– முனைவர் மு.வளர்மதி
விசித்துக் கட்டும் வார்
பறைக்குப் போர்த்தப்படும் தோல், தோலால் செய்யப்பட்ட வார்களால் இறுக வலித்துக் கட்டப்படுகிறது. இறந்த கன்றுப் பருவப் பசுவின் பக்கத்தோலை வாராகக் கொண்டனர். திண்ணிய வாரால் இறுக வலித்துக் கட்டும்பொழுது தோற்கருவிகளின் அடிக்கும் இடமாகிய கண்களிலே தேவையான சுருதி அமைக்கப்பட்டது. துடி என்னும் தோற் கருவியின் வார் செறிந்தும் நெகிழ்ந்தும் அமைந்திருக்கும். வார்கள் துண்டுகளாகப் பகுக்கப்பட்டு, அத்தகைய துண்டான வார்களால் வலித்துக்கட்டினர்.
வார் அறுப்புண்டு சீர்குலைந்து கிடந்த தெளிந்த கண்ணையுடைய மாக்கிணையைப் புதுவார்கொண்டு விசித்துக் கட்டி, இசைக்கேற்பக் கண் அமைத்தனர். அதற்கேற்ப புதிய வலிய தோலைப் போர்த்தினர். அளவில்லாத மாலை போன்ற நெடிய வார்களால் வலித்துக் கட்டினர். வார் குறையற்றதாக இருக்க வேண்டும். இறுக வலித்துக் கட்டுவதற்கேற்ப நீண்டிருக்க வேண்டும். ஒருசில தோற்கருவிகள் சிறிய வார் கொண்டும் பிணிக்கப்பட்டன. வார் தயாரிப்பதற்கும் தமிழர்கள் சில குறிப்பிட்ட முறைகளைக் கையாண்டுள்ளனர் என்பதை இதன்மூலம் அறியலாம்.
பண்டைத் தமிழரின் தோல் தொழில்
பண்டைத் தமிழர் தோலின் இயல்புகளையும், அதன் பயனையும் அறிந்து வாழ்க்கைக்குத் தேவையான பல பொருள்களைச் செய்து பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதைச் சங்க இலக்கியப் பாடல்கள் உணர்த்துகின்றன. அவர்கள் தோலுக்கு வழங்கிய வேறு பெயர்களான அதள், பச்சை, உரிவை, உரி, சருமம் போன்ற பெயர்களையும் அறிய முடிகின்றது. உடும்பின் தோல், ஆட்டின் தோல், மான்தோல், பசுவின் தோல், காளைமாட்டின் தோல் ஆகியவற்றைப் பயன்படுத்தி பல தோற் கருவிகளைச் செய்து வந்துள்ளனர். போர்வீரர்கள் பயன்படுத்தும் கேடயம் (கேடகம்), கைச்சரடு, போர்க் கருவிகளுக்கான உறை, போர்வீரர்கள் தாக்குதலின்றும் காத்துக் கொள்ளும் கவசமான மெய்புதை அரணம், கேடயங்களைக் கொண்டு அமைக்கும் பாசறை அரண் கொல்லன் பட்டறையில் பயன்படுத்தப் பட்ட ஊதுலைக்கருவி, படுக்கை, தோளணி, காலணி, பைகள், யாழின் போர்வை ஆகிய தோலால் செய்யப்பட்ட பொருட்களைத் தமிழர் பயன்படுத்தி வந்துள்ளனர். இசைக்கருவிகளான முழவு, பதலை, ஆகுளி, சிறுமுழா, தண்ணுமை, கிணைப்பறை, தடாரி, துடி போன்ற கருவிகள் தோற்பாவைக் கூத்துக்கான பொம்மைகள் ஆகியவற்றைத் தோலினால் செய்து பயன்படுத்தி வந்துள்ளனர். தோலைப் பதப்படுத்தி இப்பொருட்களைச் செய்துவந்த கைவினைஞர்கள் இக்கலையில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்திருக்க வேண்டும்.
கஞ்ச காரரும் செம்பு செய்குநரும்
மரங்கொல் தச்சரும், கருங்கைக் கொல்லரும்
கண்ணுள் வினைஞரும், மண்ணீட் டாளரும்
பொன்செய் கொல்லரும், நன்கலந் தருநரும்,
துன்ன காரரும், தோலின் துன்னரும்
கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கிப்
பழுதில் செய்வினைப் பால்கெழு மாக்களும்
[சிவப். இந்திர விழுவூரெடுத்த காதை. வரி 28-34] இப்பாடலில் குறிப்பிட்டுள்ள தோலின் துன்னர் என்பது செம்மர் என்பவரைக் குறிக்கும். தோல் பொருட்களைச் செய்வோர்ச் செம்மர், பறம்பர், உறைகாரர், தோலின் துன்னர் எனப் பலவாறு அழைக்கப்பட்டனர். இவர்கள் தோலின் தன்மைகளையும், அதன் பயன்பாட்டு முறைகளையும் நன்கு அறிந்திருந்தனர். தோலினால் தயாரிக்கப்பட்ட இசைக்கருவிகள் தமிழரின் இசையறிவை உணர்த்துவனவாகும். தாளக் கருவிகளான இசைக் கருவிகள் இசைமரபுக்கான இலக்கணத்துடன் அமைந்துள்ளதை அறிவனார் இயற்றிய பஞ்சமரபு நூலின் மூலம் அறியலாம்.
பறையைக் குறிக்கும் சொற்கள்
அடக்கம், ஆகுளி, ஆறெறிபறை, டமாரம், துடி, (உடுக்கை, இழுகுபறை, இடை சுருங்கிய பறை) இயமரம், இரணபேரி, எக்கம், எல்லரி, ஏறங்கோட்பறை, கஞ்சிரா, கடுவாய்ப்பறை, கண்டிகை, கம்பலி, கரடிப்பறை, கல்லவரம், களக்கொட்டு, கிடுகு, கிடுமுடி, கிணைப்பறை, குடப்பறை (பன்றிப்பறை), கும்மட்டம், குரவைப் பறை, தொண்டகப்பறை கொடுகொட்டி, கோட்பறை, சல்லரி (திமிலை), சல்லிகை சாக்கொட்டு (சாப்பறை, பிணப்பறை), சிறுபறை, சூசிகம், (தவண்டை) திண்டிமம், திமிக்கி, தக்கை, தட்டை, தண்ணுமை, தகுணிச்சம், தப்பட்டை, தப்பை, தம்பட்டம், தமுக்கு, தலைப்பறை, தலைவிரி பறை, நாவாய்ப்பறை, நிசாளம், நிரைகோட்பறை, படகம் (பாடகம்), படலை (பதலை), பகுவாய்ப்பறை, பாகம், பாண்டிகம், பெருங்கோடனை, மகாதுந்துமி, மத்தரி, மரக்காற்பறை, மீன்கோட்பறை, முறவம், முருகியம், மொந்தை எனப் பல சொற்களால் பறைகள் பற்றிய செய்திகளை இலக்கியச் சான்றுகள், அகராதிகள் வழியாக அறிய முடிகின்றது. இச்சொற்கள் யாவும் உருவத்தை அடியாகக் கொண்டும், ஒலியை அடியாகக் கொண்டும், பயன்படும் விதத்தை அடியாகக் கொண்டும் வழங்கப்பட்டுள்ளன. ஒரு சில பறைகளுக்கு இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட சொற்களால் குறிப்பிடப் படுவதுண்டு. ஆகையால் இங்குக் குறிப்பிடப்பட்டுள்ள பறை வகைகள் மேலும் ஆய்விற்குரியன.
இவற்றுள் இரணபேரி, கடுவாய்ப்பறை, படகம், மகாதுந்துமி, தண்ணுமை ஆகியன போர்ப்பறைகளாகும்.
கஞ்சிரா, கிடுகு, கிடுமுடி, சிறுபறை, கும்மட்டம், திண்டிமம், திமிக்கி, தப்பட்டை ஆகியன சிறுபறை வகைகளாகும். ஆறெறிபறை, சூறைகோட்பறை ஆகியன பாலை நிலப் பறைகளாகக் குறிப்பிடப்படுகின்றன.
பறைநிலை
இது சிற்றிலக்கிய வகைகள் ஒன்றாக இடம் பெறுகிறது. காவலர் குனிதுறத் தேவர் காத்தளிக்க எனக் கடவுளர் விழாவினும் நாடும் நகரமும் நலம் பெற இயம்பி, வருநெறி வஞ்சி வழங்கப் பற்றிய மொழிவரத் தொடுப்பது பறை நிலை ஆகும் என்பது பன்னிரு படலம் கூறும் பறைநிலை இலக்கணமாகும். வள்ளுவர், கடவுளர் விழாவிலும் அரசர் முடிவுனை விழாவிலும் யானை மீதமர்ந்து பறையறைந்து அரசரைக் கடவுள் காக்க வேண்டுமென வாழ்த்துவதைப் பாடுவதாக இருக்கலாம் என்பது கருத்தாகும் எனத் தஞ்சைப் பல்கலைக்கழக வாழ்வியற் களஞ்சியம் (தொ.12.ப.231) விளக்கமளித்துள்ளது. பறை பிற தாளக் கருவிகளுக்கு அடிப்படையாக அமைந்தது என்பது காலப்போக்கில் தமிழர்கள் அறியாமல், இக்கருவியிலிருந்து வளர்ச்சிப் பெற்ற பிற தாள இசைக் கருவிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இது நம்முடைய அடையாளங்களை நாமே மண்ணில் மிதித்துப் புதைப்பதற்குச் சமமாகும். பறை அனைத்துச் சமூக மக்களையும் ஒன்றிணைக்கும் செயல்திறன் மிக்க கருவியாகப் பயன்பட்டது. ஆனால், பறையர், சக்கிலியர் இன மக்களைத் தவிர பிற இனத்தினர் இதைத் தீண்டாமையின் வடிவமாகவே கருதி, பறையைப் புறக்கணித்து விட்டனர். (நிறைவு)