அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? -(18)

ஏப்ரல் 16-30

– சிகரம்

 துதியும், பதிகமும் பாடி நோய்களை நீக்க முடியுமா?

திருஞானசம்பந்தர் கொங்கு நாட்டின் மேற்பகுதியிலுள்ள பல தலங்களையும் வணங்கிக் கொண்டு காவிரியின் தென்கரையில் கொங்கு நாட்டிலே மேகங்கள் தவழும் நீண்ட மதிலையுடைய திருக்கொடிமாடச் செங்குன்றூர் என்னும் பதியை வந்தடைந்தார்.

அச்சமயம் திருஞானசம்பந்தருடன் வந்திருக்கும் பரிசனங்கள் பல நாளும் அந்நாட்டில் தங்கியிருந்ததனால் நடுங்குதற்கு ஏதுவான குளிர் முன்னேகண்டு பின்னே சுரநோய் வந்து அவர்களை அடர்வது போல் தொடர்ந்தது. அதனை அவர்கள், திருஞானசம்பந்தரிடம் தெரிவித்து வணங்கினர். அவர், இச்சுரநோய் இந்நாட்டிற்கு இயல்பே ஆயினும் இதன் கொடுமைகள் நமக்கு எய்தப் பெறா என்ற கருத்துடன் சிவபெருமானை வணங்கித் திருப்பதிகம் பாட, அவ்வினைக்கு இவ்வினை என்று தொடங்கி, எமது துன்பங்களை யெல்லாம் வாராமல் காத்தது இறைவனது திருநீலகண்டமே; அதுவே, இக்குளிர்ச் சுரத்தையும் போக்கவல்லது என்ற கருத்தினை அமைத்து, செய்வினை வந்தெமைத்தீண்டப் பெறாதிரு நீலகண்டம் என்று இறுதியில் வைத்துத் துதித்து ஆணையிட்டருளினார். அவ்வாணையினால் அப்பதியில் வாழ்கின்றவர் களுக்கே அன்றி அந்நாடு முழுவதும் அன்று முதலாக என்றும் அந்நோய் அடராது நீங்கியது என்கிறது இந்துமதம்.

மேலும், திருப்பாச்சிலாச்சிராமம் என்னும் நகரிலே கொல்லிமழவன் என்னும் அரசன் ஒருவன் இருந்தான். அவனுக்கு அமுதம் போன்ற இனியமொழி பேசும் அழகிய மகளொருத்தியிருந்தாள். அக்கன்னிகை இளமை பொருந்திய மானை ஒத்தவள்; இளங்கொழுந்துபோல் ஒளிவீசும் அழகு நிறைந்த மேனியள். அவளை முயலகன் என்னும் பெருநோய் பற்றி வருத்தியது. அப்பெண்ணின் துன்பத்தைக் கண்ட கொல்லிமழவன் மிக மனத்தளர்ச்சி அடைந்தான்; அவனுடைய பெருஞ் சுற்றத்தார் புலம்பித் துன்புற்றனர்.

இது பெருங்கொடிய நோய்களுள் ஒன்று. இந்நோய் உணர்வற்றுக்கிடக்கவும், வலிப்புடன் கிடக்கவும், பிறவாறு நலிவுற்றுக்கிடக்கவும் செய்யவல்லது.

திருஞானசம்பந்தர் அழகிய வீதிகளைக் கடந்து சென்று திருக்கோயிலின் அணித்தாக, உடனே முத்துச் சிவிகையினின்றும் கீழே இறங்கினார்; திருவாயிலைப் பணிந்து உள்ளே சென்று திருக்கோயிலை வலங்கொண்டு சிவபெருமான் திருமுன்பு வணங்க வந்தார்; அங்கு இளம்பெண் உணர்வு அழிந்து நிலத்தில் மயங்கிக் கிடத்தலைக் கண்டு, இஃது என்னை என்று வினவ, மழவன் அவரை வணங்கி நின்று, அடியேன் பெற்ற இப்பெண் முயலகன் என்னும் பெரும் பிணியால் வாடுகிறாள்; ஆதலால், அவளை இறைவன் திருமுன்பு கொண்டுவந்து இடும்படி செய்வித்தேன்; இதுவே நிகழ்ந்த வரலாறு என மொழிந்தான். அதனைக் கேட்ட பிள்ளையார் அருள்கூர்ந்து அந்நிலையில் நின்றபடியே திருப்பாச்சிலாச்சிராமம் மேவிய பரம்பொருளைப் பணிந்து அவளுடைய நோயை நீக்கும்பொருட்டு, துணிவளர் திங்கள் என்ற திருப்பதிகம் தொடங்கி, மணிவளர் கண்டரோ! மங்கையை வாட மயல் செய்வதோ? இவர் மாண்பு! என்று இறுதியில் வைத்துப் பாடித் திருக்கடைக்காப்புச் சாத்தி வணங்கினார். மழவனுடைய மகள் பிணி நீங்கப்பெற்று மிக விரைவில் எழுந்து கொடிபோல் அசைந்து நடந்து வந்து தன் தந்தையின் அருகு அடைந்தாள் என்று இந்துமதம் கூறுகிறது. நோய் எதுவாயினும் அதற்குரிய மருந்து, சிகிச்சை அளித்தே அதைப் போக்க முடியும். அதுவே அறிவியல். ஆனால், பாட்டுப் பாடியும், துதி செய்தும் நோயை விலக்கியதாய்க் கூறும் இந்து மதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையாகும்?

ஓலைச்சுவடி நெருப்பில் கருகாது, நீரில் நீந்துமா?

அனல் வாதம்

பாண்டியன் சமணர்களை நோக்கி, எனது வெப்பு நோயை நீங்கள் ஒழித்திலீர்கள்; இப்போது இனி, உமக்கு என்ன வாது இருக்கிறது! என்றான். உடனே சமணர்கள் அரசனுக்கு முன்னும் பின்னுமாகச் சென்று அணுகி நின்று நீங்கள் கூறிய என்ன வாது? என்ற இகழ்ச்சிக் குறிப்பு மொழியினையே வினாவாகக் கொள்வோம்; நாங்கள் இருதிறத்தோரும் எங்கள் எங்கள் சமய உண்மைப் பொருளின் கருத்தினை ஏடுகளில் எழுதி அக்கினியில் இடக்கடவோம். அது வேகாப் பெறாமையே வெற்றி காட்டுவதாம் என்று கூறினார். அப்போது மன்னவன் ஒன்று சொல்லுவதன் முன்பே, ஆளுடை பிள்ளையார், நீங்கள் சொல்லியது நன்று; அரசன்முன் அப்படியே அதனைச் செய்வோம் வாருங்கள் என்றருளினார்.

ஞானசம்பந்தர் தீயினில் திருப்பதிக ஏட்டினை இடுதல்

உடனே சமணர்கள் முன்வந்து கூடியபோது பிள்ளையாருடைய கட்டளையினாலே மன்னனும், தன் சபைக்கு முன்னே தீயை அமைக்கும்படி ஏவலாட்களை விடுக்க, அவர்களும் கட்டைகளை அடுக்கித் தீயினை வளர்த்தார்கள். தீ கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. முத்தமிழ் விரகராகிய திருஞானசம்பந்தர் அத்தீயின் அருகில்வந்து சிவபெருமானே மெய்ப்பொருள் என்று தாம் பாடியருளிய திருப்பதிகங்கள் எழுதிய தமிழ்வேதத் திருமுறைச் சுவடியினைத் துதித்து, எங்கள் நாதனாகிய சிவபெருமானே முழுமுதற் கடவுளாய் எல்லார்க்கும் மேலாகிய பரம்பொருளாவார் என்று தொழுது திருக்கரத்தினால் எடுத்துச் சிரமேற்கொண்டு திருக்காப்பிட்ட கயிற்றை அவிழ்த்து அத்திருமுறையைத் தமது திருக்கரத்தினால் தாமே மறித்து எடுத்தபோது, திருநாள் ளாற்றினைப் போற்றிய போகமார்த்த பூண்முலையாள் என்னும் திருப்பதிகம் வந்து நேர்ந்தது. கவுணியர் பெருமான், திருநள்ளாற்றுப் பெருமானை வணங்கி, உண்மை பொருந்திய நல்ல அத்திருவேட்டினைத் திருமுறைச் சுவடியினின்றும் கழற்றி வேறெடுத்து மெய்மகிழ்ந்து திருக்கரத்திலே கொண்டு, என்னை ஆளும் சிவபெருமான் திருநாமமே எப்பொழுதும் நிலைபெறும் மெய்ப்பொருளாம் என்பதை யார்க்கும் காட்டிடும் வண்ணம், இவை அக்கினியில் இடப்படுமாயின் பழுதில்லை; இது சத்தியம் என்னும் கருத்தையுடைய தளிர் இள வளர் ஒளி என்று தொடங்கும் திருப்பதிகம் பாடி அந்த ஏட்டினைப் பாண்டியன் சபையில் உள்ளவர்கள் எல்லோரும் காணும்படி சமணர்களுடைய சிந்தைவெந்தழியும்படி அத்தீயினில் மகிழ்ச்சியோடு முன்னர் இட்டருளினார். தீயிடை இட்ட அந்த ஏட்டிலே திருநள்ளாற்றைப் போற்றும் செந்தமிழ்த் திருப்பதிகம், உமாதேவியாரை ஒரு பாகத்தில் கொண்ட அட்டமூர்த்தியாகிய சிவபெருமானையே மெய்ப்பொருளாகக் கொண்டமையால் தீயினிடையே வேகா திருத்தலுடனே பச்சையாயும் அப்பொழுதே விளங்கிற்று.

சமணர்கள் தீயினில் ஏடு இடுதல்

சமணர்களும் தங்கள் சமய உண்மைப் பொருளை ஏட்டில் எழுதினார்கள்; இவ்வேடு தீயினில் வேகாது எஞ்சுமோ? என்று கவலைகொண்ட உணர்வினோடு நடுங்கி நின்று தீயிடை இட்டனர். அஞ்சிய மனத்தோடு அவர்கள் தீயிலே வீழ்த்திய ஏடு, தீயிலே பஞ்சு வீந்தால் பட்டொழிவதுபோலத் தகிக்கப் பட்டொழிந்தது. சமணர்கள் அதனைக் கண்டு பயத்தினாலே மனம் சோர்வடைந்து நின்றனர்.

திருஞானசம்பந்தர் தீயினில் இட்ட ஏடு வேகாது பச்சையாயிருத்தல்

ஞானசம்பந்தர் தாம் தீயிலே இட்ட ஏடு, குறிப்பிட்ட நேரம் வரையில் அழிவு பெறாமல் நின்றதைக் கண்டு, முன்னையினும் பசுமையும் புதுமையும் உளதாயிருக்க யாவரும் வியக்கும்படி தீயினின்றும் எடுத்தருளினார். பின்னர், பிள்ளையார் அவ்வேட்டைச் சபைமுன்னே காட்டித் திருமுறையிலே முன்னர் வைத்திருந்த முறைப்படி கோத்தருளினார்.

அரசன் சமணர்களை நோக்கிக் கூறல்

அரசன் அதிசயங்கொண்டு சமணர்களை நோக்கிக் கோபித்து, நீங்கள் தீயில் இட்ட ஏட்டினைக் காட்டுங்கள் என்றான். சமணர்கள் தாங்கள் இட்ட ஏட்டை எடுக்கும்படி சென்றணையும்போது, பெருந்தீச் சுட்டதனால் உடல் கருகிய நிலையில் விலகி நின்றனர் என்கிறது இந்துமதம். யார் எழுதிய ஓலையாக இருந்தாலும் நெருப்பில் பட்டால் சாம்பலாகிவிடும். இதுதான் அறிவியல். ஆனால், ஞானசம்பந்தர் எழுதிய ஏடு எரியவில்லை. சமணர்கள் எழுதிய ஏடு மட்டும் எரிந்தது என்பது மோசடியல்லவா? இப்படிப்பட்ட மோசடியான, அடிமுட்டாள்தனமான கருத்துகளை தன்னகத்தே கொண்ட மடமையின் மறு பெயரான இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?

(சொடுக்குவோம்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *