பண்பாளன்
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மிகவும் பின்தங்கிய கிராமச் சூழலில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் பிரேமா. தொடக்கப் பள்ளி படிப்பைக்கூடத் தாண்டாதவர். இவருக்கு உடன்பிறந்த நான்கு சகோதரிகளும் இரண்டு சகோதரர்களும் உண்டு. குடும்ப வறுமை காரணமாக படிப்பை நிறுத்திவிட்டு தீப்பெட்டி தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்றிருக்கிறார். இந்நிலையில் 19ஆம் வயதில் தென்காசியினைச் சார்ந்த விக்னேஷ் என்பவருடன் திருமணம் நடந்திருக்கிறது. இவருக்கு பாபநாசத்தில் ‘அம்மா ஸ்டுடியோ’ என்ற பெயரில் ஒரு போட்டோ ஸ்டுடியோ. இதன் மூலமாகவே இவர்களின் வாழ்க்கை ஓடியிருக்கிறது.
இரண்டு பிள்ளைகளென 4 ஆண்டுகள் கடந்த நிலையில், பிரேமாவின் கணவர் விக்னேஷ்க்கு கண்பார்வை பாதிப் படைந்துள்ளது. பல்வேறு மருத்துவ சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் அவரின் பார்வை முற்றிலும் பறிபோனது. இதனால் விக்னேஷின் வருமானம் நின்று போனது.
கண்பார்வை கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கும்போதே தன் நெருங்கிய நண்பர் ஒருவருக்கு புகைப்படத் துறையின் அத்தனை நுணுக்கங்களையும் கற்றுக்கொடுத்து, தனக்கு வரும் ஆர்டர்கள், தனது வாடிக்கையாளர்கள், தனது தொழில் சார்ந்த இணைய வழித் தொடர்புகள், அதற்கான கடவுச் சொற்கள் என அனைத்தையும் நண்பருக்கு கற்றுக் கொடுத்து தன் ‘அம்மா ஸ்டுடியோவை பார்த்துக்கொள்ள உதவிக்காக அவரை தயார்படுத்தி இருக்கிறார். தொழில் ரகசியங்களைக் கற்றுக்கொண்ட நண்பன், விக்னேஷின் பார்வை முற்றிலும் பறிபோனதும் அவரை ஏமாற்றி, மிகப் பெரிய நம்பிக்கைத் துரோகத்தை அவருக்கு செய்துவிட்டு, விக்னேஷின் ஸ்டுடியோவுக்கு பக்கத்திலேயே புதிய ஸ்டுடியோ ஒன்றைத் தொடங்கி வாடிக்கையாளர்களையும் வருமானத்தையும் தன்வசப் படுத்தியிருக்கிறார்.
குடும்ப வறுமையின் காரணமாக தங்களை ஏமாற்றிய கணவரின் நண்பரிடம் சென்று போட்டோ எடுக்கும் நுணுக்கங்களையும், தொழில் நுட்பங்களையும் தனக்கு கற்றுக் கொடுக்கும்படி பிரேமா கேட்டிருக்கிறார். “நீ ஒரு படிக்காத முட்டாள்! உனக்கு சொல்லித்தர முடியாது’’ என மறுத்திருக்கிறார். பிறகு மனதில் வைராக்கியத்தைக் கொண்டு தன் கணவரிடமே ஒவ்வொன்றாக கேட்டுக் கற்றுக்கொள்ளத் துவங்கியிருக்கிறார். தன்னம்பிக்கையாலும், விடாமுயற்சியாலும் ஒரே வாரத்தில் ‘போட்டோ ஷாப்’ நுட்பத்தையும், புகைப்படம் எடுக்கும் கலையையும் கற்றுத் தேர்ந்திருக்கிறார்.
தொழிலின் எல்லா விஷயங்களையும் விக்னேஷ் சொல்லிக் கொடுக்க எல்லாவற்றையும் கவனமாகக் கற்றுத் தேர்ந்திருக்கிறார் பிரேமா.
பிரேமாவின் வேகமும் ஆர்வமும் அவருக்கு நிறைய வாய்ப்புகளை வழங்கியதால் கடினமாக உழைத்து வெற்றி பெற்றிருக்கிறார். அவரது வேலைகள் வாடிக்கையாளர்களுக்குப் பிடித்துப் போக நிறைய ஆர்டர்கள் குவியத் தொடங்கியிருக்கின்றன.
பார்வையிழந்த கணவர், இரண்டு குழந்தைகள் என வீட்டையும் கவனித்துக்கொண்டு, யார் உதவியும் இன்றி தானாகவே முயன்று இரு சக்கர வாகனத்தை ஓட்டக் கற்றுக் கொண்டு, புகைப்படம் எடுக்கும் வேலைக்கு இடைவிடாது பறந்து கொண்டிருக்கிறார்.
நண்பரின் துரோகத்தைக் கண்டு துவளாமல் துடிப்புடன் செயல்பட்டு உன்னத இடத்தை அடைந்திருக்கிறார். பாபநாசம் பகுதியில் சாதனைப் பெண்மணி விருதும் இவருக்குக் கிடைத்திருக்கிறது.
முயற்சியை மட்டும் மூலதனமாய்க் கொண்டு முன்னேறிய சாதனைப் பெண்ணான பிரேமாவை வாழ்த்துவோம்! மேலும் மேலும் அவர் வளரட்டும்!!