு அறிவுரைகளை வழங்கி சிறப்பானதொரு உரையாற்றினேன். விழாவில் மாணவ, மாணவிகள், ஆசிரியர் பெருமக்கள் பலரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டார்கள்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதிக்கு அருகில் உள்ள கண்ணத்தங்குடி மேலையூர்(கண்ணை மேற்கு) பகுதியில் 20.03.1983 அன்று காலை 9.30 மணிக்கு என்னுடைய தலைமையில் திராவிடமணி _ அமுதாராணி ஆகியோருக்கும் ராமலிங்கம்_ மலர்க்கொடி ஆகியோருக்கும் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா சிறப்புடன் நடைபெற்றது. கழகப் பொருளாளர் தஞ்சை கா.மா.குப்புசாமி அவர்கள் என்னுடன் வந்திருந்தார். நான் வாழ்க்கை துணை நல ஒப்பந்த விழா நடத்திவைத்து வாழ்த்தினேன். தஞ்சை ராஜகோபால் உள்ளிட்டோர் மணமக்களைப் பாராட்டிப் பேசினார்.

20.03.1983 அன்று திருவையாறு மேல வட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டேன். திருவையாறு போகின்ற வழியில் அம்மன்னபேட்டையை அடைந்தேன். இரவு 7 மணிக்கு கண்டியூரில் அமைக்கப் பட்டிருந்த கொடிக் கம்பத்தில் தோழர்களின் எழுச்சி ஒலி முழக்கங்களுக்கிடையே கழகக் கொடியை ஏற்றினேன்.

y2.jpg - 1.08 MB

திருவையாறில் எழுச்சிமிக்க ஊர்வலம்; அலங்கார ஊர்தியில் தமிழர் தலைவர் (20-3-83)

அதனை தொடர்ந்து நடுக்கடை என்ற பகுதியில் ஏராளமான முஸ்லீம் இளைஞர்கள் என்னை வரவேற்று, இஸ்லாமிய நற்பணி மன்றத்தின் சார்பில் மலர்மாலை அணிவித்ததை தொடர்ந்து உரையாற்றினேன். இரவு 9 மணிக்கு திருவையாறு பொதுக்கூட்டத்திற்கு என்னை மலர் மாலைகளை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். ஊர்வலம் கழகப் பொருளாளர் தஞ்சை கா.மா.குப்புசாமி, ஆர்.பி.சாரங்கன் ஆகியோரது மேற்பார்வையில் தெற்கு பார்ப்பனத் தெரு, முக்கிய வீதி வழியாக  நடைபெற்றது.

பொதுக்கூட்டத்திற்கு என்.கோதண்டபாணி (ஒன்றிய தி.க.தலைவர்) தலைமை வகித்தார். நான் சிறப்புரை வழங்கினேன்.

21.03.1983 அன்று மயிலாடுதுறையில் ஒன்றிய திராவிடர் கழக கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை நகரச் செயலாளர் வடிவேலு அவர்கள் கூட்டத்திற்கு என்னை தலைமை தாங்குமாறு கேட்டுக் கொண்டார். கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பேசியபோது, அப்போது கிராமப் பகுதிகளில் கழகப் பணிகள் நடைபெற வேண்டும் என்பது பற்றி எடுத்துக் கூறினேன்.

மாலையில், குத்தாலம் ஒன்றியத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கடவுள் மறுப்பு கல்வெட்டினை கோமல் என்ற பகுதியில் நான் திறந்துவைத்தேன். கல்வெட்டு அருகாமையில் அமைத்துள்ள திராவிடர் கழக கொடியை ஏற்றினேன்.

அப்போது, “இன்று பல பிரிவுகளாக ஜாதிகளின் பெயரால் நாம் பிரிக்கப் பட்டிருக்கிறோம். உழைக்கின்ற மக்கள் வறுமையில் உழன்று கொண்டிருக்கிறார்கள். உண்டு கொழுத்துக் கொண்டு ஒரு கூட்டம் நம்மை அடிமையாக்கி வைத்துக் கொண்டிருக்கிறது.

ஏழை, விவசாய மக்களும், தொழிலாளி மக்களும் பிறப்பு, உத்தியோகம் இல்லாமல் வீதியிலே நின்று கொண்டுள்ள நிலையில் நாம் இருக்கின்றோம்.

நீங்கள் அரசியலில் வேண்டுமானால் எந்தக் கொள்கையோ, எந்தக் கொடியோ ஏற்றுக் கொள்ளுங்கள். ஆனால், சமுதாய உணர்வு என்று வரும்போது நாமெல்லாம் ஒன்று என்ற நிலையைக் காட்ட வேண்டும். தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாகக் இருக்க வேண்டும்.

தந்தை பெரியார் அவர்கள் 95 வயது வரை வாழ்ந்து மக்களுக்காகவே சமுதாய தொண்டை ஆற்றினார். அதே பணியை தொடர்ந்து நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம்’’ என்று உரையாற்றினேன்.

  y5.jpg - 680.88 KB

22.03.1983 அன்று நடைபெற்ற பெரியார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக் விடுதி விழாவில் ‘துக்ளக்’ ஆசிரியர் ‘சோ’ என்ற சோ.இராமசாமி அவர்கள் கலந்துக் கொண்டார்கள். முன்னதாகவே திருச்சி பெரியார் கல்வி வளாகத்திற்கு வருகை தந்த அவரை அங்கு பெரியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை, பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் ஆகியோர் வரவேற்றனர்.

நான் அவர்களுக்கு கல்வி வளாகத்தினுள்ள அய்யா, அம்மா காப்பகத்திலுள்ள குழந்தைகள் முதற்கொண்டு ‘சோ’ அவர்களுக்கு காண்பித்தேன்.

‘சோ’ அவர்கள் மிகுந்த வியப்போடும் மகிழ்ச்சியோடும் கடும் வெய்யில் என்றும் பாராமல் 50 நிமிடங்கள் சுற்றிப் பார்த்தார்கள்.

மதிய உணவு கல்வி வளாகத்திலுள்ள பொறுப்பாளர்கள் அனைவருக்கும் ஏற்பாடு செய்திருந்தனர்.

பின்பு 3:30 மணி அளவில் ‘சோ’அவர்களை  தஞ்சை வல்லம் பகுதியில் அமைந்துள்ள பெரியார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக் வளாகத்திற்கு அழைத்து வந்தோம். அங்கு கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி, பாலிடெக்னிக் முதல்வர் சுந்தரி வெள்ளையன் அம்மையார் அவர்களும் ‘சோ’ அவர்களை வரவேற்றார்கள்.

பின்பு, ‘துக்ளக்’ சோ அவர்களுக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தினர். ‘சோ’ அவர்கள் தனக்கு அணிவித்த பொன்னாடையை  பலத்த கரவொலிக்கிடையே ‘துக்ளக்’ பத்திரிக்கை சார்பாக இந்த ஆடையை அணிவிக்கிறேன் என்று எனக்கு அணிவித்தார்கள்.

‘சோ’ அவர்கள் உடனே, இது ‘துக்ளக்’ சார்பாக என்று சொன்னால் விலைமதிக்க முடியாதது என்று சொன்னதும் மிகுந்த சிரிப்பொலி எழும்பியது. சோ அவர்கள் மிகச் சிறப்பான அளவுக்கு சிந்திக்கத்தக்க அளவுக்கு உண்மைக் கருத்துகளை, ஒளிவு மறைவின்றி தனக்கே உரிய நகைச்சுவை கருத்துகளை துணிச்சலோடு உரையாற்றினார். அடுத்து, சோ அவர்களை மரம் நடும் விழாவிற்கு அழைத்தார்கள். அப்பொழுது சோ அவர்கள் கூறினார்கள்.

“எனக்கு இங்கே குழி தோண்டப்பட்டதாகப் சொன்னார்கள். நான் பயந்து போய்விட்டேன். பிறகு பார்த்தால்தான் தெரிகிறது செடி வைப்பதற்கு குழி தோண்டினார்கள்’’ என்று சோ அவர்கள் சொன்னவுடன் வெடிச்சிரிப்பு கிளம்பியது. இந்தக் கல்வி நிறுவனங்களின் சிறப்பைப் பாராட்டுகிறேன். செல்லுமிட மெல்லாம் சிறப்புகளை கூறுவேன் என்று மனந்திறந்து பாராட்டி உரை நிகழ்த்தினார்

y8.jpg - 659.18 KBதஞ்சையில் பெரியார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக் விடுதி விழாவில் “துக்ளக்” ஆசிரியர் சோ பங்கேற்று பேசினார். கழகப் பொதுச்செயலாளர் ஆடை போர்த்தி வரவேற்றார். (22-3-83).

 

 

‘சோ’ அவர்கள் முதல் செடியை நட்டார்கள். கபிலன் ஜெகநாதன் அவர்களும் (உடுமலைப்பேட்டை), மதுரை செல்வி இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் திரு.சவுந்திரபாண்டியன் அவர்களும் இரண்டு செடிகளை அங்கேயே நட்டார்கள்.

விழாவில் ஏராளமான மாணவ, மாணவிகள், ஆசிரியர் பெருமக்கள் அனைவரும் கலந்துகொண்டார்கள்.

விழாவில் நான் உரையாற்றும் போது, குறிப்பிடத்தகுந்த வரலாற்று நிகழ்ச்சியை குறிப்பிட்டு பேசினேன். தஞ்சையில் மேல வீதியில் ஒரு வாடகைக் கட்டிடத்திலே_ பழைய கட்டிடத்திலேதான் இந்தப் பாலிடெக்னிக் தொடங்கப்பட்டது. இன்றைக்கு தலைமை விருந்தினராக நண்பர் ‘சோ’ அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு  வந்திருக்கிறார்கள்.

நம்முடைய இல்லத்திற்கு யார் மனமார உதவினாலும் நாங்கள் அதை இரு கை ஏந்தி வரவேற்க வேண்டியவர்களே தவிர, அதிலே மாறுபட்ட கருத்துடையவர்கள் கிடையாது.

ஆனால், எனக்கு ஒரேயொரு சின்ன சங்கடம் என்னவென்றால், ‘சோ’ அவர்களுக்குத் தெளிவாகத் தெரியும். சில நேரங்களில் இதை கேட்பதற்காகவே சிலபேரை விருந்தினராக அழைப்பது உண்டு. அதற்கு நீங்கள் அழைக்கப்படவில்லை என்பதை நான் மிகத் தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கே உங்களைப் போன்றவர்கள் வரவேண்டும். நான் என்னுடைய கொள்கையிலே எவ்வளவு உறுதியாக இருக்கிறேனோ அதுபோல அவருடைய கொள்கையில் அவர் உறுதியாக இருக்கக் கூடியவர். நாங்கள் இருவரும் உருவத்தில் எப்படி மாறுபட்டிருக்கிறோமோ அதுபோல கொள்கையிலேகூட மாறுபட்டிருப்பவர்கள்.

ஆனால், அதே நேரத்திலே ஒன்று மிக முக்கியமானது. அவரிடம் என்னைக் கவர்ந்த ஒன்று. நமக்கெல்லாம் பிடித்த ஒன்று என்ன என்று சொன்னால், துணிச்சலாக எதையும் சொல்ல வேண்டும் என்பது. தந்தை பெரியாருடைய கருத்து. பயப்படக் கூடாது; அஞ்சக் கூடாது; துணிந்து சொல்ல வேண்டும்; மனதில் நினைப்பதை. இது அய்யா அவர்களுடைய கருத்து. ஆனால், இந்த நிறுவனத்திற்கு தலைமை விருந்தினராக நாம் அழைத்திருக்கிறோம். என்றால், ‘சோ’ அவர்கள் துணிச்சலாகக் சொல்லக் கூடியவர்.

அது மாத்திரமல்ல, இந்த தமிழ்நாட்டிலேயே சினிமாவைப் பற்றி போடாமல், சோதிடம் மற்ற காரியங்களைப் பற்றியெல்லாம் போட்டுக் கொண்டிருக்காமல் முழுக்க முழுக்க ஒரு சமுதாய அரசியல் கருத்து என்று சொல்லி அரசியல் ஏட்டை நடத்தக்கூடிய ஆற்றல் படைத்தவராக நண்பர் சோ அவர்கள்தான் இன்றைக்கு தென்படக்கூடிய ஒரு நிலையிலே இருக்கிறார் என்று பல்வேறு தகவல்களை எடுத்துக் கூறினேன்.

இவ்விழாவில் தந்தை பெரியாரின் பேரன்பிற்குப் பாத்திரமான டக்டர் எச்.எஸ்.பட், திருமதி பிரேமாபட் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

22.03.1983 அன்று ‘துடிப்பு’ இதழின் சார்பாக திரு.காசிராமன் என்பவர் என்னை பேட்டி எடுத்திருந்தார். அவர் கேட்ட கேள்விகளும் நான் அளித்த பதில்களும் ‘விடுதலை’யில் வெளியிட்டிருந்தோம். அதிலிருந்து சில பகுதிகளை இங்கே தருகின்றேன்.

கேள்வி: மாணவர்களிடையே திராவிடர் கழகம் செல்வாக்கு பெற்று இருப்பதற்குக் காரணம் என்ன?

பதில்: மாணவர்களுக்கு இயற்கையாகவே புதுமையில் நாட்டம் காணப்படுகிறது. மாணவர்களின் எதிர்காலத்திற்கு, பகுத்தறிவு, புதிய சிந்தனை, விஞ்ஞானம், சமூக மனப்பான்மை இவற்றை அறிவின் அடிப்படையில் தருவது திராவிடர் கழகம் என நினைக்கிறார்கள். மேலும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் புதிய வாழ்க்கையில் ஈடுபடுகிறார்கள். இது சம்பந்தமாக அவர்களுடன் கலந்து நெருக்கமாக இருந்து அவர்கள் பிரச்சினைகளை சிந்திக்கும் இயக்கமாக இருக்கிறது. எல்லாவற்றையும்விட மாணவர்களுக்கு அரசியலில் சலிப்பு ஏற்பட்டுள்ளது. சமுதாயப் பிரச்சனைகளை தெளிவுபடுத்தும் இயக்கமாக இது இருப்பதால் மாணவர்கள் அதிகம் விரும்புகிறார்கள்.

கேள்வி: உங்கள் பத்திரிகையில் ஏன் தனித்தமிழை பயன்படுத்துவது இல்லை?

y6.jpg - 1.03 MB

பாவணார் நூலகக் கட்டிகத்தில் சங்கரச்சாரி – யார் என்ற தலைப்பில் கழகப் பொதுச் செயலாளர்

 ஆற்றிய உரையைக் கேட்க திரண்டிருந்த கூட்டத்தில் ஒரு பகுதி (6-4-83).

 

பதில்: எங்கள் பத்திரிகையில் பல தரப்பட்டவர்கள் எழுத்தறிவே இல்லாமல் சிறிது எழுத்துக் கூட்டி படிப்பவர்கள். திராவிடர் கழகத்தில் படித்தவர்களைவிட படிக்காத பாமர மக்கள் மிகுதியாக உள்ளனர். அவர்களுக்கு மொழியுணர்வை அடிப்படையாக வைக்காமல் கருத்தினை முன்னால் வைத்து நடத்த வேண்டும் என்பது அய்யாவின் குறிக்கோள். அவர் இதுபோல் நடத்தியதால் எங்களால் மாற முடியவில்லை.

கேள்வி: கடவுள் மறுப்புக் கொள்கை என்பது கம்யூனிசத்தின் அடிப்படையில் இருந்தாலும் பொதுவுடைமைக் கொள்கையை எந்த அளவில் ஆதரிக்கிறீர்கள்?

பதில்: கடவுள் மறுப்பு கொள்கை கம்யூனிசத்தின் அடிப்படை என்று இல்லை. கம்யூனிஸ்டாக இல்லாதவர்களும் கடவுள் மறுப்பு கொள்கையை ஆதரிக்கலாம். ஆனால் ஒரு கம்யூனிஸ்ட் _ கடவுள் மறுப்பாளனாக இருந்தாக வேண்டும். அமெரிக்காவில் ஒரு நாத்திக இயக்கம் இருக்கிறது என்றால் ஏன் இருக்கிறது என்பது அவசியம் இல்லை. நடைமுறையில் நமது நாட்டில் கம்யூனிஸ்ட்டுகள் எல்லாம் அவ்வாறு இருக்கிறார்களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த நாட்டில் பொதுவுடமைத் தத்துவத்தை, மற்றவர்கள் அறியாத காலத்தில் முன்பு, அதாவது சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் மத்தியில் பரப்பிய பெருமை பெரியார் அவர்களை சாரும். பொதுவுடமை சமுதாயம்தான் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.

பொதுவுடமை தத்துவத்தை வளர்க்கக்கூடிய அளவில் பொதுவுடமை இயக்கங்களின் செயல்பாடுகள் இல்லையே என்ற வருத்தத்தோடு நாங்களும் அடிப்படையான பணியை செய்துகொண்டுதான் இருக்கிறோம். வேலை இல்லாத் திண்டாட்டத்தால் வறுமையில் வாடும் நமது நாட்டில்தான் முதன்முதலில் புரட்சி வெடித்திருக்க வேண்டும். எவ்வளவு சிக்கல் வந்தாலும் நமது நாட்டு மக்கள் போராடத் தயாராக இல்லை. எதை எடுத்தாலும் ‘கடவுள் துணை’ என்பதால் திருத்த முடியவில்லை. இதுபோன்ற பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தேன் என்பது குறிப்பிடத்தக்கது.

06.04.1983 அன்று “சங்கராச்சாரி _ யார்?’’ என்ற தலைப்பில் சென்னை தேவநேயப்பாவணார் நூலகக் கட்டிடத்தில் பகுத்தறிவாளர்கள் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கூட்டம் _ எழுச்சி உணர்ச்சியுடன் அமைந்திருந்தது. கூட்டத்தில் நான் இரண்டு மணி நேரம் சங்கராச்சாரியின் முகமூடிகளை தோலுரித்துக்

காட்டினேன். கூட்டம் அரங்கு நிரம்பி வழிந்தது.

எனது உரையில், காஞ்சிபுரத்தில் இருக்கும் சங்கராச்சாரிமடமே _ மோசடியான மடம்; அங்கீகரிக்கப்பட்ட மடம் அல்ல என்பதை ஆதாரத்தோடு எடுத்துச் சொல்லி அடிப்படையையே ஆட்டம் காண வைக்கும் பிரச்சினையிலிருந்து பல்வேறு பிரச்சனைகளை, மோசடிகளை எடுத்துரைத்தேன்.

07.04.1983 அன்று மயிலாடுதுறை வட்டம் குற்றாலத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன். அப்போது, சங்கராச்சாரி விழாவில் கலந்துகொண்ட தாழ்த்தப்பட்ட தோழர்களின் செயலைக் கண்டு வேதனைப் பட்டு, அவர்களுக்கு அறிவுரைகளை எடுத்துக் கூறினேன்.

35 ஆண்டு சுதந்திர இந்தியாவில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரே ஒரு தாழ்த்தப்பட்ட நீதிபதிதான். இதற்காகப் போராடாமல் தாழ்த்தப்பட்டவன் தாழ்த்தப்பட்டவனாகவே இருக்க வேண்டும் என்று கருதுகிற சங்கராச்சாரியார் கூட்டும் மதவிழாவிலேயே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிலர் கலந்துகொள்கிறார்களே என்று நான் வேதனையுடன் குறிப்பிட்டேன்.

சென்னை உயர்நீதிமன்றம் தோன்றி நூறு ஆண்டுகள் கடந்தும் ஒரு தாழ்த்தப்பட்டவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக இல்லையே ஏன்? என்ற உரிமைக்குரலை தந்தை பெரியார் எழுப்பினார்.

அதனைத் தொடர்ந்து கலைஞர் அவர்கள் ஜஸ்டிஸ் வரதராசன் அவர்களை சென்னை உயர்நீதிமன்றத்திற்குள் நுழைய வைத்தார். அப்பொழுது மாவட்ட நீதிபதியாக இருந்தவர் ஜஸ்டிஸ் வரதராசன். மாவட்ட நீதிபதிகளின் மூப்புக் கணக்கில் அவர் பின்னடைந்துகூட இருக்கலாம். மற்றவர்களையெல்லாம் அழைத்து கலந்துபேசி அப்பொழுது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஜஸ்டிஸ் வீராசாமி அவர்கள் ஒத்துழைப்போடு ஜஸ்டிஸ் வரதராசன் அவர்களை சென்னை உயர்நீதி மன்றத்திலே இடம்பெறச் செய்தார்கள்.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மட்டுமல்ல. இந்தியாவின் சுப்ரீம் கோர்ட்டுக்குக்கூட முதன்முதலில் நுழைந்த முதல் தாழ்த்தப்பட்ட பெருமகன் _ தகுதியும் திறமையும் உண்மையும் வாய்ந்த ஜஸ்டிஸ் வரதராசன் ஆவார்கள்.

ஒரு குறிப்பிட்ட சமூகத்திலிருந்து நீதிபதிகள் நியமிக்கச் சொல்லி அரசாங்கத்திற்கு கட்டளையிட (ஞிவீக்ஷீமீநீtவீஷீஸீ) சுப்ரீம் கோர்ட்டிற்கு அதிகாரம் கிடையாது என்று சுப்ரீம் கோர்ட்டிற்கு சொல்லி வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது என்று வரலாற்று நடந்த செய்திகளை எடுத்துக் கூறினேன். கூட்டத்தில் கழகத் தோழர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

இந்து மதத்தில் இருக்கும் வரை தாழ்த்தப்பட்ட குடிமகனின் சுயமரியாதைக்கு விடுதலை இல்லை என்று முழக்கமிட்டு இந்து மதத்தைத் துறந்தவர் டாக்டர் அம்பேத்கர். அத்தகைய தலைவரின் பெயரைக் கூறிக்கொண்டே சங்கராச்சாரியார் கூட்டும் இந்து மத கலை விழாவிலே தாழ்த்தப்பட்ட சமுகத்தினர், தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கலந்துகொண்டு ஒத்துழைப்புக் கொடுப்பது, பொன்னாடை பெற்றுக் கொள்கிறார்கள் என்றால் ஒடுக்கப்பட்ட மக்கள் இத்தகையவர்களை அடையாளங் காண வேண்டும் என்றும் மேலும் குறிப்பிட்டு என்னுரையை வேதனையுடன் நிறைவு செய்தேன்.

(நினைவுகள் நீளும்…)

 

 

 

 

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் (பழைய தோற்றம்)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *