போராட்டம் நடத்தினால் துப்பாக்கிச் சூடுதான் என்று அச்சுறுத்தத்தான் அரசின் இந்த அராஜகம்!

ஜூன் 01-15
 
 ஒரு லட்சம் மக்கள் திரளுகிறார்கள் என்றால், காவல்துறை அதைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டாமா?

நடந்துள்ளவற்றைப் பார்த்தால், திட்டமிட்ட வகையில் துப்பாக்கிப் பிரயோகம் நடந்திருக்கிறது என்றே கருத வேண்டியுள்ளது.

பேரணி தொடங்குவதற்குமுன் நுண்ணறிவு காவல்துறை என்னானது?

பேரணி தொடங்கும் இடத்திலேயே தடுத்திருக்க வேண்டாமா? மக்களை உள்ளே செல்ல அனுமதித்துவிட்டு, காக்கைக் குருவிகளைச் சுடுவதுபோல் அல்லவா வேட்டையாடியுள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகத்துக்குமுன் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளைப் பின்பற்றாதது ஏன்?

துப்பாக்கிப் பிரயோகம் நடத்த வேண்டுமானால், அதற்கென்று வழிமுறைகளும், நடைமுறைகளும் இருக்கின்றனவே. எச்சரிக்கை செய்ய வேண்டும்; வானத்தை நோக்கிச் சுடவேண்டும்; சுடுவதற்குமுன் அதற்குரிய அதிகாரியின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். இவற்றிற்குப் பிறகும், சுடவேண்டிய அவசியம் ஏற்பட்டால், முழங்காலுக்குக் கீழே சுடவேண்டும் – இவற்றில் எந்த நியதிகளையும் பின்பற்றாது காவல்துறை நடந்திருப்பதைப் பார்க்கும்பொழுது, நாம் ஒரு ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என்று உடலைக் கிள்ளிப் பார்க்கவேண்டியுள்ளது.

குறி வைத்து சுட்ட கொடுமை!

வாகனத்தின்மேல் ஏறிக்கொண்டு (காவல்துறை உடையில்லாதவர்கள்கூட) குறி பார்த்துச் சுட்ட காட்சியைப் பார்த்தபோது குலையெல்லாம் நடுநடுங்கியது. குருதியே உறைந்துவிடக் கூடிய மனிதாபிமானமற்ற  கொடூரமான மனித வேட்டை அது என்பதில் அய்யமில்லை.

அரசு என்ற ஒன்று இருக்கிறதா?

22ஆம் தேதிதான் 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் _- தமிழ்நாட்டு மக்கள் கொதிநிலைக்கு ஆளானார்கள்; தலைவர்கள் எல்லாம் கண்டித்து அறிக்கைகளை விட்டனர்.

இவ்வளவுக்குப் பிறகும் மறுநாளும் (நேற்று – 23.5.2018) துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி ஒருவர் கொல்லப்படுகிறார் என்றால், இது என்ன அக்கிரமம் _- ஆணவம்!

அரசு ஒன்று இருக்கிறதா? அது செயல்படுகிறதா? அதன் கையைவிட்டுக் காவல்துறை சென்றுவிட்டதா?

இனி போராட்டம் என்றால் துப்பாக்கிச் சூடு என்று அச்சுறுத்தலா?

ஒரு தோழர் சுடப்பட்டுக் கொல்லப்பட்ட நிலையில், நாயை அடித்துக் கொன்று தரையில் இழுத்து வருவதுபோல, தரதரவென்று இழுத்து வந்த காட்சியைக் கண்டபோது ஏற்பட்ட ஆத்திரத்திற்கு அளவேயில்லை. இனிப் போராட்டம் நடந்தால், இப்படித்தான் நடக்கும் _- எச்சரிக்கை என்பதற்காகவோ, ஆலை முதலாளியைத் திருப்திப்படுத்துவதற்காகவோதான் காவல்துறை இப்படி நடந்துகொண்டுள்ளது என்ற கருத்து பொதுவாக மக்களிடையே உருவாகியுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். உளவுத் துறை என்ன செய்து கொண்டுள்ளது என்றும் தெரியவில்லை! இதற்கிடையே இணையதளங்களின் செயல்பாட்டை முடக்கி இருக்கிறது தமிழக அரசு. சில தொலைக்காட்சி சேவையையும் முடக்கி இருக்கிறது. நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை வந்துவிட்டதா?

அமைச்சர்கள் செல்லாதது ஏன்?

பாதிக்கப்பட்ட பகுதிக்கு முதலமைச்சர் சென்று இருக்கவேண்டாமா? அமைச்சர்களே அந்தப் பக்கம் தலைகாட்ட முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டதோ என்று கருத வேண்டியுள்ளது.

டில்லியில்கூட தமிழ்நாடு அரசு இல்லத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இலண்டனில் ஸ்டெர்லைட் ஆலை முதலாளியின் வீட்டின் முன் அங்குள்ள தமிழர்கள் திரண்டெழுந்து ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

நிரந்தரமாக மூடுக!

நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுகிறது என்று மத்திய,- மாநில அரசுகள் அறிவிக்க இதுவே சரியான தருணம். இதில் சுணக்கம் காட்டப்படுமேயானால், மக்கள் போராட்டம் என்பது கலவரமாக எங்கும் பரவக்கூடிய ஆபத்து இருப்பதை அரசு உணரத் தவறக் கூடாது. வருமுன்னர் காப்பதுதான் புத்திசாலித்தனம். அரசின் கொள்கை முடிவாக (றிஷீறீவீநீஹ் பீமீநீவீsவீஷீஸீ) அமைச்சரவை கூடி முடிவெடுத்தால், நீதிமன்றங்களும் தலையிட முடியாது.

விசாரணை ஓர்ந்து கண்ணோடாது நடக்கட்டும்!

துப்பாக்கிச் சூடுபற்றி விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திருமதி. அருணா ஜெகதீசன் நியமிக்கப்பட்டுள்ளார். ஓர்ந்து கண்ணோடாது தீர விசாரித்து அறிக்கையினை வழங்குவார் என்று எதிர்பார்க்கிறோம்.

–கி.வீரமணி,

 ஆசிரியர்

———————————–

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு அனைத்துக் கட்சிகள் கண்டனம்

ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வருவதற்கு ஏற்கெனவே பல மாதங்களாக பொதுமக்கள்  வெளிப்படுத்திவரும் எதிர்ப்பின் தொடர்ச்சியாக, இப்போது கடந்த நூறு  நாள்களுக்கும் மேலாக ஜனநாயக ரீதியில் அமைதியாகப்  போராட்டம் நடத்திவரும் மக்கள், பேரணி ஒன்றை நடத்தியவுடன் அந்தப் பேரணி மீது அராஜகமாகவும், கண்மூடித்தனமாகவும், ஏ.கே_47 போன்ற துப்பாக்கிகளைக் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தி இளம்பெண் ஒருவர் உள்ளிட்ட 11 பேரை கடுகளவும் மனித நேயமோ, பரிதாப உணர்வோ இல்லாமல், குருவிகளை சுட்டுக் கொல்வதுபோல் சுட்டு வீழ்த்தியிருக்கும் வெகுமக்கள் விரோத அதிமுக அரசுக்கு அனைத்துக் கட்சித் தலைவர்கள் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

மலர்கண்காட்சியை திறந்து வைப்பதிலும், குளுகுளு உதகைக்கும், கொடைக்கானலுக்கும் சென்று ஓய்வெடுப்பதிலும், ஊழல் வழக்கில் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்ட மறைந்த ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் கட்ட அடிக்கல் நாட்டுவதற்கு, சம்பிரதாயத்திற்கு மாறாக மயிலை கபாலீஸ்வரர் கோயில் குருக்கள்களை வரவழைத்து, பூமி பூஜை நடத்துவதிலும் தீவிரம் காட்டிய முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத்  தொடர் போராட்டம் நடத்தி வரும் மக்களை அழைத்துப் பேசி பிரச்சினைக்கு சுமுகமான முறையில் தீர்வு காண முன்வரவில்லை. முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு நடைபெற்ற பேரணியில் சட்டம் ஒழுங்கிற்கு பாதிப்பு வராமலிருக்க அதற்கு தேவையான எண்ணிக்கையில் காவல் துறையினரை அங்கு நிறுத்தி முன்னெச்சரிக்கையாக  எவ்வித தடுப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. அங்குள்ள காவல்துறை உயர் அதிகாரிகளோ, மாவட்ட அதிகாரிகளோ போராட்டக் காரர்களை அழைத்துப் பேசி அமைதியான சூழலை உருவாக்கி ஒரு தீர்வு காணவும் எவ்விதத்திலும் முயற்சிக்கவில்லை.

உயர்நீதிமன்றமே மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அறிவுறுத்தியும், மக்களின் நியாயமான போராட்டத்திற்கு தீர்வு காண எந்த மட்டத்திலும் _ உள்ள அதிகாரிகளோ அல்லது தென் மாவட்டங்களில் உள்ள அமைச்சர்களோ முயற்சி செய்யவே இல்லை. தொடர்ந்து போராடி வரும் மக்கள்மீது ஆணவத்தோடு பழிவாங்கும் எண்ணத்தில் மனிதாபிமானமற்ற தாக்குதல் நடத்தவே அதிமுக அரசும், மாவட்ட அதிகாரிகளும், உயரதிகாரிகளும் காத்திருந்து, அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இப்படியொரு கொடூரமான துப்பாக்கிச் சூட்டை திட்டமிட்டு நடத்தியிருக்கிறார்கள் என்றே அனைவரும் சந்தேகிக்கிறார்கள். ஆகவே, அதிமுக அரசின் அலட்சியத்தாலும் அரவணைப்பற்ற அராஜக அணுகுமுறை யினாலும் நிகழ்ந்துள்ள இந்த விபரீதமான அரச பயங்கரவாத துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக உடனே மூடக் கோரியும் 25.05.2018 (வெள்ளிகிழமை) அன்று அனைத்து மாவட்டத் தலைநகரங் களிலும் திராவிடர் கழகம்,  திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய தேசிய காங்கிரசு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் சார்பில் ஜனநாயக ரீதியாக அறவழியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *